Monday, September 5, 2016

ராஜா தாத்தா - ஆனந்தவிகடன் 22.10.2006



இளையராஜாவின் கைகளில் பிஞ்சு ஆர்மோனியம் போலச் சிரிக்கிறான் யதீஸ்வர்!

தியான மண்டபம் போல் இருக்கிற ராஜாவின் வீடு ரகளையாக் கலைந்துகிடக்கிறது யதீஸ்வரால்.  பேரனின் செல்லக்குறும்புகளுக்குச் சிரித்து, ரசித்து மகிழ்கிறார், ராஜா தாத்தா!

கார்த்திக் ராஜாவின் மகன் யதீஸ்வருக்கு ஐந்து வயசு. யு.கே.ஜி. படிக்கிறான். பேரனைப் பார்த்தாலே தானும் குழந்தையாகி விடுகிறார் இசைஞானி. 

நவராத்திரி தினங்களில் ராஜா வீட்டில் நடக்கும் இசைக்கொலு, திரையுலகம்-இசையுலகம் இரண்டிலும் பிரபலம்.  இந்தமுறை அங்கே வந்த அத்தனை பிரபலங்களும் பார்த்து வியந்தது இந்த் தாத்தா-பேரன் அன்பைப் பார்த்துதான்.

‘தாத்தாவுக்கு ஒரு பாட்டு பாடுங்க…’

’என்ன பாட்டு… ஆங்… நம்ம காட்டுல மழ பெய்யுது..’.. என சித்தப்பாவின் மியூஸிக்கில் தாத்தா பாடின பாட்டையே மழலை மழலையாய் பேரன் பாடப்பாட, ‘ஆஹா.. சாரோட சுருதி சுத்தம் பாருங்க’ என்கிற ராஜாவின் முகத்தில் ஆனந்த ராகம்!

‘எப்பவும் ஸ்ட்ரிக்ட்டான க்ளாஸ் ரூம் மாதிரி இருக்கும் ராஜா சாரின் ரிக்கார்டிங் தியேட்டர்.  அத்தனை பேரும் பயபக்தியோட நிப்போம்.  ஆனா, யதீஸ்வர் வந்தா, ரகளையாகிடும்.  தடதடன்னு கதவைத் திறந்துட்டு உள்ளே வருவான்.  ஏதேதோ யோசனையில் இருந்தாலும் இவனைப் பார்த்தா சார் குஷியாகிடுவார்.  ‘தாத்தா கீபோர்ட் ஆன் பண்ணிக்கொடுங்கன்னு கேப்பான்.  எல்லா வேலைகளையும் அப்படியே தள்ளிவெச்சுட்டு, அவனுக்காக கீபோர்ட் ஆன் பண்ணி.. பேரனை மடியில் அள்ளித் தூக்கி உட்கார்ந்துடுவார்.  அவனா… ‘சரி தாத்தா, ஓ.கே. பை!’ன்னு சொல்றவரைக்கும் ராஜா சார் அவன் கஸ்டடியில்தான் இருப்பார்’ என நெகிழ்ந்து சொல்கிறார்கள்.

‘யதீஸ்வர் இருந்தான்னா அப்பாவுக்கு உலகமே மறந்துடும்.  தினசரி காலையில் பேரனைக் கேட்டு போன் பண்ணுவார்.  ‘என்ன யதீஸ்வர் எழுந்திரிச்சுட்டாரா? குளிச்சுட்டாரா? சாப்பிட்டாரா?’ன்னு வரிசையா விசாரிப்பார். ‘அவருகிட்டே போனைக் கொடு’ம்பார்.  அவனோ, ‘நான் ரொம்பப் பிஸியா இருக்கேன் தாத்தா!’ன்னு அவரிடமே கலாட்டா பண்ணுவான்’ என்று சிரிக்கிறார் கார்த்திக் ராஜா.

“யதீஸ்வர்னு பெயர் செலக்ட் பண்ணினது அப்பாதான். யத்’னா பெருமாள்.  ஈஸ்வர்னா சிவன். இரண்டையும் சேர்த்துவெச்சார். ‘யதீ, ஈஸ்வர்னு யாரும் பிரிச்சுக்கூப்பிடக்கூடாது.  முழுப்பெயரையும் சொல்லித்தான் கூப்பிடணும்’னு சொல்லிட்டார்.

