பாடல் : ‘என் கண்மணி’
படம் : சிட்டுக்குருவி
பாடியவர்கள் : எஸ்.பி.பி., பி.சுசீலா
எழுதியவர் : வாலி
இசை : இசைஞானி
என் கண்மணி உன் காதலி இளமாங்கனி,
உனைப்பார்த்ததும் சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன்?
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னன் இல்லையோ?
(நன்னா சொன்னேள் போங்கோ…)
என் மன்னவன் உன் காதலன்
எனைப் பார்த்ததும் ஓராயிரம்
கதை சொல்கிறான் கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்றக் கன்னியில்லையோ? – என் கண்மணி
1. இரு மான்கள் பேசும்போது மொழி ஏதம்மா?
பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா?
ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்,
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்,
இளமாமயில் அருகாமையில்
வந்தாடும் வேளை இன்பம் கோடி என்று
அனுபவம் சொல்லவில்லையோ?
(இந்தாம்மா கருவாட்டுக் கூட முன்னாடி போ!) –என் மன்னவன்
2. மெதுவாக உன்னைக் கொஞ்சம் தொட வேண்டுமே,
இரு மேனி எங்கும் விரல்கள் பட வேண்டுமே!
அதற்காக நேரம் ஒன்று வர வேண்டுமே,
அடையாளச் சின்னம் ஒன்று தர வேண்டுமே!
இரு தோளிலும் மணமாலைகள்,
கொண்டாடும் காலம் என்று கூடும் என்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ? – என் கண்மணி
இரு வாரங்களுக்கு முன் ஒரு மழைக்கால மாலையில் மந்தைவெளி பஸ் ஸ்டாண்ட் முன்பாக டூ வீலரில் நின்று கொண்டிருந்தேன். சென்னை எனக்கு மிகவும் புதிது என்பதால் தலைசுற்ற வைக்கும் ஒரு வழிப்பாதைகளும், ட்ராஃபிக்கும் சற்றே கலவரமூட்டின.
அருகில் நின்றுகொண்டிருந்த காவலரிடம் “சார்! அண்ணா ஆர்ச் போகணும்!”…
“நிறைய ரூட் இருக்கு சார்! தி. நகர் போய் லயோலா வழியா போகலாம், லஸ் கார்னர் போய், ஜெமினி, சேத்துப்பட் வழியா போகலாம், இல்ல இப்டியே பார்க் ஷெரட்டன் வழியா ஸ்ட்ரெய்ட்-டா போய், தேனாம்பேட்ட சிக்னல் போய் மவுண்ட் ரோட் பிடிச்சி.. ..” அவர் சொல்லிக் கொண்டே போக..
‘தேனாம்பேட்டை’ என்ற ஒற்றை வார்த்தையைக் கேட்டதும் பளிச் என ஞாபகம் வந்தது ‘தேனாம்பேட்ட சூப்பர் மார்க்கெட் இறங்கு’.. .. ‘என் கண்மணி’...
Counterpoint Technique-ஐ உபயோகித்து இசைஞானி உருவாக்கிய பாடல் ‘என் கண்மணி’, என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே! இந்த Technique-ன் பிதாமகன் Johann Sebastian Bach (1685). ஜெர்மனியைச் சேர்ந்த இந்த Composer பல்வேறு String Instruments-களை இசைப்பதில் வல்லுனர். இசைஞானியின் ஆதர்சம்! Western Music-ல் Classical & Complicated என்று அறியப்படும் Counterpoint Technique-ஐ, பாமரனும் ரசிக்கும் வகையில் எளிமைப்படுத்தித் தந்தது இசைஞானியின் வித்தை! ஆணும் பெண்ணும், இரண்டு Track-ல் Overlap செய்து பாடும் இந்தப் பாடலில், ‘பூமாலையே தோள் சேரவா’ போல மிகவும் Obvious-ஆன Counterpoints இல்லையே? இந்தப் பாடல் Counterpoint வகையறாவில் எப்படி வரும் என்பதே ஒரு பெரும் விவாதம்.
