Wednesday, June 1, 2011

ராஜ குறட்பாக்கள்

இசைஞானியின் 68ஆவது பிறந்த நாளுக்காய் எழுதிய (!) 68 ராஜகுறட்பாக்கள். ஃபேஸ்புக்கில் பதிந்தது, இங்கே தவறுதலாய் Draftsலேயே தங்கிவிட்டதை இன்றுதான் கவனித்தேன். இதோ இங்கும் பதிந்தாயிற்று..! :-)

இரவிலும் பகலிலும் என் உயிரிலும் ரத்தத்திலும் வியாபித்திருக்கும் இசைஞானியின் 68வது பிறந்த நாளுக்காய் அன்பு ரசிகனின் பணிவான காணிக்கை, இந்த 68 ராஜகுறட்பாக்கள்.

சுயமாய்க் கவிபுனையும் ஆற்றல் இல்லாத காரணத்தால் வள்ளுவனைத் துணைகொண்டேன்.  இலக்கணப் பிழைகளிருப்பின் தமிழறிந்தோர் பொறுத்தருள்க.  இவை  இசைஞானியின் மேல் கொண்ட அன்பின் காரணமாய் விளைந்த வரிகள். 

எல்லாம் வல்ல அந்த இறைவன், இசைஞானிக்கு இந்தப் புதிய ஆண்டில் நல்ல தேக சுகமும், நிம்மதியும், வாழ்வில் அமைதியும், பிற நலன்களும் அருளட்டும்!!

வாழ்க இசைஞானி!

இசைஞானி பக்தன்.

1.   அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
இசைஞானி முதற்றே இசை

2.   இசைப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இசைஞானி இசைகேளா தவர் 

3.   நீரின்றி அமையாது உலகெனின் ரசிகர்க்கு
ராஜாஇன்றி அமையாது இசை. 

4.   ரசிகர் இசைஞானிக்காற்றும் நன்றி இணையத்தில்
பாடல் பதிவிறக்கம் செய்யாதல்

5.   இசைஞானி ரசிகர்க்காற்றும் உதவி வருடத்தில்
நான்கு ஸ்டேஜ்ஷோஸ் செயல்

6.   மூன்று ஸ்வரத்தில் செய்தபாடல் சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

7.   எண்பதுகள் கேளாதது நன்றன்று மற்றவை
காதிலே கேளாதது நன்று 

8.   எவ்விசை கேளார்க்கும் மதியுண்டாம் மதியில்லை
ராஜஇசை கேளா தவர்க்கு 

9.   இசைப்பின் இசைஞானிபோல் இசைக்க அஃதிலார்
இசைப்பினும் இசைக்காமை நன்று
   
10.  இசையுள் இசை ராஜாஇசை அவ்விசை
இசையுள் எல்லாம் தலை 

11.  நீரின் றமையா துலகெனின் இசைஞானி
இசையின் றமையா தின்பம்
   
12.  இன்பம் நிம்மதியிரண்டும் தங்காது ராஜா
இசை வழங்கா விடின்

13.  செவிநக இசைப்பது இசையன்று ராஜா
உயிர்நக இசைப்பது இசை 

14.  இசைத்தல் யார்க்கும் எளிய அரியவாம்
இசைஞானி வண்ணம் இசைத்தல்
   
15.  வானோக்கி வாழும் உலகெல்லாம் இசைஞானி
இசைநோக்கி வாழும் ரசிகர்

16.  தாயென்ப தன் தலைவரென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப இசை ஞானிக்கு  

17.  இறையருளில் இசைப்பாரே இசைஞானி மற்றெல்லாம்
நகலெடுத்துப் பின் செல்பவர்   

18.  செயற்கரிய இசைசெய்வார் இசைஞானி மற்றவர்
செயற்கரிய இசைசெய்க லாகாதார்
   
19.  மேஸ்ட்ரோவும் பாலுவும் உடைத்தாயின் இசைவாழ்க்கை
பண்பும் பயனும் அது 

20.  உயிர்தொடும் இசையே நல்லிசை அஃதும்
இசைஞானி குரலுடன் அமிழ்து 

21.  எழுபிறப்பும் தீயவை தீண்டா இசைஞானி
கீதாஞ்சலி கேட்கப் பெறின்

22.  அமிழ்தினும் ஆற்ற இனிதே இசைஞானி
கிராமியம் கலந்த மேற்கு  

23.  இசைஞானி இசைகேட்டல் செவிக்கின்பம் அவரின்
குரல்கேட்டல் இன்பம் உயிர்க்கு

24.  கஜலினிது ஜாஸினிது என்பர் ராஜாவின்
கிராமியம் கேளா தவர்

25.  ராஜா உளவாக இன்னாத இசைகேட்டல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று 

26.  சிம்ப்ஃபொனியில் இசைத்திரு வாசகத்திற்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது

27.  மறவற்க மெளனராகம் பாடல்கள் துறவற்க
தென்றலே என்னைத் தொடு   

28.  மாலை மழையினில் இசைஞானி பாடல்
மதுவிலும் போதை தரும் 

29.  யாகேட்கா ராயினும் ப்ரியாகேட்க கேளாக்கால்
செத்திடும் சிந்தையில் இசை  

30.  காதினால் கேட்டஇசை மறைந்துபோம் மறையாதே
ஜீவன்தொடும் ராஜா இசை

31.  அஞ்சலி குணா அன்னக்கிளி அழகி
உயிரினும் ஓம்பப் படும்   

32.  நல்லிசைக்கு வித்தாகும் ஹார்மோனியம் கீபோர்ட்
என்றும் இடும்பைத் தரும் 

33.  கைம்மாறு வேண்டா இசைபொழியும் ராஜாவுக்
கென்னாற்றும் கொல்லோ ரசிகர்   

34.  ஊருணி நீர்நிறைந் தற்றே இசைஞானி
இளைய ராஜா இசை 

35.  இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
ராஜா இசைகேட் பவர்க்கு 

