பாடல் : செந்தூரப் பூவே
படம் : பதினாறு வயதினிலே
பாடியவர்கள் : எஸ். ஜானகி
எழுதியவர் : கங்கை அமரன்
இசை : இசைஞானி
செந்தூரப் பூவே! செந்தூரப் பூவே! ஜில்லென்றக் காற்றே!
என் மன்னன் எங்கே? என் மன்னன் எங்கே?
நீ கொஞ்சம் சொல்லாயோ? செந்தூரப் பூவே!
1. தென்றலைத் தூது விட்டு ஒரு சேதிக்குக் காத்திருப்பேன்!
கண்களை மூட விட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்!
கன்னிப் பருவத்தின் வந்தக் கனவிதுவே!
என்ன இனிக்கிது அந்த நினைவதுவே!
வண்ணப் பூவே! தென்றல் காற்றே!
என்னைத் தேடி சுகம் வருமோ? – செந்தூரப் பூவே!
2. நீலக் கருங்குயிலே! தென்னைச் சோலைக் குருவிகளே!
கோலமிடும் மயிலே! நல்ல கானப் பறவைகளே!
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்!
காலை வழியெங்கும் பூவை இறைத்திடுங்கள்!
வண்ணப் பூவே! தென்றல் காற்றே!
என்னைத் தேடி சுகம் வருமோ? – செந்தூரப் பூவே!
16 வயதினிலே! செயற்கையான Sets போட்டு ஸ்டுடியோவுக்குள் கதை சொல்லிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவின் Formula-வை உடைத்து, கிராமத்துப் புழுதியிலும், வயல் வரப்பிலும் ரசிகர்களை இழுத்துச் சென்று கதை சொன்ன இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் முதல் படம்! இந்தப் படத்தின் கதையை பாரதிராஜா முதன் முதலில் சொன்னது தனது நண்பன் எஸ்.பி.பி-யிடம்! பத்மஸ்ரீ எஸ்.பி.பி. அவர்கள்தான் படத்தை (அப்பொழுது பாரதிராஜா படத்திற்கு யோசித்து வைத்திருந்த பெயர் ‘மயிலு’) முதலில் தயாரிப்பதாக இருந்து, பின் பல்வேறு காரணங்களால் முடியாமல் போனது. முகம் நிறைய அப்பிய மேக்-அப் உடன் ஹீரோக்களும், ஹீரோயின்களும் வலம் வந்து கொண்டிருந்ததை மட்டுமே அதுவரை ரசித்துக் கொண்டிருந்த ரசிகர்களை, அழுக்கு வேட்டி கட்டிக் கொண்டு, வாய் நிறைய புகையிலை எச்சிலுடன், காலை இழுத்து இழுத்து நடந்து வந்த ‘சப்பாணியை’-யும் ஹீரோவாக ஏற்றுக் கொண்டு ரசிக்க வைத்தார் இயக்குனர் இமயம் பாரதிராஜா! படம் Box Office-ல் சக்கை போடு போட்டதாக ‘வரலாற்றுச் சுவடுகள்’ தெரிவிக்கின்றது. ‘அன்னக்கிளி’ படத்திற்குப் பிறகு இசைஞானி ஏக பிஸியான நேரத்தில் ஒப்புக் கொண்ட படம் ’16 வயதினிலே’!.
‘மயில்’ (ஸ்ரீதேவி) தன் கற்பனையில் தனக்கு வரும் காதலன் எப்படி இருப்பான் என்று கனவு காணும் மன நிலையில் பாடும் பாட்டு’. ‘செந்தூரப் பூவே’ பாடலுக்காக இசைஞானியிடம் இயக்குனர் கூறிய Situation இவ்வளவுதான். இந்தப் பாடலைக் குறித்து இசைஞானி மேலும் கூறும் பொழுது ‘அப்போதெல்லாம் எந்த Director-ம் இசையமைப்பாளரிடம் ‘இப்படி இருக்கலாம்! அப்படி இருக்கலாம்!’ என்று அபிப்ராயமோ ஆலோசனையோ சொல்வது கிடையாது. பாடல் சூழ்நிலையை விளக்கி விட்டு அப்படியே விட்டு விடுவார்கள்’. இசையமைப்பாளரும், கவிஞரும் என்ன கொடுக்கிறார்களோ அதை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். தேவைப்படும் சிறு சிறு மாற்றங்களை அதன் பின் கேட்டு வாங்கிக் கொள்வார்கள். இந்தப் பாடலுக்காக சில Tune-களைப் போட்டேன்! எதுவும் பாரதிக்குப் பிடித்த மாதிரி தெரியவில்லை! அதன் பின்னர் ஒரு Tune-ஐப் போட்டு ‘பாரதி! இது நன்றாக இருக்கும்’ என்று வற்புறுத்தினேன். அதுதான் “செந்தூரப் பூவே” பாடல் மெட்டு” என்கிறார். (ஆதாரம்: ‘தினத்தந்தி - வரலாற்றுச் சுவடுகள்’).