ஹாரிபாட்டர் தீம் மியூஸிக்னா யதீஸ்வருக்கு ரொம்பப் பிடிக்கும்.  அப்பாகிட்டே, ‘தாத்தா, ஹாரிபாட்டர் மியூஸிக் போடு’ன்னு சொல்லுவான்.  ‘இதோ வந்துட்டேன்’னு ஓடி வந்து, அப்பா அவனுக்காக பியானோவில் வாசிச்சுக் காட்டுவார்.  அவனோட ஸ்கூல் ரைம்ஸுக்கெல்லாம் அப்பா மியூஸிக் பண்ணுவார்.  ஒரே ஒரு ரசிகனுக்காக, அப்பா பண்ற அந்த மியூஸிக் ஒவ்வொண்ணும் கேட்கப் பேரானந்தமா இருக்கும்” என்கிறார் அத்தை பவதாரிணி.

‘சில நேரங்களில் தாத்தாவும் பேரனும் சேர்ந்து ஹோம்வொர்க் பண்ணுவாங்க.  ‘என்ன தாத்தா உனக்கு ஒண்ணுமே தெரியலை. இப்படித்தான் எழுதணும்.. எங்கே எழுதிக்காட்டு’ன்னு அப்பாவுக்கு அவன் ஏ..பி..சி…டி… எழுதச் சொல்லித்தருவான்.  அபூர்வமா அப்பா அவனுக்குப் பியானோ வாசிக்கச் சொல்லித்தருவார்.  பார்க்க அது வேடிக்கையா, விளையாட்டாதான் இருக்கும்.  சிலருக்கு நல்ல தாத்தா கிடைப்பாங்க.  சிலருக்கு நல்ல குரு கிடைப்பாங்க.  தாத்தாவே குருவா அமைவது எவ்வளவு பெரிய பாக்கியம்!” என்கிறார் பவா.

ரசித்துச் சிரிக்கிற கார்த்திக்ராஜா சொல்கிறார்.. ‘அப்பா அவனுக்காக நிறைய கதைகள் சொல்வார். அப்போவோட ரூமில் ரெண்டுபேரும் சேர்ந்து ஸ்பைடர்மேன் கேம் விளையாடுவாங்க.  ஒருநாள்.. என்ன ரெண்டுபேரையுமே காணோமேன்னு மெதுவா அப்பா ரூமுக்குள் எட்டிப்பார்த்தால், ரெண்டு பேரும் யானை விளையாட்டு விளையாடிட்டு இருந்தாங்க.  எனக்கு ரொம்ப எமோஷனலா ஆகிடுச்சு.  அப்பாவோட சந்தோஷம் முக்கியம்னு மெதுவா கதவைச் சாத்திட்டு வந்துட்டேன்.

‘ஜனனி.. ஜனனி.. ஜகம் நீ அகம் நீ’ அப்பா பாடி, அவருக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு.  ஒருநாள் அதை அவர் சத்தமாப் பாடிட்டிருந்தார்.  எதிரில் யதீஸ்வர் சம்மணம் போட்டு உட்கார்ந்து, தாளம் போட்டு ரசிச்சுக் கேட்டுட்டு இருந்தான்.  கொடுத்துவெச்ச பய!” நெகிழ்கிறார் கார்த்திக் ராஜா.

- பா. ராஜநாராயணன்
படங்கள் : ஆர். பிரசன்னா

நன்றி: ஆனந்தவிகடன் 22.10.20016
பகிர்வு நன்றி: ’ஒளிஞானி’ திரு. ஜோஸஃப் ராஜா

Wednesday, June 10, 2015

உணர்வுகளுக்கு இசை உருவம் தரும் இளையராஜா – டி.வி.ஜி.



