Monday, September 5, 2016

ராஜா தாத்தா - ஆனந்தவிகடன் 22.10.2006



இளையராஜாவின் கைகளில் பிஞ்சு ஆர்மோனியம் போலச் சிரிக்கிறான் யதீஸ்வர்!

தியான மண்டபம் போல் இருக்கிற ராஜாவின் வீடு ரகளையாக் கலைந்துகிடக்கிறது யதீஸ்வரால்.  பேரனின் செல்லக்குறும்புகளுக்குச் சிரித்து, ரசித்து மகிழ்கிறார், ராஜா தாத்தா!

கார்த்திக் ராஜாவின் மகன் யதீஸ்வருக்கு ஐந்து வயசு. யு.கே.ஜி. படிக்கிறான். பேரனைப் பார்த்தாலே தானும் குழந்தையாகி விடுகிறார் இசைஞானி. 

நவராத்திரி தினங்களில் ராஜா வீட்டில் நடக்கும் இசைக்கொலு, திரையுலகம்-இசையுலகம் இரண்டிலும் பிரபலம்.  இந்தமுறை அங்கே வந்த அத்தனை பிரபலங்களும் பார்த்து வியந்தது இந்த் தாத்தா-பேரன் அன்பைப் பார்த்துதான்.

‘தாத்தாவுக்கு ஒரு பாட்டு பாடுங்க…’

’என்ன பாட்டு… ஆங்… நம்ம காட்டுல மழ பெய்யுது..’.. என சித்தப்பாவின் மியூஸிக்கில் தாத்தா பாடின பாட்டையே மழலை மழலையாய் பேரன் பாடப்பாட, ‘ஆஹா.. சாரோட சுருதி சுத்தம் பாருங்க’ என்கிற ராஜாவின் முகத்தில் ஆனந்த ராகம்!

‘எப்பவும் ஸ்ட்ரிக்ட்டான க்ளாஸ் ரூம் மாதிரி இருக்கும் ராஜா சாரின் ரிக்கார்டிங் தியேட்டர்.  அத்தனை பேரும் பயபக்தியோட நிப்போம்.  ஆனா, யதீஸ்வர் வந்தா, ரகளையாகிடும்.  தடதடன்னு கதவைத் திறந்துட்டு உள்ளே வருவான்.  ஏதேதோ யோசனையில் இருந்தாலும் இவனைப் பார்த்தா சார் குஷியாகிடுவார்.  ‘தாத்தா கீபோர்ட் ஆன் பண்ணிக்கொடுங்கன்னு கேப்பான்.  எல்லா வேலைகளையும் அப்படியே தள்ளிவெச்சுட்டு, அவனுக்காக கீபோர்ட் ஆன் பண்ணி.. பேரனை மடியில் அள்ளித் தூக்கி உட்கார்ந்துடுவார்.  அவனா… ‘சரி தாத்தா, ஓ.கே. பை!’ன்னு சொல்றவரைக்கும் ராஜா சார் அவன் கஸ்டடியில்தான் இருப்பார்’ என நெகிழ்ந்து சொல்கிறார்கள்.

‘யதீஸ்வர் இருந்தான்னா அப்பாவுக்கு உலகமே மறந்துடும்.  தினசரி காலையில் பேரனைக் கேட்டு போன் பண்ணுவார்.  ‘என்ன யதீஸ்வர் எழுந்திரிச்சுட்டாரா? குளிச்சுட்டாரா? சாப்பிட்டாரா?’ன்னு வரிசையா விசாரிப்பார். ‘அவருகிட்டே போனைக் கொடு’ம்பார்.  அவனோ, ‘நான் ரொம்பப் பிஸியா இருக்கேன் தாத்தா!’ன்னு அவரிடமே கலாட்டா பண்ணுவான்’ என்று சிரிக்கிறார் கார்த்திக் ராஜா.

