Wednesday, June 10, 2015

உணர்வுகளுக்கு இசை உருவம் தரும் இளையராஜா – டி.வி.ஜி.



இன்று (11 ஜூன்), பத்மபூஷண் திரு. டி.வி. கோபாலகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள். நண்பர் திரு. சிவகுமார் முன்னொருமுறை பகிர்ந்திருந்த ஒரு சில கோப்புகளினூடே சிக்கியது இசைஞானியைப் பற்றிய டி.வி.ஜி அவர்களின் பேட்டி. எந்தப் பத்திரிக்கையில் வெளிவந்தது என்ற குறிப்பு இல்லை. 90களின் துவக்கத்தில் வெளிவந்திருக்கக் கூடும். இதுவரை வாசித்திராதவர்களுக்காய். :)

*******************************************************************************
 
50 ஆண்டு காலமாக கர்நாடக சங்கீத உலகில் கொடி நாட்டி வருபவர் டி.வி.கோபாலகிருஷ்ணன்.  கர்நாடக இசையில் மட்டுமல்லாமல், இந்துஸ்தானி இசையிலும், ஜாஸ் போன்ற மேற்கத்திய இசையிலும் பாண்டித்யம் பெற்ற கோபாலகிருஷ்ணன், மிருதங்கச் சக்ரவர்த்தி.
 
இசைக்கல்வி கற்பிப்பதிலும், இசை சம்பந்தமாகப் புத்தகங்கள் எழுதுவதிலும் ஈடுபட்டுள்ள கோபாலகிருஷ்ணனிடம்தான் இளையராஜா ஆரம்பகாலத்தில் கர்நாடக சங்கீத நுட்பங்களைக் கற்றுக்கொண்டாராம்.  ஏறக்குறைய நான்காண்டுகாலம் கோபாலகிருஷ்ணன் குருகுலத்தில் பயின்றவர் ராஜா. அந்த வகையில் இளையராஜாவைப் பற்றியும், அவர் லண்டன் சென்று சாதனை செய்த சிம்பொனி இசையின் சிறப்பு பற்றியும், கோபாலகிருஷ்ணன் கூறுகிறார்.
 
”கர்நாடக சங்கீதத்தில் தியாகராஜர் கீர்த்தனை, முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனைகள் என்பது போல், மேற்கத்திய சாஸ்திரிய இசையில் சிம்பொனியும் ஒரு உயர்தரமான கீர்த்தனை.  பலவிதமான ஒலி விசேஷம் கொண்ட வயலின், பியானோ, சாக்ஸஃபோன், போன்ற 77 இசைக்கருவிகளைக்கொண்டு இசைக்கப்படும் இசைக்காவியம், சிம்பொனி.  இது நான்குவிதமான காலப்பிரமாணங்களில், ஒரு ஆதார ஸ்ருதியின் அடிப்படையில் இசைக்கப்படும். ஒரு ஆரம்பம் மத்திமம், உச்சமம் என்ற இசை இலக்கணம் இதற்கும் உண்டு.
 
இந்தப் புகழ்பெற்ற மேற்கத்திய இசைவடிவைப் புனைந்தவர்கள், மகா மேதைகள்.  அதில் உலகம் முழுக்கப் புகழ்பெற்றவர்கள், Bach, Mozart, Beethoven போன்ற இசை மேதைகள்.  அந்த மேதைகள் வரிசையில் நம் ராஜாவும் இணைந்துள்ளார்.  ஆனால், ராஜாவுக்கு முன்புள்ளவர்கள் மேலை நாட்டைச் சேர்ந்தவர்கள்.  ராஜா ஒருவர்தான் கீழைநாட்டைச் சேர்ந்தவர்.  அதனால்தான் ராஜாவின் சாதனை உயர்ந்தது என்று புகழுகிறோம்.
 