36.  நல்லிசை எதுவெனும் பேதைமை நீங்க
ராஜாஇசை கேட்பது அறிவு

37.  அஞ்சாமை அறிவூக்கம் இசைஞானம் இந்நான்கும்
எஞ்சாமை ராஜாவுக் கியல்பு   

38.  இயற்றலும் மீட்டலும் இசைஎழுதலும் எழுத
இசைத்தலும் வல்லார் ராஜா   

39.  நல்லிசைசெய்து மகிழ்வூட்டும் இசைஞானி ரசிகர்க்கு
இறையென்று வைக்கப் படும்  

40.  தொட்டனைத் தூறும் மணற்கேணி ஞானிக்கு
இறையருளில் ஊறும் இசை   

41.  ஆர்மோனியம் வயலின் குழல்தபலா இந்நான்கும்
அணியென்ப இசைஞானி இசைக்கு
   
42.  இசையுடைமை உடைமையுள் உடைமை பிறிதுடைமை
உடைமையாய் எண்ணார் ராஜா

43.  கார்த்திக் யுவன் பவதா இம்மூவர்
பெற்றது பேறினும் பேறு  

44.  பெருமை இறையருளில் இசைத்தல் சிறுமை
கீபோர்டில் காப்பி அடித்தல்

45.  உயிருருக்கும் இசை புரியும் இசைஞானி
பண்பு பாராட்டும் உலகு   

46.  பாலொடு தேன்கலந் தற்றே இசைஞானி
ஆர்மோனியம் ஊறிய இசை
   
47.  உள்ளக் களித்தலும் சுவைத்து மகிழ்தலும்
கள்ளுக்கில் ராஜாஇசைக் குண்டு   

48.  இசைசெய்து வாழ்வாரே இசைஞானி அவரின்
தடம்பற்றிப் பின்செல்வர் பிறர்

49.  அமிழ்தினும் இனிது ராஜாஇசை ரசிகர்
கேட்டு மகிழ்ந்து இருப்பர்

50.  ஒருநாள் எழுநாள்போல் செல்லும் ரசிகர்க்கு
ராஜாஇசை கேளா விடின்

51.  துன்பென ஒன்றில்லை வாழ்வில் ராஜா
இசையமுது உண்ணப் பெறின்

52.  உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் ராஜாஇசை இனிது

53.  இசைக் கடும்புனல் நீந்திக் கரைசேரார்
இசைஞானி இசைகேளா தவர்

54.  நல்லிசை என்ப தென்றும் புதிது
அவ்விசை செய்வார் ராஜா

55.  விருதுகள் நோக்கானாய் இசைசெய்து வாழ்வானை
இறையாத் தொழுவர் ரசிகர்

56.  இசையறிஞர் தாம்தொழும் இறைவன் இவரிருவர்
பதம்தொழுவேன் என்பார் ராஜா

57.  நல்லிசைக் கிலக்கணம் யாதெனின் இசைஞானி
ஆர்மோனியம் வழிவரும் இசை

58.  எழுசுரம் இசைத்ததும் முடிந்ததிசை மற்றவை
ஏமாற்றல் என்பார் ராஜா

59.  மானுடப் பிறப்பிலினி முடியா ஒன்று
தொள்ளாயிரம் படங்களுக் கிசை

60.  பெருமை யுடையவர் செய்வார் தலைமுறை
கடந்து நிற்கும் இசை

61.  மதன்மோகன் ரோஷன் பர்மன் சௌத்ரி
இவரிசை வியப்பார் ராஜா

62.  வெண்மை எனப்படுவ தியாதெனின் இசைஞானி
உடையும் உள்ளமும் அது

63.  பேதைமயுள் எல்லாம் பேதைமை இசைஞானி
இசை கேளா திருத்தல்

64.  இசைஞானி இசையின் அடியொற்றிச் செல்லாக்கால்
திரையிசை அமைப்பது அரிது

65.  இசையெனும் மலையேறி நின்றார் இசைஞானி
பாதம் தொழுதல் இனிது

66.  நத்திங் பட்-வின்ட் இசைப்பேழை மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்

67.  இவரென் மாணவர் எனக்கூறிப் புகழடையும்
ட்ரினிட்டி காலேஜ்-ஆஃப் லண்டன்

68.  இன்மையுள் இன்மை இசைரசிப்பின்மை வன்மை
இசைஞானி ரசிகனெனும் பேறு

4 comments:

  1. each song of his is a gem in its own way.. i too pay equal, sometime more attention to his bgm inbetween the verses. though my music knowledge is nowhere near yours, i do try ti id the particular instrument he's used for each song.. when you sit & notice all that & think abt it, his musical knowledge--its depth is simply astounding!!! isagnani ai ninaithu viyakkada naale illai!!

    ReplyDelete
  2. @ Lakshmi - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ :-)

    ReplyDelete