Sunday, September 8, 2013

இசைஞானி - பானுமதி சந்திப்பு



ஃபேஸ்புக் நண்பர் திரு. சிவகுமார் அவர்கள் முன்னொருமுறை அனுப்பியிருந்த ஒரு சுட்டியிலிருந்து சிக்கியது, இசைஞானியும் திருமதி. பானுமதியும் சந்தித்து உரையாடிய ஒரு அபூர்வ நிகழ்வின் பதிவு.  முழுப் பேட்டியும் கிடைக்காவிட்டாலும், கிடைத்த இரண்டு பக்கங்களும் பொக்கிஷம். எந்தப் பத்திரிக்கையில் வெளிவந்தது என்று எந்தத் தகவலும் இல்லை.

இதைக் குறித்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்ததும், விட்டுப் போயிருந்த விஷயங்களைப் பற்றி திரு. ராஜேந்திரகுமார் அவர்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்களும், ட்விட்டரில் வாசித்துவிட்டு நண்பர் @tekvijay, பேட்டி சொல்லும் விஷயங்களாக பற்பல விஷயங்களை அலசியிருந்ததும் அற்புதம்.  அத்தனையும் மொத்தமாய் ஒரே பதிவாக்கினால் சிறப்பாய் இருக்கும் என்று தோன்றிய காரணத்தால்.. ..

*************************************************************************

    வணக்கம்

பானுமதி: வணக்கம்.  வாங்க. வழக்கமா நான் காலையில ”வாக்” போவேன்.  நீங்க வர்றதினால போகல.

    எனக்கு ரொம்ப நாளாகவே ஆசை.  உங்களை மீட் பண்ணி மியூஸிக் பற்றி டிஸ்கஸ் பண்ணனும்னு.  இன்னைக்குத்தான் அதுக்கு வேளை வந்திருக்கு.  உங்க பாட்டுகளை மேடையில் பலமுறை பாடியிருக்கேன்.  சொல்லப்போனால் நான் உங்க Fan.  இப்போ உங்க பாட்டுகளை நிறைய சேகரிச்சு வச்சிருக்கேன்.

பானுமதி: அப்படியா..!! ரொம்ப சந்தோஷம்.  இப்போ கொஞ்ச நாளாகவே உங்க பாட்டை அடிக்கடி கேட்கிறேன்.  You are a Genius..!  ஆமா.! உங்களைப் பற்றி நான் எடுத்திருக்கிற முடிவு அதுதான்.  என் பாட்டு கலெக்‌ஷன் வச்சிருக்கிறதா சொன்னீங்களே. என்னென்ன பாட்டு வச்சிருக்கீங்க?

    என்னால முடிஞ்சவரை கலெக்ட் பண்ணியிருக்கேன். ‘லைலா-மஜ்னு’ படத்தில் நீங்கள் பாடிய ‘காசுக்கு மூணு சீட்டு’ (ராகத்துடன் அந்தப் பாடலைப் பாடிக்காட்டுகிறார்) எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு.  சின்னப் பையனாக இருந்தப்பவே அந்தப் பாட்டை பாடுவேன்னா பாருங்களேன்.

பானுமதி: Very Good.! நானும் கூட அப்படித்தான்.  சின்ன வயசிலிருந்தே பாட ஆரம்பிச்சுட்டேன்.  நம்ப மாட்டீங்க.  நான் முறையா சங்கீதம் கத்துக்கிட்டதில்ல.  ஆனா எனக்கு ஆர்வம் ஜாஸ்தி.  கேட்ட உடனே பாடுவேன்.  நடிப்பு விஷயத்திலே அப்படி இல்லே.  மத்தவங்க மாதிரி இருக்கக்கூடாதுங்கிறதுல கண்டிப்பா இருப்பேன்.  வித்தியாசமா இருக்கணும்னு நினைப்பேன்.

    நீங்க முதல்ல நடிச்ச படம் எதும்மா?

பானுமதி: First .. Book ஆன படம் ரத்னகுமார்.

    அந்தப் படத்திலே கூட ‘அம்மா தாயே’ன்னு ஒரு கர்நாடிக் பாட்டு வருமில்ல?

பானுமதி: ரொம்ப நல்லா ஞாபகம் வச்சிருக்கீங்களே..! (’கலைமாதும் மலைமாதும் இருபுறம் அமர்ந்து’ என்ற பாடலை முழுவதும் பாடுகிறார்).  காலையில என் வாய்ஸ் நல்லா இருக்காது.  ஈவினிங்தான் நல்லா இருக்கும். (பல பாடல்களைப் பாடிக்காட்டுகிறார் பானுமதி).

    ஆகா. நானே உங்களைப் பாடச் சொல்லிக்கேட்கணும்னு நினைச்சேன். நீங்களே பாடிட்டீங்க.  Thanks.

பானுமதி: அந்தப் பாடல்களெல்லாம் சி.ஆர். சுப்பராமன்தான்.  He is Just like You.

    ஐயோ… அவங்களோட என்னை… அவங்க எங்கே.?? நான் எங்கே..??

பானுமதி:  Real Genius அவர்.  He knows Classical just like SatyaNarayana.  English, Carnatic Music’ம் நல்லாவே தெரியும்.  அதுபோலவே இந்த Generation’க்கு இளையராஜா வந்தாச்சு.

    பெரிய ஜீனியஸைப் போய் இளையராஜா மாதிரின்னு சாதாரணமா சொல்லிட்டீங்களேம்மா.  வருத்தமா இருக்கு.  எம்.எஸ்.விஸ்வநாதன் சார் மாதிரி Talented முன்னால நான் சாதாரணம். அவருக்கு நீங்கதான் First Chance கொடுத்ததுன்னு.. … ..??

பானுமதி:  நான்தான்.  அதை நானே சொல்றது நாகரிகமில்ல. அவரே சொல்லி இருக்காரு.

    எனக்குத் தெரியும்.  நீங்க சொல்லித் தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன்.

