Monday, February 25, 2013

பிலிமாலயா பேட்டி - 3.7.1992



சூ
ரியனுக்குச் சோம்பலேறி விழித்துக்கொள்ளத் தவறலாம்.  இளையராஜாவின் கார், காலை சரியாக ஏழு மணிக்கு, பிரசாத் ஸ்டுடியோவுக்குள் நுழையத் தவறியதில்லை.  இதோ இன்றும் ராஜா நேரங்காட்டிக்கு நேரம் காட்டியபடி, காரிலிருந்து இறங்குகிறார்.

மல்லிகைப்பூ ஜிப்பா, மல்வேட்டி, வெள்ளைக் காலணி, கையில் மூக்குக் கண்ணாடிக் கூடு.  உடையின் வெண்மையைப் பெற முயற்சிக்கும் தலைமுடி.. சில நாள் அவகாசத்தில் அவசரமாக முளைத்துள்ள அலட்சிய தாடி.. நேராகத் தன் தனியறை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்.

நெற்றியில் திகழும் குங்குமச் சிவப்பை வெல்லும் – இதழிலே தவழும் புன்னகை வெண்மை!

நம்மைக் கண்டதும், மீண்டும் ‘பிலிமாலயா’ வருவதறிந்து மகிழ்ச்சி தெரிவிக்கிறார். வாழ்த்துக் கூறுகிறார்.

‘நான் என்ன செய்யணும்?’ மூன்றே சொற்களில் தன் உள்ளத்தை முழுமையாகத் திறந்து காட்டுகிறார்.

“பலரும் கேட்க நினைக்கிற, ஆனால் கேட்கத் தயங்குகிற சில கேள்விகளுக்கு உங்கள் பதில்கள் வேண்டும்”

‘பேட்டியா? நான் ஒரு திறந்த புத்தகம்.  தினமும் பதினைந்து மணி நேரம் உங்கள் முன்னால்தான் இருக்கிறேன்.  என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியாத விஷயமில்லை.  புதிதாக என்ன சொல்லப் போகிறேன்?” எல்லோரிடமும் இளையராஜா சொல்லும் பதில்தான்.  நமக்குத் திருப்தியளித்துவிடுமா !

உரிமையோடு வற்புறுத்துகிறோம்.  மீண்டும் புன்னகை வெண்மை.  இசைந்துவிட்டார் இளையராஜா என்பது புரிந்துவிட்டது.  அன்று பதிவாக வேண்டிய பாடலுக்கு இசைகோர்க்க உள்ளே செல்கிறார்.  உள்ளே – ‘சரிகமபா’க்கள் அவர் விரல்களில் சரணடைகின்றன.

ட்டில் குவிந்த இட்டிலி வட்டங்களை, சுற்றி இருந்த சட்டினி வரிசைகளையும், சுகமான வெங்காய சாம்பாரையும் தொட்டு சுவைத்துக்கொண்டே முதல் கேள்வியை முன் வைத்தோம்.

சமீபகாலமாகப் பத்திரிக்கைகளிலிருந்து பேட்டிகளிலிருந்து விலகி நிற்கிறீர்களே… ஏன்?

”சாப்பிடுங்கள்…. பிறகு பேசுவோம்..!” ராஜகட்டளை.

பசும்பாலையும் அருந்தி, டம்ளரை வைக்கிறோம்.  ராஜா நம்மைப் பார்க்கிறார். ‘என்ன கேட்டீர்கள்?’ விட்ட இடத்தையே தொட்டு மீண்டும் வினாவைக் கேட்கிறோம்.

சமீபகாலமாகப் பத்திரிக்கைகளிலிருந்து பேட்டிகளிலிருந்து விலகி நிற்கிறீர்களே… ஏன்?

         ”இசைக்கும் பத்திரிக்கைகளுக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? இது நன்றாக இருக்கிறது – நன்றாக இல்லை! அல்லது இது இப்படி இருக்கிறது.. இன்னும் இப்படி இருந்திருக்கலாம்.. என்றுதான் பத்திரிக்கைகள் எழுத முடியுமே தவிர, இசைக்குத் தேவை காதுகள், மென்மையான மனது.  இது எல்லோரிடமும் இருக்கிறது.  எனக்கும் அவர்களுக்கும் உள்ள நேரடித் தொடர்பில் இன்னொரு இடைவெளி இடைஞ்சல் எதற்கு?”