இதற்கு இசைஞானியே பதிலளிக்கும் விதமாக ‘என் கண்மணி’ பாடலைப் பற்றிய செய்தியை தினத்தந்தியில் படிக்க நேர்ந்தது. அது அப்படியே கீழே:-
‘என் கண்மணி’ பாடல் பற்றி இளையராஜா கூறியதாவது:-
‘மேல் நாட்டு இசையில் Counterpoint என ஒரு விஷயம் இருக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட வேறு வேறு டியூன்கள் ஒரே நேரத்தில் இசைக்கப்படுவதுதான் அது. அதில் Harmony என்ற அம்சம் உள்ளடங்கி இருக்க வேண்டும்.
இதை எனது இரண்டாவது படமான ‘பாலூட்டி வளர்த்த கிளி’ படத்தில் ‘நான் பேச வந்தேன்’ என்ற பாடலின் போதே தொடங்கி விட்டேன். அந்தப் பாடலின் இடையே வரும் இசையின் Humming-ல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஒரு டியூன் ‘ஹம்’ செய்ய, எஸ்.ஜானகி வேறு டியூனில் ஹம்மிங் செய்து பதில் சொல்வது போல அமைத்திருந்தேன்.
இது படத்தின் டைரக்டருக்கோ, இசைக் குழுவில் வாசித்தவர்களுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இசைக் குழுவில் Advanced ஆக இருக்கும் ஓரிரு கலைஞர்களுக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம்.
‘காற்றினிலே வரும் கீதம்’ என்ற பாடலிலும் இதே யுக்தியை பாடலின் கடைசியில் கையாண்டிருந்தேன். இது பாடலின் அதே டியூனை அப்படியே Repeat செய்யும் ‘Imitation’ என்ற விதிக்குள் அடங்கும்.
“சிட்டுக்குருவி படத்தின் டைரக்டர்கள் தேவ்ராஜ்-மோகன் இரட்டையர்களில், தேவ்ராஜ் எப்போதும் ஏதாவது பரிசோதனையாக செய்ய முயற்சிப்பார். “சிட்டுக்குருவி” படத்தில் காதலனும் காதலியும், தங்கள் காதலை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். இப்போது காதலனின் உள்ளமும், காதலியின் உள்ளமும் கலந்து பாடுவது போல, ஒரு பாடலுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
இது ஒரு புது விஷயமல்லவா? இதற்கு மேல் நாட்டு இசையின் ‘Counterpoint’-ஐ உபயோகிக்க முடிவு செய்தேன். இதுபற்றி தேவராஜிடமும் விளக்கி சம்மதமும் வாங்கி விட்டேன்.
கவிஞர் வாலி, இரவு நேரம் என்றும் பாராமல் ஒத்துழைத்து தினமும் வந்தார். அவரிடம் இதை விளக்கியபோது, டியூனை வாசிக்கச் சொல்லிக் கேட்டார். ‘ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டு டியூன்கள் ஒரே நேரத்தில் இசைத்தால் முரணாகத் தோன்றாதா?’ என்று கேட்டார்.
நான் அவரிடம், “அண்ணே! இரண்டு டியூனும் தனியாக பாடப்பட்டால் அதனதன் தனித்தன்மை மாறாமலும், ஒரு டியூனுக்கு இன்னொரு டியூன் பதில் போலவும், அமைய வேண்டும். அந்த பதில் டியூனும் தனியாகப் பாடப்பட்டால் அதன் தனித்தன்மை மாறாமல் இருக்க வேண்டும். இரண்டையும் சேர்த்து பாடினால், ஒட்ட வைத்தது போல இல்லாமல், ஒரே பாடலாக ஒலிக்க வேண்டும்” என்றேன்.
பதிலுக்கு வாலி, “என்னையா நீ? இந்த நட்ட நடு ராத்திரியில ‘சிட்டுக்குருவிக்கு சிட்டப் பிச்சுக்கிற மாதிரி ஐடியா கொடுக்குறே? முதல்ல ஒரு ‘மாதிரி’ (Sample) பாடலைச் சொல்லு!” என்றார்.
