Monday, March 7, 2011

கண்ணனே நீ வர


பாடல்          : ‘கண்ணனே நீ வர
படம்           : தென்றலே என்னைத் தொடு
பாடியவர்கள்    : கே.ஜே. ஜேசுதாஸ், உமா ரமணன்
எழுதியவர்      : வாலி
இசை           : இசைஞானி

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்!
ஜன்னலில் பார்த்திருந்தேன்!
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்!
என் உடல் வேர்த்திருந்தேன்!
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும், மன்னவன் ஞாபகமே!
கற்பனை மேடையில் கண்டிருந்தேன், மன்மத நாடகமே!
அந்திப் பகல், கன்னி மயில், உன்னருகே!
கண்மணி நீ வரக் காத்திருந்தேன்!
ஜன்னலில் பார்த்திருந்தேன்!

1.        
நீலம் பூத்த ஜாலப் பார்வை மானா? மீனா?
நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா? நானா? (2)
கள்ளிருக்கும் பூவிது! பூவிது!
கையணைக்கும் நாளிது! நாளிது!
பொன்னென மேனியும் மின்னிட மின்னிட!
மெல்லிய நூலிடை பின்னிடப் பின்னிட!
வாடையில் வாடிய, ஆடையில் மூடிய, தேர்….! நான்....!
- கண்ணனே நீ வர

2.         ஆசை தீரப் பேச வேண்டும் வரவா? வரவா?
நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா! மெதுவா! (2)
பெண் மயங்கும் நீ தொட! நீ தொட!
கண் மயங்கும் நான் வர! நான் வர!
அங்கங்கு வாலிபம் பொங்கிடப் பொங்கிட!
அங்கங்கள் யாவிலும் தங்கிடத் தங்கிட!
தோள்களில் சாய்ந்திட, தோகையை ஏந்திட, யார்....? நீ.....!
- கண்ணனே நீ வர


1985! இந்த ஆண்டில் மட்டும் இசைஞானி இசையில் 50 படங்களுக்கு மேல்!! பகல் நிலவு, பூவே பூச்சூடவா, முதல் மரியாதை, இதயக் கோயில், குங்குமச் சிமிழ், சிந்து பைரவி, உயர்ந்த உள்ளம், உதய கீதம் என்று இசைஞானி சொல்லி வைத்து சிக்ஸர்கள் பறக்கவிட்ட பொன்னான ஆண்டு. இந்தக் காலகட்டத்தில்தான் தென்றலே என்னைத் தொடு மறைந்த இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்தது. பதின் வயது கூடத் தொடாதப் பள்ளிப் பருவம் என்பதால் படம் பாக்ஸ் ஆபீஸில் வசூலைக் குவித்ததா இல்லையா என்று நினைவில்லை.  ஆனால் மதுரை மாநகரின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும், தென்றல் வந்து என்னைத் தொடும் மற்றும் கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் ஆகிய பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருந்த நாட்கள் நினைவிருக்கின்றன.  வாரத்திற்கு ஒரு மோகன் படம் வெளியாகிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அவரின் எல்லா படங்களும் இசைஞானியின் பாடல்களுக்காகவே ஓடின.  தமிழகம் மைக் மோகன் மயக்கத்தில் கிறங்கிக் கிடந்தது.

இசைஞானியின் பெரும்பாலான பாடல்களின் Prelude ஒலிக்கத் துவங்கி இரண்டாவது மூன்றாவது வினாடியிலே மனதிற்குள் அட இந்தப் பாடல்..! என்று கணித்து விடுவேன். கண்ணனே நீ வர இதில் விதிவிலக்கு.  காரணம் இரண்டு! முதலாவது பாடலின் தாளத்திற்கு சம்பந்தமே இல்லாதது போன்ற ஒரு ப்ரத்யேக Style ல் பொங்கி வரும் Strings Ensemble! இரண்டாவது என்ன பாடல் இது? என்றெல்லாம் யோசிக்க அவசியப்படுத்தாத மலைக்க வைக்கும் Prelude-ன் மதிமயக்கும் Orchestration (இதற்கு ஒப்பான தமிழ் வார்த்தை இருந்தா சொல்லுங்கப்பா!!). Stringsகளின் ஊடாக மெல்லிய புல்லாங்குழலின் தோற்றம் அதிகாலை பனித்துளியின் அடர்த்தியைத் துளைத்துக் கொண்டு உதிக்கும் கதிரவனின் ஒளிக்கீற்று! பாடலின் Prelude-ல் இசைஞானி Drums-ன் Hi-Hat மட்டும் பயன்படுத்தியிருக்கிறார் போலும். ஒவ்வொரு Bar-ன் முடிவிலும் Triple Congo(?) உதவியுடன் கூட ஒரு டொக் டொக் சத்தத்தை இணைத்துக் கொண்டு (உமா) ரமணனே நீ வரக் காத்திருந்தேன் என்று அவர் குரலுக்கு மலர்ப்பாதை அமைத்துக் கொடுக்கிறது. Rhythm Pattern பொருத்தவரை பொதுவாக பல்லவியில் பயன்படுத்திய Patternஐ இசைஞானி சரணத்தில் உபயோகிக்க மாட்டார். பல்லவியில் ட்ரம்ஸ் வந்தால் சரணத்தில் தபலா வரும். அல்லது குறைந்தபட்சம் Rhythm Patternஇலாவது மாற்றம் இருக்கும். ஆனால் Prelude மற்றும் Interlude தவிர்த்து, இந்தப் பாடலின் பல்லவியிலும் சரணத்திலும் எவ்வித வேறுபாடும் இன்றி 3/4 சலசலப்பின்றிப் பயணிக்கிறது.