இன்று (11 ஜூன்), பத்மபூஷண் திரு. டி.வி. கோபாலகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள். நண்பர் திரு. சிவகுமார் முன்னொருமுறை பகிர்ந்திருந்த ஒரு சில கோப்புகளினூடே சிக்கியது இசைஞானியைப் பற்றிய டி.வி.ஜி அவர்களின் பேட்டி. எந்தப் பத்திரிக்கையில் வெளிவந்தது என்ற குறிப்பு இல்லை. 90களின் துவக்கத்தில் வெளிவந்திருக்கக் கூடும். இதுவரை வாசித்திராதவர்களுக்காய். :)

*******************************************************************************
 
50 ஆண்டு காலமாக கர்நாடக சங்கீத உலகில் கொடி நாட்டி வருபவர் டி.வி.கோபாலகிருஷ்ணன்.  கர்நாடக இசையில் மட்டுமல்லாமல், இந்துஸ்தானி இசையிலும், ஜாஸ் போன்ற மேற்கத்திய இசையிலும் பாண்டித்யம் பெற்ற கோபாலகிருஷ்ணன், மிருதங்கச் சக்ரவர்த்தி.
 
இசைக்கல்வி கற்பிப்பதிலும், இசை சம்பந்தமாகப் புத்தகங்கள் எழுதுவதிலும் ஈடுபட்டுள்ள கோபாலகிருஷ்ணனிடம்தான் இளையராஜா ஆரம்பகாலத்தில் கர்நாடக சங்கீத நுட்பங்களைக் கற்றுக்கொண்டாராம்.  ஏறக்குறைய நான்காண்டுகாலம் கோபாலகிருஷ்ணன் குருகுலத்தில் பயின்றவர் ராஜா. அந்த வகையில் இளையராஜாவைப் பற்றியும், அவர் லண்டன் சென்று சாதனை செய்த சிம்பொனி இசையின் சிறப்பு பற்றியும், கோபாலகிருஷ்ணன் கூறுகிறார்.
 
”கர்நாடக சங்கீதத்தில் தியாகராஜர் கீர்த்தனை, முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனைகள் என்பது போல், மேற்கத்திய சாஸ்திரிய இசையில் சிம்பொனியும் ஒரு உயர்தரமான கீர்த்தனை.  பலவிதமான ஒலி விசேஷம் கொண்ட வயலின், பியானோ, சாக்ஸஃபோன், போன்ற 77 இசைக்கருவிகளைக்கொண்டு இசைக்கப்படும் இசைக்காவியம், சிம்பொனி.  இது நான்குவிதமான காலப்பிரமாணங்களில், ஒரு ஆதார ஸ்ருதியின் அடிப்படையில் இசைக்கப்படும். ஒரு ஆரம்பம் மத்திமம், உச்சமம் என்ற இசை இலக்கணம் இதற்கும் உண்டு.
 
இந்தப் புகழ்பெற்ற மேற்கத்திய இசைவடிவைப் புனைந்தவர்கள், மகா மேதைகள்.  அதில் உலகம் முழுக்கப் புகழ்பெற்றவர்கள், Bach, Mozart, Beethoven போன்ற இசை மேதைகள்.  அந்த மேதைகள் வரிசையில் நம் ராஜாவும் இணைந்துள்ளார்.  ஆனால், ராஜாவுக்கு முன்புள்ளவர்கள் மேலை நாட்டைச் சேர்ந்தவர்கள்.  ராஜா ஒருவர்தான் கீழைநாட்டைச் சேர்ந்தவர்.  அதனால்தான் ராஜாவின் சாதனை உயர்ந்தது என்று புகழுகிறோம்.
 
ராஜா இந்திய சாஸ்திரிய இசையில் மட்டுமல்ல, மேற்கத்திய இசையிலும் தன்ராஜ் மாஸ்டரிடம் முறையாகப் பயிற்சி பெற்றவர்.  லண்டன் இசைக்கல்லூரியில் கிதார் இசைக்கும் நேர்த்திக்காகத் தங்கப்பதக்கம் பெற்றவர்.  அடிப்படையைக் கற்றுக்கொண்டதோடு நிறுத்திக்கொள்ளாமல், அதில் தனது கற்பனையைக் கலந்து, புதுப்புது இசைவடிவங்களை உருவாக்கும் அளவுக்கு ஞானத்தையும் கைவரப்பெற்றவர்.
 
