இன்று French Orchestra Leader ”Paul Mauriat” அவர்கள் பிறந்த தினம் (4 மார்ச் 1925). சரி.. பால் மரியாவிற்கும் இசைஞானிக்கும் என்ன சம்பந்தம் என்று வியப்பவர்களுக்காய், 1983ல் முதல்முறையாக வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடித்துத் திரும்பிய இசைஞானி தன் பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்ட “சங்கீதக் கனவுகள்” புத்தகத்திலிருந்து சில பகுதிகள்..
“இரண்டு மாதங்களுக்கு முன், முதன் முறையாக வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் ஒன்று செய்ய வேண்டும் என்று என் (வெளிநாட்டு) நண்பர்கள் சிலர் கேட்டுக் கொண்டனர்.
நான் இப்போது, என் வேலையைத் தவிர, வெளியில் போனால் கோயிலுக்கு மட்டுமே போகிறேன். வெளிநாட்டில் போய் எதைப் பார்ப்பது, இது ஒரு பெரிய கேள்விக்குறியாக நின்றது. வெளிநாட்டிலாவது கோயிலாவது! ஆகா! மின்னல் வெட்டினாற்போல் ஒரு யோசனை.
பீதோவன் (Beethoven),
ப்ராம்ஸ் (Brahms),
ஹைடின் (Haydn),
மொஸார்ட் (Mozart)
- இவர்கள் போன்ற பெரிய இசை மேதைகள் வாழ்ந்த – நடந்த மண்ணை, இசைகளை உருவாக்கிய, இசை நிகழ்ச்சிகளை நடத்தி பல உள்ளங்களை மகிழ்வித்த இடங்களைத் தரிசித்தால் என்ன என்று தோன்றியது. அதற்கான முன்னேற்பாடுகள் நடந்தன.
நண்பர் Air France கோபால், பாரிஸ் நகரில் பணிபுரியும் நண்பர் ‘புரொபஸர் பாரிஸ்’ ஜமால் அவர்களை சென்னையிலேயே எனக்கு அறிமுகப்படுத்தினார்.
“உங்களுக்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும்” என்றார்.
“முதற் காரியம் – எனக்கு வரவேற்பு, சொற்பொழிவு போன்ற எந்த நிகழ்ச்சிகளும் வேண்டாம்” என்றேன்.
‘சரி பின்’?
‘ஃப்ரான்ஸ் நாட்டின் Composer PAUL MAURIAT, பாரீஸ் நகரத்தில்தானே இருக்கிறார். அவரைப் பார்க்க ஏற்பாடு செய்ய முடியுமா?” என்று கேட்டேன்.
‘முடியும்’ என்றார்கள்.
‘பால் மரியா’ எனக்கு மிகவும் பிடித்த Composer Arranger. ‘Arranger’ என்றால் Orchestrator என்று பொருள்.
தமிழில் மெல்லிசை என்று சொல்லக்கூடிய Light Music-ல் புதிய உத்திகளைக் கையாண்டு தற்போதைய மெல்லிசைக்கு உயிர் கொடுத்தவர் அவர். அவரைச் சந்திப்பதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்” என்றேன்.
நான் அவர் மீது வைத்திருக்கும் மரியாதையைப் பார்த்து விட்டு, “அவரைச் சந்திக்க எப்படியாவது ஏற்பாடு செய்து விடுகிறேன்” என்றார்.
நண்பர் Air France கோபால், பாரிஸ் நகரத்துக்குப் பலமுறை ‘பால் மரியா’வுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றார். அவருடைய மற்ற நண்பர்களுக்கும் விஷயத்தைத் தெரிவித்து அவர்கள் மூலமாகவும் முயற்சி செய்தார்.
நண்பர் பாரிஸ் ஜமால், ‘நீங்கள் அவரைச் சந்திக்கும் முன்பு, உங்களைப் பற்றிய முக்கிய விஷயங்களை அவருக்குத் தெரிவித்தால்தான் அவர் உங்களைச் சந்திக்க விரும்புகிறாரா? இல்லையா? என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். எனவே உங்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு ஒன்றைத் தயார் செய்து என்னிடம் கொடுங்கள்” என்றார்.
எனக்கு இதிலெல்லாம் விருப்பமில்லை என்றாலும், ‘இப்போது இப்படி வந்து மாட்டிக்கொண்டோமே’ என்று வருந்தினேன். அப்போது, நண்பர் கோபால் முன் வந்து, “ஏற்கெனவே நான் ஒன்று தயாரித்து வைத்திருக்கிறேன். அதைக் கொண்டுபோங்கள். அத்துடன் இளையராஜாவின் முக்கியமான பாடல்களில் சிலவற்றை எடுத்துப் போங்கள். வாழ்க்கைக் குறிப்பைவிட, அவருடைய ‘இசை’ அவரைத் தெளிவாக விளக்கிக் காட்டிவிடும்!” என்று யோசனை சொன்னார்.
