Sunday, September 8, 2013

இசைஞானி - பானுமதி சந்திப்பு



ஃபேஸ்புக் நண்பர் திரு. சிவகுமார் அவர்கள் முன்னொருமுறை அனுப்பியிருந்த ஒரு சுட்டியிலிருந்து சிக்கியது, இசைஞானியும் திருமதி. பானுமதியும் சந்தித்து உரையாடிய ஒரு அபூர்வ நிகழ்வின் பதிவு.  முழுப் பேட்டியும் கிடைக்காவிட்டாலும், கிடைத்த இரண்டு பக்கங்களும் பொக்கிஷம். எந்தப் பத்திரிக்கையில் வெளிவந்தது என்று எந்தத் தகவலும் இல்லை.

இதைக் குறித்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்ததும், விட்டுப் போயிருந்த விஷயங்களைப் பற்றி திரு. ராஜேந்திரகுமார் அவர்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்களும், ட்விட்டரில் வாசித்துவிட்டு நண்பர் @tekvijay, பேட்டி சொல்லும் விஷயங்களாக பற்பல விஷயங்களை அலசியிருந்ததும் அற்புதம்.  அத்தனையும் மொத்தமாய் ஒரே பதிவாக்கினால் சிறப்பாய் இருக்கும் என்று தோன்றிய காரணத்தால்.. ..

*************************************************************************

    வணக்கம்

பானுமதி: வணக்கம்.  வாங்க. வழக்கமா நான் காலையில ”வாக்” போவேன்.  நீங்க வர்றதினால போகல.

    எனக்கு ரொம்ப நாளாகவே ஆசை.  உங்களை மீட் பண்ணி மியூஸிக் பற்றி டிஸ்கஸ் பண்ணனும்னு.  இன்னைக்குத்தான் அதுக்கு வேளை வந்திருக்கு.  உங்க பாட்டுகளை மேடையில் பலமுறை பாடியிருக்கேன்.  சொல்லப்போனால் நான் உங்க Fan.  இப்போ உங்க பாட்டுகளை நிறைய சேகரிச்சு வச்சிருக்கேன்.

பானுமதி: அப்படியா..!! ரொம்ப சந்தோஷம்.  இப்போ கொஞ்ச நாளாகவே உங்க பாட்டை அடிக்கடி கேட்கிறேன்.  You are a Genius..!  ஆமா.! உங்களைப் பற்றி நான் எடுத்திருக்கிற முடிவு அதுதான்.  என் பாட்டு கலெக்‌ஷன் வச்சிருக்கிறதா சொன்னீங்களே. என்னென்ன பாட்டு வச்சிருக்கீங்க?

    என்னால முடிஞ்சவரை கலெக்ட் பண்ணியிருக்கேன். ‘லைலா-மஜ்னு’ படத்தில் நீங்கள் பாடிய ‘காசுக்கு மூணு சீட்டு’ (ராகத்துடன் அந்தப் பாடலைப் பாடிக்காட்டுகிறார்) எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு.  சின்னப் பையனாக இருந்தப்பவே அந்தப் பாட்டை பாடுவேன்னா பாருங்களேன்.

பானுமதி: Very Good.! நானும் கூட அப்படித்தான்.  சின்ன வயசிலிருந்தே பாட ஆரம்பிச்சுட்டேன்.  நம்ப மாட்டீங்க.  நான் முறையா சங்கீதம் கத்துக்கிட்டதில்ல.  ஆனா எனக்கு ஆர்வம் ஜாஸ்தி.  கேட்ட உடனே பாடுவேன்.  நடிப்பு விஷயத்திலே அப்படி இல்லே.  மத்தவங்க மாதிரி இருக்கக்கூடாதுங்கிறதுல கண்டிப்பா இருப்பேன்.  வித்தியாசமா இருக்கணும்னு நினைப்பேன்.

    நீங்க முதல்ல நடிச்ச படம் எதும்மா?

பானுமதி: First .. Book ஆன படம் ரத்னகுமார்.

