Monday, September 27, 2010

வளையோசை

பாடல் : வளையோசை

படம் : சத்யா
பாடியவர்கள் : எஸ்.பி.பி., லதா மங்கேஷ்கர்
எழுதியவர் :
இசை : இசைஞானி

வளையோசை கலகலகலவென கவிதைகள் படிக்குது,
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது!
சில நேரம் சிலுசிலுசிலு என சிறகுகள் படபடத் துடிக்குது,
எங்கும் தேகம் கூசுது!
சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்!
கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்!

1. ஒரு காதல் கடிதம் விழி போடும்,
உன்னைக் காணும் சபலம் வரக் கூடும்!
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்,
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்!
கண்ணே என் கண் பட்ட காயம்,
கை வைக்கத் தானாக ஆறும்!
முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்,
செம்மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்! - வளையோசை

2. உன்னைக் காணாதுருகும் நொடி நேரம்,
பல மாதம் வருடம் என மாறும்!
நீங்காத ரீங்காரம் நான்தானே,
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே!
ராகங்கள் தாளங்கள் நூறு,
ராஜா உன் பேர் சொல்லும் பாரு!
சிந்தாமல் நின்றாடும் செந்தேனே,
சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில்தான்! – வளையோசை

‘விக்ரம்’ திரைப்படத்துக்குப் பின்னர் பத்மஸ்ரீ கமல்ஹாசனின் சொந்தத் தயாரிப்பில் வந்த படம் ‘சத்யா’. திரு. சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் இயக்குனராக அறிமுகமான இந்தப் படத்தின் Highlight, மொட்டைத்தலை முரட்டுக் கமல்ஹாசன் மற்றும் இசைஞானியின் ‘வளையோசை’ பாடல்!

இசைஞானியின் பல பாடல்கள் ஆக்ரோஷமான Violin-களின் அதிரடியான அட்டூழியத்துடன் ஆலங்கட்டி மழை போல் துவங்கி ஆனந்த அதிர்ச்சியூட்டும் (உதாரணம்:- ‘ராக்கம்மா கையத் தட்டு’ ‘பூமாலையே தோள் சேரவா?’ வகையறாக்கள்). அப்படி இல்லாமல் வானம் மெதுவாகக் கறுத்து, குளிர்ந்த காற்று வீசி, சாரல் அடித்து, அதன் பின்னர் மழை அடித்து ஊற்றி வெளுத்து வாங்கும் Style-ல் அமைந்த சில பாடல்களுள் ‘வளையோசையும்’ ஒன்று! கேட்க மிகவும் மென்மையாக, Melodious-ஆக இருப்பினும், எப்பொழுது துவங்கியது எப்பொழுது முடிந்தது என்றே தெரியாமல் ஒரு Fast Track-ல் ஓடும் பாடல் இது!

‘கலகல’ ‘குளுகுளு’ ‘சிலுசிலு’ என்று ஏகப்பட்ட இரட்டைக் கிளவிகளை உள்ளடக்கிய இந்தப் பாடலின் வரிகள், தமிழ் தெரிந்தவர்களுக்கே பாடச் சிரமமான ஒன்று! இந்த நிலையில் பாடலைப் பாட இசைஞானி தேர்வு செய்த பாடகி, இசைக்குயில் ‘லதா மங்கேஷ்கர்’! (எந்த அடிப்படையில் பாடகர்களைத் தேர்வு செய்கிறார் என்பது இசைஞானி மட்டுமே அறிந்த ரகசியம்!) இசைஞானியின் தேர்வை Justify செய்யும் விதமாக லதா மங்கேஷ்கரும் (ரொம்ப சுத்தமான தமிழ் உச்சரிப்பு இல்லையெனினும்) அற்புதமாகப் பாடி இருப்பார்! ஒவ்வொரு முறை இந்தப் பாடலைக் கேட்கும்பொழுதும் நான் மிகவும் ரசிப்பது ‘படபட துடிக்குது’ என்ற வரியின் ‘படபட’-வில், ஒரு நான்கு வயது மழலையின் கொஞ்சலை ஒத்த இசைக்குயிலின் உச்சரிப்பு! [இரட்டைக் கிளவி என்றதும் நினைவுக்கு வருகிறது. பள்ளியில் படிக்கும்பொழுது, தமிழ் இலக்கணத் தேர்வில், இரட்டைக் கிளவி என்றால் என்ன என்ற கேள்விக்கு, “அம்மாவின் அம்மாவும், அப்பாவின் அம்மாவும், ‘இரட்டைக் கிளவி’ (கிழவி?) எனப்படுவர்” என்று துடுக்காக பதில் எழுத, தமிழ் அம்மா என் ‘பின்புறத்தை’ பிரம்பால் பதம் பார்த்துப் பழுக்க வைத்தது தனிக்கதை].

பாடல் முழுவதும் மென்மையாக பயணிக்கும் Rhythm Pattern-ல், ஒவ்வொரு Bar-ன் துவக்கத்திலும் ஒலிக்கும் ஒரு ‘க்ளொக்’ ‘க்ளொக்’ ‘க்ளக்’ சத்தம் (Triple Congo?), ஒரு காட்டுக் குதிரையின் பாய்ச்சலுடன் செல்லும் பாடலின் ஓட்டத்தைப், பிடரி மயிரைப் பிடித்து இழுத்து, நிறுத்தி நிறுத்தி அழகூட்டுகிறது.

