Monday, September 27, 2010

வளையோசை

பாடல் : வளையோசை

படம் : சத்யா
பாடியவர்கள் : எஸ்.பி.பி., லதா மங்கேஷ்கர்
எழுதியவர் :
இசை : இசைஞானி

வளையோசை கலகலகலவென கவிதைகள் படிக்குது,
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது!
சில நேரம் சிலுசிலுசிலு என சிறகுகள் படபடத் துடிக்குது,
எங்கும் தேகம் கூசுது!
சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்!
கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்!

1. ஒரு காதல் கடிதம் விழி போடும்,
உன்னைக் காணும் சபலம் வரக் கூடும்!
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்,
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்!
கண்ணே என் கண் பட்ட காயம்,
கை வைக்கத் தானாக ஆறும்!
முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்,
செம்மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்! - வளையோசை

2. உன்னைக் காணாதுருகும் நொடி நேரம்,
பல மாதம் வருடம் என மாறும்!
நீங்காத ரீங்காரம் நான்தானே,
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே!
ராகங்கள் தாளங்கள் நூறு,
ராஜா உன் பேர் சொல்லும் பாரு!
சிந்தாமல் நின்றாடும் செந்தேனே,
சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில்தான்! – வளையோசை

‘விக்ரம்’ திரைப்படத்துக்குப் பின்னர் பத்மஸ்ரீ கமல்ஹாசனின் சொந்தத் தயாரிப்பில் வந்த படம் ‘சத்யா’. திரு. சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் இயக்குனராக அறிமுகமான இந்தப் படத்தின் Highlight, மொட்டைத்தலை முரட்டுக் கமல்ஹாசன் மற்றும் இசைஞானியின் ‘வளையோசை’ பாடல்!

இசைஞானியின் பல பாடல்கள் ஆக்ரோஷமான Violin-களின் அதிரடியான அட்டூழியத்துடன் ஆலங்கட்டி மழை போல் துவங்கி ஆனந்த அதிர்ச்சியூட்டும் (உதாரணம்:- ‘ராக்கம்மா கையத் தட்டு’ ‘பூமாலையே தோள் சேரவா?’ வகையறாக்கள்). அப்படி இல்லாமல் வானம் மெதுவாகக் கறுத்து, குளிர்ந்த காற்று வீசி, சாரல் அடித்து, அதன் பின்னர் மழை அடித்து ஊற்றி வெளுத்து வாங்கும் Style-ல் அமைந்த சில பாடல்களுள் ‘வளையோசையும்’ ஒன்று! கேட்க மிகவும் மென்மையாக, Melodious-ஆக இருப்பினும், எப்பொழுது துவங்கியது எப்பொழுது முடிந்தது என்றே தெரியாமல் ஒரு Fast Track-ல் ஓடும் பாடல் இது!

‘கலகல’ ‘குளுகுளு’ ‘சிலுசிலு’ என்று ஏகப்பட்ட இரட்டைக் கிளவிகளை உள்ளடக்கிய இந்தப் பாடலின் வரிகள், தமிழ் தெரிந்தவர்களுக்கே பாடச் சிரமமான ஒன்று! இந்த நிலையில் பாடலைப் பாட இசைஞானி தேர்வு செய்த பாடகி, இசைக்குயில் ‘லதா மங்கேஷ்கர்’! (எந்த அடிப்படையில் பாடகர்களைத் தேர்வு செய்கிறார் என்பது இசைஞானி மட்டுமே அறிந்த ரகசியம்!) இசைஞானியின் தேர்வை Justify செய்யும் விதமாக லதா மங்கேஷ்கரும் (ரொம்ப சுத்தமான தமிழ் உச்சரிப்பு இல்லையெனினும்) அற்புதமாகப் பாடி இருப்பார்! ஒவ்வொரு முறை இந்தப் பாடலைக் கேட்கும்பொழுதும் நான் மிகவும் ரசிப்பது ‘படபட துடிக்குது’ என்ற வரியின் ‘படபட’-வில், ஒரு நான்கு வயது மழலையின் கொஞ்சலை ஒத்த இசைக்குயிலின் உச்சரிப்பு! [இரட்டைக் கிளவி என்றதும் நினைவுக்கு வருகிறது. பள்ளியில் படிக்கும்பொழுது, தமிழ் இலக்கணத் தேர்வில், இரட்டைக் கிளவி என்றால் என்ன என்ற கேள்விக்கு, “அம்மாவின் அம்மாவும், அப்பாவின் அம்மாவும், ‘இரட்டைக் கிளவி’ (கிழவி?) எனப்படுவர்” என்று துடுக்காக பதில் எழுத, தமிழ் அம்மா என் ‘பின்புறத்தை’ பிரம்பால் பதம் பார்த்துப் பழுக்க வைத்தது தனிக்கதை].