    அந்தப் படத்திலே கூட ‘அம்மா தாயே’ன்னு ஒரு கர்நாடிக் பாட்டு வருமில்ல?

பானுமதி: ரொம்ப நல்லா ஞாபகம் வச்சிருக்கீங்களே..! (’கலைமாதும் மலைமாதும் இருபுறம் அமர்ந்து’ என்ற பாடலை முழுவதும் பாடுகிறார்).  காலையில என் வாய்ஸ் நல்லா இருக்காது.  ஈவினிங்தான் நல்லா இருக்கும். (பல பாடல்களைப் பாடிக்காட்டுகிறார் பானுமதி).

    ஆகா. நானே உங்களைப் பாடச் சொல்லிக்கேட்கணும்னு நினைச்சேன். நீங்களே பாடிட்டீங்க.  Thanks.

பானுமதி: அந்தப் பாடல்களெல்லாம் சி.ஆர். சுப்பராமன்தான்.  He is Just like You.

    ஐயோ… அவங்களோட என்னை… அவங்க எங்கே.?? நான் எங்கே..??

பானுமதி:  Real Genius அவர்.  He knows Classical just like SatyaNarayana.  English, Carnatic Music’ம் நல்லாவே தெரியும்.  அதுபோலவே இந்த Generation’க்கு இளையராஜா வந்தாச்சு.

    பெரிய ஜீனியஸைப் போய் இளையராஜா மாதிரின்னு சாதாரணமா சொல்லிட்டீங்களேம்மா.  வருத்தமா இருக்கு.  எம்.எஸ்.விஸ்வநாதன் சார் மாதிரி Talented முன்னால நான் சாதாரணம். அவருக்கு நீங்கதான் First Chance கொடுத்ததுன்னு.. … ..??

பானுமதி:  நான்தான்.  அதை நானே சொல்றது நாகரிகமில்ல. அவரே சொல்லி இருக்காரு.

    எனக்குத் தெரியும்.  நீங்க சொல்லித் தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன்.

பானுமதி:  சண்டிராணி படம் ஸ்டார்ட் பண்ணிய சமயம்.  அப்ப சுப்பராமன் சார்கிட்டே ஆல் இன் ஆல் ஆக இருந்தார் விஸ்வநாதன்.  நான் அப்பவே அவரை வாட்ச் பண்ணியிருக்கேன்.  ரொம்ப சுறுசுறுப்பு.  ‘ஸ்பார்க்’ மாதிரி ரொம்ப ஸ்மார்ட்டா இருப்பார்.  மேலே வரக்கூடிய எல்லாத் திறமைகளும் அவரிடம் இருந்தது.  சண்டிராணி படத்துக்கு மூணு லாங்குவேஜ்ல மியூஸிக் பண்ணினாரு.

    விஸ்வநாதன் சாரோடு ராமமூர்த்தி சாரை நீங்கதானே சேர்த்தது?

பானுமதி:  ஆமா, அதே படத்துலதான்.

    அப்பவெல்லாம் இசை அமைக்கிறவங்களுக்கும் மற்ற மியுஸீஷியன்களுக்கும் நிலைமை எப்படி இருக்கும்?

பானுமதி: பிக்சர் காண்டிராக்ட்.  அதை மாதச் சம்பளமாகக் கொடுப்போம்.  முன்னால நடிப்புல மட்டுமில்ல.  மியூஸிக்லேயும் ஹெல்த்தி காம்பெட்டிஷன் இருந்துச்சு.  சுப்பையா நாயுடு, ஜி. ராமநாதன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இவங்களை உருவாக்கிய சுப்பராமன், ஏ.வி.எம்.ல சுதர்சன், மகாதேவன் இப்படி நிறைய Talent’ஆனவங்க இருந்தாங்க.

மியூஸிக் டைரக்டருக்கு சினிமா டச்சப் தெரிஞ்சிருக்க வேண்டியது அவசியம். சிலர் பிரபல்யமாகாமலே இருப்பதற்குக் காரணம், கர்நாடிக் ஞானம் குறைச்சலா இருப்பதுனாலதான்.  மியூஸிக் தெரிஞ்சதுனால சொல்றேன்.  எல்லோருமே மியூஸிக் டைரக்டராகணும்னு நினைக்கிறாங்க. நெனைச்சா மட்டும் போதுமா?