‘வான் மேகம்’, ‘ஓஹோ மேகம் வந்ததோ?’ போன்று ‘வளையோசை’ ஒரு மழைப் பாடல் இல்லையெனினும், இந்தப் பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம், ஒரு ‘மழைக்கால ஈரம்’ மனதில் பச்சக்கென்று வந்து ஒட்டிக் கொள்ளும். முதல் Interlude-ன் துவக்கத்தில் ஒலிக்கும் அந்த ‘Tu ku Tu ku Tu ku Tu ku’ புல்லாங்குழலைக் கேளுங்கள்! மழை முடிந்து போன முன்னிரவில் ஒலிக்கும் தவளையின் குரல் போல..

‘காதல் ரசம்’ சொட்டும் இப்படிப்பட்ட பாடலில் எஸ்.பி.பி.யின் ‘கள்ளச் சிரிப்பு’ இல்லாவிட்டால் எப்படி? சரணத்தில் ‘சபலம் வரக் கூடும்’ வரியில் தன் கடமையைச் செவ்வனே செய்திருப்பார் ‘பாடும் நிலா’!

இரண்டாவது Interlude-ன் துவக்கத்தில் Bass Guitar-ன் தனி ஆவர்த்தனத்திற்குப் பின் வரும் எஸ்.பி.பி.-லதா-வின் ‘லாலலாலா..’ Vocal Harmony, Astounding! இந்த Interlude-ன் முடிவில் இசையின் எல்லையைத் தொட்டுப் பார்த்துவிடத் துடிக்கும் ஆக்ரோஷத்துடன் பாயும் வெறி கொண்ட Violin-களின் அத்துமீறல், அதகளம்!

திரையில் பாடல் முழுவதும் அமலாவுடன் கலைஞானி செய்யும் எல்லை மீறாத ‘காதல் குறும்புகள்’, அட்டகாசம்! (அமலாவின் புடவைத்தலைப்பு காற்றில் பறந்து முகம் மூட, அதன் மேல் கமல் தரும் முத்தம், கவிதை!) காதலியுடன் கேட்க வேண்டிய, அதைவிட, பார்க்க வேண்டிய பாடல்! 

‘வளையோசை’ பாடல் பிறந்த கதை பற்றிய ஒரு சுவையான செய்தியை சமீபத்தில் விகடனில் ‘Nothing But Wind’ Concert-ன் விமர்சனத்தில் படிக்க நேர்ந்தது. ‘Nothing But Wind’ இசைப்பேழைக்கு என இசைஞானி இயற்றிய ஒரு இசைக் கோர்வை, பேழையில் சேர்க்க முடியாமல் தனித்து இருந்திருக்கிறது. அந்த இசைக் கோர்வையைக் கேட்ட பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள், ‘அடடே! அதற்கென்ன? நம்ம படத்தில் அதை சேர்த்துகிட்டாப் போச்சு!’ என்று உரிமையுடன் கேட்டு எடுத்துக் கொண்டதுதான் ‘வளையோசை’ பாடலின் இசைவடிவமாம்!

இந்தப் பாடலுக்கு Keyboard இசைத்தது திரு. முரளி அவர்கள். [இசையமைப்பாளர் திரு. தேவா அவர்களின் சகோதரர்! சபேஷ்-முரளி இரட்டையர்களுள் ஒருவர்]. சமீபத்தில் ஜெயா டி.வி.யின் ‘மனதோடு மனோ’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், இசைஞானியிடம் இசைக்கச் செல்வது ஒரு Exam போவது போல என்றும், இந்தப் பாடலுக்கு இசைஞானி கொடுத்த Notations-ஐ வாசிக்க மிகவும் சிரமப்பட்டதாகவும் தெரிவித்தார். பாடலின் ராகம் சிந்து பைரவி [ S R2 G2 M1 G2 P D1 N2 S
N2 D1 P M1 G2 R1 S N2 S ].

இந்தக் கட்டுரையைத் தட்டச்சு செய்யத் துவங்கி இன்றுடன் ஒன்பது நாட்கள் ஆகின்றன. ஒன்பது நாட்களாகக் காலை முதல் இரவு வரை Media Player Repeat Mode-ல் ‘வளையோசை’ மட்டுமே பருகிக் கொண்டிருக்கிறேன். ஒரு சொட்டுக் கூடத் திகட்டவில்லை. ஒரு ‘கால இயந்திரத்தில்’ ஏறி மீண்டும் விடலைப் பருவம் சென்று ‘வளையோசை’ கேட்டுக்கொண்டே காதலிக்கலாம் போல இருக்கிறது. “ராகங்கள் தாளங்கள் நூறு, ராஜா உன் பேர் சொல்லும் பாரு!” இசைஞானிக்கென்றே எழுதப்பட்ட இந்த வரிகள் அத்தனை பொருத்தம்!

3 comments:

  1. அருமை தலைவா... இத்தனை நாள் உங்கள் ப்ளாக் கண்ணில் படாமல் போனது துரதிர்ஷ்டமே!!

    ReplyDelete
  2. //இந்த Interlude-ன் முடிவில் இசையின் எல்லையைத் தொட்டுப் பார்த்துவிடத் துடிக்கும் ஆக்ரோஷத்துடன் பாயும் வெறி கொண்ட Violin-களின் அத்துமீறல், அதகளம் !//

    Lovely!!! Fantastically explained.

    ReplyDelete