பாடல் முழுவதும் மென்மையாக பயணிக்கும் Rhythm Pattern-ல், ஒவ்வொரு Bar-ன் துவக்கத்திலும் ஒலிக்கும் ஒரு ‘க்ளொக்’ ‘க்ளொக்’ ‘க்ளக்’ சத்தம் (Triple Congo?), ஒரு காட்டுக் குதிரையின் பாய்ச்சலுடன் செல்லும் பாடலின் ஓட்டத்தைப், பிடரி மயிரைப் பிடித்து இழுத்து, நிறுத்தி நிறுத்தி அழகூட்டுகிறது.

‘வான் மேகம்’, ‘ஓஹோ மேகம் வந்ததோ?’ போன்று ‘வளையோசை’ ஒரு மழைப் பாடல் இல்லையெனினும், இந்தப் பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம், ஒரு ‘மழைக்கால ஈரம்’ மனதில் பச்சக்கென்று வந்து ஒட்டிக் கொள்ளும். முதல் Interlude-ன் துவக்கத்தில் ஒலிக்கும் அந்த ‘Tu ku Tu ku Tu ku Tu ku’ புல்லாங்குழலைக் கேளுங்கள்! மழை முடிந்து போன முன்னிரவில் ஒலிக்கும் தவளையின் குரல் போல..

‘காதல் ரசம்’ சொட்டும் இப்படிப்பட்ட பாடலில் எஸ்.பி.பி.யின் ‘கள்ளச் சிரிப்பு’ இல்லாவிட்டால் எப்படி? சரணத்தில் ‘சபலம் வரக் கூடும்’ வரியில் தன் கடமையைச் செவ்வனே செய்திருப்பார் ‘பாடும் நிலா’!

இரண்டாவது Interlude-ன் துவக்கத்தில் Bass Guitar-ன் தனி ஆவர்த்தனத்திற்குப் பின் வரும் எஸ்.பி.பி.-லதா-வின் ‘லாலலாலா..’ Vocal Harmony, Astounding! இந்த Interlude-ன் முடிவில் இசையின் எல்லையைத் தொட்டுப் பார்த்துவிடத் துடிக்கும் ஆக்ரோஷத்துடன் பாயும் வெறி கொண்ட Violin-களின் அத்துமீறல், அதகளம்!

திரையில் பாடல் முழுவதும் அமலாவுடன் கலைஞானி செய்யும் எல்லை மீறாத ‘காதல் குறும்புகள்’, அட்டகாசம்! (அமலாவின் புடவைத்தலைப்பு காற்றில் பறந்து முகம் மூட, அதன் மேல் கமல் தரும் முத்தம், கவிதை!) காதலியுடன் கேட்க வேண்டிய, அதைவிட, பார்க்க வேண்டிய பாடல்! 

‘வளையோசை’ பாடல் பிறந்த கதை பற்றிய ஒரு சுவையான செய்தியை சமீபத்தில் விகடனில் ‘Nothing But Wind’ Concert-ன் விமர்சனத்தில் படிக்க நேர்ந்தது. ‘Nothing But Wind’ இசைப்பேழைக்கு என இசைஞானி இயற்றிய ஒரு இசைக் கோர்வை, பேழையில் சேர்க்க முடியாமல் தனித்து இருந்திருக்கிறது. அந்த இசைக் கோர்வையைக் கேட்ட பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள், ‘அடடே! அதற்கென்ன? நம்ம படத்தில் அதை சேர்த்துகிட்டாப் போச்சு!’ என்று உரிமையுடன் கேட்டு எடுத்துக் கொண்டதுதான் ‘வளையோசை’ பாடலின் இசைவடிவமாம்!

இந்தப் பாடலுக்கு Keyboard இசைத்தது திரு. முரளி அவர்கள். [இசையமைப்பாளர் திரு. தேவா அவர்களின் சகோதரர்! சபேஷ்-முரளி இரட்டையர்களுள் ஒருவர்]. சமீபத்தில் ஜெயா டி.வி.யின் ‘மனதோடு மனோ’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், இசைஞானியிடம் இசைக்கச் செல்வது ஒரு Exam போவது போல என்றும், இந்தப் பாடலுக்கு இசைஞானி கொடுத்த Notations-ஐ வாசிக்க மிகவும் சிரமப்பட்டதாகவும் தெரிவித்தார். பாடலின் ராகம் சிந்து பைரவி [ S R2 G2 M1 G2 P D1 N2 S
N2 D1 P M1 G2 R1 S N2 S ].

