Monday, January 30, 2012

”தோனி” இசைவெளியீடு


 28 ஜனவரி 2012 சென்னை,அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் நடைபெற்ற 'தோனி' திரைப்படத்தின் ஒலிப்பேழை வெளியீட்டு விழாவில் இசைஞானிக்கு சூட்டப்பட்ட புகழ் மாலையின் சில பூக்கள் உங்கள் பார்வைக்கு:-

நடிகர் இயக்குனர் பார்த்திபன் வரவேற்புரையில் பேசியது:

'மாலை வணக்கம்'..! வணக்கம் உங்களுக்கு. மாலை வழக்கம் போல என் இசைஞானி இளையராஜாவுக்கு. அவர் இசைஞானி என்றால் நான் மகா இசைஞானி. அதாவது இசைஞானிக்கு இசை மட்டும்தான் தெரியும் என்றால் எனக்கு அந்த இளையராஜாவையே தெரியும். அதனால் அவரை விடப் பெரிய மகா இசை ஞானி நான்தான். எல்லா இசையமைப்பாளர்களும் இசையை நேசிப்பார்கள். ஆனால் அந்த இசையே நேசிக்கும் ஒரு இசையமைப்பாளர் திரு. இளையராஜா அவர்கள். நமக்கு இசைஞானியைத் தெரிவது பெரிய விஷயம் இல்லை. எனக்குப் பெருமையான விஷயம் என்னவென்றால் ராஜா சாருக்கு என்னைத் தெரியும். இதைக் குறித்து என் கழுத்து தாங்க முடியாத அளவுக்கு எனக்குத் தலைக்கனம். அவருடைய இசையைப் போலவே அவருடைய எழுத்தும் சிறப்பானது. அவருடைய புத்தகத்தில் இவ்வாறு எழுதி இருக்கிறார். 'நிழல் தருவது மரமல்ல.. வெயில்..!'. இதுபோன்ற பெரிய சிந்தனைகள் உள்ள அவரிடம் ஒரு கதையைக் கொடுத்து இதற்கு இசையமைத்துத் தாருங்கள் என்று சொல்வதே கஷ்டமான விஷயம்

இசை alias இளையராஜா என்று நான்தான் அவருக்கு முதன் முதலில் ஒரு தலைப்புக் கொடுத்தேன்..! இசைஞானி எப்போதும் சொல்வது.. Music is Nothing But Wind ஆனால் நான் சொல்கிறேன்.. Music is Nothing But Ilaiyaraja ..! இதை நான் அப்படியே ஒரு ஃபிரேம் போட்டுக் கொடுத்திருக்கிறேன். அது பிரசாத் ஸ்டுடியோவில் அவரது அறையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. பொதுவாகப் "பழையன கழிதல்" என்று ஒரு பதம் சொல்வார்கள். அது இசைஞானி விஷயத்தில் உண்மை இல்லை. அவர் படைப்புகள் என்றென்றும் புதியதாகவே இருக்கும். Black & White என்று Pub ஒன்று இருக்கிறது. அங்கே நிறைய பாட்டில் இருக்கிறது. அந்தப் பாட்டிலில் இல்லாத போதை ராஜா சார் பாட்டில் மட்டுமே இருக்கிறது. துடுப்பிருந்தால்தான் தோணி கரை சேரும். அதைப்போல தோனி என்கிற இந்தப் படத்திற்கு துடுப்பாக, உயிர் துடிப்பாக இளையராஜா அவர்களுடைய இசை அமைந்திருக்கிறது. Live Orchestra என்று சொல்கிறார்கள் ..! Live என்றால் உயிர்ப்பு என்று ஒரு அர்த்தம் உண்டு. அவர் இசை என்றும் உயிர்ப்புடன் இருக்கும்...!

தோணி திரைப்படத்தின் இயக்குனர் திரு. பிரகாஷ் ராஜ் அவர்கள் பேசியது..!

“தோனி என்ற இந்தப் படத்தை இயக்கியிருக்கிறேன்எல்லோரும் வாழ்த்துகிறார்கள். எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறதுஆனால் ராஜா சார் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்பதை நினைத்துப் பெருமையாக இருக்கிறது. ஒரு நதியின் ஓட்டத்தில் நீங்கள் எங்கே சென்று பார்த்தாலும் தண்ணீர் இருக்கவேண்டும்அப்படிப்பட்ட நதியை ஜீவ நதி என்று அழைக்கிறோம். அதே போல் ராஜா சார் எங்கே தொட்டாலும் அங்கே இசை வரும். இந்த விழா என்னுடைய கனவு. இந்தக் கதையை நான் ராஜா சாரிடம் சென்று சொல்லி, 'சார் நீங்கள் இதற்கு இசையமைத்துத் தரவேண்டும்' என்று சொன்னபோது, 'சரி' என்றார். 'சார்.! லைவ் ஆர்கெஸ்ட்ரா வேண்டும். லைவ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் வேண்டும். லைவ் மியூசிக் வேண்டும்" என்று கேட்டேன்.  'ஏன்?' என்று கேட்டவர் 'சரி பண்ணலாம்' என்றார். நான் முதன் முதலாக ஒரு இயக்குனராக அவரிடம் கம்போசிங்கிற்கு செல்கிறேன். என்ன கேட்க வேண்டும் என்று தெரியாது. Situation கேட்கிறார். ஒரு நாற்பத்தைந்து நிமிடத்தில் ஐந்து டியூன்கள் தருகிறார். 'பிடிச்சிருக்கா சொல்லு..! இல்லன்னா வேறு போட்டு தருகிறேன்' என்று சொல்கிறார். என்ன பதில் சொல்வது நான்? நான் ஒன்றே ஒன்று அவரிடம் சொன்னேன். 'சார்... எனக்கு இப்படிப்பட்ட இசை வேண்டும் என்று நான் கேட்க வேண்டுமென்றால், நான் ஏற்கெனவே கேட்ட இசையை வைத்துத்தான் என்னால் கேட்க முடியும். ஆனால் உங்களிடம் இசை பிறக்கும். அதுதான் எனக்கு வேண்டும் என்றேன்இந்த விழாவிற்கு வரும்போதும், கம்போசிங்கின் போதும், பாடல் பதிவின்போதும், எப்படியாவது ராஜா சாருக்கு முன் நான் வந்து விட வேண்டும் என்று நினைப்பதுண்டு. அது என்னவோ தெரியவில்லை. அந்த விஷயத்தில் என்னால் அவரை ஜெயிக்க முடியவில்லை.

பாடல்களின் சிச்சுவேஷன் கேட்பார். உட்கார்ந்து தனியாக எழுத்வார். என்ன எழுதுகிறார்.. எனக்குத் தெரியாது. ஒரு எட்டே முக்கால் மணிக்கு இசைக்கலைஞர்களுக்கு அந்த நோட்ஸ் செல்கிறது. அதன் பின்னர் பாடல் எழுதப் படுகிறது. பின்னர், ஒரு பதினோரு மணியளவில் ஒரு வயலினிஸ்ட் அந்த நோட்சை வாசிக்கும்போதுதான் அவர் எழுதியதே எங்களுக்குக் கேட்கிறது. வாசிக்கும்போதுதான் வாசிப்பவரும் அதை கேட்கிறார்ஆனால் இவருக்கு (இசைஞானிக்கு) மட்டும் எப்போது கேட்டது என்றே தெரியவில்லை. அது ஒரு அற்புதமான அனுபவம்.

ரீ ரெக்கார்டிங்கை பற்றி சொல்ல வேண்டுமென்றால், நான் படத்தை முழுவதுமாக, எடிட் பண்ணி, டப் பண்ணி, ஒரு முழு படத்தையும் கொண்டு கொடுத்து 'சார் .. ரீ ரெக்கார்டிங்' என்றேன். அவர் ரீ ரெக்கார்டிங் செய்யும்போது தான் எனக்கு விளங்குகிறது. நான் 20% படம் எடுத்துக் கொடுத்தால் அதற்கு 80% தன் இசையால் உயிர் கொடுக்கிறார். ராஜா சாரின் இசை நம்மை ரசிக்க வைக்கும், மகிழ வைக்கும். என்னைப் பொறுத்த வரையில் அது என்னை ஆசீர்வதித்திருக்கிறது. அந்த ஒரு 'தாய்மை' அவர் இசைக்கு மட்டுமே இருக்கிறது.”