    உங்க டைம்ல இருந்த மாதிரி வாய்ஸ் உள்ள ஆர்ட்டிஸ்ட் இப்போ இல்லீங்களே?

பானுமதி: நான் ஒண்ணு சொல்லட்டுமா?  இன்னைக்கு நான் ப்ளேபேக் பண்ணினா, இப்ப அதிகமா சம்பாதிக்கிற ஆர்ட்டிஸ்ட்டை விட உறுதியா அதிகம் சம்பாதிப்பேன்.

    அதையேதான் நானும் கேட்கணும்னு நெனைச்சேன்.

பானுமதி: பணம் வாங்கிட்டு கண்ட Characterலேயும் act பண்ண எனக்குப் பிடிக்காது.  Money is not the main thing’னு விட்டுவிட்டேன்.  அது போல நான் எல்லா வேஷமும் போடமாட்டேன்.

*************************************************************************

கிடைத்த இரண்டு பக்கங்களிலும் இருந்தது இவ்வளவு மட்டுமே.  இனி விடுபட்ட பகுதிகள் திரு. ராஜேந்திரகுமார் அவர்கள் Facebook’ல் தந்திருந்த பின்னூட்டத்திலிருந்து..

She praised him a lot and called him 'Mohana Raja' because of his beautiful usage of that raga.  Then she expressed her desire to sing in his music and he was shocked and thought she was joking. But she was very firm.(finally her dream came true much later when she directed 'Periyamma' and sang in his music. She sang in 'Chembarauththi too). He then told her that his wife was expecting and asked her to suggest a name.  She immediately said 'Mohanan' if it is a boy and 'Mohana' if it is a girl (No marks for guessing who that 'child' was.  But somehow, he chose a different name!). .”

*************************************************************************
நண்பர் Vijay SA @tekvijay அவர்களின் Twitlonger’லிருந்து
இந்த பேட்டி சொல்லும் விஷயங்கள் பல!

இசைஞானி தானே தேடிச்சென்று பானுமதி அம்மாவை சந்தித்து பேசுகிறார். இன்றைக்கு உள்ள பெரிய MDக்கள் யாரும் இதுபோல், ஒரு இசை ஜாம்பவானை சந்தித்து பேசுகிறார்களா! இசைஞானியை தவிர்த்து என்றாலும்கூட மற்ற இசை ஜாம்பவான்களை சந்திக்கிறார்களா? அப்படியே சந்தித்தாலும் அவர்களிடம் கேள்வி கேட்க விஷயம் இருக்குமா?

ராஜா கேட்கும் கேள்விகள், அவர் சின்னப்பையனாக இருந்தபோதும் சரி இண்டஸ்ட்ரிக்குள் நுழைந்து வேலைபார்த்தபோதும் சரி, இசைத்துறை பற்றின பல விஷயங்களை கவனித்துள்ளார் என்பதை இந்த பேட்டி காட்டுகிறது!



சி.ஆர் சுப்புராமன் பெயரை ராஜா அடிக்கடி சொல்லி அவர்கள் இசை உலகிற்கு ஆற்றிய பங்களிப்பை குறிப்பிட்டு சொல்வதுண்டு! அப்பேர்ப்பட்ட மேதையை ராஜாவுடன் ஒப்பிட்டு சொல்கிறார் பானுமதி அம்மா! இது தான் வாழ்த்து! இதுதான் ராஜாவின் உண்மையான திறமைக்கு தகுந்த பாராட்டு!

ஆனால் உடனே ராஜா அதை மறுக்கிறார்! இதுதான் ஐயா அடக்கம்! இக்கால எம்டிக்கள் நோட்ஸ் எடுக்கவேண்டியது இங்குதான்! இசை நோட்ஸ் எழுதத்தான் தகராறு [ ;) ] இந்த நோட்ஸாவது எடுங்கள்!