எனக்கு அது சரியாகப் பட்டது. நானே சில பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அதைப் பத்து பன்னிரண்டு கேஸட்டுகளில் பதிவு செய்து, ஒன்றை ஜமாலிடம் கொடுத்தேன். அது தவிர ‘வேத கானம்’ கேஸட் ஒன்றும், சினிமாவுக்கில்லாமல் நான் தனியாகப் பதிவு செய்த இசைக்கோர்வை அடங்கிய கேஸட் ஒன்றுமாக மூன்று கொடுத்தேன். இதில்லாமல், புதிதாக நான் எழுத ஆரம்பித்திருக்கிற ஒரு Experimental Music-ஐயும் புறப்படுவதற்கு முதல் நாள் Record செய்தேன். அது பதிவானபோதே இசைக்குழுவில் இருந்த அத்தனை பேரும் மனமாரப் பாராட்டினார்கள்.
அடுத்த நாள் என்னை எப்படியாவது மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடுவது என்று நண்பர்கள் கொண்ட முயற்சி வீண்போகவில்லை. பால் மரியா 2 மணிக்கு வரச் சொல்லிவிட்டார். அரை மணி நேரம் முன்பாகவே போனோம்.
ஆனால் அவர் நமக்காக ஒதுக்கியுள்ள நேரம் 5 நிமிடம்தான். சம்மதமா என்றார்கள்.
சரி, பார்த்துவிட்டாவது வருவோம் என்ற எண்ணத்துடன், அவருக்கு அன்பளிப்பாக நான் வாங்கி வைத்திருந்த மாலை ஒன்றும், கிருஷ்ணன் சிலை ஒன்றும், கிளம்பும் முன் Record செய்த Music Cassette ஒன்றும் எடுத்துக்கொண்டேன்.
10 நிமிடம் முன்பாகவே அவருடைய வீட்டில் Composing Hall-ல் காத்திருந்தோம். ஹாலைப் பார்த்து வியந்துகொண்டிருந்தேன். அங்கு ஒரு Grand Piano-வும், Electronic Synthesizer மூன்றுக்கு மேலும், Music எழுதும் Manuscript பேப்பர்களும், பேனா, பென்சில்களும் Record Collection-களும் என் கவனத்தைக் கவர்ந்தன. இவற்றைப் பார்த்து 10 நிமிடம் மட்டும்தான் என்னால் வியக்க முடிந்தது. ஏனெனில், சரியாக 2 மணிக்கு பால் மரியா The Great உள்ளே வந்தார்.
நண்பர்கள் என்னை அறிமுகப்படுத்த, சந்தனமாலையையும், கிருஷ்ணன் சிலையையும் அன்புடன் அளித்தேன்.
என்னைப் பற்றி விசாரித்த அவர் சென்னையைப் பற்றியும், இந்திய நாட்டைப் பற்றியும், இந்திய இசையைப் பற்றியும் விசாரித்தார்.
ஆரம்பித்தேன். உலகிலேயே உயர்ந்த இசை கர்நாடக இசைதான். புரிந்துகொள்வது கஷ்டமாக இருப்பதால் அது சரியில்லை என்று சொல்ல முடியாது. இசையை Develop செய்துகொண்டே போய், இதற்கு மேல் Develop செய்ய ஒன்றுமில்லை என்ற ஒரு நிலை வருமானால், அதுவே “கர்நாடக இசை” என்றேன்.
‘எப்படிச் சொல்கிறீர்கள்’? என்றார்.
“Western Music’ல் குறைந்த இடைவெளி உள்ள இரண்டு சுரங்களைச் சொல்லுங்கள்..” என்றேன்.
“C to D Flat” என்றார்.
“அதற்கும் குறைந்த இடைவெளி உள்ள சுரங்களை எங்கள் முன்னோர்கள் கண்டுபிடித்து வெவ்வேறு ராகங்களில் வெவ்வேறு கோணங்களில் அமைத்து வைத்திருக்கிறார்கள்..” என்று எனக்குத் தெரிந்த அளவில் பாடியும் காட்டி விளக்கினேன்.
அவர் புரிந்துகொண்டு, “ஆம்! நீங்கள் சொல்வது உண்மைதான்” என்றார்.
“இதைக்கூட உங்கள் நாட்டில் Micro Tones என்று சொல்வார்கள்’ என்றேன்.