பின்னர் இசைஞானியை  'ராஜா சாரை அறிமுகப்படுத்துவது என்பது கீழ் வானத்துக்கு சூரியனை அறிமுகப்படுத்துவது போன்றது. இதோ உங்களுக்காய் மேடையில் இசைஞானி என்ற இளையராஜ கோபுரம்' என்று பார்த்திபன் மேடைக்கு அழைத்தார்இதன் பின்னர் ரசிகர்களின் பலத்த கரவொலிக்கிடையே, இசைஞானி மேடைக்கு வர, இசைக்கலைஞர்கள் 'தோனி' படத்தின் நான்கு பாடல்களை இசைத்தனர்.

பாடல் 1:- "சின்னக் கண்ணிலே.." பாடலின் துவக்கமே எண்பதுகளின் இளைய ராகங்களை நினைவூட்டி மயிர்கூச்செறிய செய்தது..! பாடலைக் குறித்துக் கூறிய பிரகாஷ்ராஜ், 'இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடன் போட்ட முதல் டியூன் இது' என்றார். கோரஸ் தேவதைகளும், வயலின் ஆர்ப்பரிப்பும் இணைந்து வணக்கம் சொல்ல இசைஞானி புன்னகைத்தபடி Conduct செய்தது கண்கொள்ளாக் காட்சி.

பாடல் 2: பாடலைப் பற்றி பிரகாஷ்ராஜ், 'இந்தப் பாடல் ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகின்ற பாடல்' என்று நான் இசைஞானியிடம் கூறினேன். அதற்காக அவர் போட்டதுதான் 'வாங்கும் பணத்துக்கும்' பாடல். ’சார் .. இந்தப் பாடலில் இறந்து போன மனைவிக்காக காரியம் செய்வது போல ஒரு காட்சி அமைக்க வேண்டும். பாடல் ரொம்ப peppy-யாக இருக்கிறதே என்றேன். ‘சரி.. அந்த மூன்றாவது BGM-ல் ஒரு Flute piece வைக்கிறேன். அங்கே ஷூட் பண்ணிக்கோ’ என்றார். பாடல் பதிவு முடிந்து நான் பாடலை ஷூட் பண்ணும்போது நான் காட்சியை எவ்வாறு அமைக்க வேண்டுமென்பதை அவர் அமைத்திருந்த இசை எனக்குச் சொல்லியது.. ! என்னை விட என் கதைக்கு அவர் உண்மையாக இருந்திருக்கிறார். அதில் பொய்யே இல்லை. His Music is so Pure..! It cleanses you..! நாளை இந்தக்காட்சியை பார்த்து ’ப்ரகாஷ் எப்படி எடுத்திருக்கிறான்’ என்று எனக்கு பாராட்டுகள் வரும் முன்பே நான் ஒப்புக் கொள்கிறேன் ‘Your Music guided me’..!
சிவராத்திரி தூக்கம் ஏது?’ Prelude ஸ்டைலில் இசைஞானி அமைத்திருந்த பாடல் முழுவதும் வரும் Bass Notes-ஐ Guitarist திரு. பிரபாகர் இசைக்க, பாடகர் ஹரிசரண் இந்தப் பாடலைப் பாடினார். (பேழையில் திரு. எஸ்.பி.பி. பாடியிருக்கிறார்).

பாடல் 3: பாடலைப் பற்றிக் கூறிய ப்ரகாஷ்ராஜ்.. ‘இந்தப் பாடல் ஒரு Metaphorஆக வேண்டும் என்றேன். படம் முடியும் தருவாயில் வரும் பாடல். பாடலை முதலிலேயே ஷூட் செய்துவிட்டேன். அதைப் பார்த்த இசைஞானி, ஒரு குறிப்பிட்டக் காட்சியை எடுத்து வேறொரு இடத்தில் மாற்றி அமைக்கச் சொன்னார். அவர் சொன்னது போல செய்தேன். இப்போது பாடலைப் பார்த்தால் பாடலின் பொருள் சரியாக வருவது விளங்கியது. அதாவது அவர் ஒரு படத்தை பார்க்கும் விதமே தனி. அவருக்கு editing elements தெரிகிறது. Shots’ன் placements தெரிகிறது.

‘தந்தனத்தன’ கோரஸுடன் துவங்கிய ’வெளையாட்டா படகோட்டி’ பாடல் சுகமானத் தாலாட்டு..!

பாடல் 4: இசைஞானியே பாடியிருக்கும் ’தாவித் தாவி’ பாடல். ”ரொம்ப painful’ஆன இடத்தில் ‘தைரியம் சொல்வது’ போல வரவேண்டும் என்று இசைஞானியிடம் கேட்டேன். அதற்காக அவர் போட்ட பாடல்” என்றார் ப்ரகாஷ்ராஜ். 68 வயதிலும் அந்த மாமேதையின் குரலில் இருக்கும் கம்பீரம் சிலிர்ப்பூட்டியது..!

விழாவில் இயக்குனர் திரு. பாலுமகேந்திரா பேசியது:

’எனக்கு இசையைப் பற்றிய அறிவு பத்தாது. அப்படியென்றால் சினிமாவைப் பற்றிய அறிவு எனக்கு உண்டு என்று சொல்லவரவில்லை. 1981ல் நான் எடுத்த மூடுபனி முதல் 2004ல் எடுத்த ‘அது ஒரு கனாக்காலம்’ வரை அனைத்து படங்களுக்கும் இசை இசைஞானிதான். தொடர்ந்து அவருடன் பணியாற்றிய கர்வம் எனக்குண்டு. அவருடன் பணியாற்றியது என் தாய் தகப்பன் செய்த புண்ணியமா எதுவென்று தெரியவில்லை. என்னுடைய படங்களுக்கு அவருடைய இசை இன்னுமொரு பரிமாணத்தைக் கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ப்ரசாத் ஸ்டுடியோவில் இருக்கும் அவருடைய அறையை விட்டு அதிகமாக அவரை வெளியில் பார்க்க முடியாது. அவரை இன்று மேடையில் பார்த்தது மிக அதிசயம். அதற்கு ப்ரகாஷ் ராஜுக்கு என்னுடைய நன்றி. சமீபத்தில் ப்ரசாத் ஸ்டுடியோவில் நான் எடுத்துக்கொண்டிருக்கும் அடுத்த படத்தின் முதல் காட்சியை அவருடைய ஸ்டுடியோவிற்கு வெளியே எடுத்தேன். உள்ளே சென்று கொண்டிருந்தவர் வந்து என்னைப் பார்த்து நலம் விசாரித்தார். அங்கே அவருடைய ஸ்டுடியோவை போர்டு போட்டு ஒரு ஆஸ்பத்திரியாக நான் மாற்றி வைத்திருக்கிறேன். அது சமீபத்தில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம்” என்றார்.