எதையும் அடிப்படையிலிருந்து கற்றுத்தெளிய வேண்டும் என்ற கலைப்பசி பிறவியிலேயே அவருக்கு இருந்திருக்கிறது. சினிமாவில் புகழ் பெற ஆரம்பித்த பின்பு கர்நாடக சங்கீத நுணுக்கங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டி, என்னிடம் சிஷ்யனாக வர விருப்பம் தெரிவித்தார்.  கற்பூரம் போல் எதையும் சட்டென்று கிரகித்துக்கொள்ளும் புத்திசாலி சிஷ்யன் கிடைத்தால் விடமுடியுமா? உடனே ஒப்புக்கொண்டேன்.
 
நான் முன்பு சொன்னது போல், எதையும் அடிப்படையிலிருந்து தெரிந்துகொள்ளும் ஆர்வமுள்ளவராக இருந்ததால், என்னிடம் வருவதற்கு முன் சமஸ்கிருதமும் கற்றிருக்கிறார்.  சாஸ்திரிய இசைஞானம் பெற வேண்டுமானால் சமஸ்கிருத ஞானம் அவசியம் என்று, அதை எழுதவும், சுலோகங்களை மனப்பாடமாகச் சொல்லவும் பயிற்சி பெற்றிருக்கிறார்.
 
ஒரு வித்தை கற்றாலே ஒப்பேற்றி விடலாம் என்று நினைக்கிறவர்களுக்கு மத்தியில் ராஜாவின் இந்த சிரத்தைதான் அவர் வளர்ச்சியின் படிக்கற்களாக இருந்திருக்கின்றன.  அதே போல், நேரத்தின் அருமை தெரிந்தவர்.  திரைப்படத் துறையில் பிஸியாக இருந்த நேரத்திலும் காலை நாலரை மணிக்கு என் வீட்டில் இருப்பார். சாதகம் பண்ணுவார்.  தனது குரலில் இருந்த பிசிறைப் போக்குவதற்காக அவர் செய்த அசுரசாதகத்தை இன்று நினைத்தாலும் பெருமையாக இருக்கிறது.  ஏ.ஸி. குளிர் ராஜாவுக்கு ஒத்துக்கொள்ளாது.  ஆனால் ரிக்கார்டிங் ரூம் ஏ.ஸி.  இதற்கு அவர் தன் உடல்நிலையைத் தயார்படுத்திய விதமும் அவருக்கு உள்ள இசையார்வத்தில்தான்.
 
ஒரு பாட்டுக்கு ஒரே நேரத்தில் ஏழுவிதமான படிவங்களில் மெட்டமைக்கக் கூடிய ஆற்றல் உள்ளவர் ராஜா ஒருவர்தான்.  ஒரே நேரத்தில் தன் காதில் விழும் நூறு வகையான ஒலியை இனம் பிரித்துப் பார்க்கும் நாத நுட்பம் அவர் காதுகளுக்கு உண்டு.  அதுமட்டுமல்ல, மனித உணர்வுகளை இசைமூலம் உணர்த்தும் திறன் உள்ளவர்.  அதனால்தான் அவரது ரீரிகார்டிங் சிறப்பாக அமைகின்றன.  இவை எல்லாவற்றையும்விட, எதைச் செய்தாலும் அதைப் பரிசுத்தமாகச் செய்யவேண்டும் என்ற கவனம், ஈடுபாடுதான் அவரை லண்டன்வரை இழுத்துச் சென்றிருக்கிறது.
 
‘HOW TO NAME IT?’, ‘Nothing but wind’, என்ற இரு மேற்கத்திய இசைக்காஸெட்டுகள் வெளியிட்டிருக்கிறார்.  அதைக் கேட்டுவிட்டுத்தான் சிம்பொனி இசையமைக்க ராஜாவைக் கேட்டுக்கொண்டார்களாம்.  மேற்கத்திய இசை காஸெட்டுகள் மட்டுமல்ல, சில மாதங்களுக்கு முன் கர்நாடக சாஸ்திரீய இசையில் மிக அழகான இசைக்கோர்வை ஒன்றையும், தமிழிலும் சமஸ்கிருதத்திலும் ஏழு கிருதிகள் கொண்ட காஸெட் ஒன்றையும் படைத்துள்ளார்.
 