இந்தக் கட்டுரையைத் தட்டச்சு செய்யத் துவங்கி இன்றுடன் ஒன்பது நாட்கள் ஆகின்றன. ஒன்பது நாட்களாகக் காலை முதல் இரவு வரை Media Player Repeat Mode-ல் ‘வளையோசை’ மட்டுமே பருகிக் கொண்டிருக்கிறேன். ஒரு சொட்டுக் கூடத் திகட்டவில்லை. ஒரு ‘கால இயந்திரத்தில்’ ஏறி மீண்டும் விடலைப் பருவம் சென்று ‘வளையோசை’ கேட்டுக்கொண்டே காதலிக்கலாம் போல இருக்கிறது. “ராகங்கள் தாளங்கள் நூறு, ராஜா உன் பேர் சொல்லும் பாரு!” இசைஞானிக்கென்றே எழுதப்பட்ட இந்த வரிகள் அத்தனை பொருத்தம்!

Monday, September 13, 2010

பூமாலையே தோள் சேரவா?

பாடல் : பூமாலையே தோள் சேரவா?

படம் : பகல் நிலவு
பாடியவர்கள் : இசைஞானி, எஸ். ஜானகி
எழுதியவர் : வைரமுத்து
இசை : இசைஞானி

பூமாலையே தோள் சேரவா?
பூமாலையே [ஏங்கும் இரு தோள்] தோள் சேரவா?
ஏங்கும் இரு இளைய மனது [இளைய மனது]
இணையும் பொழுது [இணையும் பொழுது]
இளைய மனது [தீம்தன தீம்தன]
இணையும் பொழுது [தீம்தன தீம்தன னா..ஆ…]
பூஜை மணியோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே!
பூமாலையே [ஏங்கும் இரு தோள்] தோள் சேரவா?
[வாசம் வரும் பூ..] பூமாலையே [ஏங்கும் இரு தோள்]
தோள் சேரவா? [வாசம் வரும் பூ]

1. நான் உனை நினைக்காத நாளில்லையே
தேனினைத் தீண்டாத பூ இல்லையே [ந..ன..னா..]
நான் உனை நினைக்காத நாளில்லையே
[என்னை உனக்கென்று கொடுத்தேன்]
தேனினைத் தீண்டாத பூ இல்லையே
[ஏங்கும் இளங்காதல் மயில் நான்]
தேன் துளி பூ வாயில் [ல..ல..லா..]
பூ விழி மான் சாயல் [ல..ல..லா..]
தேன் துளி பூ வாயில் [ல..ல..லா..]
பூ விழி மான் சாயல்
கன்னி எழுதும் வண்ணம் முழுதும்,
வந்து தழுவும் ஜென்மம் முழுதும்!
கன்னி எழுதும் வண்ணம் முழுதும்,
வந்து தழுவும் ஜென்மம் முழுதும்!
நாளும் பிரியாமல் காலம் தெரியாமல்,
கலையெலாம் பழகுவோம் அனுதினம்! – பூமாலையே

2. [த..ல..ல.. ல..ல..லா]
கோடையில் வாடாத கோவில் புறா [ல..ல..லா]
காமனைக் காணாமல் காணும் கனா [ல..ல..லா]
கோடையில் வாடாத கோயில் புறா!
[ராவில் தூங்காதே ஏங்க]
காமனைக் காணாமல் காணும் கனா!
[நாளும் மனம்போகும் எங்கோ]
விழிகளும் மூடாது [ல..ல..லா] விடிந்திடக் கூடாது [ல..ல..லா]
விழிகளும் மூடாது [ல..ல..லா] விடிந்திடக் கூடாது!
கன்னி இதயம் என்றும் உதயம்,
இன்று தெரியும் இன்பம் புரியும்!
கன்னி இதயம் என்றும் உதயம்,
இன்று தெரியும் இன்பம் புரியும்!
காற்று சுதி மீட்டக் காலம் நதி கூட்ட,
கனவுகள் எதிர்வரும் அணுகுவோம்! – பூமாலையே!