இந்தப் பாடலை யாரை வைத்து எழுத வைக்கலாம் என்று யோசித்த பொழுது, பாரதிராஜாதான் கங்கை அமரனின் பெயரை இசைஞானியிடம் சிபாரிசு செய்திருக்கிறார். இதைக் குறித்து ‘Zee தமிழ்’ தொலைக்காட்சிக்கு கங்கை அமரன் கொடுத்த பேட்டியில் ‘நான் பல்லவியை எழுதி முடித்ததும் பாரதிராஜா தான் ‘சரி! சரணம் எழுதுடா பார்ப்போம்’ என்றார். நான் உடனே ‘தென்றலைத் தூது விட்டு’ சரணத்தை எழுதினேன். அவர் கடைசியில் ‘அதுவே இருக்கட்டும்’ என்று OK செய்து விட்டார். என் பெயரையும் ‘அறிமுகம்’ என்று திரையில் காண்பித்தார். அதன் பின்னர் வரிசையாக அவர் படங்களுக்கு பாடல்கள் எழுதினேன்’ என்று குறிப்பிடுகிறார். சில வருடங்களுக்கு முன், ‘செந்தூரப்பூ’ என்று ஒரு பூவே கிடையாது! அது பாடலுக்காக எழுதப்பட்டது!’ என்று திரு. கங்கை அமரன் அவர்கள் மற்றொரு Interview-வில் குறிப்பிட்ட ஞாபகம். அந்தக் காலகட்டத்தில் வெளிவந்தப் பாடல்களில் தனக்கு மிகவும் பிடித்த பாடல் இது என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் இந்தப் பாடலைக் குறிப்பிட்டுள்ளார்.
திருமதி எஸ். ஜானகி அவர்களுக்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்த இந்தப் பாடலை நிறைய மேடைகளில் அவர் பாடிக் கேட்டிருக்கிறேன். எத்தனை உச்ச ஸ்தாயியில் பாடினாலும் முகத்தில் ஒரு சின்ன புருவ உயர்த்தல் கூட இல்லாமல் பாடலில் அவர் கொடுக்கும் Expression.. அது Nightingale of South India-வினால் மட்டுமே முடிந்த ஒரு கலை! (ஆண்களில் இப்படிப் பாடக்கூடிய பாடகர் திரு. மலேசியா வாசுதேவன் அவர்கள்). ஒரு காலத்தில் ‘ஜில்லென்றக் காற்றே’ முடிவில் வரும் Bass Guitar-ன் மூன்று Notes-களுக்காக மட்டுமே Tape Recorder-ல் ஏகப்பட்ட முறை அந்த வரியை Rewind செய்து Cassette-ஐ நாசமாக்கிய நினைவு!