ராஜா இந்திய சாஸ்திரிய இசையில் மட்டுமல்ல, மேற்கத்திய இசையிலும் தன்ராஜ் மாஸ்டரிடம் முறையாகப் பயிற்சி பெற்றவர்.  லண்டன் இசைக்கல்லூரியில் கிதார் இசைக்கும் நேர்த்திக்காகத் தங்கப்பதக்கம் பெற்றவர்.  அடிப்படையைக் கற்றுக்கொண்டதோடு நிறுத்திக்கொள்ளாமல், அதில் தனது கற்பனையைக் கலந்து, புதுப்புது இசைவடிவங்களை உருவாக்கும் அளவுக்கு ஞானத்தையும் கைவரப்பெற்றவர்.
 
எதையும் அடிப்படையிலிருந்து கற்றுத்தெளிய வேண்டும் என்ற கலைப்பசி பிறவியிலேயே அவருக்கு இருந்திருக்கிறது. சினிமாவில் புகழ் பெற ஆரம்பித்த பின்பு கர்நாடக சங்கீத நுணுக்கங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டி, என்னிடம் சிஷ்யனாக வர விருப்பம் தெரிவித்தார்.  கற்பூரம் போல் எதையும் சட்டென்று கிரகித்துக்கொள்ளும் புத்திசாலி சிஷ்யன் கிடைத்தால் விடமுடியுமா? உடனே ஒப்புக்கொண்டேன்.
 
நான் முன்பு சொன்னது போல், எதையும் அடிப்படையிலிருந்து தெரிந்துகொள்ளும் ஆர்வமுள்ளவராக இருந்ததால், என்னிடம் வருவதற்கு முன் சமஸ்கிருதமும் கற்றிருக்கிறார்.  சாஸ்திரிய இசைஞானம் பெற வேண்டுமானால் சமஸ்கிருத ஞானம் அவசியம் என்று, அதை எழுதவும், சுலோகங்களை மனப்பாடமாகச் சொல்லவும் பயிற்சி பெற்றிருக்கிறார்.
 
ஒரு வித்தை கற்றாலே ஒப்பேற்றி விடலாம் என்று நினைக்கிறவர்களுக்கு மத்தியில் ராஜாவின் இந்த சிரத்தைதான் அவர் வளர்ச்சியின் படிக்கற்களாக இருந்திருக்கின்றன.  அதே போல், நேரத்தின் அருமை தெரிந்தவர்.  திரைப்படத் துறையில் பிஸியாக இருந்த நேரத்திலும் காலை நாலரை மணிக்கு என் வீட்டில் இருப்பார். சாதகம் பண்ணுவார்.  தனது குரலில் இருந்த பிசிறைப் போக்குவதற்காக அவர் செய்த அசுரசாதகத்தை இன்று நினைத்தாலும் பெருமையாக இருக்கிறது.  ஏ.ஸி. குளிர் ராஜாவுக்கு ஒத்துக்கொள்ளாது.  ஆனால் ரிக்கார்டிங் ரூம் ஏ.ஸி.  இதற்கு அவர் தன் உடல்நிலையைத் தயார்படுத்திய விதமும் அவருக்கு உள்ள இசையார்வத்தில்தான்.
 
ஒரு பாட்டுக்கு ஒரே நேரத்தில் ஏழுவிதமான படிவங்களில் மெட்டமைக்கக் கூடிய ஆற்றல் உள்ளவர் ராஜா ஒருவர்தான்.  ஒரே நேரத்தில் தன் காதில் விழும் நூறு வகையான ஒலியை இனம் பிரித்துப் பார்க்கும் நாத நுட்பம் அவர் காதுகளுக்கு உண்டு.  அதுமட்டுமல்ல, மனித உணர்வுகளை இசைமூலம் உணர்த்தும் திறன் உள்ளவர்.  அதனால்தான் அவரது ரீரிகார்டிங் சிறப்பாக அமைகின்றன.  இவை எல்லாவற்றையும்விட, எதைச் செய்தாலும் அதைப் பரிசுத்தமாகச் செய்யவேண்டும் என்ற கவனம், ஈடுபாடுதான் அவரை லண்டன்வரை இழுத்துச் சென்றிருக்கிறது.
 