இசைஞானி - எஸ்.ஜானகி இணையின் பல்வேறு ஹிட் பாடல்களின் மகுடம் இந்தப் ‘பூமாலையே’! 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரம் முறைக்கு மேல் கேட்டிருப்பேன் இந்தப் பாடலை. இருப்பினும் வரி வரியாகக் கேட்டு, அடைப்புக் குறிகளுக்குள் தட்டச்சு செய்து முடிப்பதற்குள், தலை சுற்றி விட்டது! இந்தப் பாடலுக்கு மெட்டமைத்து, கவிஞருக்கு Situation சொல்லி, வரிகளில் வரும் இரு குரல்களின் பின்னலை விளக்கி, பொருத்தமான வார்த்தைகளை வாங்குவதற்கு இசைஞானி செய்திருக்கக் கூடிய பகீரதப் பிரயத்தனங்களை எண்ணிப் பார்த்தால், மயக்கம் வருகிறது. ஆண்-பெண் Overlapping style குரல்களும், மின்னல் வேக Strings-களும், எக்கச்சக்க Counterpoint-களும், புயல் வேகத்தில் துவங்கி முடியும் பாடலில், எதை எடுப்பது, எதை விடுப்பது என்று கேட்பவர் திணறும் அளவிற்கு, Orchestral Ornamentation, Counterpoint கதம்பம், பாடல் முழுவதும்! இவ்வளவு மெனக்கெட இந்தக் காலத்தில் யாருக்குப் பொறுமையோ, நேரமோ, அதைவிடத் தேடலோ இருக்கப் போகிறது?

1980-களில் நான் பள்ளிக்குக் கிளம்பும் காலைப் பொழுதுகள்.. .. எங்கள் வீட்டில் காலை 6.30 முதல், எங்களுடன் சேர்ந்து கிளம்பும் குடும்பத்தின் மற்றொரு உறுப்பினர், தாத்தாவின் ட்ரான்ஸிஸ்டரில் ஒலிக்கும் ‘இலங்கை வானொலி’. வீட்டில் அனைவரும் அரக்கப் பரக்கக் கிளம்பும் அந்த காலைப் பொழுதுகளின் ஊடே, பல அற்புதமான பாடல்களின் அறிமுகம் வானொலி மூலமாகத்தான் எனக்குக் கிடைக்கப் பெற்றது. திரை இசைப் பாடல்களைப் போலவே வானொலியில் ஒலிபரப்பாகும், “Ride LML Vespa! Just Ride one and see”, ‘தரணி புகழும் பரணி பட்டு சென்டர்”, “பிறந்த நாள் இன்று பிறந்த நாள்! நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்! Happy Birthday to you!” போன்ற விளம்பரங்கள் இன்னும் உட்செவியில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன! ஒரு Cassette Player கூட வீட்டில் luxury-ஆக எண்ணப்பட்ட அன்றைய தினங்களில், ‘பூமாலையே’ பாடலின் அறிமுகமும் வானொலி மூலமாகத்தான் எனக்குக் கிடைத்தது.

பாடலின் Prelude-ஏ, ‘வாத்தியங்களையும் குரல்களையும் பின்னிப் பிணைந்து என்ன செய்யப் போகிறேன் பார்?’ என்று இசைஞானியின் எண்ணங்களை எழுமுரசு கொட்டி அறிவித்து விடும்! அத்தனை Strings-களும் இணைந்து பாடல் துவங்கும் முன்னர் எடுக்கும் கோலம், “இசை சுனாமி” என்றுதான் சொல்ல வேண்டும்! (Titan Watches விளம்பரத்தில் ஒலிக்கும் Violin Piece-க்கு ‘பூமாலையே’ Prelude, Inspiration-ஆக இருந்திருக்க நிறைய வாய்ப்பிருக்கிறது என்று அடிக்கடி எனக்குத் தோன்றும்). அடைமழை போல் அடித்து ஓயும் Violin Counterpoint-களின் முடிவில் Keyboard-ம், புல்லாங்குழலும், இசைஞானி தங்களுக்கு இட்ட பணியைச் செவ்வனே செய்து, Relay Race போல, பொறுப்பை Sitar-இடமும் Bass Guitar-இடமும் ஒப்படைக்க, அடுத்த இரண்டு Bar-களுக்கு இந்த இரண்டு வாத்தியங்களும் கலந்து கட்டி செய்யும் சேட்டையின் முடிவில், Flute மறுபடி இணைந்து பாடலின் துவக்கத்தைப் பறைசாற்றுகிறது. இந்தப் புள்ளியில் ஒலிக்கும் Bass Guitar-ன் மூன்று ஸ்வரங்கள், ‘பூமாலை’-யை அள்ளி ஜானகி அம்மாவின் குரலில் கோர்க்கும் அழகு, Tremendous!