இவையெல்லாம் இளையராஜா என்ற சினிமா இசையமைப்பாளன் வெறும் காசு பண்ணும் இசை வியாபாரி அல்ல, தனது இசைஞானத்தால் புதுமையாக எதையாவது சாதிக்கவேண்டும் என்ற வேகமுள்ள இசை உபாசகன் என்பதை நிரூபிக்கும்.
 
இசையமைப்பாளனின் சிரமமும் சிறப்பும் எந்தெந்த ஒலியை இணைத்தால் என்ன இசை பிறக்கும் என்பதைக் கற்பனையில் கண்டு, அதை உருவாக்குவதுதான்! அதிலும் இன்னொரு நாட்டு இசை வடிவில் அப்படியோர் முயற்சியைச் செய்யவேண்டுமானால், மிக மிக தெளிந்த ஞானம் அந்த இசையில் இருந்தால் மட்டுமே முடியும். அதை ராஜா சாதித்திருக்கிறார்.
 
இன்றைக்கு ராஜாவின் இசை, வட இந்தியாவில் ஒலிக்கிறது.. பயன்படுத்தப்படுகிறது! (காப்பி அடிக்கப்படுகிறது). தமிழர் வாழும் உலகத்தின் எல்லா மூலைகளிலும் ஒலிக்கிறது.  அப்போதெல்லாம் இந்தியாவின் பெயர் நினைவுகூறப்படுகிறது.  ஒரு தமிழனின் பெருமை பேசப்படுகிறது.  ஒருவன் தான் பிறந்த நாட்டுக்காக இதைவிட என்ன பெருமை சேர்த்துவிடமுடியும்?
 
இளையராஜா இசையமைத்துக் கொடுத்தமாதிரியான சிம்பொனி இசையமைக்க சிலர் வருடக்கணக்கில் உழைத்ததுண்டு. ப்ராஹ்ம் (Brahm) என்பவருக்கோ, 14 வருடங்கள் பிடித்ததாம்.  ஆனால் நம் ராஜாவோ, ஒரே மாத அவகாசத்தில் முடித்துக்கொடுத்துள்ளார்.
 
ஒவ்வொரு சகாப்தத்திலும், ஒவ்வொரு துறையிலும் ஒரு சாதனையாளன்தான் பிறப்பான். காலத்தைக் கடந்து பேசப்படுவான்.  இந்திய இசைத்துறையில் ஒரு இளையராஜாதான் இந்த சகாப்தத்தில் நிற்பார். இசை உள்ளளவும் பேசப்படுவார்.  இது அவர் தாய் சின்னத்தாய் செய்த பாக்கியம். தமிழகம் செய்த பேறு!” என்கிறார் டி.வி.ஜி.
 
பகிர்வு நன்றி: திரு. சிவகுமார்.

Tuesday, June 3, 2014

பாடும் நிலா - இசைஞானி நேர்க்காணல்



சில மாதங்களுக்கு முன்னர் நண்பர் திரு. சிவகுமார் அனுப்பி வைத்திருந்த ஒருசில பழைய Magazines Scan’களில் இருந்து சிக்கியது இந்தப் பொக்கிஷம்.  விகடன் என்று அந்த கோப்பிற்குப் பெயரிட்டிருந்தார்.  எந்த ஆண்டு வெளிவந்தது என்று தெரியவில்லை.  இன்று (04 ஜூன்) பாடும்நிலாவின் பிறந்தநாள் சிறப்புப்பதிவாய் …! வாசித்து மகிழுங்கள். :)

***************************************************************************************

புதுசாக ஒரு பூ மலர்ந்தது மாதிரி புன்னகைக்கிறார். நெகிழ்ந்து நிற்கிறபோது விழியோரங்களில் நீர் எட்டிப்பார்க்கிறது.  ஒரு குழந்தையைக் கொஞ்சுகிற மாதிரி ஆர்மோனியத்தோடு பேசுகிறார்.  சில கேள்விகளுக்கு அப்படியே மனசுவிட்டுச் சிரிக்கிறார்.  இப்போது நினைத்தாலும் வியப்பாகவே இருக்கிறது.  இளையராஜா இதுவரைக்கும் ஒரு பேட்டியில் இந்த அளவுக்கு மனம்விட்டுப் பேசியிருப்பாரா என்பது சந்தேகமே!