பானுமதி:  சண்டிராணி படம் ஸ்டார்ட் பண்ணிய சமயம்.  அப்ப சுப்பராமன் சார்கிட்டே ஆல் இன் ஆல் ஆக இருந்தார் விஸ்வநாதன்.  நான் அப்பவே அவரை வாட்ச் பண்ணியிருக்கேன்.  ரொம்ப சுறுசுறுப்பு.  ‘ஸ்பார்க்’ மாதிரி ரொம்ப ஸ்மார்ட்டா இருப்பார்.  மேலே வரக்கூடிய எல்லாத் திறமைகளும் அவரிடம் இருந்தது.  சண்டிராணி படத்துக்கு மூணு லாங்குவேஜ்ல மியூஸிக் பண்ணினாரு.

    விஸ்வநாதன் சாரோடு ராமமூர்த்தி சாரை நீங்கதானே சேர்த்தது?

பானுமதி:  ஆமா, அதே படத்துலதான்.

    அப்பவெல்லாம் இசை அமைக்கிறவங்களுக்கும் மற்ற மியுஸீஷியன்களுக்கும் நிலைமை எப்படி இருக்கும்?

பானுமதி: பிக்சர் காண்டிராக்ட்.  அதை மாதச் சம்பளமாகக் கொடுப்போம்.  முன்னால நடிப்புல மட்டுமில்ல.  மியூஸிக்லேயும் ஹெல்த்தி காம்பெட்டிஷன் இருந்துச்சு.  சுப்பையா நாயுடு, ஜி. ராமநாதன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இவங்களை உருவாக்கிய சுப்பராமன், ஏ.வி.எம்.ல சுதர்சன், மகாதேவன் இப்படி நிறைய Talent’ஆனவங்க இருந்தாங்க.

மியூஸிக் டைரக்டருக்கு சினிமா டச்சப் தெரிஞ்சிருக்க வேண்டியது அவசியம். சிலர் பிரபல்யமாகாமலே இருப்பதற்குக் காரணம், கர்நாடிக் ஞானம் குறைச்சலா இருப்பதுனாலதான்.  மியூஸிக் தெரிஞ்சதுனால சொல்றேன்.  எல்லோருமே மியூஸிக் டைரக்டராகணும்னு நினைக்கிறாங்க. நெனைச்சா மட்டும் போதுமா?

    உங்க டைம்ல இருந்த மாதிரி வாய்ஸ் உள்ள ஆர்ட்டிஸ்ட் இப்போ இல்லீங்களே?

பானுமதி: நான் ஒண்ணு சொல்லட்டுமா?  இன்னைக்கு நான் ப்ளேபேக் பண்ணினா, இப்ப அதிகமா சம்பாதிக்கிற ஆர்ட்டிஸ்ட்டை விட உறுதியா அதிகம் சம்பாதிப்பேன்.

    அதையேதான் நானும் கேட்கணும்னு நெனைச்சேன்.

பானுமதி: பணம் வாங்கிட்டு கண்ட Characterலேயும் act பண்ண எனக்குப் பிடிக்காது.  Money is not the main thing’னு விட்டுவிட்டேன்.  அது போல நான் எல்லா வேஷமும் போடமாட்டேன்.

*************************************************************************

கிடைத்த இரண்டு பக்கங்களிலும் இருந்தது இவ்வளவு மட்டுமே.  இனி விடுபட்ட பகுதிகள் திரு. ராஜேந்திரகுமார் அவர்கள் Facebook’ல் தந்திருந்த பின்னூட்டத்திலிருந்து..

She praised him a lot and called him 'Mohana Raja' because of his beautiful usage of that raga.  Then she expressed her desire to sing in his music and he was shocked and thought she was joking. But she was very firm.(finally her dream came true much later when she directed 'Periyamma' and sang in his music. She sang in 'Chembarauththi too). He then told her that his wife was expecting and asked her to suggest a name.  She immediately said 'Mohanan' if it is a boy and 'Mohana' if it is a girl (No marks for guessing who that 'child' was.  But somehow, he chose a different name!). .”

*************************************************************************
நண்பர் Vijay SA @tekvijay அவர்களின் Twitlonger’லிருந்து
இந்த பேட்டி சொல்லும் விஷயங்கள் பல!

இசைஞானி தானே தேடிச்சென்று பானுமதி அம்மாவை சந்தித்து பேசுகிறார். இன்றைக்கு உள்ள பெரிய MDக்கள் யாரும் இதுபோல், ஒரு இசை ஜாம்பவானை சந்தித்து பேசுகிறார்களா! இசைஞானியை தவிர்த்து என்றாலும்கூட மற்ற இசை ஜாம்பவான்களை சந்திக்கிறார்களா? அப்படியே சந்தித்தாலும் அவர்களிடம் கேள்வி கேட்க விஷயம் இருக்குமா?

ராஜா கேட்கும் கேள்விகள், அவர் சின்னப்பையனாக இருந்தபோதும் சரி இண்டஸ்ட்ரிக்குள் நுழைந்து வேலைபார்த்தபோதும் சரி, இசைத்துறை பற்றின பல விஷயங்களை கவனித்துள்ளார் என்பதை இந்த பேட்டி காட்டுகிறது!



சி.ஆர் சுப்புராமன் பெயரை ராஜா அடிக்கடி சொல்லி அவர்கள் இசை உலகிற்கு ஆற்றிய பங்களிப்பை குறிப்பிட்டு சொல்வதுண்டு! அப்பேர்ப்பட்ட மேதையை ராஜாவுடன் ஒப்பிட்டு சொல்கிறார் பானுமதி அம்மா! இது தான் வாழ்த்து! இதுதான் ராஜாவின் உண்மையான திறமைக்கு தகுந்த பாராட்டு!

ஆனால் உடனே ராஜா அதை மறுக்கிறார்! இதுதான் ஐயா அடக்கம்! இக்கால எம்டிக்கள் நோட்ஸ் எடுக்கவேண்டியது இங்குதான்! இசை நோட்ஸ் எழுதத்தான் தகராறு [ ;) ] இந்த நோட்ஸாவது எடுங்கள்!