பாடலின் பல்லவியில் இசைஞானி உபயோகித்திருக்கும் Rhythm Pattern அவருடைய Favourite போலும்! பல பாடல்களில், பல்வேறு Tempo-க்களில் சற்றேறக்குறைய இதே Pattern-ஐ அவர் பயன்படுத்தி இருக்கிறார். பட்டியலிட்டால் இளைய நிலா (பயணங்கள் முடிவதில்லை), கேளடி கண்மணி (புதுப்புது அர்த்தங்கள்), மீனம்மா (ராஜாதி ராஜா), ஒரு காதல் என்பது (சின்னத்தம்பி பெரியதம்பி), காதல் கவிதைகள் படித்திடும் (கோபுர வாசலிலே), ஆகாய கங்கை (தர்ம யுத்தம்), அழகு ஆயிரம் (உல்லாசப் பறவைகள்), தேவதை இளம் தேவி (ஆயிரம் நிலவே வா), குருவாயூரப்பா (கேளடி கண்மணி), எனது விழி வழி மேலே (சொல்லத் துடிக்குது மனசு), வா வா அன்பே அன்பே, தூங்காத விழிகள் ரெண்டு (அக்னி நட்சத்திரம்), சங்கீத மேகம் (உதய கீதம்), பட்டுப் பூவே (செம்பருத்தி)…. என்று என்று இந்தப்பெரிய list நீண்டுகொண்டே செல்லும். இந்த Rhythm Pattern-ல் அவர் இசையமைத்த அத்தனை பாடல்களும் இன்றும் மின்னும் வைரங்கள்!

முதல் Interlude-ல் Flute Piece-க்குப் பின்னர் வரும் Sitar Piece-ஐக் கேட்பவர்களுக்கு, சரணத்தில் இசைஞானி Drums-ஐ தூக்கித் தூர வைத்து விட்டு, தபலாவைத் எடுக்கப் போகிறார் என்று கணிக்கக் கூட முடியாது. Drums உடன் இணைந்து அப்படி ஒரு வேகத்தில் ஓடும் Sitar Piece-க்குப் பின்னர், சரணத்தில் தபலாவின் தோற்றம் ஒரு Surprise Transition!

இரண்டாவது Interlude-ல் இசைஞானி உபயோகப்படுத்தி இருக்கும் Keybaord Piece-ஐக் கேட்கும் பொழுதெல்லாம் தூக்கி எறியப்பட்ட ஒரு Rubber Ball தரையில் விழுந்து, எழுந்து, விழுந்து, பின் உயரம் குறைவாக எழுந்து, மீண்டும் விழுந்து, எழுந்து, பின் விழுந்து தரையில் உருண்டு ஓடும் ஒரு Peculiar Feel-ஐக் கொடுக்கும்.

இரண்டாவது சரணத்தைப் பாடுவதற்கு வசதியாக துவக்கத்தில் ‘தலலலலலா..’ என்று இசைஞானி எடுத்துக் கொடுப்பது போல, முதல் சரணத்தில் ஏன் ‘நானுனை நினைக்காத’ என்று அவர் துவங்குவதற்கு முன், எஸ்.ஜானகி எடுத்துத் தரவில்லை? பி.பி.சி-க்கு இசைஞானி அளித்த பேட்டியில் ‘இசை என்பது ஒரு பட்டாம்பூச்சி பறப்பதைப் போன்றது! அது ஒரு நிகழ்வு! MUSIC SHOULD HAPPEN!’ என்று குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்டதைப் போலவே இரண்டாவது சரணம் துவங்கும் முன்னர் இசைஞானி பாடும் ‘தலலலலலா..’ ரொம்ப deliberate ஆக இல்லாமல், ஒரு அழகிய நிகழ்வாகவே இருக்கும்.

நான் கல்லூரி இசைக்குழுவில் இருந்த பொழுது, ‘பூமாலையே’ பாடலை இசைக்கலாம் என்று நினைத்து குழுவில் இருக்கும் பாடகர்கள், பாடகி, Guitarist, Keyboardist, Tablist, Drummer உட்பட அனைவரும் இணைந்து பாடலைக் கேட்க அமர்ந்தோம். (எந்த ஒரு பாடலையும் இசைப்பதற்குத் தேர்ந்தெடுக்கும் முன் இப்படி அனைவரும் ஒன்றாக அமர்ந்து பாடலைக் கேட்டு, இசைக்க முடியுமா முடியாதா, என்ன என்ன Instruments தேவைப்படும்? சரியாக வருமா? என்று சாதக பாதகங்களை அலசுவது வழக்கம்). பாடல் ஒலித்து முடிந்தது. எங்கள் குழுத்தலைவர் (Guitarist) எழுந்தார். Tape Recorder-ன் அருகில் சென்று, அதைத் தொட்டுக் கைகளைத் தலைக்கு மேல் தூக்கி ஒரு பெரிய கும்பிடு ஒன்றைப் போட்டார்! ‘இந்த Orchestration-ஐ எப்படிடா Reproduce பண்ண முடியும்? இந்தப் பாட்டை நாம வாசிச்சி கண்டிப்பா கெடுக்கணுமா?’ என்று கேட்டு விட்டுக் கிளம்பி விட்டார். மிகப் பெரிய மெல்லிசைக் குழுவினர் கூட இந்தப் பாடலை அதிகம் இசைத்து நான் கேட்டதில்லை! அது சரி! இறைவனின் எல்லா படைப்புகளையும் நகலெடுக்க முடியுமா என்ன? இனி C Minor Scale-ல் அமைந்த இந்தப் பாடலின் Chords Progression.