விழாவில் இயக்குனர் திரு. மகேந்திரன் பேசியது:

இசை மேதை இளையராஜா இல்லாமல் நான் இல்லை. என்னுடைய படங்களும் இல்லை. இன்று என்னுடைய படங்களுக்காக நான் அறியப்படுகிறேன் என்றால் அதற்குக் காரணம் என்னுடைய முயற்சி இல்லை, அது இசைஞானியின் மேதைமையே..! Background Score எழுதுவதில் அவரைப் போல இந்தியாவிலேயே எங்கேயும் பார்க்க முடியாது. அவருக்கு நிகர் அவர்தான். என்னுடைய படங்களின் உயிர், ஜீவன், ஆத்மா எப்படிச் சொன்னாலும் அதற்குக் காரணம் எல்லாமுமாய் இருக்கும் என் அருமை இளையராஜாதான். ராஜாவின் ரீரெக்கார்டிங் இல்லையென்றால் என்னுடைய படங்கள் உங்களிடம் எவ்விதமான அங்கீகாரத்தையும் பெற்றிருக்காது. உங்கள் முன்னால் மைக்கைப் பிடித்து அமர்ந்திருக்கும் இந்தத் தகுதி எனக்கு வாய்த்திருக்காது. இது கடவுள் எனக்குத் தந்த ஆசீர்வாதம். அவரை நினைக்காத நாளில்லை. என்னைப் பற்றியோ எனது படங்களைப் பற்றியோ மற்றவர்கள் பேசும்போது, எனக்கு ராஜாவைப் பற்றிக் குறிப்பிடுவதுபோல்தான் இருக்கும். ராஜா மட்டும் இல்லையென்றால் I am Nothing.. My Films are Nothing..! நான் காணாமல் போயிருப்பேன் என்பது மட்டும் உண்மை. எப்பொழுதும் ‘ராஜா எனக்கு ஹிட் சாங் கொடுங்க’ என்று நான் கேட்டதில்லை. அவர் Background Score-ஐ நம்பித்தான் எனது படத்தின் ஜீவன் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். அவரைப் பற்றி மகா கவிஞன் வாலி எழுதிய வரிகள் என் நினைவுக்கு வருகின்றன.

‘உன் தேகமெல்லாம் ராகம்..!
உன் நாளமெல்லாம் தாளம்..!
உன் குருதியெல்லாம் சுருதி..!
நீ இசைஞானி இல்லை இசைமேனி..!”
என்று அந்த மகாகவிஞன் வாலி குறிப்பிட்டார்” என்றார்.

இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் அவர்கள் பேசியது:

”நான் சினிமாவை நேசிக்க ஆரம்பித்தது முதல் இளையராஜா பாடல்களைத் தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். எனக்கு மட்டுமல்ல. அனைத்து தமிழக மக்களின் உடம்பிலும், மனதிலும், உயிரிலும், கலந்துவிட்டது அவர் இசை. என்னை இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்தது, என்னுடைய தயாரிப்பாளர்கள், நடிகர்களைவிட இளையராஜா அவர்கள்தான்..! ஒரு இயக்குனர் எவ்வளவு உணர்ந்து ஒரு காட்சியைப் படமாக்கினாலும் அது, இசைஞானியின் Rerecording-கிற்குப் பிறகு வேறு ஒரு பரிமாணத்தில் காட்சியளிக்கும். He is something no one can imagine..! நாம் பாராட்டுவது அவருக்குப் பிடிக்காது. நாம் வணங்குவது அவருக்குப் பிடிக்காது. அவருக்குத் தெரிந்த ஒரே ஒரு விஷயம் இசைதான். கடந்த இசை நிகழ்ச்சியில் சொன்னது போல அவருடைய ஒரே நண்பன் அவர் ஆர்மோனியம்தான். பிறப்பிலிருந்து இறப்புவரை எல்லா உணர்வுகளையும் சொல்லக் கூடிய ஆற்றல் அவர் இசைக்கு மட்டுமே உள்ளது. அவர் இருக்கும் சினிமாவில் நானும் இருக்கிறேன் என்பது சந்தோஷம்..! நன்றி!” என்றார்.

இயக்குனர் ‘ஜெயம் ராஜா’ :

”இருபது வருடங்களுக்கு முன்னால் அப்பா எடுத்த ‘ரிக்‌ஷா மாமா’ என்ற படத்தின் ரெக்கார்டிங் பார்ப்பதற்காக நான் போயிருந்தேன். இசைஞானியிடம் பேச ஆசை. ஆனால் பயம். இருந்தாலும் தயங்கித் தயங்கி அவர் இல்லாதபோது அவர் உட்காரும் நாற்காலியைத் தொட்டு வணங்கினேன். அன்று எனக்கு ஒரு பெரிய விஷயத்தை சாதித்ததுபோல மகிழ்ச்சியாக இருந்தது. இதயம் ஒரு கோவில் பாடலில், ‘உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே’ என்று எழுதியிருந்தார்.  இது எந்த ஒரு புத்தகத்திலும் சொல்லப்படாத அற்புதமான தத்துவம். உயிரைக் கலந்து செய்யும் எந்த ஒரு செயலும் சிறப்பாக அமையும் என்ற உண்மையை நான் அந்த வரிகளில் இருந்துக் கற்றுக் கொண்டேன். இதுவரை அவர் இசைக்கு சரிசமமாக காட்சி அமைத்த இயக்குனர்கள் வெகுசிலரே” என்றார்.

இயக்குனர் திரு கே.எஸ். ரவிகுமார்:

நான் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது ‘சிகப்பு ரோஜாக்கள்’ ரிலீஸ். மிகவும் சிரமப்பட்டு டிக்கெட் வாங்கினோம். அதற்கு முன்பு பாடல்களுக்கும், ஹீரோக்களுக்கும் மக்கள் கை தட்டுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ரீ ரெக்கார்டிங்கிற்கு நாங்கள் கை தட்டிப் பார்த்த முதல் படம் அது. பெரிய குடும்பம் ரீரெக்கார்டிங்கின்போது எனக்கு ஏற்பட்ட அனுபவம். ராஜா சார் அமைதியாக உட்கார்ந்து நோட்ஸ் எழுதுவார். பின்னர் மணி அடித்தவுடன் இசைக்கலைஞர்கள் இணைந்து அதை ‘ரிகர்சல்’ பார்ப்பார்கள். சில இடங்களில் ‘டொம்’ என்று வித்தியாசமான சப்தங்கள் அமைத்திருப்பார். அது ‘ரிதம்’காக அவர் அமைத்திருக்கிறார் என்று நான் நினைப்பேன். இப்போது நீங்கள் திரையில் பார்த்தது போல (தோணி படத்தின் ஒரு காட்சியில் பந்து கீழே விழும் காட்சிக்கு இசைஞானி அமைத்திருந்த இசை), இந்த ரீலில், இந்த ஷாட்டில், இந்த குறிப்பிட்ட Frame-ல் அந்தப் பந்து விழும் ஓசை வரவேண்டும் என்பது இசை எழுதும்போதே இவர் சரியாக எழுதி விடுகிறார். எனக்கு நிறைய நேரங்களில் Shocking-ஆக இருக்கும்.

இயக்குனர் திரு எஸ்.பி.முத்துராமன்:

வணக்கம்..! அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் என்றென்றைக்கும் இளையராஜா இளையராஜாதான்..! இளையராஜாவை திரைக்கு அறிமுகம் செய்த பஞ்சு அருணாசலம் அவர்கள்தான் எனக்கு இளையராஜாவை அறிமுகம் செய்தார்கள். அன்னக்கிளி தொடங்கி நான் அவரைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். யாருக்கும் கிடைக்காதப் பெருமை எனக்கு உண்டு. நான் எழுபது படங்கள் இயக்கியிருக்கிறேன். அதில் நாற்பத்தைந்து படங்களுக்கு இசை இளையராஜா. அந்தப் பெருமையை எனக்குத் தந்ததற்காக அவருக்கு என் நன்றி. இங்கு எல்லோரும் அவருடன் பணியாற்றிய விஷயங்களைச் சொன்னார்கள். நான் பிஸியாக இருந்த காலத்தில் படத்தை எடுத்து ரீ ரெக்கார்டிங்கிற்காக ராஜா சாரிடம் கொடுத்துவிட்டு ஷூட்டிங் சென்று விடுவேன். திரும்பி வந்து பார்த்தால், ‘என்னுடைய படம்தானா இது?’ என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கும். அவருடைய வெற்றிக்குக் காரணம் அவரின் காலம் தவறாமையும் உழைப்பும். ஏழு மணிக்கு ரெக்கார்டிங் என்றால் ஆறரை மணிக்கு ஸ்டுடியோவில் உட்கார்ந்து நோட்ஸ் எழுதிக்கொண்டிருப்பார். இசைஞானி இளையராஜா தமிழகத்திற்குக் கிடைத்த சொத்து..! இந்தியாவிற்குக் கிடைத்த சொத்து..! உலகத்திற்கே கிடைத்த சொத்து..!