ராஜா இந்த ஒப்பீட்டை மறுத்ததுடன் நிற்காமல், எம் எஸ் வி போன்ற திறமைசாலி முன் தான் சாதாரணம் என்கிறார்! (மறுபடியும் நோட்ஸ் ப்ளீஸ்!) அத்துடன் நிற்காமல், எம் எஸ்வி ஐயாவுக்கு முதன்முதலில் வாய்ப்பளித்தது பானுமதி அம்மா என்ற வரலாற்றுத்தகவலை சொல்கிறார். மெல்லிசை மன்னர்கள் இருவரையும் இணைத்ததும் பானுமதி தான் என்கிற சரித்திர உண்மையும் ராஜா சொல்கிறார்! பானுமதி அவர்கள் காலத்தில் சினிமா இசைத்துறை எப்படி இருந்தது என்ற தகவலையும் கேட்டு தெரிந்துகொள்கிறார் ராஜா!

ராஜா எப்போதும் பெண்களை தன் அருகில் அண்டவிடமாட்டார் என சொல்லப்படுவது நாம் அறிந்ததே. ஆனால் ஒரு சீனியர் அவர் பெண்ணாக இருந்தாலும் சென்று சந்தித்து மரியாதை செலுத்துவதில் ராஜாவுக்கு எந்த தயக்கமும் இல்லை!

ஒரு திறமையான கலைஞன் எப்போதுமே தன் சீனியர்களை சந்திப்பதில் ஆர்வம் கொண்டிருப்பான். சந்திப்பது மட்டுமல்ல, சரியான கேள்விகளை அவர்களிடம் கேட்டு, சரியான பதில் பெற்று, அந்த சந்திப்பை/பேட்டியை ஒரு வரலாற்று ஆவணமாக இருக்கச்செய்வான். கமல் சிவாஜியை சந்தித்து பேட்டி கண்டதும் இப்படித்தான்!

ராஜா, கமல் போன்ற கலைஞர்கள் எப்போதும், 'தான் மட்டுமே' என்று இருப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தத்தம் துறையின் மேதைகளை சுட்டிக்காட்டியபடியே இருப்பார்கள்! அதெல்லாம், போலி Humilityக்காக அல்ல, என்பது, அந்த மேதைகள் பற்றி ராஜா/கமல், சொல்லி ஹைலைட் செய்யும் விஷயத்தில் இருந்தே தெரிந்துகொள்ளலாம்! ஆக, இவர்கள் தனி ஆள் அல்ல, இவர்களின் துறை eco system இன் தொடர்ச்சி தான்! தத்தம் துறை மேதைகளை பற்றி இந்த இரு மேதைகளும் சொல்லாமல் இருக்கவே முடியாது!

சி.ஆர் சுப்புராமன் அவர்கள் இசையமைத்த சினிமா பாடல் "சின்னஞ்சிறு கிளியே" இது கர்நாடக சங்கீத மேடைகளில் பாடப்படுகிறது, பூபாள இசை, இவை எல்லாம் சி.ஆர் சுப்புராமன் அவர்கள் தந்தது என்று ஒரு நிகழ்ச்சி மேடையில் ராஜா குறிப்பிட்டார். இது ஒரு மிகச்சிறிய உதாரணம் தான்! இதுபோல் தன் துறை முன்னோடிகளை பற்றி பல நிகழ்வுகளை பெருமையாக எப்போதுமே சொல்லிக்கொண்டிருப்பவர் தான் ராஜா!

இப்பேர்ப்பட்ட மனிதரைத்தான், கர்வி என்று சில அறியாதவர்கள் விடாமல் சொல்லிக்கொண்டிருக்கும் கூத்தும் நடைபெறுகிறது!

எனக்கு முன்பு மையம்.காம் இல் ஒரு ரசிகர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது - "Ilaiyaraja is the last link between the oldest of the old and the Newest of the New!" இதை விட சிறப்பாக சொல்லிவிட முடியாது! நன்றி!

*************************************************************************

நன்றி:

திரு. சிவகுமார்.
திரு. ராஜேந்திரகுமார்.
திரு. Vijay SA

Tuesday, July 30, 2013

பேசும் படம் 1992 ஜூலை - R.D.Bhaskar Interview


இசைஞானி இளையராஜா.. இனியும் இவர் திறமை பற்றி வரிந்து வரிந்து எழுத வேண்டியதில்லை.  அது நிரூபிக்கப்பட்ட நிஜம்!

இளையராஜா – இசைக்கோர் இலக்கணம்..!

பண்ணைப்புரம் என்ற சிற்றூரில் இருந்து இவர் சென்னை வந்திறங்கியபோது தனக்குப் பெருமை சேர்க்க ஒருவன் வந்துவிட்டான் என்று நிச்சயம் கலைவாணி அகமகிழ்ந்திருப்பாள்.

மேடையில் கொள்கைப் பாடல்களையும், வயல் வரப்பில் நாட்டுப்புறப் பாடல்களையும் மட்டுமே பாடிவந்த ராசய்யா, இளையராஜா என்ற பெயரில் ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் அரங்கேறினார்.  அன்று முதல் தொடர்ந்து வெற்றிகளைத் தன் வசமாக்கிக்கொண்டார்.  எப்படி இவரால் தொடர்ந்து வெற்றி கொடுக்க முடிகிறதென்று இந்தியத் திரையுலகமே இன்று வியக்கிறது.

கதாநாயகனுக்கு கட்-அவுட் வைத்துக்கொண்டிருந்த தமிழ்த் திரையுலகம் இன்று இசைஞானிக்கு கட்-அவுட் வைக்கத் துவங்கியுள்ளது.  இதிலிருந்தே தெரிந்துவிட்டதே இன்றைய திரையுலகில் கதாநாயகன் இவர்தானென்று.  இந்த இசைக்கடலின் இளம் வயது நிகழ்ச்சிகளை வாசகர்களுக்குத் தெரியப்படுத்த அவரின் இளம் வயதை அறிந்தவர்களை தேடிப்போனோம்.  முதல் கட்டமாக அவர் பிறந்து வளர்ந்த பண்ணைப்புரம் நோக்கிப் பயணமானோம்.

