Monday, September 13, 2010

பூமாலையே தோள் சேரவா?

பாடல் : பூமாலையே தோள் சேரவா?

படம் : பகல் நிலவு
பாடியவர்கள் : இசைஞானி, எஸ். ஜானகி
எழுதியவர் : வைரமுத்து
இசை : இசைஞானி

பூமாலையே தோள் சேரவா?
பூமாலையே [ஏங்கும் இரு தோள்] தோள் சேரவா?
ஏங்கும் இரு இளைய மனது [இளைய மனது]
இணையும் பொழுது [இணையும் பொழுது]
இளைய மனது [தீம்தன தீம்தன]
இணையும் பொழுது [தீம்தன தீம்தன னா..ஆ…]
பூஜை மணியோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே!
பூமாலையே [ஏங்கும் இரு தோள்] தோள் சேரவா?
[வாசம் வரும் பூ..] பூமாலையே [ஏங்கும் இரு தோள்]
தோள் சேரவா? [வாசம் வரும் பூ]

1. நான் உனை நினைக்காத நாளில்லையே
தேனினைத் தீண்டாத பூ இல்லையே [ந..ன..னா..]
நான் உனை நினைக்காத நாளில்லையே
[என்னை உனக்கென்று கொடுத்தேன்]
தேனினைத் தீண்டாத பூ இல்லையே
[ஏங்கும் இளங்காதல் மயில் நான்]
தேன் துளி பூ வாயில் [ல..ல..லா..]
பூ விழி மான் சாயல் [ல..ல..லா..]
தேன் துளி பூ வாயில் [ல..ல..லா..]
பூ விழி மான் சாயல்
கன்னி எழுதும் வண்ணம் முழுதும்,
வந்து தழுவும் ஜென்மம் முழுதும்!
கன்னி எழுதும் வண்ணம் முழுதும்,
வந்து தழுவும் ஜென்மம் முழுதும்!
நாளும் பிரியாமல் காலம் தெரியாமல்,
கலையெலாம் பழகுவோம் அனுதினம்! – பூமாலையே

2. [த..ல..ல.. ல..ல..லா]
கோடையில் வாடாத கோவில் புறா [ல..ல..லா]
காமனைக் காணாமல் காணும் கனா [ல..ல..லா]
கோடையில் வாடாத கோயில் புறா!
[ராவில் தூங்காதே ஏங்க]
காமனைக் காணாமல் காணும் கனா!
[நாளும் மனம்போகும் எங்கோ]
விழிகளும் மூடாது [ல..ல..லா] விடிந்திடக் கூடாது [ல..ல..லா]
விழிகளும் மூடாது [ல..ல..லா] விடிந்திடக் கூடாது!
கன்னி இதயம் என்றும் உதயம்,
இன்று தெரியும் இன்பம் புரியும்!
கன்னி இதயம் என்றும் உதயம்,
இன்று தெரியும் இன்பம் புரியும்!
காற்று சுதி மீட்டக் காலம் நதி கூட்ட,
கனவுகள் எதிர்வரும் அணுகுவோம்! – பூமாலையே!

இசைஞானி - எஸ்.ஜானகி இணையின் பல்வேறு ஹிட் பாடல்களின் மகுடம் இந்தப் ‘பூமாலையே’! 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரம் முறைக்கு மேல் கேட்டிருப்பேன் இந்தப் பாடலை. இருப்பினும் வரி வரியாகக் கேட்டு, அடைப்புக் குறிகளுக்குள் தட்டச்சு செய்து முடிப்பதற்குள், தலை சுற்றி விட்டது! இந்தப் பாடலுக்கு மெட்டமைத்து, கவிஞருக்கு Situation சொல்லி, வரிகளில் வரும் இரு குரல்களின் பின்னலை விளக்கி, பொருத்தமான வார்த்தைகளை வாங்குவதற்கு இசைஞானி செய்திருக்கக் கூடிய பகீரதப் பிரயத்தனங்களை எண்ணிப் பார்த்தால், மயக்கம் வருகிறது. ஆண்-பெண் Overlapping style குரல்களும், மின்னல் வேக Strings-களும், எக்கச்சக்க Counterpoint-களும், புயல் வேகத்தில் துவங்கி முடியும் பாடலில், எதை எடுப்பது, எதை விடுப்பது என்று கேட்பவர் திணறும் அளவிற்கு, Orchestral Ornamentation, Counterpoint கதம்பம், பாடல் முழுவதும்! இவ்வளவு மெனக்கெட இந்தக் காலத்தில் யாருக்குப் பொறுமையோ, நேரமோ, அதைவிடத் தேடலோ இருக்கப் போகிறது?