’பல Experiments, புதுமைகள் தமிழ்த்திரையில் புகுத்தி இருக்கிறீர்கள்.  Latest ஆக என்ன செய்திருக்கிறீர்கள்? செய்ய இருக்கிறீர்கள்?’

         இதுவரை புதுமையாக எதையுமே செய்யவில்லை என்பது அந்த சப்தத்திற்கும் எனக்கும் நன்றாகத் தெரியும்.  இதில் எதைப் புதுமை எனச் சொல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.  ஆமாம் அப்படி என்ன புதுமையைச் செய்துவிட்டேனாம்?’ (அடக்கம் இதில் அடக்கம் என்று மட்டுமே இந்த பதிலை ஏற்க முடியும்.  பட்டியல் போட்டுக் காட்டவா, பாடல்களில் செய்த புதுமைகளை.. பிறகு எழுதுகிறேன்).

’நமது இசை, சினிமாப் பாடல்களுடன் முடிந்து விடுகிறது.. கொஞ்சம் பக்தி கேசட்டுகள்… அதற்கு மேலும் விரிவடையாது உள்ள நிலையில் Creative’ஆக நீங்கள் செய்த Nothing But Wind போன்ற புதுமைகளை அடிக்கடி – atleast மூன்று மாதங்களுக்கு ஒரு முறையேனும் தரக்கூடாதா?’

         ’ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கு மேலும் வேலை செய்தும் – ஒத்துக்கொண்ட படங்களை என்னால் முடிக்க முடியவில்லை.  இதற்கு மேல் தனிப்பட்ட அந்த வேலைகளுக்கு நேரம் ஒதுக்குவது கடினமாக இருக்கிறது.

’பாடல் இடம்பெறும் Situation ஒரு பாடலைப் பிரபலப்படுத்துகிறதா அல்லது பாடலின் இசையமைப்பா, பாடல் வரிகளா, படமாக்கப்படும் விதமா?

         எல்லாப் பாடல்களையும் எடுத்துக்கொண்டால், பாடல்களின் வகைகள் ஆறோ ஏழோதான் தேறும்.

தாலாட்டு (வருத்தமாகப் பாடுவது, சந்தோஷமாகப் பாடுவது, அல்லது வாழ்த்திப் பாடுவது)
கிண்டல்
காதல்
சோகம்
விரஹம்
தத்துவம்
பக்தி
வீரம் (எழுச்சியூட்டும் பாடல்கள்)
விரக்தி

ஆனால் Situationதான் பாடல்களை வெற்றிபெறச் செய்கிறது என்பதை, எந்தெந்தப் பாடல்கள் வெற்றி பெற்றதோ, அதை வைத்து ஆராய்ந்து பார்த்து நீங்களே முடிவு செய்துகொள்ளலாம்’ என்று சொல்லிவிட்டு ‘ஏன் இதற்கு தனியாக ஒரு பகுதி ஒதுக்கி, அதை ‘பிலிமாலயா’ பத்திரிகையிலேயே ஆராய்ந்து முடிவு செய்தால் நன்றாக இருக்குமே.  இது வெறும் ஆலோசனைதான்’ என்று புதிய பகுதி ஒன்றிற்கு வழிகாட்டினார்.

’மெட்டுப் போடத்துவங்கும்போதே ஒரு பாடலின் தலையெழுத்து நிர்ணயிக்கப்பட்டு விடுகிறதா?’

         ஆமாம்! பிறந்த குழந்தை காந்திதான் என்பதை அதன் ஜாதகம் கண்டிப்பாகச் சொல்லிவிடும்”

அப்படியென்றால், ‘இது நிச்சயமாக ஹிட்டாகப் போகும் பாடல்’ என்பது பாடல் ஒலிப்பதிவாகி முடிந்தவுடனே தெரிந்துவிடும் என்கிறீர்களா?