/Cm பூமாலையே தோள் சேரவா?
ஏங்கும் இரு /E♭ இளைய மனது /B♭ [இளைய மனது]
/E♭ இணையும் பொழுது /B♭ [இணையும் பொழுது]
/E♭ இளைய மனது /B♭ [தீம்தன தீம்தன]
/E♭ இணையும் பொழுது /B♭ [தீம்தன தீம்தன]
/Cm பூஜை மணியோசை பூவை மனதாசை
/Fm புதியதோர் உலகிலே பறந்ததே!

1. /E♭ நான் உனை நினைக்காத நாளில்லையே
/E♭ தேனினைத் தீண்டாத பூ இல்லையே
/B♭ தேன் துளி பூ வாயில்
/E♭ பூ விழி மான் சாயல்
/Cm கன்னி எழுதும் /Fm வண்ணம் முழுதும்,
/B♭ வந்து தழுவும் /E♭ ஜென்மம் முழுதும்!
/Cm நாளும் பிரியாமல் காலம் தெரியாமல்,
/Fm கலையெலாம் பழகுவோம் அனுதினம்!

‘பகல் நிலவு’ – இயக்குனர் மணிரத்னத்தின் முதல் தமிழ் படம். ‘இந்தக் காலத்தில் எந்த முன்னணி இசையமைப்பாளராவது ஒரு புதிய இயக்குனரின் படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொள்வாரா? எண்பதுகளில் இசைஞானி பெரிய இயக்குனரின் படம் என்றோ, பெரிய நடிகர்களின் படம் என்றோ, பெரிய Banner-ன் படம் என்றோ தேர்ந்தெடுத்து, இசையமைத்துத் தந்ததில்லை. தனது திறமையை மட்டுமே நம்பி நிறைய சுமாரான படங்களையும் ஓட வைத்திருக்கிறார்! நிறைய புதிய இயக்குனர்களுக்கு வாழ்வளித்திருக்கிறார்’ என்று இசைஞானியைப் பற்றி வலையில் பரவலாக உலவும் கருத்தை வழிமொழிகிறேன்.

இசைஞானியின் குரல் முரளி, ராமராஜன், ராஜ்கிரண் போன்ற வெகு சிலருக்கு மட்டுமே மிகவும் பொருத்தமாக இருக்கும். அவர்களுள் இசைஞானியின் குரலுக்குத் தகுந்த வாயசைப்பையும், அவர் குரலில் நிறைந்திருக்கும் உணர்ச்சிகளையும் திரையில் காட்டி நடித்ததில் சமீபத்தில் மறைந்த நடிகர் முரளி முதன்மையானவர். அனைத்து ‘இசைஞானி பக்தர்கள்’ சார்பில் அவருக்கு இந்தக் கட்டுரை சமர்ப்பணம்!!
 Monday, September 6, 2010

பனி விழும் மலர்வனம்

பாடல் : பனி விழும் மலர்வனம்

படம் : நினைவெல்லாம் நித்யா
பாடியவர்கள் : எஸ்.பி.பி.
எழுதியவர் : வைரமுத்து
இசை : இசைஞானி

பனி விழும் மலர்வனம்! உன் பார்வை ஒருவரம்!
பனி விழும் மலர்வனம்! உன் பார்வை ஒருவரம்!
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்!
ஹே ஹே! இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்!

1. சேலை மூடும் இளஞ்சோலை,
மாலை சூடும் மலர்மாலை! (2)
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும்!
ஹே ஹே! இளமையின் கனவுகள், விழியோரம் துளிர்விடும்!
கைகள் இடைதனில் நெளிகையில், இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிறுத்து கண்கள் மூடும்! – பனி விழும்

2. காமன் கோயில் சிறைவாசம்,
காலை எழுந்தால் பரிகாசம்! (2)
தழுவிடும் பொழுதிலே, இடம் மாறும் இதயமே!
ஹே ஹே! வியர்வையின் மழையிலே, பயிராகும் பருவமே!
ஆடும் இலைகளில் வழிகிற, நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும் வானம் பாடும்! – பனி விழும்

‘ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்’, ‘நீதானே எந்தன் பொன் வசந்தம்’ போன்ற அற்புதமான பாடல்கள் ‘நினைவெல்லாம் நித்யா’ படத்தில் இடம் பெற்றபோதும், ‘பனி விழும் மலர்வனம்’, இவற்றுள் இருந்து தனித்து ஒளிரும் வைரம். காரணம் இளம் எஸ்.பி.பி.-யின் மிக மெல்லிய குரல் மற்றும் இந்தப் பாடலின் ஆர்ப்பாட்டமற்ற, அரவமற்ற இசையமைப்பு!