“ஆம்! இதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் விளங்காத விஷயம்.. Indian Rhythms தான்..! Oh My God..!” என்று வியந்தார்.
அவர் ஹிந்துஸ்தானி தபலாவையும், நம் ஊர் மிருதங்கத்தையும், தவிலையும் எங்கோ கேட்டிருப்பார் போலிருக்கிறது. அதனால்தான் அப்படி ஒரு பிரமிப்பு அவருக்கு.
“ஏன் நீங்கள் உங்களது Orchestration’ல் எவ்வளவோ தாளக் கோவைகளை interesting’ஆக புகுத்தியிருக்கிறீர்கள்..! அப்படிப்பட்ட உங்களுக்கு Indian Rhythms அப்படி ஒன்று கஷ்டமே இல்லை” என்றேன்.
“Oh I can’t..” என்றார்.
உடன் எடுத்துச் சென்றிருந்த கேஸட்டைக் காட்டி, “இதை நான் உங்களுடன் கேட்க விரும்புகிறேன்” என்றேன். “Oh Yes..!” என்று கீழே உள்ள Listening Room’க்கு அழைத்துச் சென்றார்.
3 Pieces Record செய்திருந்தேன். Cassette On பண்ணியதுதான் தாமதம், கண்களை மூடிவிட்டார். மியூஸிக் முடிந்தபின்னர்தான் கண்களைத் திறந்தார்.
“Something Different and wonderful” என்று ஆரம்பித்தவர், நன்றாக, மனம் திறந்து பாராட்டினார். அதையெல்லாம் விவரமாக எழுதலாம் என்றாலோ, என் மனசாட்சி, ‘டேய்! முதலிலேயே இது சுயபுராணம் அல்ல என்று பெரிசா பீத்திக்கிட்டியே! இப்போ..?? ஹி.. ஹி..” என்று சிரிக்க ஆரம்பித்துவிட்டது.
Cassette முடிந்ததும், “இதை நான் வைத்துக்கொள்ளலாமா?” என்று கேட்டார்.
என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. “இதை நான் உங்களுக்காகவே எடுத்து வந்தேன்” என்று அவருக்குக் கொடுத்துவிட்டேன்.
அதில்…
அப்படி என்ன இருந்ததென்றால், நம் ஊர் Classical-ஐயும், அவர்கள் ஊர் Classical’ஐயும் blend செய்து ஒரு ராகமாலிகை Concerto for Orchestra பண்ணியிருந்தேன்… அவ்வளவுதான்.
மாயாமாளவகெளளையில் ஒரு “Mad Mod Mood Fugue” எனக்குப் பிடித்தமான Classical Composer ஆன Bach கம்போஸ் செய்த Bouree in E Minor’க்கு ஒரு Counter Melody கம்போஸ் செய்திருந்தேன். இதைப் படித்தபின் இசை தெரிந்தவர்கள் இனிமேல் அந்த ஐடியாவை வைத்துக்கொண்டு, இதைப்போல் வேறு ‘பீஸ்’ கம்போஸ் பண்ணலாம். ஆனால் ‘பால் மரியா’ சொல்லிவிட்டார்…. ”You are the First Man” என்று, இது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை. (சீச்சீ..! என் மனசாட்சி வேறு இடையில்) ஹி.. ஹி..!
பால் மரியா எனக்காக ஒதுக்கிய ஐந்து நிமிடம் முடிந்து, ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. P.A. வேறு இடையிடையே நேரத்தைச் சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தார். அதைப் பற்றியெல்லாம் பால் மரியா கவலைப்படவில்லை.
“புதிதாக எத்தனை ரெக்கார்ட் cut பண்ணினீர்கள்?” என்றேன்.
“புதிய ரெக்கார்ட் cut செய்தது, 3 வருடங்களுக்கு முன்” என்று பதில் வந்தது.
அவர்கள் ஒரு ரெக்கார்ட் வெளியிட்டால் எவ்வளவோ மில்லியன் டாலர்ஸ் வருமானமாக, ஆயுள் பூராவும் வந்து கொண்டிருக்கும்.
இங்கு..??
”உங்களுக்குப் பிடித்த Classical Composer யார்?” என்றேன்.
யோசிக்காமல், ‘Bach’ என்றார்.
வேறு யாராக இருக்க முடியும்? எனக்குப் பிடித்தவரையே இவரும் சொல்கிறாரே என்று வியப்பதற்கு முன்..
”You See! இப்போது Bach கம்போஸ் செய்த Toccata in D Minor’ஐ நான் Orchestration பண்ணிக்கொண்டிருக்கிறேன். I can’t change even a single note!” என்றார். அசந்தே போனேன்.