         ஆமாம்! சத்தியமாக..” (என்ன உறுதியாகச் சொல்கிறார்… With conviction)

’ஒரு படத்திற்கு இசையமைக்க எதை வைத்து ஒப்புக்கொள்கிறீர்கள்? பெரிய Banners, வெற்றி இயக்குனர், பெயர் பெற்ற நட்சத்திரங்கள், அருமையான கதை, இப்படி இருந்தும் சில படங்களுக்கு இசையமைக்க மறுத்திருக்கிறீர்களே, அதனால் கேட்கிறோம்.

         உங்கள் கண்களுக்குப் பெரிய Banner, என் கண்களுக்குச் சிறியதாகத் தெரிந்திருக்கலாம்.  பணத்தைக் கொடுத்தால் யாரையும் எதையும் வாங்கிவிடலாம்.  ஆனால் இசையை எதைக் கொடுத்து வாங்க முடியும்? பக்தியும், அன்பும் உள்ள இடத்தில்தான் இசை இருக்கும்.  பணம் உள்ளவர்கள் கேசட் வாங்கட்டும்”

ராஜாவுக்கே உரிய பாணியில் பதில் வருகிறது.  எந்தக் கவர்ச்சியும் தன்னைக் கட்டாயப்படுத்திவிடமுடியாது என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

’முன்பெல்லாம் ஹீரோவுக்கு ஒரு வாய்ஸ், காமெடியனுக்கு ஒரு வாய்ஸ், கதாபாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு குரல்களில் பாடினார்கள்.  இப்போது ஹீரோவுக்கே பல குரல்களைப் பயன்படுத்துகிறீர்கள் – யேசுதாஸ், பாலு, மனோ, என.  சில வேளைகளில் இருவர், மூவர் படத்தில் பாடுவதாக அமையும் பாடலை ஒருவரே பாடி விடுகிறார்.  இதை எப்படி Justify பண்ணுகிறீர்கள்?’

         முன்பும் ஹீரோவுக்குப் பல குரல்கள் ஒலித்திருக்கின்றன என்பதை மறைத்துப் பேசுகிறீர்கள்.  ‘ராஜாராணி’ படம் பாருங்கள். டி.எம்.எஸ்.ஐத் தவிர, அத்தனை பாடகர்களும் சிவாஜி சாருக்குப் பாடியிருக்கிறார்கள்.  ‘குலேபகாவலி’யில் எம்.ஜி.ஆருக்கும் பல குரல்கள் ஒலித்திருக்கின்றன.

’உங்கள் ரீ-ரெக்கார்டிங் தனித்து நிற்கிறது, மற்றவைகளிலிருந்து வித்தியாசமாக, Basical ஆக என்ன முறையைப் பின்பற்றுகிறீர்கள், I mean technic?

         முக்கியமாகப் படத்தில் இருப்பதை வெளியே கொண்டுவர இசை துணை செய்யும்.  ஒரு கவிதையை வெறுமனே எழுதி, முக்கியமான சாரத்தைக் கீழே கோடிட்டுக் காட்டுவது போல, படத்தின் முக்கிய இடங்களை இசை கோடிட்டுக் காட்டவேண்டும்.”

’DIL’ ஹிந்திப் படத்தில், ‘இதயத்தைத் திருடாதே’ படத்தில் வரும் ‘ஓ.. ப்ரியா’ பாடலை அப்படியே ஆனந்த்-மிலிந்த் lift செய்திருக்கிறார்கள்.  இதற்கெல்லாம் Copyright இல்லையா?

         ”Copyright இருக்கிறது. அதாவது காப்பி அடிப்பதற்கு அவர்களுக்கு ‘ரைட்’ இருக்கிறது. நீங்கள் எழுதும் கட்டுரையில் பெர்னாட்ஷா எழுதிய வாக்கியத்தைச் சுட்டிக்காட்டினால், பெர்னாட்ஷா Copyright law பேசுவாரா என்ன? பாவம் அவர்கள் இல்லாதவர்கள். எடுத்துக் கொள்ளட்டும். இசை, குறைந்துபோகும் செல்வமா என்ன?”

கொஞ்சம் Personal ஆன கேள்வி. இதுவரை உங்கள் ஆதரவில் இருந்தது Echo நிறுவனம். இப்போது Raja Recording Co.க்கு அந்த ஆதரவை மாற்றியிருக்கிறீர்களே.. காரணம்?