மெல்லிய Guitar கிள்ளலுடன் துவங்கும் பல்லவியின் துவக்கத்திலேயே ஒரு யோகா வகுப்பில் அதிகாலை வந்து அமர்ந்து விட்டதைப் போல, மனதில் ஒரு ‘அமைதி’ வந்து நிரம்பும்! இசைக்கருவிகளின் நிறைந்த அலங்காரங்கள் எதுவுமின்றி பல்லவியை ஒரு முறை எஸ்.பி.பி. பாடி ‘தடுமாறும் கனிமரம்’ என்று முடிக்க, அதன் பின்னர் துவங்கும் Guitar Prelude செவிகளுக்கு ஒத்தடம்! பின்னர் மீண்டும் பல்லவியை எஸ்.பி.பி. பாடும்பொழுது, ‘மலர்வனம்’, ‘ஒரு வரம்’ ஆகிய பதங்களின் முடிவில், தாயின் அரவணைப்பிற்கு அழும் குழந்தையின் குரலை ஒத்த ஒரு ஏக்கம் நிறைந்த Violin Bit-ல், இசைஞானியின் Touch!

முதல் Interlude-ல் Rhythm Guitar, Bass Guitar, Violin, Drums, Keyboard, Flute, வீணை, பிற Strings Ensemble-கள் பத்தாதென்று கடைசி 4 Bar-களுக்கு முன் வந்து இணையும் மெல்லிய தபலா, சரணத்தில், ‘இளஞ்சோலை’-யின் பின்னர் வீணை, ‘மலர்மாலை’-யின் பிறகு, புல்லாங்குழல், அடுத்த இரண்டு வரிகளுக்கு Drums-உடன் திருட்டுத்தனமாக வந்து ஒற்றும் Congo (Bongo?), கடைசி இரண்டு வரிகளில் ‘கைகள் இடைதனில்’ நெளியத்துவங்கியதும், எஸ்.பி.பி.யின் உருண்டு நெளியும் குரலுக்கு ஏற்ப Drums தேய்ந்து.. உருட்டப்படும் மிருதங்கம், இவ்வளவு சீரிய வித்தைகளும், வாங்கிய பணத்திற்கு இசையமைக்காமல், இசையைக் காதலிக்கும் ஒரு இசைக் காதலனால் மட்டுமே முடிந்த ஒரு அற்புதம்!!

இரண்டாவது Interlude, Guitar, Flute மற்றும் வயலின்களின் ஜுகல்பந்தி! ஒரு செயலை முழுமையடையச் செய்வதற்கு தமிழில் ‘முத்தாய்ப்பு’ என்கிற அழகான வார்த்தை உண்டு! அந்த வார்த்தைக்கு அர்த்தம், இந்த இரண்டாவது Interlude-ன் முடிவில் ஒலிக்கும் Flute மற்றும் Guitar Bit! (வீணையும் ஒலிக்கிறதோ?)! தொலைக்காட்சியில் ‘ஆதித்யா’, ‘சிரிப்பொலி’ போன்ற சேனல்கள் வராத பட்சத்தில், உங்கள் CD Player-ல் இந்தப் பாடலின் Video-வை Play செய்து, இந்த இரண்டாவது Interlude-க்கு, கார்த்திக்கும், கதாநாயகியும் (இவர் பெயர் என்ன?) இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு, இடுப்பை ஆட்டி வளைந்து நெளிந்து போடும் ஆட்டத்தைப் (?) பார்த்தால், புரையேறும் வரை சிரித்து மகிழலாம்!

பாடலை யார் வேண்டுமானாலும் இசைஞானி சொல்கிறபடி பாட முயற்சி எடுக்கலாம், அல்லது பாடலாம்! ஆனால் இரண்டாவது சரணத்தின் இரண்டாம் வரியில், ‘காலை எழுந்தால்’-க்குப் பின்னர் கேட்கும் ஒரு அலட்சியமான Mischievous Giggling-கிற்கு, எஸ்.பி.பி.-யை மட்டுமே அழைத்து வந்து பாட வைக்க வேண்டும்! ‘ஆடும் இலைகளில் வழிகிற, நிலவொளி இருவிழி, மழையில் நனைந்து மகிழும்’.. கவிப்பேரரசின் இந்த வரிகள், ‘லகர’, ‘ளகர’ ழகர’ உச்சரிப்புகள் வராத பாடகர்களுக்கு சிறந்த நாப்பயிற்சி!