‘HOW TO NAME IT?’, ‘Nothing but wind’, என்ற இரு மேற்கத்திய இசைக்காஸெட்டுகள் வெளியிட்டிருக்கிறார்.  அதைக் கேட்டுவிட்டுத்தான் சிம்பொனி இசையமைக்க ராஜாவைக் கேட்டுக்கொண்டார்களாம்.  மேற்கத்திய இசை காஸெட்டுகள் மட்டுமல்ல, சில மாதங்களுக்கு முன் கர்நாடக சாஸ்திரீய இசையில் மிக அழகான இசைக்கோர்வை ஒன்றையும், தமிழிலும் சமஸ்கிருதத்திலும் ஏழு கிருதிகள் கொண்ட காஸெட் ஒன்றையும் படைத்துள்ளார்.
 
இவையெல்லாம் இளையராஜா என்ற சினிமா இசையமைப்பாளன் வெறும் காசு பண்ணும் இசை வியாபாரி அல்ல, தனது இசைஞானத்தால் புதுமையாக எதையாவது சாதிக்கவேண்டும் என்ற வேகமுள்ள இசை உபாசகன் என்பதை நிரூபிக்கும்.
 
இசையமைப்பாளனின் சிரமமும் சிறப்பும் எந்தெந்த ஒலியை இணைத்தால் என்ன இசை பிறக்கும் என்பதைக் கற்பனையில் கண்டு, அதை உருவாக்குவதுதான்! அதிலும் இன்னொரு நாட்டு இசை வடிவில் அப்படியோர் முயற்சியைச் செய்யவேண்டுமானால், மிக மிக தெளிந்த ஞானம் அந்த இசையில் இருந்தால் மட்டுமே முடியும். அதை ராஜா சாதித்திருக்கிறார்.
 
இன்றைக்கு ராஜாவின் இசை, வட இந்தியாவில் ஒலிக்கிறது.. பயன்படுத்தப்படுகிறது! (காப்பி அடிக்கப்படுகிறது). தமிழர் வாழும் உலகத்தின் எல்லா மூலைகளிலும் ஒலிக்கிறது.  அப்போதெல்லாம் இந்தியாவின் பெயர் நினைவுகூறப்படுகிறது.  ஒரு தமிழனின் பெருமை பேசப்படுகிறது.  ஒருவன் தான் பிறந்த நாட்டுக்காக இதைவிட என்ன பெருமை சேர்த்துவிடமுடியும்?
 
இளையராஜா இசையமைத்துக் கொடுத்தமாதிரியான சிம்பொனி இசையமைக்க சிலர் வருடக்கணக்கில் உழைத்ததுண்டு. ப்ராஹ்ம் (Brahm) என்பவருக்கோ, 14 வருடங்கள் பிடித்ததாம்.  ஆனால் நம் ராஜாவோ, ஒரே மாத அவகாசத்தில் முடித்துக்கொடுத்துள்ளார்.
 
ஒவ்வொரு சகாப்தத்திலும், ஒவ்வொரு துறையிலும் ஒரு சாதனையாளன்தான் பிறப்பான். காலத்தைக் கடந்து பேசப்படுவான்.  இந்திய இசைத்துறையில் ஒரு இளையராஜாதான் இந்த சகாப்தத்தில் நிற்பார். இசை உள்ளளவும் பேசப்படுவார்.  இது அவர் தாய் சின்னத்தாய் செய்த பாக்கியம். தமிழகம் செய்த பேறு!” என்கிறார் டி.வி.ஜி.
 
பகிர்வு நன்றி: திரு. சிவகுமார்.