இயக்குனர் ராதாமோகன்:

தோனி திரைப்படத்தின் ரெக்கார்டிங்கின்போது நான் ஸ்டுடியோவில் ராஜா சாரைப் பார்த்திருக்கிறேன். அவருடைய இசையை விட எனக்கு பிரமிப்பான விஷயம் அவருடைய ஒழுக்கம். காலையில் சரியாக எட்டு மணிக்கு அவர் அறையை விட்டு நடந்து செல்வார். அவர் போகும்பொழுது அவரைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் இருப்பது போலத் தோன்றும் எனக்கு. இப்போதெல்லாம் கம்போஸிங் என்று கேட்டால் பயமாக இருக்கிறது. இரண்டு மணிக்கு வரச் சொல்கிறார்கள். இரண்டு மணிக்குச் சென்றால் ‘இப்போது ஏன் வந்தாய்?’ நான் சொன்னது ராத்திரி இரண்டு மணிக்கு’ என்கிறார்கள்.  ஆனால் அதிகாலையில் இசைஞானியைப் பார்த்தவுடனேயே நம் சோம்பல் எல்லாம் போய் நமக்கு புத்துணர்ச்சி வந்து விடும். வெள்ளுடை அணிந்து அவர் நடந்து போவது எனக்கு ஒரு தேவதை போவது போலவே தோன்றும். இப்போதும் ரெக்கார்டிங்கின்போது எட்டிப் பார்ப்பேன். ‘சார் நோட்ஸ் எழுதும் ஒரே ஒரு பேப்பரை எடுத்துக் கொடுங்கள்’ என்று ப்ரகாஷ்ராஜிடம் கேட்டிருக்கிறேன். கிடைக்கும் என்று கண்டிப்பாக நம்பிக்கை இருக்கிறது.

பாடலாசிரியர் திரு நா. முத்துக்குமார்.

இசைஞானி அவர்களுக்காக முதல்முறையாக நான் தோனி  திரைப்படத்திற்காக அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறேன். ஜூலி கணபதி படத்திற்காகத் தான் முதல் முறை அவரை சந்தித்தேன். அந்த சந்திப்பு இன்னும் என் நெஞ்சில் நிழலாடிக்கொண்டிருக்கிறது. ஒரு பரீட்சை எழுதப்போகும் மாணவனின் பதைப்புடன் அவர் அறைக்கு நான் சென்றேன்.

‘எனக்குப் பிடித்தப் பாட்டு அது உனக்குப் பிடிக்குமே’
என் மனது போகும் வழியை உன் மனது அறியுமே
‘எனக்குப் பிடித்த நிலவு அது உனக்குப் பிடிக்குமே’

என்ற பல்லவியை அவருக்குக் கொடுத்தேன். படித்துப் பார்த்துவிட்டு ‘நன்றாயிருக்கிறது பல்லவி..! ஒரு சின்ன திருத்தம் செய்யலாமா?’ என்று கேட்டார். ‘தாராளமாக ஐயா’ என்று சொன்னேன். ‘எனக்குப் பிடித்த நிலவு அது உனக்குப் பிடிக்குமே’ என்ற வரியை ‘என்னைப் பிடித்த நிலவு அது உன்னைப் பிடிக்குமே’ என்று மாற்றினால் அர்த்தம் இன்னும் சிறப்பாக இருக்குமென்றார். நான் எழுதிய வரிகளை விட பத்துமடங்கு சிறப்பாக இருக்கிறது என்று பரவசப்பட்டுப் போனேன். அன்று எனக்கு ஒன்று புரிந்தது. பாடலில் திருத்தம் என்பது சிதைப்பது அல்ல ; செதுக்குவது என்று. அதன் பின்னர் நிறைய பாடல்கள் எழுதினேன். ஒவ்வொரு முறை அவர் அறைக்குள் நுழையும்போதும் என் கைகால்கள் நடுங்கத் துவங்கும். அவர் எப்போதும் என்னை அமரவைத்து, நகைச்சுவையாகப் பேசி என்னை இயல்புக்குக் கொண்டுவருவார். ஒவ்வொரு முறை பாடல் எழுதும்போதும் அவரிடம் ஒரு புதிய விஷயத்தை நான் கற்றுக்கொள்வேன். எப்படி எளிமையாக எழுத வேண்டும்… எப்படி மக்களுக்குப் புரியும் வகையில் எழுத வேண்டும்… போன்ற பல விஷயங்களை அவரிடம்தான் கற்றுக்கொண்டேன். ‘தோனி’ திரைப்படத்தின் கம்போஸிங்கிற்கு என்னையும் அழைத்துவரச் சொல்லியிருந்தார். சென்றேன். ஒரு முக்கால் மணி நேரத்தில் வரிசையாக 5 டியூன்களைப் போடுகிறார். நான் கண்களை மூடி அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். கடவுளிடம் நேரடியாகப் பேசுபவர்கள் குழந்தைகளும் இசைக்கலைஞர்களும் என்று சொல்வார்கள். அந்த தருணத்தில் அதை நான் கண்டுகொண்டேன்.

இன்றைக்கும் நான் இசைஞானியின் பாடல்களைக் கேட்காமல் தூங்குவதில்லை. என் மகனுக்கு நான் தினமும் பாடும் தாலாட்டு ‘கண்ணே கலைமானே’ பாடல்தான். ஒரு பாடலாசிரியராக என்னுடைய குருவாக அவரை நினைக்கிறேன். ஒரு சில பாடல்களே அவர் திரைப்படத்திற்கு எழுதியிருந்தாலும் அவர் எழுதிய பாடல்களுக்கு இன்றைக்கும் நான் ரசிகன். அழகி திரைப்படத்தில் எழுதியிருப்பார்…

”கோயில் மணிய யாரு அடிக்கிறா?
தூண்டா வெளக்க யாரு ஏத்துறா ?
ஓரு போதும் அணையாம நின்று எரியணும்..”

அதே திரைப்படத்தின் வேறொரு பாடலில் இப்படியாக எழுதியிருப்பார்.

“இருள் தொடங்கிடும் மேற்கு - அங்கு
இன்னும் இருப்பது எதற்கு?
ஒளி தொடங்கிடும் கிழக்கு
உண்டு பொதுவினில் ஒரு விளக்கு”

இதை எந்தக் கவிஞனும் எழுதி விடலாம். ஆனால் அதன்பின்னர் வரும் ”ஒளி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை” என்ற வரிகள் சிறப்பானது. அதே போல அவர் எழுதிய

“யாரும் விளையாடும் தோட்டம்
தினந்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக் கொண்டு
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி
கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு
ஆறோடும் ஊரைப் பாத்து டேரா போடு

என்ற வரிகளும் எனக்குப் பிடித்தவை.

நான் சிறுவயதில் தாயை இழந்தவன். அந்தத் தனிமை எப்போதும் என்னுடன் இருந்துகொண்டே இருக்கும். அப்போது ‘ஆவாரம்பூ’ படத்தில் ஒரு பாடல் கேட்டேன்.

ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே..!
அதைக்கேட்டு தூங்கும் ஆவராம்பூவே..!
தனியானால் என்ன துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு

இந்த வரிகளைக்கேட்டவுடன் அவரின் இசைக்கரங்களை நான் பிடித்துக்கொண்டேன். அதன் பின்னர் வரும்,

தாய் இழந்த துன்பம் போலே
துன்பம் அது ஒன்றுமில்லை
பூமி என்ற தாயும் உண்டு
வானம் என்ற தந்தை உண்டு
நீங்கிடாத சொந்தம் என்று
நீரும் காற்றும் எங்கும் உண்டு

என்ற வரிகள் தன்னம்பிக்கை அளிப்பவை. அன்று பிடித்த அவரின் இசைக்கரங்களை இன்றுவரை நான் விடவில்லை.