1980-களில் நான் பள்ளிக்குக் கிளம்பும் காலைப் பொழுதுகள்.. .. எங்கள் வீட்டில் காலை 6.30 முதல், எங்களுடன் சேர்ந்து கிளம்பும் குடும்பத்தின் மற்றொரு உறுப்பினர், தாத்தாவின் ட்ரான்ஸிஸ்டரில் ஒலிக்கும் ‘இலங்கை வானொலி’. வீட்டில் அனைவரும் அரக்கப் பரக்கக் கிளம்பும் அந்த காலைப் பொழுதுகளின் ஊடே, பல அற்புதமான பாடல்களின் அறிமுகம் வானொலி மூலமாகத்தான் எனக்குக் கிடைக்கப் பெற்றது. திரை இசைப் பாடல்களைப் போலவே வானொலியில் ஒலிபரப்பாகும், “Ride LML Vespa! Just Ride one and see”, ‘தரணி புகழும் பரணி பட்டு சென்டர்”, “பிறந்த நாள் இன்று பிறந்த நாள்! நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்! Happy Birthday to you!” போன்ற விளம்பரங்கள் இன்னும் உட்செவியில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன! ஒரு Cassette Player கூட வீட்டில் luxury-ஆக எண்ணப்பட்ட அன்றைய தினங்களில், ‘பூமாலையே’ பாடலின் அறிமுகமும் வானொலி மூலமாகத்தான் எனக்குக் கிடைத்தது.

பாடலின் Prelude-ஏ, ‘வாத்தியங்களையும் குரல்களையும் பின்னிப் பிணைந்து என்ன செய்யப் போகிறேன் பார்?’ என்று இசைஞானியின் எண்ணங்களை எழுமுரசு கொட்டி அறிவித்து விடும்! அத்தனை Strings-களும் இணைந்து பாடல் துவங்கும் முன்னர் எடுக்கும் கோலம், “இசை சுனாமி” என்றுதான் சொல்ல வேண்டும்! (Titan Watches விளம்பரத்தில் ஒலிக்கும் Violin Piece-க்கு ‘பூமாலையே’ Prelude, Inspiration-ஆக இருந்திருக்க நிறைய வாய்ப்பிருக்கிறது என்று அடிக்கடி எனக்குத் தோன்றும்). அடைமழை போல் அடித்து ஓயும் Violin Counterpoint-களின் முடிவில் Keyboard-ம், புல்லாங்குழலும், இசைஞானி தங்களுக்கு இட்ட பணியைச் செவ்வனே செய்து, Relay Race போல, பொறுப்பை Sitar-இடமும் Bass Guitar-இடமும் ஒப்படைக்க, அடுத்த இரண்டு Bar-களுக்கு இந்த இரண்டு வாத்தியங்களும் கலந்து கட்டி செய்யும் சேட்டையின் முடிவில், Flute மறுபடி இணைந்து பாடலின் துவக்கத்தைப் பறைசாற்றுகிறது. இந்தப் புள்ளியில் ஒலிக்கும் Bass Guitar-ன் மூன்று ஸ்வரங்கள், ‘பூமாலை’-யை அள்ளி ஜானகி அம்மாவின் குரலில் கோர்க்கும் அழகு, Tremendous!