         கேசட் quality நன்றாக இல்லாததும், தயாரிப்பாளர்களுடன் ஒத்துழைக்காததுமே இந்த மாற்றத்திற்குக் காரணம்”

இப்போதெல்லாம் ஒரு படத்தின் பாடல்களை தொடர்ந்து இசையமைத்து, பதிவு செய்து கொடுக்கிறீர்களே, முன்னதாகப் பாடல்கள் வெளிவந்து பிரபலமாக வகை செய்யும் இந்த முறையைத் தொடர்வீர்களா?

         அப்படிச் செய்ய ஆசைதான்.  இறைவன்தான் அதற்குத் துணை நிற்க வேண்டும்.

தாள வகைகளில் 7ம் ஒவ்வொன்றில் 5 ஜாதியும் ஆக 35 வகை தாளங்கள் இருக்க, ‘திஸ்ர’த்திலேயே பெரும்பாலான தங்கள் பாடல்கள் இடம்பெறுகின்றன. அவ்வப்போது, ரூபகம், சங்கீர்ணம் கூட தலைகாட்டுகின்றன. சதுஸ்ரம், மிஸ்ரம், கண்டம் எல்லாம் அதிகமாக இடம் பெறுவதில்லையே. ஏன்?

         நீங்கள் இதில் குறிப்பிடாத தாளங்களில் கூட இசையமைத்திருக்கிறேன்.  அவைகள் எனக்கும் அதை வாசித்த வாத்தியக்காரர்களுக்கும் மட்டுமே தெரியும்”.

திரைப் பாடல்கள் Period Songs’தானா? I mean இன்றைய பாடல்கள். படத்தின் ஓட்டம் நின்றதும், பாடல்களின் பரபரப்பும் அடங்கி விடுகின்றதே.

         அந்தக் காலத்துப் பாடல்கள் மீதும் அப்படியொரு குற்றச்சாட்டு அப்போது இருந்தது என்பதை எல்லோரும் மறந்து விடுகிறீர்கள்.  இதற்குக் காலமும், காலங்காலமாக நிற்கப் போகிற பாடல்களுமே பதில் சொல்ல வேண்டும்”

இசைஞன் ஆவது வரமா அல்லது நம்மை வருத்தி வரவழைத்துக் கொள்ளக் கூடியதா?

         அதெல்லாம் ஒன்றுமில்லை!  என்னைப் போன்றவர்களே இசையமைக்க வரும்போது நம் நாட்டில் யாரால் இசையமைக்க முடியாது? வேண்டுமானால் நீங்கள் Try பண்ணுங்கள்.  முடியவில்லையெனில் என் காதை அறுத்துக் கொள்கிறேன்.  வல்லபனின் இசையைக் கேட்காத காது மனிதனுக்கு அவசியமா என்ன?

(தன்னம்பிக்கை திண்மையோடு, தற்பெருமை இன்மையும்தான் ராஜாவை இந்த பதில் சொல்ல வைத்திருக்கிறது.  அவருடைய நகைச்சுவை உணர்வுக்கு நல்ல எடுத்துக்காட்டு – பதிலின் பிற்பகுதி)

ஒரு கோடி ரூபாய் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோயில் பராமரிப்பு நிதிக்கு கொடுப்பதாக அறிவித்திருக்கின்றீர்களே.  எப்படி செய்யப் போகிறீர்கள்?

         மன்னிக்கவும். அதை திரை உலகைச் சேர்ந்த பெரிய புள்ளிகள் அறிவித்திருக்கிறார்கள்.  நான் கட்டணமின்றி ஒத்துழைக்கிறேன்.  கண்டிப்பாக வசூலாகும் என்பது அவர்கள் நம்பிக்கை”

பம்பாயில், சில பாடல்களைப் பதிவு செய்திருக்கிறீர்கள்.  இங்குள்ள இசைப் பதிவை விட அவை எப்படி மாறுபட்டுள்ளன?

         கண்டிப்பாக மாறுபட்டிருக்கின்றன என்பதை கேசட் கேட்டாலே புரியும்.”