இயக்குனர், நடிகர் திரு. நாஸர்..:

”அனைவருக்கும் வணக்கம்..! ப்ரகாஷ்ராஜுக்கு என்னுடைய வரவேற்பு..! ராஜாவுக்கு என்னுடைய மரியாதைகள்..! 1994ல் நான் இசைஞானியிடம் சென்று..

‘சார்..! ஒரு படம் பண்ணலாம் என்று இருக்கிறேன்..!’

‘எதுக்குய்யா.. ?? பிஸியா நடிச்சிகிட்டு இருக்க..! எதுக்கு இப்போ Produce பண்ணிகிட்டு?

‘இல்ல சார்..! நான் டைரக்ட் பண்ணலாம்னு இருக்கேன்’

‘இப்போதான் பிஸியா இருக்கியே..! இப்போ எதுக்குய்யா?’

‘இல்ல சார்..! சில விஷயங்கள் தோணும்போது பண்ணனும்’..!

‘ஓ! தெளிவா பேசுறதா நெனப்போ ஒனக்கு? சரி என்ன படம்..?’

“சார்..! ஒரு சின்ன கிராமத்துக்கதை.. தெருக்கூத்தை வைத்து… …”

“தெருக்கூத்தா..? என்னய்யா? நான் வேற Journey-ல போய்கிட்டு இருக்கேன்..! ம்ம்ம்..?? சரி..! பார்க்கலாம்’ என்றார். நான் ஏமாற்றம் அடையவில்லை. படப்பிடிப்பிற்குச் சென்றேன். படம் எடுத்தேன். தொகுத்தேன். பின்னணிக்குரல் சேர்த்தேன். பின்னணி ஒலிகள் சேர்த்தேன். ஒரு நாள்..

“சார் நான் படத்தை முடிச்சுட்டேன்..”

“என்ன அதுக்குள்ளேயா?”

‘ஆமா சார்..! நீங்க படம் பார்க்கணும்”

“சரி” என்றவர் படம் பார்த்தார். ‘அவதாரம்’..! படம் முடித்துக் காரில் ஏறி, ‘வீட்டுக்கு வா’ என்றார். எனக்கு ஒரே பயம். பல நூறு படங்களைக் கண்ட ஒரு மாபெரும் கலைஞன் என் படத்தைப் பார்க்கிறான். ஒரு விமர்சனம், ஒரு பாராட்டுதல் இல்லாமல் ‘வீட்டுக்கு வா’ என்றால் என்ன அர்த்தம்? ஒரு வேளைத் திட்டப் போகிறாரோ? என்று பயந்துகொண்டே சென்றேன். அவருடைய வீடு சாத்வீகமாக ஒரு கோயில் போல இருந்தது.

‘எப்படிய்யா இப்படி ஒரு படம் பண்ணியிருக்க..? நல்லாயிருக்கே..! சரி நாளைக்கு ரெக்கார்டிங் வச்சுக்கலாம்’

‘சார்…! நாளைக்கு…. … வச்சா … … ..  ப்ரொடியூசர் ஊரில் இல்ல சார்..’

‘ப்ரொடியூசர் எதுக்குய்யா? டைரக்டர் நீ இருக்க..! மியூசிக் டைரக்டர் நான் இருக்கேன்..! வா.. பாத்துக்கலாம்..!’

‘சார்..! அதில்ல சார்..!’

‘புரியுதுய்யா..! போய்யா அதெல்லாம் ஒண்ணும் வேணாம்..! ப்ரொடியூசர் எங்க இருக்காரு?’

‘சார்…! அமெரிக்காவில்’

‘சரி..! வரட்டும் ..! அப்பறம் பாத்துக்கலாம்..! ரெக்கார்டிங் நாளைக்கு…”

உங்கள் எல்லோருக்கும் தெரியும். சினிமாவில் அட்வான்ஸ் என்ற ஒன்று இல்லாமல் ஒரு காரியமும் நடக்காது. பலவிதமான Excitement-க்கு நடுவே இதனால் எனக்குத் தலைகால் புரியவில்லை. அடுத்த நாள் ஆறு மணிக்கு வரச்சொன்னார். பதைபதைப்புடன் போனேன்.

வெள்ளை வெளேர் என்ற ஒரு அறை. கருப்பு வெள்ளையில் ரமண மகரிஷியின் ஒரு புகைப்படம். அதனருகில் அம்மா என்கிற ஒரு ஆத்மாவின் புகைப்படம். அதே கருப்பு வெள்ளை 3D Animation போல அருகில் இளையராஜா..! இவைகளைத் தவிர அந்த அறையில் இருந்த மற்றொரு முக்கியமான விஷயம் ”அமைதி”. நான் சென்றபோது ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். நான் உட்காரவா வேண்டாமா என்று தயங்கி நின்றுகொண்டிருந்தேன். உட்காரச் சொன்னார். உட்கார்ந்தேன். அவர் பக்கத்தில் ஒரு கோப்பையில் இறக்குமதி செய்யப்பட்ட சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு சாக்லேட்டை எடுத்து என்னிடம் போட்டார். நான் அதைப் பிடித்தேன். அந்த சாக்லேட் பேப்பரின் ஒலிதான் அந்த அறையில் நான் நுழைந்து ஐந்து நிமிடங்களில் நான் கேட்ட முதல் ஒலி. ”இதைப்பிரித்தால் சாக்லேட் பேப்பரின் ஒலி இவரை Disturb செய்துவிடுமே..? இதைப் பிரிக்கலாமா வேண்டாமா? சாப்பிடுவதா இல்லையா?” என்று எனக்கு யோசனை.

அவர் எழுதிக்கொண்டே இருக்கிறார். எழுதிக்கொண்டே இருக்கிறார். வேகமாக எழுதுகிறார். கோபத்துடன் எழுதுகிறாரா, பாசத்துடன் எழுதுகிறாரா, யாருக்கு எழுதுகிறார், என்ன எழுதுகிறார், எதுவும் தெரியவில்லை. நான் உட்கார்ந்துகொண்டே இருக்கிறேன். மெதுவாக எனக்குக் கோபம் வரத்துவங்குகிறது. ”என்ன இது? நான் ஒரு டைரக்டர்..! என்னை வரச்சொல்லிவிட்டு இவர் எழுதிக்கொண்டிருக்கிறார்..! அவர் சொந்த விஷயத்தை எழுதுவதற்கு என்னை எதற்கு வரச்சொன்னார்? ஒரு பத்து நிமிடங்கள் கழித்து வரச்சொல்லியிருக்கலாமே?” பக்கம் பக்கமாக வேகமாக எழுதியவர், நிமிர்ந்து ‘புரு’ என்றார். அவர் கூறியது ஒரு நான்கு அடி தள்ளி அமர்ந்திருந்த என் வரைக்கும்தான் கேட்டிருக்கும். ஆனால் வெளியில் இருந்து ‘புரு’ என்கிற ஆறடி உயர ‘புருஷோத்தமன்’ வந்தார். அப்படி ஒரு Intimate communication..! Sheets எல்லாம் அவரிடம் கொடுத்துவிடுகிறார். ‘இதை Distribute பண்ணிடு’ என்கிறார்.

”சரி..! அவர் வேலை முடிந்தது..! இனி நம் வேலைக்கு வருவார்” என்று நினைத்தேன்.

‘என்ன சார்..?”

‘அது போய்டுச்சுய்யா’

‘அதுதான்.. அந்த first பாட்டு..! போய்டுச்சுய்யா..’

‘சார் .. எந்த Scene?’

‘யோவ்..! அதான் உன் படம் சொல்லிடுச்சேய்யா..! எந்தெந்தப் பாட்டு எங்கெங்க வரணும்னு’

‘அப்டியா சார்?’