“சப்த ஸ்வரங்கள்” என்ற தொடர் சென்னைத் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிறன்றும் ஒளிபரப்பாகிறது.  எஸ்.பி.பி. – டைரக்டர் வஸந்த் இருவரும் இணைந்து தயாரிக்கும் இந்தத் தொடரை இயக்குவது வைஷ்ணவி எண்டர்பிரைசஸ் நிறுவனம்.

தொடரில் தமிழக இசையமைப்பாளர்களைத் தனித்தனியே சந்தித்து அவர்களது அனுபவங்களைப் பதிவு செய்கிறார்கள்.  விஸ்வநாதன் – ராமமூர்த்தி முதல் சிற்பி வரைக்கும் அத்தனை பேரும் பங்குபெறுகிற தொடர் இது.

இப்போது ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி ஒளிபரப்பாகிறது.  விரைவில் வரவிருப்பது இளையராஜாவின் பேட்டி.  அவரைப் பேட்டி கண்டிருப்பது எஸ்.பி.பி.!

ராஜாவின் மடைதிறந்த பேட்டியிலிருந்து முன்கூட்டி ருசிக்க இங்கே கொஞ்சம்..

எஸ்.பி.பி. கேட்கிறார் –

”ராஜா.. ஒவ்வொரு நாளும் என்ன கலர்ல டிரஸ் போடணும்கிறது வரைக்கும் கவனமா இருப்பே.  ஸ்டைலா கிராப் வெச்சுட்டு ‘மடைதிறந்து லாலல்லால…’ன்னு பெல்பாட்டம் போட்டுப் பாடிட்டிருந்த நீ எப்படிடா ஆன்மீகத்துக்குள்ள மாறிப்போனே.. ரொம்பப் பர்ஸனல்னா சொல்ல வேணாம்…”

ராஜா சொல்கிறார் –

“உனக்குத் தெரிஞ்ச இளையராஜாதான் உலகத்துக்குத் தெரியிற இளையராஜா.  எனக்குச் சின்ன வயசுல கடவுள் நம்பிக்கை கிடையாது. காரணம் எங்க அண்ணன்!  மனிதர்கள்தான் இந்த உலகத்தை ஆட்டிப் படைக்கிறாங்க.  முதலாளிவர்க்கம்… தொழிலாளி வர்க்கம்னு சொல்லுவோம்.  ஆனா சாமி கும்பிடலேன்னாலும் கோயில்களுக்குப் போறப் பழக்கம் இருந்தது.  மைசூருக்கு ஒரு லைட் மியூஸிக் புரோகிராம் போயிருந்தோம்.  நல்லபடியா முடிஞ்சது.  எல்லோரும் பிருந்தாவன் சுத்திப்பார்க்கக் கிளம்பினாங்க.  எனக்குத் திடீர்னு காய்ச்சல்.  என்னை ரூம்ல வெச்சுப் பூட்டிட்டுப் போய்ட்டாங்க.  ஒரு மணி நேரத்துல உடம்பே கொதிக்குது.  எழுந்திருக்க முடியலை.  உதவிக்கு யாருமில்லை.  சரி.. அவ்வளவுதான்.. இன்னிக்கி நம்ம வாழ்க்கை முடியப்போகுதுன்னு நெனைச்சுட்டேன்.  அம்மா.. என் மனைவி, கார்த்திக் எல்லோரையும் நெனைச்சுட்டேன்.  அப்போ மனசுக்குல்ல யோசனை.  ‘மூகாம்பிகை கோயிலுக்குப் போகணும்னு இருந்துட்டுப் போகவே இல்லையே.. அதான் சோதிக்குதோ..”ன்னு நெனைச்சா அடுத்த அஞ்சாவது நிமிஷம்… குற்றாலத்துல குளிச்சு வந்து நின்ன மாதிரி ஃப்ரெஷ்ஷாயிருச்சு.  காய்ச்சல் போயிருச்சு.  அப்புறம் மூகாம்பிகை கோயிலுக்கு எல்லோரும் போனோம்.  கோயில் பிரகாரத்துல நான் காலெடுத்து வைக்கிறேன்.  சட்டுன்னு ஏதோ மனசுக்குள்ளே தாக்குது.  ‘என்ன இது.. ஏதோ ஒண்ணு உள்ளே தைக்குதே’ன்னு திகைப்பா இருந்தது.  அதுதான் என்னை மாத்துனது.  ஆன்மீகத்தில் நம்பிக்கை வந்தது.  நான் மூகாம்பிகைகிட்ட என்ன கேள்வி கேட்டாலும் எனக்குப் பதில் வரும்.  என் டிரஸ் மாறுச்சு.  வெஜிடேரியனானேன்.  நான் ரொம்ப மாறினேன்”.