“யதீஸ்வர்னு பெயர் செலக்ட் பண்ணினது அப்பாதான். யத்’னா பெருமாள்.  ஈஸ்வர்னா சிவன். இரண்டையும் சேர்த்துவெச்சார். ‘யதீ, ஈஸ்வர்னு யாரும் பிரிச்சுக்கூப்பிடக்கூடாது.  முழுப்பெயரையும் சொல்லித்தான் கூப்பிடணும்’னு சொல்லிட்டார்.

ஹாரிபாட்டர் தீம் மியூஸிக்னா யதீஸ்வருக்கு ரொம்பப் பிடிக்கும்.  அப்பாகிட்டே, ‘தாத்தா, ஹாரிபாட்டர் மியூஸிக் போடு’ன்னு சொல்லுவான்.  ‘இதோ வந்துட்டேன்’னு ஓடி வந்து, அப்பா அவனுக்காக பியானோவில் வாசிச்சுக் காட்டுவார்.  அவனோட ஸ்கூல் ரைம்ஸுக்கெல்லாம் அப்பா மியூஸிக் பண்ணுவார்.  ஒரே ஒரு ரசிகனுக்காக, அப்பா பண்ற அந்த மியூஸிக் ஒவ்வொண்ணும் கேட்கப் பேரானந்தமா இருக்கும்” என்கிறார் அத்தை பவதாரிணி.

‘சில நேரங்களில் தாத்தாவும் பேரனும் சேர்ந்து ஹோம்வொர்க் பண்ணுவாங்க.  ‘என்ன தாத்தா உனக்கு ஒண்ணுமே தெரியலை. இப்படித்தான் எழுதணும்.. எங்கே எழுதிக்காட்டு’ன்னு அப்பாவுக்கு அவன் ஏ..பி..சி…டி… எழுதச் சொல்லித்தருவான்.  அபூர்வமா அப்பா அவனுக்குப் பியானோ வாசிக்கச் சொல்லித்தருவார்.  பார்க்க அது வேடிக்கையா, விளையாட்டாதான் இருக்கும்.  சிலருக்கு நல்ல தாத்தா கிடைப்பாங்க.  சிலருக்கு நல்ல குரு கிடைப்பாங்க.  தாத்தாவே குருவா அமைவது எவ்வளவு பெரிய பாக்கியம்!” என்கிறார் பவா.

ரசித்துச் சிரிக்கிற கார்த்திக்ராஜா சொல்கிறார்.. ‘அப்பா அவனுக்காக நிறைய கதைகள் சொல்வார். அப்போவோட ரூமில் ரெண்டுபேரும் சேர்ந்து ஸ்பைடர்மேன் கேம் விளையாடுவாங்க.  ஒருநாள்.. என்ன ரெண்டுபேரையுமே காணோமேன்னு மெதுவா அப்பா ரூமுக்குள் எட்டிப்பார்த்தால், ரெண்டு பேரும் யானை விளையாட்டு விளையாடிட்டு இருந்தாங்க.  எனக்கு ரொம்ப எமோஷனலா ஆகிடுச்சு.  அப்பாவோட சந்தோஷம் முக்கியம்னு மெதுவா கதவைச் சாத்திட்டு வந்துட்டேன்.

‘ஜனனி.. ஜனனி.. ஜகம் நீ அகம் நீ’ அப்பா பாடி, அவருக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு.  ஒருநாள் அதை அவர் சத்தமாப் பாடிட்டிருந்தார்.  எதிரில் யதீஸ்வர் சம்மணம் போட்டு உட்கார்ந்து, தாளம் போட்டு ரசிச்சுக் கேட்டுட்டு இருந்தான்.  கொடுத்துவெச்ச பய!” நெகிழ்கிறார் கார்த்திக் ராஜா.

- பா. ராஜநாராயணன்
படங்கள் : ஆர். பிரசன்னா

நன்றி: ஆனந்தவிகடன் 22.10.20016
பகிர்வு நன்றி: ’ஒளிஞானி’ திரு. ஜோஸஃப் ராஜா