‘ரொம்ப நல்லா வந்திருக்குதுய்யா.. கேளு..’ என்றவர், பாடத் துவங்குகிறார்.. ‘தன்னனன தான தான தான நான நா…. (தென்றல் வந்து தீண்டும்போது)’. அவர் போட்டிருந்த டியூன் எனக்குப் பிடிக்கவில்லை.

‘என்னய்யா? என்னய்யா யோசிக்கிற? கேளு..!’ என்றவர் மறுபடி ‘தன்னனன’ பாடத் துவங்கினார்.

அப்போதான் தெரிகிறது. நான் எவ்வளவு பெரிய ஞானசூன்யம் என்பது. ’நல்லாயிருக்குது என்று சொன்னால் எது நல்லாயிருக்குது என்று கேட்பார். நல்லாயில்லை என்று சொன்னால் என்னய்யா நல்லாயில்ல என்பாரே’ என்ற யோசனையுடன்..

‘இல்ல சார்..! இதற்கு முன்னால் வரும் பாடலில் காட்சிகள் கொஞ்சம் வேகம் குறைந்ததாக இருக்கும். இது கொஞ்சம் வேகமான பாட்டா இருந்தா நல்லா இருக்கும்.’

‘அதுதான்யா இது..! நல்லா வரும்யா..!’

’சார்..! கொஞ்சம் Tempo-வாவது ஏத்த முடியுமா?’

என் மேல் உள்ள அன்பா அல்லது ரீரெக்கார்டிங்கின்போது என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு என் மேல் ஏற்பட்ட நல்ல ஒரு உணர்வா எதுவென்று தெரியவில்லை. வேறு எந்த மியூசிக் டைரக்டரிடம் நான் இதைச் சொல்லியிருந்தாலும் என்னை அடித்து ‘போடா வெளியே’ என்று துரத்தியிருப்பார்கள். ஒரு ஞானியிடம் சென்று ஒரு ஞானசூன்யம் சொல்கிறது ‘கொஞ்சம் Tempo ஏத்துங்க’..!

அவர் சிரித்தார். எனக்கு வேலை இருக்கிறதா என்று கேட்டு பின்னர் நாலு மணிக்கு வரச்சொன்னார்.

நான் சென்றவுடன் என்னுடைய Assistant Directors எல்லாம் டியூன் எப்படி இருந்தது என்று கேட்டார்கள். ஏதோ இருந்தது என்று சொன்னேன். அதற்கு அவர்கள் ‘அவர் அப்படித்தான் சார் போடுவார். நாமதான் சார் நாலஞ்சு டியூன் போடச் சொல்லிக் கேட்டு வாங்கணும்’ என்றார்கள். நான் அதற்கு, ‘விடுங்கய்யா.. நாலு மணிக்கு வரச்சொல்லியிருக்கிறார். நான் Tempoவை கூட்டச்சொல்லியிருக்கிறேன்” என்றேன்.

நாலு மணிக்குச் சென்றேன். ரெக்கார்டிங் ஸ்டுடியோ ஒரு கல்யாண மண்டபம் போன்று இருந்தது. பலவிதமான வாத்தியக்கருவிகளின் பலவிதமான சப்தங்கள்..! பரவாயில்லை. நம் பாட்டுக்கு இவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள் என்று ஒரு சந்தோஷம். சரியாய் நாலரை மணிக்கு சொல்கிறார்…

’…புரு….!’ (இம்முறை கொஞ்சம் சத்தமாக). சரி ஒரு மானிட்டர் பார்க்கலாம்’

எங்கும் அமைதி…!

1….. 1..2..3..4..

‘தானத் தம்தம் தானத் தம்தம் தானத் தம்தம் தானத் தன்னானா..’ பாடலின் கோரஸ் துவங்குகிறது.

I cried...  

நான் அழுதேன்....

பக்கத்தில் அவர் முழங்கால்கள் இருந்தன. அவற்றைப் பற்றிக்கொண்டு.. ‘சார்..! தயவுசெய்து என்னை மன்னிச்சுடுங்க சார். நான் தெரியாம எதோ சொல்லிட்டேன்’ என்றேன்.

‘இருய்யா..! முழுசாக் கேளுய்யா’ என்றார்.

அப்படி உருவானதுதான் ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடல். எனக்கு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் எப்படி ஒரு  மனிதன் சரளமாக, ஒரு கவிஞன் கோபத்தில், காதலில் அல்லது வீரத்தில் எழுதுவது போல இவ்வளவு வேகத்தில் இசையை எழுதமுடியும் என்பதுதான் (கைகளால் காற்றில் வேகவேகமாக எழுதிக்காட்டுகிறார்).

இளையராஜாவின் வெற்றிக்கு மற்றொரு காரணம் ‘கற்றல்’. எப்போதும் கற்றுக்கொண்டே இருக்கிறார். அவதாரம் திரைப்படத்தின் ஒரு மூன்று காட்சிகளை..

‘யோவ்..! இந்த மூணு சீன் ரொம்ப திராபையா இருக்கேய்யா’ என்றார்.

‘இல்ல சார்..! அவன் திரும்பத் திரும்ப எப்படியாவது என்னைக் கூத்துக்குழுவில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கெஞ்சுகின்றான். அதை விளக்குவதற்காகத்தான் அந்த மூணு சீனையும் வைத்திருக்கிறேன். அது எனக்கு ரொம்ப தேவை சார்’ என்றேன்.

‘உனக்குத் தேவைய்யா..! ஆனால் பார்க்கிறவனுக்கு Interesting-ஆக இருக்கணும் இல்லையா?’ நீ அரை நாளில் ஷூட் பண்ணுவது போல இந்த இடத்தில் ஒரு பாட்டு போட்டுக்கொடுத்துவிடுகிறேன்’ என்றார். அந்தப் பாடல்தான் ‘அரிதாரத்தப் பூசிக்கொள்ள ஆசை’. அதாவது ஒரு ஏழரை நிமிஷத்து வறட்சியான மூன்று காட்சிகளை மிக அழகாகக் கொண்டுவந்து விட்டார். அவதாரம் படத்தின் ஒவ்வொரு பாட்டும் முத்தான பாடல்கள். அந்த ஐந்து பாடல்களும் இரண்டரை நாட்களில் பதிவு செய்யப்பட்டவை. இன்றைக்கு மாதங்கள் ஆகின்றன. சிலருக்கு வருடங்கள் ஆகின்றன.

போன வருடம் ஒரு படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து சிதம்பரத்திற்கு ரோடு வழியாகச் செல்லவேண்டியிருந்தது. அது ஒரு விழாக்காலம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு ஊரைக் கடக்கும்போதும் டீ கடைகளிலும், கோவில் விழாக்களிலும் பாடல்கள் ஒலித்துக்கொண்டு இருந்தன. சரி.. மக்கள் யாருடைய பாடல்களை கேட்கிறார்கள் என்று ஒரு கணக்கெடுக்கலாம் என்று நினைத்தேன். மேடைக்காக மிகைப்படுத்திச் சொல்லவில்லை. நான் கேட்டதில் ஏழு எம்.எஸ்.வி. பாடல்கள், மூன்று ஏ. ஆர். ரகுமான் பாடல்கள், இருபத்தெட்டு இளையராஜா பாடல்கள். தமிழ் சமூகம் இளையராஜாவின் பாடல்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது."
 
இசை என்பது வியாபாரம் மட்டுமே அல்ல. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று காந்திஜி கூறினார். கிராமங்களில் வாழும் மனிதர்களின் மனதில் இன்னும் இளையராஜா பாடல்கள்தான் கேட்டுக்கொண்டிருக்கின்றன. இப்படி ஒரு விழா இளையராஜாவுக்கு மிகச் சிறியது. ஆனால் எங்கள் மனது பெரியது.”
 