“அன்னக்கிளிக்காக ஏ.வி.எம்.ல நுழைஞ்ச இளையராஜா.. சிம்பொனி பண்ண இளையராஜா.. ரெண்டு பேரைப் பற்றியும் சொல்லேன்..”

”ஒரு குழந்தை பிறக்கிறப்போ அது தவழ்றது.. தடுமாறி நடக்கிறது எல்லாமே பெற்றோரை உற்சாகப்படுத்து.  அந்தக் குழந்தையைக் கைதட்டி உற்சாகப்படுத்துவாங்க.  அதே குழந்தை வளர்ந்து ஆளாகி நாற்பது வயசுல நடந்து வந்தா யாரும் கைதட்டறதில்லையே.  அன்னக்கிளி வர்றப்போ நான் குழந்தையாயிருந்தேன்.  இப்போ இது ஒரு வளர்ச்சி.  சிம்பொனிக்காக ஒரு மாசம் அந்த ஸ்கோர் தயார் பண்ணினேன்.  Mind’ல உருவாகிற Sounds’ஐ அப்படியே mental’ஆ கேட்டு பேப்பரில் பண்ணனும்.  அது ஒரு மாதிரி அவஸ்தை.  நினைச்சதையெல்லாம் பேப்பர்ல கொண்டுவரமுடியாது.  ஒரு வழியாப் பண்ணிட்டுக் கிளம்பியாச்சு.  லண்டன்ல ராயல் ஃபில்ஹார்மோனிக் சொஸைட்டியில ரிக்கார்டிங்.  அவ்வளவு பேரும் தயாரா இருக்க.. அந்த மியூஸிக் கண்டக்டர் சைலன்ஸ்’னு ஒரு குரல் கொடுத்ததும் அப்படியே அடிவயிறு கலங்கிடுச்சு.  கருவே கலைஞ்ச மாதிரி.. அப்புறம் ஃபுல் மியூசிக் வாசிக்கிறாங்க.  “இது என் ஒலி.. இதுதானே நான் செய்தது.  நான் நினைத்த ஒலியெல்லாம் நெஞ்சை நிறைக்கிறதே’ன்னு பதறுது.  கையில வெச்சிருக்கிற நோட்ஸைப் படிக்க முடியலை.  நான் அழறேன்.  கார்த்திக் அழறான்.  கூட வந்திருக்கிற நரசிம்மன் அழறாரு.  அது அழுகை இல்லே.  அந்த உணர்வைச் சொல்ல முடியலே”.

”எனக்குத் தெரியும் ராஜா.. நீ ஒரு சிச்சுவேஷனுக்கு நூறு டியூன்கூட ரெடி பண்ணுவே.  ஆனா, ‘நான் போடறதுதான் டியூன்’ன்னு நீ கொஞ்சம் பிடிவாதமா சொல்றதாப் பேசறாங்களே..?”

”நான் சொல்லியிருப்பேன்.  சில இடத்துல நான் அதைச் சொல்ல வேண்டியிருந்திருக்கும்.  அதைப் பெரிதுபடுத்தக்கூடாது.  உனக்குச் சொன்னது உனக்கு.  என் Sonக்குச் சொல்றது அவனுக்குத்த்தான்.  இந்த wavelength புரியாதங்கதான் அப்படிச் சொல்றாங்க.  அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லே..”