துரை மாவட்டம் தேனியில் இருந்து மூன்று மைல்கல் தொலைவில் அமைந்திருந்தது பண்ணைப்புரம்.  நாம் பேருந்துவிட்டு இறங்கியதுமே நமக்கு ஏமாற்றம்.  அன்று பசுமை நிறைந்திருந்த பண்ணைப்புரம் இன்று வறண்டுபோய்க் காட்சியளித்தது.  ஒரு வழியாக நம் மனதைத் தேற்றிக்கொண்டு ஊருக்குள் நுழைந்தோம்.  எதிர்பட்ட கிராம மக்களிடம் நாம் வந்த காரணத்தைக் கூறியதும் அவர்கள் உபசரித்த பாங்கு நம்மை வியப்பில் ஆழ்த்தியது.  ஊர் மக்கள் நம்மை அழைத்துக்கொண்டு போய் வயதான ஒரு பெரியவர்முன் அமரச்செய்து சுற்றிலும் நின்றுகொண்டு நாம் கேட்கப்போகும் கேள்விகளையும் பெரியவர் சொல்லப்போகும் பதிலையும் கேட்க ஆவலாய் இருந்தார்கள்.  மெல்ல நம் கேள்விகளைத் துவக்கினோம்.

’ஐயா, இளையராஜா இங்கே இருந்தபோது நடந்த நிகழ்ச்சிகளைக் கூற முடியுமா?’

’தம்பி’.. அவரோடக் குடும்பமே பாட்டுப் பாடுற குடும்பம்.  அவரோட அம்மா, அப்பா எல்லோருமே பாடுவாங்க.  அவரோட அண்ணன் பாவலர் வரதராஜன் நல்ல கவிஞர்.  பாடவும் செய்வார்.  பாவலர் மேடைல பாடும்போது ராசய்யா (இளையராஜா) ஆர்மோனியப்பெட்டி வாசிப்பார்.  இவங்க மேடையிலே கச்சேரி பண்றாங்கனு தெரிஞ்சாலே பக்கத்து கிராமத்திலேருந்தெல்லாம் ஜனங்க வருவாங்க.

ராசய்யா (இளையராஜா) சின்ன வயசுல தன்சோட்டு பசங்களோட இதோ நாம இருக்கிற இதேத் தெருவுல ஓடியாடி விளையாடிகிட்டு இருப்பாரு.  மத்த நேரங்கள்ல ஆர்மோனியப் பெட்டிய தோள்ல போட்டுகிட்டு வயல் வரப்புல நாட்டுப்புறப்பாட்ட பாடுவாரு.  இதக் கேட்கவே அவரு பின்னால ஒரு கூட்டமே சுற்றும்.

கொஞ்ச வருஷம் கழிச்சு ராசய்யா, பாஸ்கர், அமரன் எல்லாரும் பட்டணம் போனாங்க.  அப்புறம் சினிமாவுல பாடறாங்கன்னு சொன்னாங்க.  ரேடியோ பெட்டியில எல்லாம் இவங்க பாட்டு கேட்டோம்.  சந்தோஷமா இருந்தது.  இப்ப அவரோட வளர்ச்சியைப் பார்க்கும்போது இந்த ஊருக்கே பெருமையா இருக்கு” என்று பெரியவர் முடித்ததும் நாம் நம்மைச் சுற்றி நின்றவர்களைப் பார்த்தோம்.  அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.  பிறகு அவர்களின் வேண்டுகோளை ஏற்று மதிய உணவை உண்டு விடைபெற்று சென்னை வந்து இளையராஜாவின் அண்ணன் பாஸ்கர் அவர்களைச் சந்தித்து நம் கேள்விகளைத் துவக்கினோம்.

’இளையராஜா அவர்களுக்கு சிறு வயது முதலே இசை ஆர்வம் இருந்ததா? எப்படி இந்த ஆர்வம் ஏற்பட்டது?’

சிறுவயதில் இருந்தே அவருக்கு இசை ஆர்வம் இருந்தது.  எப்படி ஏற்பட்டது என்றால் அன்று எங்கள் கிராமம் மிகவும் செழிப்பாக இருந்தது.  அதிகாலை ஆறு மணியானால் குயில் ஓசையும், தென்றல் காற்றில் குளுமையும் நிறைந்திருக்கும்.  அந்த வேளையில் நான், இளையராஜா, அமரன் எல்லோரும் உறங்கியும் உறங்காமலும் படுத்திருப்போம்.

அந்த நேரத்தில் எங்கள் அண்ணன் பாவலர் அவர்களுக்கு சங்கீதப் பயிற்சி நடக்கும்.  அப்போது கேட்கும் சா ரி க ம பா த நி சா என்ற ஓசையில்தான் நாங்கள் கண் விழிப்போம்.  இதுவே தொடர்ந்து வந்ததால் எங்களையே அறியாமல் சங்கீதம் மீது ஈடுபாடு கொண்டோம்.

பிறகு இளையராஜா ‘ஆர்மோனியமும்’ நான் ‘தபேலாவும்’ அமரன் கிட்டாரும் கற்றுக்கொண்டோம். பிறகு எங்கள் அண்ணன் கச்சேரி செய்யத்துவங்கியதும் நாங்கள் மேடையில் இசைக்கருவிகளை வாசிக்கத் துவங்கினோம்.  இப்படித்தான் நாங்கள் முதன்முதலில் இசை ஆர்வத்தால் அரங்கேறியது.

’இன்று படங்களில் பாடும் இளையராஜா அன்று மேடையில் பாடுவாரா?’

பாடுவார்.. எப்படி என்றால் சிறுவயதில் நம் குரல் மென்மையாக இருக்கும் அல்லவா.. அப்போது பெண் குரலில் பாடுவார்.  கேட்க நன்றாக இருக்கும்.  நாட்கள் போகப்போக அவர் குரல் மாறியது.  இதைக்கண்டு இளையராஜா பயந்துவிட்டார்… ’இனி நம்மைப் பாட அண்ணன் அழைக்கமாட்டாரே’ என்று.  ஆனால் இன்று இவரின் குரலுக்கும் ரசிகர்கள் உண்டு.  இன்னும் சொல்லணும்னா நாங்க படிக்கிற காலத்தில் ஸ்கூலில் கடவுள் வாழ்த்து பாடுவோம்.  இளையராஜாவும் பாடுவார்.  இதுதான் மற்றவர் கேட்க அவர் பாடிய முதல் பாடல்.