இயக்குனர் திரு. எஸ். ஏ. சந்திரசேகர்:
 
இன்று இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் திரு. ப்ரகாஷ்ராஜுக்கு என் வாழ்த்துகள். நிச்சயமாக உங்கள் வெற்றிக்கு என் உத்திரவாதம். ஏனென்றால் எத்தனையோ புது இயக்குனர்களை வெற்றி இயக்குனர்களாக, வெள்ளிவிழா இயக்குனர்களாக மாற்றியவர் இசைஞானி இளையராஜா. தமிழ் திரையுலகில் இது ஒரு சரித்திரம் என்று சொல்ல வேண்டும். புதிதாக யாராவது ஒரு படம் எடுக்கவேண்டும்.. புதுமுகங்களை வைத்து எடுக்க வேண்டும்.. புது இயக்குனர்களை அறிமுகப்படுத்த வேண்டும்.. ஒரு படம் வெற்றியடைய வேண்டும்.. என்றால் அந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என்று திரையுலகில் சொல்வார்கள். அப்படி அவர் இசையமைத்து அறிமுகம் செய்த புதுமுகங்கள் புது இயக்குனர்கள் இன்று பெரிய பெரிய நிலையில் இருக்கிறார்கள்.
 
இயக்குனர் சிகரம் திரு. கே. பாலசந்தர்.
 
‘இந்த விழாவிற்கு என்னால் வர இயலாத சூழ்நிலையிலும் ஒரு ஐந்து நிமிடங்களாவது வந்துவிட்டு செல்கிறேன்’ என்று சொன்னேன். நான் சொன்னது ப்ரகாஷ்ராஜுக்காக அல்ல; இளையராஜாவுக்காக. இளையராஜாவை சந்தித்து நெடுநாட்கள் ஆகிவிட்டன. அவரை சந்திக்கின்ற ஒரு வாய்ப்பாக இது இருக்கட்டுமே என்றுதான் வருகிறேன் என்று சொன்னேன்.  ஆரம்பகாலத்தில் நான் இயக்கிய படங்களுக்கு திரு. எம்.எஸ்.வி. அவர்கள்தான் இசையமைத்துக்கொண்டிருந்தார். ஆனால் ஒரு குறிப்பிட்டத் திரைப்படத்திற்கு இளையராஜாதான் பொருத்தமாக இருப்பார் என்று எனக்குத் தோன்றியது. ஆனாலும் எம்.எஸ்.வி.யை விட்டுப் போவதற்குத் தயக்கமாக இருந்தது. எனவே நான் திரு. எம்.எஸ்.வி. அவர்களிடமே சென்று, ‘இது போல ஒரு படம் இயக்க இருக்கிறேன்.. அதற்கு இளையராஜா இசையமைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. எனவே உங்கள் அனுமதியுடன் அவரை இசையமைக்கக் கேட்கப் போகிறேன்’ என்று கூறினேன். அதற்கு அவர், ‘நிச்சயமாக இது போன்ற ஒரு கதைக்கு இளையராஜாவின் இசைதான் சரியாக இருக்கும்’ என்று கூறினார். உங்களுக்கெல்லாம் தெரியும். அந்தத் திரைப்படம்தான் ”சிந்து பைரவி”.
 
முதல்முறையாக அவர் எனக்கு இசையமைக்கப் போவதால் எனக்கு ஒரு Excitement. அவருக்கும் அப்படியே..! படத்தின் கதையைச் சொல்லி அவரிடம் நான், ‘இந்தப் படத்திற்கு நீங்கள் தேசிய விருது வாங்க வேண்டும்’ என்று கூறினேன். உடனே அவர், ‘நிச்சயம் வாங்குவேன்’ என்று கூறினார். ‘பாடறியேன் படிப்பறியேன்’ மாதிரி ஒரு Folk Song-ல் இருந்து கர்நாடிக் பாடலுக்குப் போவது போன்ற ஒரு Situation-க்கு இசையமைப்பது என்பது எவ்வளவு சிரமமான வேலை என்பது எனக்குத் தெரியும். அந்த சிச்சுவேஷனை அவரிடம் சொல்லும்போது மிகவும் ரசித்தார். ரசித்துவிட்டு ‘எனக்கு ஒரு நாள் டைம் கொடுங்கள்’ என்று கேட்டார்.
 
மறுநாள், ‘முடித்துவிட்டீர்களா’ என்று கேட்டேன். ‘முடித்துவிட்டேன்’ என்றார். அந்த ஒரு நாளில், Folk-ல் இருந்து ஆரம்பித்து Carnatic-ல் முடியும் அந்த சிரமமான பாடலை இசையமைத்து முடித்திருந்தார். அந்தப் படத்தின் Highlight அந்தப் பாடல்தான். மேலும் படம் முழுவதும் இசைஞானியின் Contribution அளப்பறியது.
 
அடுத்து ஒருமுறை, சிரஞ்சீவி நடித்த ஒரு தெலுங்கு படத்திற்கு இசையமைக்கும்போதும், ‘இந்தப் படத்திற்கும் நீங்கள் தேசிய விருது வாங்க வேண்டும்’ என்று சொன்னேன். அந்தப் படத்திற்கும் தேசிய விருது கிடைத்தது. நாம் எதை Aim பண்ணுகிறோமோ, எதை நோக்கிப் போகின்றோமோ அது நமக்குக் கிடைப்பதை விட ஒரு கலைஞனுக்கு வேறென்ன வேண்டும்?
 
நான்காவது முறையாக அவர் தேசிய விருது பெற்றபோதும் அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து சொன்னேன். ‘இதில் பாதி நீங்கள்தான்’ என்றார். எனக்குப் புரியவில்லை. ‘இது நான்காவது விருது. அதில் இரண்டு விருது உங்கள் படம்’ என்றார்.
 
இளையராஜா தமிழகத்திற்கு வாய்த்ததும் சரி.. இந்தியாவிற்கு வாய்த்ததும் சரி.. அது ஒரு பெரிய Historic Accident.
 
இத்தனை புகழ்மாலைகளையும் வாங்கிக்கொண்டிருந்த கேட்டுக்கொண்டிருந்த அந்த மாபெரும் இசை மேதையின் முகத்தில் சற்றும் சலனமில்லை. அரங்கினுள் இருந்த 4 மணி நேரமும் அவர் விரல்கள் நாற்காலியில் தாளமிட்டபடி இருந்தன. பின்னர் இசைஞானி நிகழ்த்திய ஏற்புரை:
 
”நாசர் பேசினதற்குப் பிறகு நான் என்ன பேசுவது? (பலத்த கரகோஷம்). என்னிடம் வருவதற்கு முன்னிருந்த ப்ரகாஷ்ராஜ் வேறு. அவர் படத்தில் நான் வேலை செய்த பிறகு இருக்கும் ப்ரகாஷ்ராஜ் வேறு. அந்த மாற்றத்தை என்னால் உணர முடிகிறது. ஆனால் அது என்ன மாற்றம் என்று எனக்குத் தெரியவில்லை. நாசர் நான் எப்படிப் பாடுவேன் என்று அழகாகப் பாடிக்காட்டினார் (பலத்த சிரிப்பு).  இப்படித்தான் நான் பாடிக்காட்டினேனா என்று எனக்கே வியப்பாக இருந்தது. இவ்வளவு அகோரமாக பாடியிருந்தால் அடியல்லவா விழுந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது (பலத்த கரவொலி). வெறும் ஆர்மோனியத்தை மட்டும் வாசித்துப் பாடிக் காட்டினால் ஒரு இயக்குனருக்கு எப்படிப் புரியும்? எப்படி ஓ.கே. சொல்வார்கள்? நன்றாக யோசித்துப் பாருங்கள்.
 