ஜெயா டி.வி.யின் ‘அன்றும் இன்றும் என்றும் Maestro Live in Concert’-ல் இசைஞானி அவர்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் பாடல்களின் பங்களிப்பு பற்றி விளக்கினார். ஒரு தாய் பாடும் ஆரிராரோ தாலாட்டு, பின் குழந்தை வளர்ந்ததும் அவள் பாடும் ‘சாஞ்சாடம்மா சாஞ்சாடு’ பாடல், ‘சடுகுடு’ விளையாட்டுப் பாடல், வயலில் பாடப்படும் அறுவடைப் பாடல், காதல் பாடல், காதலர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமல் தவிக்கும் பொழுது பாடப்படும் பாடல், இப்படி பல நிலைகளில் பாடப் படும் பாடல்களை விளக்கிக் கொண்டே வந்த அவர் ‘விரக தாபம்’ என்ற உணர்வைக் குறிக்கும் வகையில் திரைப்படங்களில் வந்த பாடல்களை விளக்கத் துவங்கினார். “விரக தாபம் என்ற உணர்வைச் சொல்ல எவ்வளவோ Composers எவ்வளவோ அழகான Melodies எல்லாம் போட்டு இருக்கிறார்கள். ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்’, Shankar Jaikishan இசையமைத்த ‘Ye Shaam Ki Thanhaayiyaan’ (லதா மங்கேஷ்கர் பாடியிருக்கும் இந்தப் பாடலை இசைஞானி Hum மட்டும் செய்து காண்பித்தார்! என்ன படம் என்று தெரியவில்லை!). அந்த Influence-ல் நான் போட்ட பாட்டு! Influence என்றால், ‘விரக தாபம்’ என்ற உணர்வுக்கு, ஒருவரை ஒருவர் பார்க்க முடியவில்லை என்ற உணர்வுக்கு நான் போட்ட பாடல்” என்று இசைஞானி கூறி முடிக்க, Keyboard Bells உடன் ‘செந்தூரப் பூவே’ Prelude-ஐக் கலைஞர்கள் இசைக்கத் துவங்கினர். இசைஞானி Music conduct செய்த காண்பதற்கரிய ஒரு தருணம் அது. Keyboard bells முடிந்து வயலின்களின் ஆர்ப்பாட்டமான Orchestration துவங்கவும் பாடலை அடையாளம் கண்டு கொண்ட மகிழ்ச்சியில் கூட்டத்தில் ஏகக் கரகோஷம். ஆனால் இசைஞானி முகத்தில் திருப்தியில்லை. ‘Wait’! என்ற ஒற்றை வார்த்தையில் அத்தனையையும் நிறுத்தியவர், மீண்டும் இசைக்கச் சொன்னார். மீண்டும் Violin Orchestration துவங்க, திருப்தியில்லாதவராய் மீண்டும் நிறுத்தியவர், Violinists பக்கம் திரும்பி.. நி..ச..ப..ப.. C Sharp, D, A என்று திருத்தங்களைக் கூறத் துவங்கினார். அதன் பின் 1-2-3 1-2-3 சொல்லி அவர் ஆரம்பிக்கவும் கலைஞர்கள் மீண்டும் இசைக்கத் துவங்கினர். இவ்வளவும் மேடையிலேயே பல ஆயிரம் மக்களின் முன்னால் நிகழ்கிறதே என்று இசைத்துக் கொண்டிருந்த கலைஞர்கள் எல்லோரும் நெளிய, ‘பரவாயில்லை! அவங்க (Audience) முன்னாடி Rehearsal பண்ண மாதிரி இருக்கட்டும்’ என்று சிரித்தார் இசைஞானி.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு எங்கள் வீட்டு சமையலைறையில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வந்தது. ஒரு நாள் ஏகப் பசியில் சமையலறைக்குள் நுழைந்தேன். அடுப்பில் சாம்பார் தயாராகக் கொதித்துக் கொண்டிருந்தது. எனக்கோ கொலைப் பசி. ‘பசிக்குதும்மா!’ என்று நான் சொல்லவும் ‘கொஞ்சம் இருடா’ என்றவர், கொஞ்சம் சாம்பாரை கரண்டியில் சிறிதளவு எடுத்து, தன் கையில் ஊற்றி சுவைத்து பார்த்து, அதன் பின் தனது அஞ்சரைப் பெட்டியில் இருந்த மசாலாக்களில் ஒன்றை (அதில் மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி தவிர எனக்கு ஒன்றன் பெயரும் தெரியவில்லை) ஒரு சிட்டிகை அள்ளி அதில் போட்டு கலக்கி, பின் மீண்டும் சுவைத்துப் பார்த்து, அதன் பின் மீண்டும் பிறிதொரு வஸ்துவை இரு விரல்களில் கிள்ளி அதனுள் போட்டுக் கலக்கி, சுவைத்துப் பார்த்து… இப்படியே ஒரு 3 நிமிடங்களுக்கு சாம்பாருடன் போராடிக் கொண்டிருந்தார். ‘இந்த ஒரு சின்ன சிட்டிகை மசாலா அப்படி என்ன சாம்பாரின் சுவையைக் கூட்டவோ குறைக்கவோ போகிறது’? என்று எனக்கு ஏக எரிச்சல் (பசி?). அதன் பின்னர் யோசித்துப் பார்த்த பொழுது எனக்கு ஒரு விஷயம் விளங்கியது. இது நம் எல்லோர் வீட்டின் சமையலறையிலும் நம் அம்மாக்கள் தினம் தினம் அரங்கேற்றும் ஒரு நர்த்தனம்!