’நீங்கள் எதற்காக சென்னை வந்தீர்கள்?’

நாங்கள் மேடையில் கட்சிக்காகப் பாடிக்கொண்டிருந்தோம்.  ’எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்கின்ற கொள்கையை முன்வைத்துப் பாடி வந்தோம்.  ஆனால் அரசியல்வாதிகள் பலர் இதை சுயநலத்துக்காகப் பயன்படுத்தத் துவங்கினர்.  இது பிடிக்காமல் பிழைப்பைத் தேடி சென்னை வந்தோம்.

’சென்னை வந்து இறங்கியதும் நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்ல முடியுமா?’

ஜெயகாந்தன் அவர்களும் எங்கள் அண்ணன் பாவலரும் நண்பர்கள்.  அதனால் பாவலர் ஜெயகாந்தனுக்கு ஒரு கடிதம் எழுதிக்கொடுத்திருந்தார்.  அதை எடுத்துக்கொண்டு ஜெயகாந்தன் வீட்டிற்குச் சென்றோம்.  கடிதத்தை அவரிடம் கொடுத்ததும், எங்களை அமரவைத்து சாப்பிடச் சொன்னார்.  இட்லி மூவருக்கும் பரிமாறப்பட்டது.  உடனே நான் ஜெயகாந்தனிடம் உங்களை நம்பித்தான் வந்துள்ளோம் என்று சொன்னேன்.

உடனே அவர் எங்கள் மூவரையும் ஒருமுறை பார்த்துவிட்டுத் திட்டத் துவங்கினார்.  எப்படி நீங்கள் என்னை நம்பி சென்னை வந்ததாகக் கூறலாம்?  அப்படி நீங்கள் என்னை நம்பி வருவதாக இருந்தால் முதலிலேயே ஒரு கடிதம் போட்டு கேட்டுவிட்டு வந்திருக்கவேண்டும்.  அப்படி நீங்கள் வரவில்லையே? இப்போது நீங்கள் வந்தது முட்டாள்தனமானது என்று அவர் திட்டத் திட்ட எங்கள் மூவருக்கும் சாப்பிடவே வெறுத்துப்போனது.  முகமும் சுண்டிப்போனது.  இதைப் பார்த்த ஜெயகாந்தன் மெல்ல என் மீது கைபோட்டு, “தம்பி நான் திட்டியது நீங்கள் இங்கு வந்ததற்காக அல்ல.. என்னையே நம்பி வந்தீர்கள் என்று சொன்னதற்காக.  நீங்கள் உங்கள் திறமையை நம்புங்கள். வெற்றி நிச்சயம்’ என்றார். இதுதான் நாங்கள் சென்னை வந்ததும் நடந்த முதல் சம்பவம்.

’பிறகு என்ன செய்தீர்கள்?’

பிறகு அப்போதைய இசை யூனியன் தலைவர் எம்.பி.ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது.  அவரிடம் சினிமாவில் வாசிக்க வாய்ப்பு கேட்டோம்.  அதற்கு அவர் உங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்டார்.  எனக்கு தபேலா வாசிக்கவும், இளையராஜாவுக்கு ஆர்மோனியம் வாசிக்கவும், அமரனுக்கு கிட்டார் வாசிக்கவும் தெரியும் என்றோம்.

அதற்கு அவர் எப்படி வாசிப்பீர்கள் என்றார்.  வாசித்ததைக் கேட்டால் அப்படியே வாசிப்போம் என்றோம்.  உடனே அவர் சிரித்துக்கொண்டே சினிமாவில் வாசிக்க வேண்டுமென்றால் நோட்ஸ் தெரிந்திருக்கவேண்டும்.  அப்போதுதான் சினிமாவில் வாசிக்கமுடியும்.  மேலும் உங்களுக்கு வாசிக்கத் தெரிந்த கருவிகள் எல்லாம் இங்கு பலபேர் வாசிக்கிறார்கள்.  அதனால் புதிய இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறி மாஸ்டர் தன்ராஜ் அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார்கள்.  அப்போது எங்களிடம் இருந்த ஆம்ப்ளிஃபையரை அடமானம் வைத்து இளையராஜாவைச் சேர்த்துவிட்டோம்.  அங்கு இளையராஜா வெஸ்டர்ன் க்ளாசிக்கல் போன்ற இசைகளைப் பயின்றார்.

நாங்கள் சம்பாதிக்கத் துவங்கியதும் முன்பு அடமானம் வைத்த ஆம்ப்ளிஃபையரை மீட்க அடகு கடைக்குப் போனோம்.  அங்கு அடகு கடையே காணோம்.  தேடித்தேடிப் பார்த்தோம்.  கண்டுபிடிக்க முடியவில்லை.  இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறோம்.

பிறகு எப்போது சினிமாவில் இளையராஜா வாசிக்கத்துவங்கினார்?

இளையராஜா மாஸ்டர் தன்ராஜ் அவர்களிடம் இசை பயின்று கொண்டிருக்கும்போது இசையமைப்பாளர் ஜி.கே. வெங்கடேஷ் அவர்கள் மாஸ்டர் தன்ராஜிடம் தனக்கு ஒரு நல்ல உதவியாளன் ஒருவன் வேண்டும் என்று கேட்க மாஸ்டர் இளையராஜாவைச் சேர்த்துவிட்டார்.  அன்று முதல் இளையராஜா கம்போசிங் செல்லத் துவங்கினார்.

நீங்கள் தனியாக இசையமைக்க செய்த முயற்சியையும், கிடைத்த வாய்ப்பையும் கூறுங்களேன்?