‘(இரவில்) எரியும் விளக்கு சிறுத்துக் கண்கள் மூடும், (பின்னர்) காமன் கோயில் சிறைவாசம், (அதன் பின்) காலை எழுந்தால் பரிகாசம்’. ‘காமத்துப் பால்’ சங்கதிகளை, இவ்வளவு கண்ணியமாக, பிற விஷயங்களைக் கேட்பவரின் கற்பனைக்கே விட்டுவிட்ட வரிகளின் நாகரிகம், ‘வாழப்பழத் தோப்பில Volley Ball ஆடலாமா?’ Era-வில் செத்துப்போனது துயரம்!

“முதலில் ‘பனி விழும் மலர்வனம்’ போன்ற ஒரு Composition-க்கு நிகரான ஒரு பாடலைச் சுட்டிக் காட்டுங்கள்! அதன் பின்னர் இசைஞானியை மிஞ்சக் கூடிய ஒரு இசையமைப்பாளரைப் பற்றிப் பேசலாம்”. இது, திருமதி. சுஹாசினி மணிரத்னம் அவர்களின் இந்தப் பாடலைக் குறித்த பார்வை! பாடலின் ராகம் ‘நாட்டை’! ‘கம்பீரநாட்டையா?’ ‘சலநாட்டையா?’ போன்ற அலசல்கள் என்னைப் போன்ற கர்னாடக இசைக் ‘கைநாட்டை’-களுக்கு (கைநாட்டு?) அல்ல என்பதால் இசை நுணுக்கம் அறிந்தவர்கள் பின்னூட்டத்தில் அலசவும்! அதே போல், D Major Scale-ல் அமைந்த இந்தப் பாடலின் Chords Progression-ஐக் கிளறிய பொழுது, சம்பந்தம் இல்லாமல் தலைகாட்டும் Chord F-ன் அழகு, ‘நாட்டை’-யின் Characteristic Features-களுள் ஒன்றா என்பதைக் குறித்தும் விஷயம் தெரிந்தவர்கள் விளக்கினால் நன்று! D Major Scale-ல் உள்ள இசைஞானியின் வேறு எந்தப் பாடலின் Chords Progression-லும் இந்த அழகான F Chord Shift, இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை! இனி Chords Progression:

/D பனி விழும் மலர்வனம்! உன் /D Sus 4 பார்வை ஒருவரம்!
/D பனி விழும் மலர்வனம்! உன் /D M 7 பார்வை ஒருவரம்!
/G இனிவரும் முனிவ /D ரும் தடு /F மாறும் கனிம /D ரம்!
/F ஹே /D ஹே!
/G இனிவரும் முனிவ /D ரும் தடு /F மாறும் கனிம /D ரம்!

1. /D சேலை மூடும் /F இளஞ்சோ /D லை,
/D மாலை சூடும் /F மலர்மா /D லை! (2)
/D இருபது நிலவு /F#m கள் நக /F மெங்கும் ஒளிவி /D டும்!
/F ஹே /F#m ஹே!
/D இளமையின் கனவு /F#m கள், விழி /F யோரம் துளிர்வி /D டும்!
/D Sus 4 (7) கைகள் இடைதனில் நெளிகையில்,
/D Sus 4 (7) இடைவெளி குறைகையில்
எரியும் /G விளக்கு /D சிறுத்து /F கண்கள் மூடும்! – /D பனி விழும்

Keyboard Chords, இணைக்கப் பட்டுள்ளன. கொஞ்ச நாள் முன் வரை ‘பார்வை ஒரு வரம்’ பகுதியில் G Chord Apply செய்து கொண்டிருந்தேன். சமீபத்தில் தான் Suspended Chords-களின் Theory குறித்தும், அழகு குறித்தும் கொஞ்சம் தெரிய வந்தது! (நன்றி! இனிய நண்பர் இசையமைப்பாளர் திரு. ப்ரஷான் ஜெயதீபம் அவர்கள்). ‘பார்வை ஒரு வரத்தில்’ D Sus 4-ன் application அவ்வளவு துல்லியம், ரம்மியம்!!

இப்படி இசைஞானியின் எந்தப் பாடலிலும் உள்ள Chords Application-ஐ நோண்டிக் கொண்டிருந்தால், மேலும் மேலும் Advanced Chords புலப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். ஏனெனில் இப்படிப்பட்ட Composition-களைக் கேட்டால், இனிவரும் எந்த இசை மேதையும் தடுமாறும் கனிமரம்தான் இசைஞானி!