’ராஜா.. உன்னோட டியூன்களை நிறைய காப்பியடிக்கிறாங்க.  ‘டேய்.. உன் பாட்டைத்தான் பாம்பே போய் பாடிட்டு வர்றேன்’னு அடிக்கடி சொல்வேன் தெரியுமா? அதைப் பற்றியெல்லாம் நீ என்னடா நினைக்கிறே?”

”பெனாட்ஷாவோட தத்துவத்தை வேறு யாராவது Quote பண்ணினா பெர்னாட்ஷா வருத்தப்படுவாரா? இல்லே திருக்குறளை எடுத்து யாராவது பயன்படுத்தினா அது குறளுக்குக் கஷ்டமா?   அவங்க எனக்குக் குடுக்கிற மரியாதைன்னு எடுத்துக்க வேண்டியதுதான்.  ஒரு கிரியேஷன்.. மோனலிசா பெயிண்டிங்’னா அதை வரைவது கஷ்டம்.  இன்னொரு பெயிண்டருக்குத்தான் தெரியும்.  ஃபோட்டோகாப்பி எடுத்து விக்கிறவனுக்கு அது புரியாது.  ஒரு கிளாஸிக்கை உண்மையா மதிக்கிறவன் அதைத் தொடக்கூடாது.  தொடமாட்டான்.  அதை மதிக்கக் கத்துக்கணும்”.

”அப்புறம் ராஜா.. காலாபானி பார்த்தேன்.. பெருமையா இருந்தது.  அதுக்காக இருபது நாள் ரீ ரிக்கார்டிங் பண்ணியாமே?”

”ஆமா.  படம் பார்த்தேன்.  எனக்குப் பிடிச்சது.  அந்த ஃபீலிங்க்ஸ்தானே நம்ம மியூஸிக்ல வரும்.  பொதுவா மூணு நாள்ல ஒரு படம் முடிச்சுடுவேன் நான்.  ஆனால் காலாபானிக்கு நான் இருபது நாள் எடுத்தேன்.  எழுநூறு படங்கள் பண்ணதுக்கப்புறம் இப்படி ஏதாவது ஒரு படம் நான் வேலை செஞ்சேன்னு எனக்குச் சொல்லிக்க நான் செஞ்சது அது.

”கார்த்திக்ராஜா,  யுவன்சங்கர், பவதாரிணி.. மூணு பேருமே ஃப்லிம் மியூஸிக் வந்துட்டாங்க.. பிரில்லியண்ட்டாப் பண்றாங்க.  இது எப்படி? உன்னோட இன்ஃப்ளுயன்ஸா? இல்லே ரத்தத்துல வந்த விஷயமா?

”ரெண்டாவதுதான்.  இறைவன் நமக்கான சூழ்நிலையையும் சந்தர்ப்பங்களையும் அமைச்சுத் தர்றான்னு எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு.  என்னோட அம்மாவோட ஆசைப்படி நான் வளரலை.  என் விருப்பப்படிதான் என்னை வளர்த்தாங்க.  என் பிள்ளைகளையும் நான் அப்படி வளர்க்கணும்னு ஆசைப்படறேன்.  என் பாதை அவர்களை நேர்வழிப்படுத்தியது.  அவர்கள் என்மேல் வைத்திருக்கிற மதிப்பும் மரியாதையும் அவர்களிடம் என்னை அன்பு செலுத்த வைத்தது.  விரும்பியபடி தங்கள் பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிற சுதந்திரம் அவர்களுக்கு உண்டு.  கார்த்திக் மாதிரி ஒரு பிள்ளை பொறக்கறது பெரிய விஷயம்.  அவ்வளவு நல்ல பையன்.  கார்த்திக் எல்லாத்தையும் விவரமா தெரிஞ்சுகிட்டு ஒரு விஷயத்தைத் தொடுவான்.  யுவன் அப்படியில்லே… எனக்குத் தெரியாதுன்னு சொல்லிகிட்டே கையை வைப்பான்.  ஆனா அது சரியா வரும்.  பவதாரிணி நிறையக் கத்துக்கவேண்டியிருக்கு.  கத்துக்கணும்னு சொல்லிட்டிருக்கேன்!”


 - ரா. கண்ணன்.

நன்றி : விகடன்

பகிர்வு நன்றி: திரு. சிவகுமார்.