இசையும் பாடலும் ஒன்றை ஒன்று இணைந்து, அதே நேரத்தில் சற்றுத் தொலைவிலிருந்து கேட்கும்போது பாடல் வரிகள் மட்டுமே மேலோங்கிக் கேட்கவேண்டும்.  அதுதான் முறையான இசைப்பதிவு என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

         சாப்பாட்டில் ஒரு சுவை மட்டுமா மேலோங்கி இருக்கும்? இல்லவே இல்லை.  இசையிலும் அப்படித்தான்”

கதை கேட்டு, பாடல் சூழ்நிலைகளைத் தேர்ந்தெடுத்து, மெட்டமைத்து, அதற்குப் பாடல்களும் எழுதி, இசைக் கோர்வையை Compose செய்து, arrangements, conducting கூட முடித்து, சில சமயம் பாடல்களையும் பாடி, முடிந்த படத்தை முழுமையாகப் பார்த்து, பின்னணி இசை சேர்த்து,  இத்தனைக்கும் நடுவே சொந்தப் படத் தயாரிப்பு வேலைகளையும் ஏற்றுள்ளீர்கள்.  In addition, ’நாடோடித் தென்றல்’ படத்திற்குக் கதையும் எழுதியுள்ளீர்களே, எப்படிச் சாத்தியமாகிறது இந்த தேவ சாதனை?

         ஏற்கெனவே எத்தனையோ பேர் செய்ததுதான்.  தேவ சாதனை எல்லாம் இல்லை. மனித சாதனைதான்.”

உங்கள் இசையால் புதிய பரிணாமம் அமையக் கூடிய சில கலையார்வப் படங்களைத் தயாரிப்பவர்கள், பொருளாதார எல்லையைத் தாண்டி உங்களை அணுக முடியாது இருக்கலாம்.  அவர்களுக்கு உதவ முன்வருவீர்களா?

கேள்வியை முடிக்கும் முன்னரே ‘கண்டிப்பாக’ என்று ராஜா கூறுவது ‘He means it’ என்று தெளிவாக்குகிறது.

நல்ல பாடல்கள் ஒரு படத்தின் வெற்றிக்கு முகவுரை எழுதுகிறதா?

         முகவுரை மட்டுமல்ல. கருத்துரை, பொழிப்புரையும் சேர்த்தே எழுதுகின்றன”

கார்த்திக்கை உங்கள் வாரிசாக உருவாக்கி வருகிறீர்களா?

         ”எனக்கு வாரிசு என் குழந்தைகள்தான்! உருவாக்குவதோ, உருவாவதோ இறைவன் கையிலிருக்கிறது. என் கையில் இல்லை.

”உங்களை அணுக முடியாதவர்கள் பரப்பும் அவதூறு செய்திகள் உங்கள் காதுகளில் விழுவதுண்டா?”

         அதுகூட அவர்களால் முடியவில்லை என்றால் அவர்கள் பிறந்த பயன் என்ன?”

யோசிப்பதற்கு நேரம் எடுத்துக் கொள்ளாமல், மனதில் பட்டதைப் பட்டெனச் சொல்லும் ராஜா பாணி, ’திருவிளையாடல்’ படத்தின் கேள்வி பதில் காட்சியை நினைவுபடுத்துகிறது.  சற்று நேரத்திற்கு முன் அவர் எழுதிய வரிகள்.. இசைக்கருவிகள் மூலம் இசை வடிவம் கொண்டு உயிர்பெற்றுவிட்டன.  இனி அவற்றை சீரமைக்கும் (balancing) பணிக்குச் செல்லும் கடமை வாசலில் காத்திருப்பதை குறிப்பால் உணர்ந்து – மற்றொரு கேள்வியை பேட்டியின் இறுதிக் கேள்வியாகக் கேட்கிறோம்.

நிறைவேறாத ஆசை ஏதாவது?

”நிறைய இருக்கிறது” என்றவரின் கண்களை வியப்பைச் சுமந்து பார்க்கிறோம்.

சற்று நிதானமாக நான்கு Bar Gap கொடுத்து,

”இறைவனாக வேண்டுமென்று..!” என்று சொல்லியபடியே, எழுந்து செல்கிறார் – பளிச் புன்னகை வெண்மை பரப்பியபடி.

நன்றி : பிலிமாலயா வார இதழ் 3.7.1992

பகிர்வு நன்றி: திரு. பாலசுப்ரமணியன்