நான்தான் காலையில் எழுந்ததும் வாய்ப்பு கேட்க பல கம்பெனிகளுக்குப் போவேன்.  அப்போது ராஜா (இளையராஜாவின் உண்மைப் பெயரான ராசய்யா என்பதை மாற்றி ராஜா என்று வைத்திருந்தோம்) சொல்வார்.. “வாய்ப்பு கேட்டு நீ போகாதே.. சந்தர்ப்பம் நம்மைத் தேடி வந்தால் நாம் இசையமைப்போம்” என்று.  ஆனால் நான் கேட்காமல் பல கம்பெனிகள் படி ஏறுவேன்.  எங்குமே ஏமாற்றம்தான்.  கடைகளில் யாராவது தேங்காய் பழம் வாங்கிப்போனால் அவர்கள் ஏதோ புது படத்திற்கு பூஜை போடுவதாக நினைத்து அவர்களைப் பின்தொடர்வேன்…  அவர்களிடம் வாய்ப்பு கேட்கலாம் என்ற காரணத்தில்தான்.  அவர்களைப் பின்தொடர்ந்தால் முடிவில் கோவிலுக்கோ அல்லது திருமண வீட்டிற்கோ செல்வார்கள்.  வெறுத்துப்போய் திரும்புவேன்.  மீண்டும் யாராவது பூஜை பொருள் வாங்கிப் போனால் என்னை அறியாமலேயே என் கால்கள் அவர்களைத் தொடரும்.

தனியாக இசையமைக்க கிடைத்த சந்தர்ப்பம் என்று சொன்னால் பல சந்தர்ப்பங்கள் கிடைத்துக் கை நழுவிப்போனதுண்டு.  நாங்கள் இசையமைக்க முதல் பட சந்தர்ப்பம் கிடைத்ததைப் பற்றி வேண்டுமானால் சொல்கிறேன்.

அப்போது நான் இளையராஜா, அமரன், செல்வராஜ் (கதை வசனகர்த்தா) பாரதிராஜா, அனைவரும் ஒன்றாக மைலாப்பூரில் தங்கியிருந்தோம்.  ஒருநாள் இளையராஜா கம்போசிங் சென்றுவிட நானும் அமரும் ரூமில் இருந்தோம்.  செல்வராஜும், பாரதிராஜாவும் கூட வெளியே போயிருந்தார்கள். திடீரென்று வெளியே போயிருந்த செல்வராஜ் வந்து எங்களைத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் அழைத்துவரச் சொன்னார் என்று கூறினார்.

உடனே செல்வராஜுடன் நானும் அமரும் கிளம்பினோம்.  வெளியில் வந்துதான் எங்கள் பாக்கெட்டைப் பார்த்தோம்.  மூவரின் பாக்கெட்டும் காலி.  வேறு வழியில்லாமல் நடக்கத் துவங்கினோம்.  மைலாப்பூரிலிருந்து பாம்குரோவ் ஓட்டலுக்கு நடந்தே வந்து பஞ்சு அருணாசலத்தைப் பார்த்தோம்.  அவர் எங்களைப் பார்த்ததும் ராஜாவை கேட்டு, வரவில்லை என்றதும் போய் அழைத்து வரச்சொன்னார்.  வாகினி ஸ்டிடியோவில் கம்போசிங் நடந்துகொண்டு இருந்ததால் இளையராஜா அங்கு இருந்தார்.  மீண்டும் நாங்கள் நடந்தே வாகினி ஸ்டுடியோ சென்றோம்.  அங்கிருந்த இளையராஜாவைப் பார்த்து செய்தியைச் சொன்னோம்.  இளையராஜா நம்பிக்கை இல்லாமல் எங்களுடன் புறப்பட்டார்.  அப்போது வாகினி ஸ்டுடியோவில் இருந்து பாம்குரோவ் வர டாக்ஸி வாடகை எழுபது பைசாதான்.  இளையராஜாவிடம் பணம் இருந்ததால் டாக்ஸியிலேயே பாம்குரோவ் போய்ச் சேர்ந்தோம்.

பஞ்சு அருணாசலம் அவர்கள் எங்களை அமரச் செய்து பாடிக்காட்டும்படி சொன்னார்.  அப்போது எங்களிடம் எந்த இசைக்கருவிகளும் இல்லை.  அதனால் நான் அங்கிருந்த டேபிளில் தாளம் போட இளையராஜா ‘அன்னக்கிளி உன்னத்தேடுது’ என்று பாடினார்.  இதைக் கேட்ட மாத்திரமே அவருக்குப் பிடித்துவிட அப்பொழுதே எங்களை ஒப்பந்தம் செய்தார். பிறகு எங்களிடம் எந்தப் பெயரில் இசையமைக்கப் போகிறீர்கள் என்றூ கேட்டதும், நான் ‘பாவலர் பிரதர்ஸ்’ என்று கூறினேன்.  அதற்கு அவர் இந்தப் பெயர் பழைய ஸ்டைலாக இருக்கிறது என்று கூறிவிட்டு என் பெயரைக் கேட்டார்.  நான் பாஸ்கர் என்றதும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.  கங்கை அமரன் பெயரையும் ஒதுக்கிவிட்டு இளையராஜா பெயரைக் கேட்டார்.  ராஜா என்று கூறியதும் சற்று சிந்தித்துவிட்டு இளையராஜா என்று வைத்துக்கொள்ளுங்களேன் என்று கூறினார்.  உடனே நாங்கள் சரி என்று சொல்லிவிட்டோம்.  அப்படித்தான் ராஜா, இளையராஜா ஆனார்.

முதல் படம் வெளிவந்ததும் நடந்த நிகழ்ச்சிகள் சொல்ல முடியுமா?