பாடலின் பல்லவியில் இசைஞானி உபயோகித்திருக்கும் Rhythm Pattern அவருடைய Favourite போலும்! பல பாடல்களில், பல்வேறு Tempo-க்களில் சற்றேறக்குறைய இதே Pattern-ஐ அவர் பயன்படுத்தி இருக்கிறார். பட்டியலிட்டால் இளைய நிலா (பயணங்கள் முடிவதில்லை), கேளடி கண்மணி (புதுப்புது அர்த்தங்கள்), மீனம்மா (ராஜாதி ராஜா), ஒரு காதல் என்பது (சின்னத்தம்பி பெரியதம்பி), காதல் கவிதைகள் படித்திடும் (கோபுர வாசலிலே), ஆகாய கங்கை (தர்ம யுத்தம்), அழகு ஆயிரம் (உல்லாசப் பறவைகள்), தேவதை இளம் தேவி (ஆயிரம் நிலவே வா), குருவாயூரப்பா (கேளடி கண்மணி), எனது விழி வழி மேலே (சொல்லத் துடிக்குது மனசு), வா வா அன்பே அன்பே, தூங்காத விழிகள் ரெண்டு (அக்னி நட்சத்திரம்), சங்கீத மேகம் (உதய கீதம்), பட்டுப் பூவே (செம்பருத்தி)…. என்று என்று இந்தப்பெரிய list நீண்டுகொண்டே செல்லும். இந்த Rhythm Pattern-ல் அவர் இசையமைத்த அத்தனை பாடல்களும் இன்றும் மின்னும் வைரங்கள்!

முதல் Interlude-ல் Flute Piece-க்குப் பின்னர் வரும் Sitar Piece-ஐக் கேட்பவர்களுக்கு, சரணத்தில் இசைஞானி Drums-ஐ தூக்கித் தூர வைத்து விட்டு, தபலாவைத் எடுக்கப் போகிறார் என்று கணிக்கக் கூட முடியாது. Drums உடன் இணைந்து அப்படி ஒரு வேகத்தில் ஓடும் Sitar Piece-க்குப் பின்னர், சரணத்தில் தபலாவின் தோற்றம் ஒரு Surprise Transition!

இரண்டாவது Interlude-ல் இசைஞானி உபயோகப்படுத்தி இருக்கும் Keybaord Piece-ஐக் கேட்கும் பொழுதெல்லாம் தூக்கி எறியப்பட்ட ஒரு Rubber Ball தரையில் விழுந்து, எழுந்து, விழுந்து, பின் உயரம் குறைவாக எழுந்து, மீண்டும் விழுந்து, எழுந்து, பின் விழுந்து தரையில் உருண்டு ஓடும் ஒரு Peculiar Feel-ஐக் கொடுக்கும்.

இரண்டாவது சரணத்தைப் பாடுவதற்கு வசதியாக துவக்கத்தில் ‘தலலலலலா..’ என்று இசைஞானி எடுத்துக் கொடுப்பது போல, முதல் சரணத்தில் ஏன் ‘நானுனை நினைக்காத’ என்று அவர் துவங்குவதற்கு முன், எஸ்.ஜானகி எடுத்துத் தரவில்லை? பி.பி.சி-க்கு இசைஞானி அளித்த பேட்டியில் ‘இசை என்பது ஒரு பட்டாம்பூச்சி பறப்பதைப் போன்றது! அது ஒரு நிகழ்வு! MUSIC SHOULD HAPPEN!’ என்று குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்டதைப் போலவே இரண்டாவது சரணம் துவங்கும் முன்னர் இசைஞானி பாடும் ‘தலலலலலா..’ ரொம்ப deliberate ஆக இல்லாமல், ஒரு அழகிய நிகழ்வாகவே இருக்கும்.