உடனே வேறு ஒரு பாடலைப் பாடி விளக்கினேன். நான் ஒரு டியூனையும், அமர் ஒரு டியூனையும் பாடி அவருக்கு இன்னும் தெளிவாக்கினோம்.
ஆண் : பொன்
பெண் : மஞ்சம்
ஆண் : தான்
பெண் : அருகில்
ஆண் : நீ
பெண் : வருவாயோ?
- இப்படிப் பாடிக்காட்டினோம். அதாவது ஆண் பாடுவதைத் தனியாகவும், பெண் பாடுவதைத் தனியாகவும், பிரித்துப் படித்தால், தனித்தனி அர்த்தம் வரும்.
அதாவது ‘பொன் தான் நீ’ என்கிறான் ஆண்.
‘மஞ்சம் அருகில் வருவாயோ?’ என்கிறாள் பெண்.
இரண்டையும் சேர்த்துப் பாடும்போது, ‘பொன் மஞ்சம் தான் அருகில் நீ வருவாயோ?’ என்று பொதுவாக இன்னொரு அர்த்தம் வரும்.
‘சரி’ என்று புரிந்ததாகத் தெரிவித்த வாலி, கொஞ்சம் யோசித்தார். பின்னர் கையில் Pad-ஐ எடுத்தவர் யாருக்கும் காட்டாமல் அவர் எழுதும் பாணியில் மளமளவென்று எழுதினார்.
பாடல் என் கைக்கு வந்தது. இரண்டு பேரும் பாடும்போது தனித்தனி அர்த்தங்களும், மொத்தமாய் பாடும்போது பொதுவான அர்த்தமும் வருவது மாதிரியே வாலி எழுதியிருந்தது எல்லோருக்குமே பிடித்துப் போயிற்று.
இந்தப் பாடலை Record செய்யும்போது இன்னொரு பிரச்சினை வந்தது. ஒரு குரலில் காதலன் பாட, இன்னொரு குரலில் காதலனின் உள்ளமும் பாட வேண்டும் அல்லவா? இதை எப்படி Record செய்வது?
ஏ.வி.எம். சம்பத் சாரிடம் “ஒரு குரலில் பாடுவதை மட்டும் முதலில் Record செய்வோம். மற்றொரு குரல் பாடும் இடத்தை வெறுமனே விட்டு விடாமல் இசைக்கருவிகளை இசைப்போம். இப்படி முழுப்பாடலையும் பதிவு செய்து விட்டு, அதை மறுபடி Play செய்து இன்னொரு குரலை அதனுடன் பாட வைப்போம். பிறகு இன்னொரு Recorder-ல் மொத்தமாக இரண்டையும் பதிவு செய்வோம் என்று முடிவு செய்து தொடங்கினோம்.
டைரக்டர்கள் தேவ்ராஜ்-மோகன் இருவரில், மோகன் சாருக்கு Composing சமயத்தில் இருந்தே இதற்கு உடன்பாடில்லை. இந்தப் பாடலும் பிடிக்கவில்லை. பாடல் பதிவு நேரத்திலும் எதுவும் பேசாமல் ‘உம்’மென்றே காணப்பட்டார். ‘எப்படி வருமோ?’ என்று அடிக்கடி சந்தேகம் எழுப்பிக் கொண்டிருந்தார்.
தேவ்ராஜோ உற்சாகமாக இருந்தார். ‘இந்த மாதிரி Idea வருவதே கஷ்டம். புதிதாக ஏதாவது செய்வதற்கு எப்போது சந்தர்ப்பம் கிட்டும்? இப்படிச் செய்கின்ற நேரத்தில் அதைப் பாராட்டாவிட்டாலும், புதிய முயற்சி என்று ஊக்குவிக்கவில்லை என்றால் கலைஞனாக இருப்பதற்கு அர்த்தம் என்ன?’ என்று கூறினார்.
இந்தப் பாடலின் இடையிடையே ‘தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு!’ ‘இந்தாம்மா கருவாட்டுக் கூட முன்னாடி போ!’ என்று பேசுகிற மாதிரி வரும். இதற்கு அண்ணன் பாஸ்கரைப் பேச வைத்தேன். பாடல் ரசிகர்களிடையே அதற்குரிய வரவேற்பைப் பெற்றது”. என்றார்.