‘தனனனா.. தனனனா.. தானனனா….’ (ஒளியிலே தெரிவது பாடலை ஹம் செய்கிறார்). இதை யாராவது ஓ.கே. செய்வார்களா? நாசர், அங்கு நடந்த விஷயங்களை (தென்றல் வந்து தீண்டும்போது கம்போஸிங்கில் நடந்தவை) எனக்கே புதிதாக நினைவூட்டிவிட்டார். அவர் சிறந்த இயக்குனர்தான். மறுபடியும் மறுபடியும் நம்மையே நாம் புகழ்ந்துகொண்டு… (சிரிக்கிறார்) எவ்வளவு நாள்தான் கேட்டுக்கொண்டே இருக்க முடியும்? கஷ்டம் இல்லையா?
 
‘நானொரு சிந்து’ பாடல் கம்போஸிங்கின்போது நடந்த விஷயம்..! அவர் சிச்சுவேஷன் சொன்னவுடன், ‘நானொரு சிந்து ; காவடிச் சிந்து ; ராகம் புரியவில்ல.. உள்ள சோகம் தெரியவில்ல.. தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்ல. அத சொல்லத் தெரியவில்ல’ என்று நான் பாடியவுடன் ‘அனந்து ..! அனந்து…!’ என்று கூப்பிட்டார். ‘அந்த டைரியை எடு’ என்கிறார். கைகள் நடுங்குகின்றன. திறக்கிறார். அந்த டைரியில் இந்தப் பாடலுக்கான வரிகள் ‘நானொரு சிந்து; காவடிச் சிந்து’ என்று ஏற்கெனவே எழுதி இருந்திருக்கிறார். ஆனால் அதை என்னிடம் சொல்லவில்லை. ‘இது எப்படிச் சாத்தியம்? எப்படிச் சாத்தியம்?’ என்று கேட்டார். ‘சார்.. உங்களுக்குத் தேவையானதை நீங்கள் கேட்காமலேயே கொடுத்தால்தான் நான் மியூசிக் டைரக்டர்’ என்றேன்.
 
பாலசந்தர் சார் ‘பாடறியேன் படிப்பறியேன்’ பாடலுக்கான சிச்சுவேஷன் சொன்னவுடனேயே நான் அந்த டியூனை கம்போஸ் செய்துவிட்டேன். அதற்கு முன் ஜே.கே.பி. ஒரு கீர்த்தனை பாடுவார். அதற்கு ரசிகர் கூட்டத்தில் இருந்து ஒருத்தி எழும்பி ‘இதைத் தமிழில் பாடக்கூடாதா?’ என்று கேட்பாள். அதன்பின்னர் பாடறியேன் பாடல் வரும். இப்படி அந்த இடத்தில் இரண்டு சிச்சுவேஷன்கள் இருந்தன. தெலுங்கு கீர்த்தனையை எழுத யாராவது ஒரு தெலுங்கு ரைட்டரைக் கூப்பிடலாம் என்று யோசித்தேன். ‘மரி மரி’ டியூனை முதலிலேயே கம்போஸ் செய்துவிட்டிருந்தேன். அதன்பின்னர் எதற்காக பாடல் எழுதுவதற்கு ஒருவரைக் கூப்பிட வேண்டும் என்று யோசித்து, ‘தியாகராஜ சுவாமிகள் தெலுகு கீர்த்தனைகள்’ புத்தகம் ஒன்று இருந்தது. அதை எடுத்தேன். திறந்தேன். எனக்கு ‘அரை’ இடம் (Beat) தள்ளி பல்லவி வரவேண்டும். (பாடறியேன் பாடல் முடிவில் வரும் ஸ்வரங்களுக்குப் பின்னர் துவங்கும் ‘மரி மரி). புத்தகத்தைத் திறந்தால் ‘மரி மரி நின்னே’ பாட்ல என் கண்களில் பட்டது. பாடிப்பார்த்தால் நான் யோசித்தது போலவே ‘அரை இடம்’ தள்ளிப் பாடல் துவங்க வசதியாய் இருந்தது. நான் எழுதிய டியூனுக்கு தியாகராஜ சுவாமிகள் கீர்த்தனை எழுதி வைத்திருந்தார். அது அவர் எனக்குப் பண்ணின ஆசீர்வாதம்.
 
‘மரி மரி நின்னே’ போன்ற ஒரு பாடலை எங்கே போடுவது? இதுபோன்ற கதை கொண்டு வரும் இயக்குனர்களுக்குப் போடலாம். இது போல சிச்சுவேஷன் கொண்டு வருபவர்களுக்குப் போடலாம். இதுபோல எத்தனையோ பாடல்களை நம் முன்னோர்கள் போட்டிருக்கிறார்கள். (பாடிக்காட்டுகிறார்) மலர்ந்தும் மலராத பாதி மலர்போல…! இதெல்லாம் அழியாப் பாடல்கள் இல்லையா? உள்ளத்தையும் உயிரையும் உருக்கக்கூடிய பாடல்கள் இல்லையா? இந்தப் பாடலை இன்று விஜய்க்கோ அஜீத்துக்கோ போட முடியுமா? நீங்கள் எழுந்து போய்விடமாட்டீர்களா?
 
இசை என்பது உள்ளத்தையும், உயிரையும் உயர்ந்த மேல் நிலைக்கு எடுத்துப் போவதாக இருக்க வேண்டும். அது இன்று எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்” என்றார்.
 
பின்னர் ப்ரகாஷ்ராஜின் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது.
 
புகைப்படங்கள் நன்றி: Behindwoods, IndiaGlitz மற்றும் AccessKollywood இணையதளங்கள்.

21 comments:

  1. ஊரில் இல்லாததால், நிகழ்வுக்கு என்னால் வரை முடியவில்லை..ஆனால், அந்தக் குறையை அப்படியே நீக்கி விட்டது தங்களது வர்ணனை.நானே அங்கு அமர்ந்து, ஒவ்வொருவருடைய குரலில் அவர்கள் பேசியதைக் கேட்பதைப்போல உணர்கிறேன்..மிக்க நன்றி தம்பி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ..! :-)

      Delete
  2. மிக்கநன்றி இ.ப. நிகழ்ச்சியைக்கண்டுகளித்த ஒரு நிறைவுவந்தது. நன்றி

    ReplyDelete
    Replies
    1. @Sivakumar /மிக்கநன்றி இ.ப. நிகழ்ச்சியைக்கண்டுகளித்த ஒரு நிறைவுவந்தது. நன்றி/

      அடடே சிவா ..! இங்கேயும் இருக்கீங்களா? மகிழ்ச்சி..! கருத்துக்கு நன்றி..! :-)

      Delete
  3. ஒரு வீடியோ தொகுப்பை பார்த்தது போன்ற உணர்வு ..... உங்கள் பதிவை படிக்கும் போது.

    அருமையான தகவல்கள். வாழ்த்துக்கள் நண்பரே. தொடர்ந்து இவரது இசை விருந்தை தாருங்கள்.... ரசிக்க, ருசிக்க நிறைய இதயங்கள் கார்திருகின்றன.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ..! :-)

      Delete
  4. Replies
    1. நன்றி சகோ..! அடிக்கடி வாங்க..! :-)

      Delete
  5. அட்டகாசமான விரிவான கவரேஜ் ராசையா..அசத்தி விட்டீர்கள். உண்மையில் ராஜா பேசாமல் அவரைப் பற்றி மற்றவர்கள் அவரின் இசை நுட்பத்தையும் சாதனைகளையும் பேசினால் எனக்கு மிகவும் பிடிக்கும். அது நடந்திருப்பதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி சந்திரமோகன் அண்ணே..! :-)

      Delete
  6. அருமையான பகிர்வு ;-) மிக்க நன்றி ;-)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ! :-)

      Delete
  7. Mr. Isaignani Bakthan,

    Your works are very hard..your are really a hardcore fan of Isaignani.

    Thanks for posting.

    Yours friend,

    Sharavanan (Madurai)

    ReplyDelete
  8. ரொம்ப நல்ல உழைப்பு சகோ... அருமை...

    --
    அன்பின்
    ப. ஜெயசீலன்.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. Arpudham.. neril kanda oru unarvu...

    ReplyDelete
    Replies
    1. நன்றி! இசைஞானிக்கே எல்லாப்புகழும்! :-)

      Delete