நான் கல்லூரி இசைக்குழுவில் இருந்த பொழுது, ‘பூமாலையே’ பாடலை இசைக்கலாம் என்று நினைத்து குழுவில் இருக்கும் பாடகர்கள், பாடகி, Guitarist, Keyboardist, Tablist, Drummer உட்பட அனைவரும் இணைந்து பாடலைக் கேட்க அமர்ந்தோம். (எந்த ஒரு பாடலையும் இசைப்பதற்குத் தேர்ந்தெடுக்கும் முன் இப்படி அனைவரும் ஒன்றாக அமர்ந்து பாடலைக் கேட்டு, இசைக்க முடியுமா முடியாதா, என்ன என்ன Instruments தேவைப்படும்? சரியாக வருமா? என்று சாதக பாதகங்களை அலசுவது வழக்கம்). பாடல் ஒலித்து முடிந்தது. எங்கள் குழுத்தலைவர் (Guitarist) எழுந்தார். Tape Recorder-ன் அருகில் சென்று, அதைத் தொட்டுக் கைகளைத் தலைக்கு மேல் தூக்கி ஒரு பெரிய கும்பிடு ஒன்றைப் போட்டார்! ‘இந்த Orchestration-ஐ எப்படிடா Reproduce பண்ண முடியும்? இந்தப் பாட்டை நாம வாசிச்சி கண்டிப்பா கெடுக்கணுமா?’ என்று கேட்டு விட்டுக் கிளம்பி விட்டார். மிகப் பெரிய மெல்லிசைக் குழுவினர் கூட இந்தப் பாடலை அதிகம் இசைத்து நான் கேட்டதில்லை! அது சரி! இறைவனின் எல்லா படைப்புகளையும் நகலெடுக்க முடியுமா என்ன? இனி C Minor Scale-ல் அமைந்த இந்தப் பாடலின் Chords Progression.

/Cm பூமாலையே தோள் சேரவா?
ஏங்கும் இரு /E♭ இளைய மனது /B♭ [இளைய மனது]
/E♭ இணையும் பொழுது /B♭ [இணையும் பொழுது]
/E♭ இளைய மனது /B♭ [தீம்தன தீம்தன]
/E♭ இணையும் பொழுது /B♭ [தீம்தன தீம்தன]
/Cm பூஜை மணியோசை பூவை மனதாசை
/Fm புதியதோர் உலகிலே பறந்ததே!

1. /E♭ நான் உனை நினைக்காத நாளில்லையே
/E♭ தேனினைத் தீண்டாத பூ இல்லையே
/B♭ தேன் துளி பூ வாயில்
/E♭ பூ விழி மான் சாயல்
/Cm கன்னி எழுதும் /Fm வண்ணம் முழுதும்,
/B♭ வந்து தழுவும் /E♭ ஜென்மம் முழுதும்!
/Cm நாளும் பிரியாமல் காலம் தெரியாமல்,
/Fm கலையெலாம் பழகுவோம் அனுதினம்!

‘பகல் நிலவு’ – இயக்குனர் மணிரத்னத்தின் முதல் தமிழ் படம். ‘இந்தக் காலத்தில் எந்த முன்னணி இசையமைப்பாளராவது ஒரு புதிய இயக்குனரின் படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொள்வாரா? எண்பதுகளில் இசைஞானி பெரிய இயக்குனரின் படம் என்றோ, பெரிய நடிகர்களின் படம் என்றோ, பெரிய Banner-ன் படம் என்றோ தேர்ந்தெடுத்து, இசையமைத்துத் தந்ததில்லை. தனது திறமையை மட்டுமே நம்பி நிறைய சுமாரான படங்களையும் ஓட வைத்திருக்கிறார்! நிறைய புதிய இயக்குனர்களுக்கு வாழ்வளித்திருக்கிறார்’ என்று இசைஞானியைப் பற்றி வலையில் பரவலாக உலவும் கருத்தை வழிமொழிகிறேன்.

இசைஞானியின் குரல் முரளி, ராமராஜன், ராஜ்கிரண் போன்ற வெகு சிலருக்கு மட்டுமே மிகவும் பொருத்தமாக இருக்கும். அவர்களுள் இசைஞானியின் குரலுக்குத் தகுந்த வாயசைப்பையும், அவர் குரலில் நிறைந்திருக்கும் உணர்ச்சிகளையும் திரையில் காட்டி நடித்ததில் சமீபத்தில் மறைந்த நடிகர் முரளி முதன்மையானவர். அனைத்து ‘இசைஞானி பக்தர்கள்’ சார்பில் அவருக்கு இந்தக் கட்டுரை சமர்ப்பணம்!!
 2 comments:

  1. http://www.facebook.com/MaestroIlaiyaraja


    NAN INTHA THALAIMURAI SERNTHA ILAIYARAJAVIN VERIYAN..,

    Isaiyai patri onrum theriyathu Isaignanaiyai theriya try pannitru irukken avaroda buks and extra ..,, please promote my page too

    ReplyDelete