‘பொன் மஞ்சம் தான் நீ’ பாடலைப் போல ‘என் கண்மணி’ பாடலைப் பிரித்துப் படித்துப் பாருங்கள்.
என் கண்மணி இளமாங்கனி, சிரிக்கின்றதேன்?
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ?
உன் காதலி உனைப்பார்த்ததும் சிரிக்கின்றதேன்?
நீ நகைச்சுவை மன்னன் இல்லையோ?
என் மன்னவன் எனைப் பார்த்ததும் கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ?
உன் காதலன் ஓராயிரம் கதை சொல்கிறான்
நீ ரசிக்கின்றக் கன்னியில்லையோ?
இப்படி அழகாக இரண்டு அர்த்தம் வரும். கவிஞர் வாலி அவர்களுக்கு இந்த விஷயத்தை விளக்கி அவரிடம் வரிகளை வாங்கிய இசைஞானியைப் போலவே, விஷயத்தை உள்வாங்கிக் கொண்டு அற்புதமாக எழுதிய வகையில் கவிஞர் வாலியும் ஒரு ‘கவி ஞானி’ தான்!
பாடல் வெளிவந்த ‘Late 70’s’ காலகட்டத்தில் காதலும் கூட எவ்வளவு கண்ணியம் மிக்கதாய் இருந்திருக்கிறது? ஆணுக்கே உரிய அவசர புத்தியுடன் காதலன், ‘மெதுவாக உன்னைக் கொஞ்சம் தொட வேண்டுமே, இரு மேனி எங்கும் விரல்கள் பட வேண்டுமே!’ என்று கூற, பதிலுக்குக் காதலி, ‘அதற்காக நேரம் ஒன்று வர வேண்டுமே, அடையாளச் சின்னம் (தாலி) ஒன்று தர வேண்டுமே’ என்கிறாள். 2010-ல் காதலி, ‘Daddy Mummy வீட்டில் இல்ல! விளையாடுவோமா?’ என்கிறாள். காலத்தின் கோலம்!
D Major Scale- ல் பாடலின் Chords Progression. ரொம்ப சிரமம் எல்லாம் படாமல் சரணத்தின் துவக்கத்தில் மட்டும் B Minor தெளித்துக் கொள்ளுங்கள். ஜோராக வாசித்து அசத்தி விடலாம்.
நாயகனும், நாயகியும் பேருந்தை விட்டிறங்கிச் சென்று பாடல் முடித்துத் திரும்பி விட்டார்கள். பாடல் மட்டும் மனதை விட்டும், உதட்டை விட்டும் இறங்க மறுக்கிறது.
ஹும்ம்ம்!! Technology என்னும் கொடிய காமுகனின் கோரக்கரம் பட்டு தமிழ்த்திரையிசையின் கற்புக் கெடாமல் இருந்த காலத்தில் வந்த பாடல்கள்.. அவ்வளவு எளிதாக மனதை விட்டு இறங்கி விடுமா என்ன? இருந்து விட்டுப் போகட்டும்.
You are doing a wonderful Job. Keep it coming.
ReplyDelete@Ram - பின்னூட்டத்திற்கு நன்றி சகோ! :-)
ReplyDeleteJust like Rama Namam brings strength to Hanuman, your way of explaining Raja music brings closer to inner peace. Thoroughly enjoying all your blogs and listening some Raja sirs unheard songs.
ReplyDeleteவருகைக்கு நன்றி! :-)
Deleteஅட்டகாசம். அட்டகாசம். அந்த தினத்தந்தி வரலாற்றுச் சுவடுகள் ஈ புக் ஒன்று கிடைத்தது. கவுண்டர்பாயிண்ட் பகுதியைப் படிக்கும் போது அந்தப் பாடல் பற்றி யாரேனும் எழுதியிருக்கிறார்களா என்று கூகிளடித்தேன். நீங்களும் எழுதியிருக்கிறீர்கள் அதே ரெஃபரன்ஸூடன். அருமை. அருமை.
ReplyDelete