இந்தக் காட்சியை நான் இசைஞானி தன் இசைக் கலைஞர்களுடன் Music Conduct செய்து கொண்டிருந்த அழகுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். சுவையான ஒரு உணவைத் தன் பிள்ளைகளுக்குத் தர ஒரு தாய் சமையலறையில் நடத்தும் ஒரு போராட்டத்தைப் போல நல்ல இசையைத் தன் ரசிகர்களுக்குத் தர இசைஞானி மெனக்கெட்டுக் கொண்டிருந்தார். உணவு விஷயத்தில் ஒரு தாயும், இசையில் நம் இசைப் பிதாவும் 99.9% Output-ஐ அறவே வெறுக்கும் Perfectionists என்ற விஷயம் எனக்கு விளங்கியது.
பாடல்களை download செய்வது இசைஞானிக்கு அறவே பிடிக்காத விஷயம் என்பதாலும், இதைக் கண்டித்து அவர் பல முறை பேசியிருப்பதாலும் இந்தப் பக்கத்தில் அவர் பாடல்களின் download links எதையும் தருவது இல்லை. இருப்பினும் இசைஞானி Conduct செய்யும் அந்தக் கண்கொள்ளாக் காட்சியை அதைப் பார்க்காதவர்கள் Miss செய்து விடக் கூடாது என்ற ஆதங்கத்தில் Youtube link-ஐ கீழ்க்காண்க! http://www.youtube.com/watch?v=KXf1AxdK0oc. இசைஞானி மன்னிப்பாராக! [முழு Concert-ம் CD-க்களில் கிடைக்கிறது! வாங்கிக் கண்டு, கேட்டு மகிழ்க!]. இந்தப் பாடலின் Prelude-ன் முடிவில் Flute போல இசைக்கப்படும் ஒரு Wind Instrument, Flute போல பக்கவாட்டில் இருக்கும் துளையில் காற்றை ஊதாமல், குழலின் ஒரு முனையில் வாய் வைத்து ஊதப்படுகிறது. இதன் பெயர் Recorder என்று நினைக்கிறேன். இது First Interlude-ன் துவக்கத்திலும் ஒலிக்கிறது. சரணத்தில் ‘என்ன இனிக்கிது அந்த நினைவதுவே’ வரியில் எஸ்.ஜானகி அவர்கள் தன் குரலில் ஒரு Softness கலந்து decorate செய்து பாடும் அழகு ‘விரக தாபம்’ என்ற உணர்வின் tantalizing display!
Chords Progression, பாடலின் Carnatic Raga தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்!!
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது பத்மஸ்ரீ திரு. கமல்ஹாசன் அவர்கள் இசைஞானியைக் குறித்துக் கூறியதாக வலையில் படித்த ஒரு வரி நினைவுக்கு வருகிறது. “இசைஞானி என்று அவரை அழைப்பதை விட இசை விஞ்ஞானி என்று அழைப்பதே மிகப் பொருத்தமாக இருக்கும்!!”
இந்த நிகழ்ச்சியை வெளிநாட்டில் இருந்து கொண்டு பார்ப்பதற்கு தவித்ததும், original DVD கிடைத்ததும் அதை எத்தனை தரம் பார்த்து மகிழ்ந்தோம் என்று சொல்லி முடியாது. அதுவும் இந்த பாடல் ஆரம்பத்தில் இசை ஆரம்பித்ததும் உடலில் மயிர்க் கூச்செறிந்தது கண்களில் நீர் வந்ததும் இன்னும் தொடர்கிறது. உங்கள் பதிவு இளையராஜா பக்தர்கள் வரிசையில் நாமும் இணைய செய்கிறது. இன்னும் பல பாடல்களையும் விமர்சனம் செய்வீர்களா?
ReplyDeleteஅந்த "Yeh shaam ki tanhaaiyaan " பாடலுக்கு லிங்க் http://www.youtube.com/watch?v=vJTFAQ1_Dus இதை தான் நாடோடி தென்றலில் "ஒரு கணம் ஒரு யுகமாக" தந்துருக்கார். எவ்வளவு அழகாக பல மடங்கு மெருகேற்றி இருக்கார்! Geniuous .
ReplyDelete