அதற்கு அர்த்தம்: வேறு எந்த கம்போஸர் ஆனாலும், அவர்கள் படைப்பில், எதை வேண்டுமானாலும் மாற்றி விடலாம். “Bach” கம்போஸிஷனில் மட்டும் ஒரு சுரத்தைக் கூட மாற்ற இயலாது என்று அவர் சொன்னது Bach’ன் மேல் எனக்கிருந்த மரியாதையையும், பக்தியையும் அதிகப்படுத்தியது.
Bach வாழ்ந்த ‘லைப்ஸிக்’ (Leipzig) என்ற இடத்திற்கு நான் போகப் போவதாகச் சொன்னபோது மகிழ்ந்து போனார். வாழ்த்தினார். விடை பெறுவதற்கு முன், ‘இந்தியாவுக்கு வாருங்கள்’ என்று அழைப்பு விடுத்தேன்.
“வருவதானால் உங்கள் Recording’ஐப் பார்ப்பதற்கு மட்டுமே வருவேன்” என்றவர் – எந்த மாதம் நன்றாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டு, அதன் பேரில் ஜனவரி மாதத்தில் சென்னை வருவதாக ஒப்புக்கொண்டார். அதற்கு முன் ஹாங்காங்கில் டிசம்பர் 5, 6 தேதிகளில் அவரை நான் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நானும் சம்மதித்து 2 மணி நேரம் அவருடன் அளவளாவுவதற்கு வாய்ப்பளித்ததற்காக நன்றி தெரிவித்து அனைவரும் விடை பெற்றுக்கொண்டோம்.
வீட்டுக்கு வெளியே வந்ததும் நண்பர்களின் மகிழ்ச்சி அளவில்லாமல் கரைபுரண்டது. அதற்குக் கரையாக நானிருந்து தடுத்துக்கொண்டேன்.
அவர்கள் சொன்னது: “ராஜா சார்..! உங்களுக்குத் தெரியாது சார்! விஷயம் இல்லாத ஆளாக இருந்திருந்தால் இவர்கள் உங்களுடன் பேசியிருக்கவே மாட்டார்கள். மாலையையும் கேஸட்டையும் வாங்கிக்கொண்டு "We will see some other time" என்று வழியனுப்பி வைத்திருப்பார்கள் சார். உங்களிடம் ஏதோ விஷயம் இருக்கு” என்றார்கள்.
நானும் உணர்ந்து கொண்டேன். ஓகோ! நம்மிடமும் ஏதோ விஷயம் இருக்கிறது என்று. ஆனால் என் மனசாட்சி இருக்கிறதே (முட்டாள்! முட்டாள்!.. பயங்கரச் சிரிப்பு, பைத்தியக்காரச் சிரிப்பு சிரிக்கிறது).
******************************************************************************************************************
”பால்நிலாப் பாதை”, “சங்கீதக் கனவுகள்”, “வழித்துணை” ‘இளையராஜாவின் சிந்தனைகள்” “வெட்டவெளிதனில் கொட்டிக்கிடக்குது” என ஐந்து பகுதிகளைக் கொண்ட இசைஞானியின் மொத்தத் தொகுதிதான்.. “யாருக்கு யார் எழுதுவது”. இசைஞானியின் ரசிகர்கள் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம், இதுபோன்ற இன்னும் பல அற்புதமான அனுபவங்களை உள்ளடக்கிய இசைஞானி எழுதிய “யாருக்கு யார் எழுதுவது” (பக்கங்கள்: 511, விலை: ரூ. 250/-) என்ற பொக்கிஷம் கிடைக்குமிடம்:
“கவிதா பப்ளிகேஷன்ஸ்”
தபால் பெட்டி எண்: 6123
8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார்
தி. நகர்., சென்னை 600 017
Paul Mauriat கேட்டு வியந்த இசைஞானியின் Mad mod mood fugue பற்றி மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும். நன்றி: நண்பர் Kamal.
அற்புதமான பதிவு. தகவல்களுக்கு நன்றி.
ReplyDeleteநன்றி! :-)
DeleteReally nice .. Thanks for sharing such an intersting facts about Isaigani .
ReplyDeleteவருகைக்கு நன்றி! :-)
DeleteThanks for sharing
ReplyDeleteநல்ல ஒரு அனுபவம்..ஒருவித காம்ப்ளெக்ஸ் உடைபடுவது போல்...உலகின் நமக்கான இசை அடையாளம் இசைஞானி
ReplyDeleteI thank you from the bottom of my heart.. It was amazing and wonderful to know about these stalwarts discussion in detail.. thank you once again.. for this great share sir..
ReplyDelete