சரணத்தில் இசைஞானி என்ன Effect உபயோகித்தாரோ புரியவில்லை.  ஹெட்ஃபோனில் கேட்கும்பொழுது மலை மேல் நின்று கொண்டு இரண்டு மூன்று ஜேசுதாஸ்கள் பாடுவது போலக் கம்பீரமாகத் தொனிக்கிறது. வரிவரியாக ஆணும் பெண்ணும் மாறி மாறிப் பாடாமல், இரண்டிரண்டு வார்த்தைகளாக கேள்வி-பதில் Style-ல் பாடுவது இசைஞானியின் Creativity! ‘நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா”’வில் குரலைத் தாழ்த்தி ஒரு Husky கொஞ்சலுடன் உமா ரமணன் பாடியிருப்பது கிறக்கம்!! முகத்தில் Expression காட்டாமல் குரலை மட்டும் விளையாட விடுவதில் உமா ரமணன் ஒரு பெண் மலேசியா வாசுதேவன்.

பாடலின் ராகம் மலையமாருதம். இந்த ராகத்தில் வெகு அபூர்வமாகவே திரைப்படப்பாடல்கள் கேட்கக் கிடைக்கின்றன (பூஜைக்காக வாடும் பூவை – காதல் ஓவியம், தென்றல் என்னை முத்தமிட்டது – ஒரு ஓடை நதியாகிறது). மலையமாருத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வலையை விரித்தபோது, மலையில் இருந்து வீசும் தென்றல் என்ற பொருள் தரும் இந்த ராகம் 16வது மேளகர்த்தாவாகிய சக்ரவாகம் என்ற ராகத்தின் ஜன்ய ராகமாகும்.  உபாங்க ராகமான இது காலை வேளையில் பாடத் தகுந்ததாகும். பெண்பால் ராகமான மலையமாருதத்தின் ஸ்வரங்கள், ஷட்ஜமம், சுத்த ரிஷபம், அந்தர காந்தாரம், பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம், கைஷிகி நிஷாதம். | S R1 G3 P D2 N2 S | S N2 D2 P G3 R1 S|” (மத்யமம் இல்லை) என்று தகவல்களைக் கொட்டியது லக்ஷ்மண் ஸ்ருதியின் வலைத்தளம்.

இசைஞானியின் சில நல்ல பாடல்கள் மோசமாக படமாக்கப்பட்டு மக்கள் பார்க்கும் மாலை நேரங்களில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்படத் தகுதியிழந்து போயிருக்கின்றன.  அதற்கு இந்தப் பாடல் ஒரு சாலச்சிறந்த எடுத்துக்காட்டு! சரியாக நான்கு நிமிடங்கள் ஓடும் பாடலில் மோகனும் ஜெயஸ்ரீயும் 38 வினாடிகளுக்கு மட்டுமே ஒருவர் மீது ஒருவர் ஈஷிக்கொள்ளாமல் (என்ன வார்த்தை இது? பழைய குமுதம், விகடன்களில் வரும் கதைகளில் படித்த ஞாபகம்!!) தள்ளி நிற்கின்றனர்.  மற்றபடி பாடல் முழுவதும் நாயகன் தலையச் சிலுப்பியபடி நாயகியின் கழுத்தை முகர்ந்துகொண்டே இருக்கிறார் (இருபத்தாறு பற்கள் தெரிய மோகன் தலையை இடவலமாக சிலுப்பாத பாடல்கள் ஏதாவது இருக்கின்றனவா? இதே இடவல சிலுப்பலைத்தான் இருபத்தைந்து வருடங்கள் கழித்து, ஜெய், கண்கள் இரண்டால்...ஸ்லோமோஷனில் செய்கிறார் என்று நினைக்கிறேன்..).

சில நாட்களுக்கு முன் Blue Grass என்Genre-ல் உள்ள இசைப்பேழை ஒன்றைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அமெரிக்காவின் பழைய Country Style இசைக்கலைஞர்கள் பாரம்பரிய Banjo, Double bass, Cello, Mandlin, Violin, 12 String Guitar போன்ற வாத்தியக் கருவிகளை இசைத்துப் பாடியிருந்தனர். கேட்க மிக ரம்மியமாக இருப்பினும், சலிப்புத் தட்டவில்லை எனினும், மூன்று பாடல் முடிந்து நான்காவது பாடல் துவங்கியதுமே ஒரு சின்ன Monotony ஐ உணர முடிந்தது.  நம் பண்ணைப்புரத்து பத்மபூஷண் வயலினை இசைக்காத பாடல்களை இரண்டு மூன்று பேர் சேர்ந்து விரல் விட்டு எண்ணி விடலாம். இருப்பினும் இன்று வரை அலுப்புத் தட்டவில்லை. Versatility என்பதற்கு இசை அகராதியில் இசைஞானி என்றும் அர்த்தம் போல...

No comments:

Post a Comment