முதல் படம் வெளிவந்து வெற்றி பெற்று ‘அன்னக்கிளி’ பாடல்கள் பட்டி தொட்டிகளிலெல்லாம் ஒலிக்கத் துவங்கிய நேரம்.  ஒருநாள் மதியம் தி.நகரில் உள்ள ஒரு தயாரிப்பாளரின் அலுவலகம் சென்றேன்.  தண்ணீர் தாகம் உயிர் போனது.  அங்கிருந்த ஆபீஸ்பாயிடம் தண்ணீர் கேட்டேன்.  அதற்கு அவன் தெருவில் போகும் எல்லோருக்கும் தண்ணீர் தரமுடியுமா என்று கேட்டுவிட்டு தண்ணீர் தராமலேயே போய்விட்டான்.  மனதைத் தேற்றிக்கொண்டு தயாரிப்பாளரைப் போய் பார்த்தேன்.  என்னைப் பார்த்ததும் அவர் ‘என்ன?’ என்றூ கேட்டார்.   உடனே நான் இசையமைக்க சந்தர்ப்பம் கேட்டு வந்தேன் என்றதும் அவர் இப்பொழுது எல்லாம் ஒன்றும் கிடையாது… ஏற்கெனவே நாங்கள் ‘அன்னக்கிளி’ படத்திற்கு இசையமைத்த இளையராஜாவைப் போடுவதாக முடிவு செய்துவிட்டோம்’ என்றார்.  உடனே நான் மெல்ல இளையராஜாவின் அண்ணன்தான் நான் என்று கூறியதும் அவரால் நம்பமுடியவில்லை.  பிறகென்ன… ராஜ உபசாரம்தான்.  எனக்குத் தண்ணீர் தரமறுத்தவனே எனக்கு டீ வாங்கிவர ஓடினான்” என்று பாஸ்கர் கூறி முடித்ததும் அவருக்கு நன்றி கூறி இளையராஜாவின் இளம் வயது நண்பரான ஆர். செல்வராஜ் அவர்களைத் தேடிப்போனோம்.  அங்கு அவர் சொன்ன செய்திகள் மேலும் நம்மை வியப்பில் ஆழ்த்தியது…. அவை…?

சந்திப்பு – நந்து

நன்றி : பேசும்படம், ஜூலை 1992

பகிர்வு நன்றி : திரு. பாலசுப்ரமணியன்

Monday, June 24, 2013

ஊரு சனம் தூங்கிருச்சு



பாடல்         : ஊரு சனம் தூங்கிருச்சு
படம்           : மெல்லத் திறந்தது கதவு
பாடியவர்       : எஸ். ஜானகி
எழுதியவர்     :
இசை          : இசைஞானி & மெல்லிசை மன்னர்

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு!
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே (2)

1.         குயிலு கருங்குயிலு மாமன் மனக் குயிலு
கோலம் போடும் பாட்டாலே!
மயிலு இளம் மயிலு மாமன் கவிக்குயிலு
ராகம் பாடும் கேட்டாலே
சேதி சொல்லும் பாட்டாலே!
ஒன்ன எண்ணி நானே
உள்ளம் வாடிப் போனேன்!
கன்னிப் பொண்ணுதானே,
என் மாமனே என் மாமனே
ஒத்தையிலே அத்த மக
ஒன்ன நெனச்சி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடயே
காலம் நேரம் கூடயே - ஊரு சனம்

2.         மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா!
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா
மாமன் காதில் ஏறாதா!
நெலாக் காயும் நேரம்
நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும்
இந்த நேரந்தான், இந்த நேரந்தான்
ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன்,
ஓலப் பாய போட்டு வச்சேன்
இஷ்டப்பட்ட ஆச மச்சான்
என்ன ஏங்க ஏங்க வச்சான் - ஊரு சனம்


‘மெல்லத் திறந்தது கதவு’ படத்திற்கு இசைஞானியும் மெல்லிசை மன்னரும் இணைந்து பணியாற்ற முடிவெடுத்த சம்பவத்தைப் பற்றி, திரு. ஏ.வி.எம். சரவணன் கூறியது தினத்தந்தி ‘வரலாற்றுச் சுவடுகளிலிருந்து..

இரண்டு இசை மேதைகள் இணைந்து இசையமைப்பது என்பது ஆச்சரியமான விஷயம்’. 1985ம் ஆண்டு ஒரு நாள் பாரதிராஜா திடீரென்று டெலிபோன் செய்தார். “சார்..! நானும் இளையராஜாவும் உங்களைப் பார்க்க வீட்டுக்கு வரலாம் என்றிருக்கிறோம்” என்றார்.

இருவரும் வந்தார்கள்.

”எம்.எஸ்.விஸ்வநாதன் இப்போது கொஞ்சம் சிரமத்தில் இருக்கிறார். அவருக்கு ஒரு படம் எடுத்து உதவி செய்தால் நன்றாக இருக்கும்” என்று யோசனை சொன்னார்கள். அப்போது நாங்கள் நிறைய படங்கள் எடுத்துக்கொண்டிருந்தோம். அந்த யோசனையை நான் உடனே ஏற்றுக்கொண்டேன்.

என் தந்தையாருக்கு மெல்லிசை மன்னரின் பாடல்கள் மட்டுமல்ல. அவர் பண்புகளும் மிகவும் பிடிக்கும். அவரது மனதில் நிறைந்திருந்த மனிதர்களில் எம்.எஸ்.வி.யும் ஒருவர். ஒருமுறை அப்பச்சி (ஏ.வி.எம்.) என்னை அழைத்து, ‘விஸ்வநாதனை மட்டும் என்றைக்கும் விட்டுவிடாதே. அவருக்கு எப்போது எந்த சிரமம் ஏற்பட்டு அது உனக்குத் தெரியவந்தாலும் அவருக்கு உதவி செய்யத் தயங்காதே” என்று சொன்னார். மெல்லிசை மன்னரை எனக்கும் மிகவும் பிடிக்கும். அவர் மீது எனக்கு மிகவும் மரியாதை உண்டு.

பாரதிராஜாவும், இளையராஜாவும் சொன்னதும், எம்.எஸ்.வி.க்கு உதவ வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்டப் படம்தான் ‘மெல்லத் திறந்தது கதவு’.

இளையராஜாதான் அந்தப் படத்திற்கு இசையமைப்பதாக இருந்தது. “நானும் எம்.எஸ்.வி. அண்ணாவும் சேர்ந்து இந்தப் படத்துக்கு மியூஸிக் பண்றோமே” என்று ராஜா கேட்டபோது எனக்கு அந்த ஐடியா பிடித்திருந்தது. இரண்டு இசைமேதைகளும் இணைந்து அந்தப் படத்தில் பணியாற்றினார்கள் என்பது தனிச்சிறப்பாக அமைந்தது” என்று குறிப்பிட்டிருந்தார்.