ராஜா இந்த ஒப்பீட்டை மறுத்ததுடன் நிற்காமல், எம் எஸ் வி போன்ற திறமைசாலி முன் தான் சாதாரணம் என்கிறார்! (மறுபடியும் நோட்ஸ் ப்ளீஸ்!) அத்துடன் நிற்காமல், எம் எஸ்வி ஐயாவுக்கு முதன்முதலில் வாய்ப்பளித்தது பானுமதி அம்மா என்ற வரலாற்றுத்தகவலை சொல்கிறார். மெல்லிசை மன்னர்கள் இருவரையும் இணைத்ததும் பானுமதி தான் என்கிற சரித்திர உண்மையும் ராஜா சொல்கிறார்! பானுமதி அவர்கள் காலத்தில் சினிமா இசைத்துறை எப்படி இருந்தது என்ற தகவலையும் கேட்டு தெரிந்துகொள்கிறார் ராஜா!

ராஜா எப்போதும் பெண்களை தன் அருகில் அண்டவிடமாட்டார் என சொல்லப்படுவது நாம் அறிந்ததே. ஆனால் ஒரு சீனியர் அவர் பெண்ணாக இருந்தாலும் சென்று சந்தித்து மரியாதை செலுத்துவதில் ராஜாவுக்கு எந்த தயக்கமும் இல்லை!

ஒரு திறமையான கலைஞன் எப்போதுமே தன் சீனியர்களை சந்திப்பதில் ஆர்வம் கொண்டிருப்பான். சந்திப்பது மட்டுமல்ல, சரியான கேள்விகளை அவர்களிடம் கேட்டு, சரியான பதில் பெற்று, அந்த சந்திப்பை/பேட்டியை ஒரு வரலாற்று ஆவணமாக இருக்கச்செய்வான். கமல் சிவாஜியை சந்தித்து பேட்டி கண்டதும் இப்படித்தான்!

ராஜா, கமல் போன்ற கலைஞர்கள் எப்போதும், 'தான் மட்டுமே' என்று இருப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தத்தம் துறையின் மேதைகளை சுட்டிக்காட்டியபடியே இருப்பார்கள்! அதெல்லாம், போலி Humilityக்காக அல்ல, என்பது, அந்த மேதைகள் பற்றி ராஜா/கமல், சொல்லி ஹைலைட் செய்யும் விஷயத்தில் இருந்தே தெரிந்துகொள்ளலாம்! ஆக, இவர்கள் தனி ஆள் அல்ல, இவர்களின் துறை eco system இன் தொடர்ச்சி தான்! தத்தம் துறை மேதைகளை பற்றி இந்த இரு மேதைகளும் சொல்லாமல் இருக்கவே முடியாது!

சி.ஆர் சுப்புராமன் அவர்கள் இசையமைத்த சினிமா பாடல் "சின்னஞ்சிறு கிளியே" இது கர்நாடக சங்கீத மேடைகளில் பாடப்படுகிறது, பூபாள இசை, இவை எல்லாம் சி.ஆர் சுப்புராமன் அவர்கள் தந்தது என்று ஒரு நிகழ்ச்சி மேடையில் ராஜா குறிப்பிட்டார். இது ஒரு மிகச்சிறிய உதாரணம் தான்! இதுபோல் தன் துறை முன்னோடிகளை பற்றி பல நிகழ்வுகளை பெருமையாக எப்போதுமே சொல்லிக்கொண்டிருப்பவர் தான் ராஜா!

இப்பேர்ப்பட்ட மனிதரைத்தான், கர்வி என்று சில அறியாதவர்கள் விடாமல் சொல்லிக்கொண்டிருக்கும் கூத்தும் நடைபெறுகிறது!

எனக்கு முன்பு மையம்.காம் இல் ஒரு ரசிகர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது - "Ilaiyaraja is the last link between the oldest of the old and the Newest of the New!" இதை விட சிறப்பாக சொல்லிவிட முடியாது! நன்றி!

*************************************************************************

நன்றி:

திரு. சிவகுமார்.
திரு. ராஜேந்திரகுமார்.
திரு. Vijay SA

No comments:

Post a Comment