’ஊருசனம்..!’ என்ன ஒரு அழகான, இயல்பான வார்த்தை.  இருபது முப்பது வருடங்களுக்கு முன்னர் காதலித்த காதலர்கள் சமூகத்தைக் குறித்து அதிகம் கவலைப்பட்டார்கள் / பயப்பட்டார்கள். அவர்கள் காதல் ‘ஊர்” சார்ந்து இருந்தது.  “ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்”, “உன்னையும் என்னையும் வச்சு ஊரு சனம் கும்மியடிக்குது”, “ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்”, “எங்க ஊர் காதலைப் பத்தி” என்று நிறைய ”ஊர்” பாடல்களும், எங்க ஊரு பாடுக்காரன்/காவல்காரன் என்று படங்களும் இதற்குச் சான்று. 2000க்குப் பின்னர் காதல் என்பது காதலன் காதலி ஆகிய இருவருக்குள் ஏற்படும் பிரச்சனை மட்டுமே என்ற அளவில் சுருங்கிப் போயிற்று. ’ஊருசனம்’ போன்ற பாடல்களும் மறைந்துபோயிற்று.

கீபோர்டில் Chords தேட உட்கார்ந்ததில் ’கிர்ர்ர்’ராகிப் போனது. இணையத்தில் மேய்ந்து.. ஒரு Skeleton எடுத்து கொஞ்சம் நம்ம அறிவுக்கு எட்டிய வரை பட்டி-டிங்கரிங் பார்த்ததில் ஒரு வரிக்கு 3 Chords..! கண்டிப்பாய் இவற்றை விட Advanced Chords இருக்கும். தெரிந்தவர்கள் தெரிவிக்க. பாடல் முழுவதும் ஒரு இடத்தில் நில்லாமல் வரிக்கு வரி Chords அலைபாய்ந்துகொண்டே செல்லும் Sequence, பிரமிப்பு…!  Play பண்ணிப் பார்க்கும்போதே நான் மிகவும் ரசித்தது G# Minor’ல் போய்க்கொண்டே இருக்கும் பாடல், சரணத்தில் ‘ஒன்ன எண்ணி நானே’ வரியில் G# Major’க்கு Shift ஆகித் திரும்பும் இசைஞானி மந்திரம்.

ஊரு ச / G#m னம் / E  தூங்கிருச் / G# சு
ஊதக் / G# காத்தும் அடிச்சிருச் / C#m சு / E
பாவி ம / D#m னம் / F# தூங்கலை / B யே / G#m
அதுவும் / E ஏனோ / D# புரியலை / G#m யே

1.         / G#m குயிலு கருங்குயிலு மாமன் மனக் குயிலு
கோலம் போடும் / B பாட்டாலே / G#m
/ F# மயிலு இளம் மயிலு மாமன் கவிக்குயிலு
/ B ராகம் பாடும் / G#m கேட்டாலே
/ B சேதி சொல்லும் / G#m பாட்டாலே!
/ G# ஒன்ன எண்ணி நானே
/ C# உள்ளம் வாடிப் / F# போ / B னேன்!
/ D#7 கன்னிப் பொண்ணு / B தானே,
/ F# என் மாம / G#m னே / F# என் மாம / G#m னே
ஒத்தையி / G#m லே / E  அத்த ம / G#
ஒன்ன / G# நெனச்சி ரசிச்ச ம/ C#m / E
கண்ணு ரெண் / D#m டும் / F# மூடலை / B யே / G#m
காலம் / E நேரம் / D# கூடலை / G#m யே

பாடலில், இசைஞானி தன்னுடைய செல்லக்குழந்தையான வயலினை எப்படி ஒரு இடத்தில் கூட பயன்படுத்தாமல் விட்டார் என்பது ஆச்சரியமே. சில மாதங்களுக்கு முன் ராஜ் டி.வி.யின் ‘Beach Girls’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரு. கங்கை அமரன் அவர்கள் தெரிவித்த செய்தி, இந்தப் பாடலின் மூன்றாவது BGM’ல் வரும் Keyboard Punches எல்லாம் வாசித்தது அந்த சமயம் இசைஞானியிடம் பணியாற்றிக்கொண்டிருந்த ஏ.ஆர்.ரகுமான்.

சமீபத்தில் நண்பர் நாகசொக்கநாதன் எழுதிய “இளையராஜா எனும் பாடலாசிரியர்” எனும் பதிவில் ட்வீட்டர் Vijay SA அழகான பின்னூட்டம் ஒன்றைக் கொடுத்திருந்தார்.
         
MSV ஐ விட திறமையில் பலபடிகள் ராஜா மேல் தான் என்றாலும், ராஜாவுக்கு MSV குரு, முன்னோடி, வழிகாட்டி. எனவே MSVஐ எப்போது சந்தித்தாலும், ராஜா அவராகவே அணுகிப்பேசுவார், குருபக்தியை வெளிக்காட்டுவார். ராஜா நல்ல, திறமையான, நேர்மையான சிஷ்யராக நடந்துகொள்வதால் MSVக்கும் ராஜாவால் பெருமை தான், சந்தோஷம் தான்! எனவே தான் இருவருக்கும் இடையில் ஒரு அழகான குரு-சிஷ்யன் உறவு நீடிக்கிறது! குருவும் சிஷ்யனும் இணைந்து இசையமைக்கும் அதிசயமும் நடைபெறுகிறது!

MSV குரு என்பதால் அவர் இறங்கிவந்து ராஜாவிடம் கேட்கமுடியாது. ஆனால் ராஜா சிஷ்யர் என்பதால் MSVயிடம் சென்று அனுமதி கேட்டு அதன்பிறகே இருவரும் சேர்ந்து இசையமைக்கிறார்கள்”.

     இசைஞானிக்கும் மெல்லிசை மன்னருக்குமான அற்புதமான உறவை இதைவிட அழகாகச் சொல்லிவிடமுடியாது. 

     இன்று (24-06-2013) தனது 84வது பிறந்தநாளைக் காணும் மெல்லிசை மன்னருக்கு என் இனிய பிறந்தநாள் வணக்கங்கள்.

நன்றி: ’வரலாற்றுச் சுவடுகள்’ தினத்தந்தி .