Monday, April 7, 2014

மதுரையில் ஒரு சங்கீதத் திருநாள்ஏப்ரல் 5ம் தேதி மாலை 5 மணி.  மதுரை .. கோரிப்பாளையம்.!  சித்திரைத் திருவிழா முன்னமே துவங்கிவிட்டதோ என்று எண்ணவைக்குமளவிற்குக் கூட்டம்.  ’ஆயிரம் இசையமைப்பாளர்கள் வரலாம்.. எங்கள் தலைவனின் இசை ஓடாத படங்களை எல்லாம் ஓடவைத்திருக்கிறது.  இனியொரு கலைஞன் அவரைத் தாண்டி உலகில் பிறந்து வந்துவிடமுடியுமா? என்று ஒரு ரசிகர்கூட்டம் தொலைக்காட்சி கேமரா முன்நின்று இசைஞானியின் பெரிய போஸ்டர் ஒன்றுடன் கர்ஜித்துக்கொண்டிருந்தது. 

தமுக்கம் மைதானம் சுவாசிக்கத் திணறத்தொடங்கியிருந்தது. தமுக்கம் கண்ணில் பட்டவுடனேயே, பள்ளிப்பருவத்தில் அம்மா அப்பாவுடன் வருடந்தோறும் சென்ற சித்திரைப் பொருட்காட்சியின் ஜயண்ட் வீலும், டெல்லி அப்பளமும், பஞ்சுமிட்டாயும்...,  அமெரிக்கன் கல்லூரியில் படித்தபோது, தமுக்கத்தின் எதிரில் உள்ள டீக்கடைகளில் இசைஞானியின் பாடல்களைக் கேட்டுக்கொண்டே திரிந்து வளர்ந்த காலங்களும் நினைவில் வரத்துவங்கின.  அசைபோட்டுக்கொண்டே பார்க்கிங்கில் வண்டியை விட்டு மைதானத்தில் நுழைந்தேன்.

நான் எதிர்பார்த்திருந்ததை விட ஏராளமான இருக்கைகள்.  மக்கள் ஆயிரக்கணக்கில் ஒவ்வொரு வழியாகவும் வந்து இருக்கைகளை ஆக்ரமிக்கத் துவங்கியிருந்தனர்.  எப்படியாவது மேடையின் அருகில் சென்று விடவேண்டும் என்று பல ரசிகர்கள் கொத்துக்கொத்தாக இருக்கைகளைக் கையில் அள்ளிக்கொண்டு தடுப்பு வேலிகளைத் தாண்டிக் குதித்து முன்னால் சென்று கொண்டிருந்தனர்.  மைதானத்தின் இடப்புறத்தில் இருந்த வீடுகளின் மொட்டை மாடிகளிலும் கூட கூட்டம் நிரம்பத் துவங்கியிருந்தது.  கார்த்திக்ராஜா அவ்வப்பொழுது மேடைக்கு வந்து மைக் பிடித்து ரசிகர்களை அமைதிகாக்கும்படிக் கேட்டுக்கொண்டே இருந்தார்.

சூரியன் மறைந்து, மேடையின் மேலாக அழகிய பிறைநிலா தோன்றத் துவங்கியிருந்தது. 7 மணி நெருங்கவும், சுகாசினி மேடையேறி வந்திருந்தவர்களை வரவேற்க, இசைக்குழுவினர் வந்தமர்ந்தனர் தத்தமது இருக்கைகளில்.

வரவேற்புரை, பொன்னாடைகள் சம்பிரதயாங்களைத் தொடர்ந்து கார்த்திக்ராஜா மைக் பிடித்துநமச்சிவாய வாழ்கவைத் துவக்கினார். பல்லவியை முடித்து, ‘எங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்’ என்று கூறி இசைஞானியின் ஆர்மோனியத்தை மேடைக்கு வரவழைத்தார்.  கோரஸ் தேவதைகள்குருப்ரம்மா குரு விஷ்ணுமந்திரம் பாடி முடிக்கவும் வெண்புகையின் நடுவே மேடையில் உதித்தார் ராகதேவன்.  நேராக வந்து தமது ஆர்மோனியத்தில் விரல்கள் பதித்துத் துவக்கினார்ஷிவஷத்யாயித்தோயதி பவதி’..! இசைவேந்தனின் குரல் கேட்டத் தமுக்கம் ஆர்ப்பரித்து அடங்க, ’ஜனனி ஜனனிதுவங்கியது. 

இசைஞானி பாடி முடிக்கவும், ’அடுத்து வரும் பாடல்போன்ற அறிவிப்புத் தொல்லைகள் ஏதுமின்றிஹர ஹர ஹர ஹர மாஹாதேவ்துவங்கியது.  கண்கள் மூடி, தலையைச் சிலுப்பி. ஓம் ஷிவோஹம்பாடலைப் பாடிய விஜய் ப்ரகாஷின் முகத்தை உற்று நோக்கியபடி நின்றுகொண்டிருந்தார் இசைஞானி.

பாடல் முடியவும் மீண்டும் மைக் பிடித்தார் கார்த்திக்ராஜா.  மேடையின் பின்னணியில் சின்னத்தாய் அம்மாவின் புகைப்படங்கள் ஒளிர, ‘அம்மா என்றழைக்காதபாடலைத் துவக்கினார்.  பல்லவியை மட்டும் பாடியவர் ஹரிசரணிடம் சரணத்தைக் கொடுத்து, மீண்டும் பல்லவியில் இணைந்துகொண்டார். 

பாடலின் முடிவில் விசில் சப்தங்கள் கேட்க இசைஞானி ‘இது மற்ற நிகழ்ச்சிகள் போல அல்ல.  இங்கு நல்ல இசையைக் கேட்க வந்திருக்கிறீர்கள்.  இங்கே இருக்கும் கலைஞர்கள் உங்களுக்காகப் பல நாட்கள் பயிற்சி எடுத்துக்கொண்டு வந்திருக்கின்றனர்.  நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை எனக்குக் கொடுக்கும் மரியாதை.  பாடலின் முடிவில் கைதட்டவேண்டுமானால் தட்டுங்கள்.  விசில் அடிக்க வேண்டாம்’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

எனக்குத் தெரிந்தவரையில், எந்தக் கொண்டாட்டமாக இருந்தாலும் விசில் சப்தங்கள் மதுரையை அதிரவைக்கும்.  அது தியேட்டராக இருந்தாலும், இசைநிகழ்ச்சியாக இருந்தாலும், அரசியல் கூட்டங்களாக இருந்தாலும், கல்லூரி விழாக்களாக இருந்தாலும் விசில் சப்தங்கள் இன்றி நிகழ்ச்சி நடைபெறுவது வெகு அபூர்வம்.  ஆனால் இசைஞானியின் ஒரே வேண்டுகோளை வேதவாக்காக ஏற்று அந்த நொடியில் அடங்கிய விசில் சப்தம் நிகழ்ச்சி முடியும் வரையில் கேட்கவே இல்லை.  இசையைக் கொண்டாடுவதில் மட்டுமல்ல..  மதிப்பதிலும் எங்களை மிஞ்ச ஆளில்லை என்று காட்டினர் மதுரை ரசிகர்கள்.

முந்தி முந்தி விநாயகனே (கரகாட்டக்காரன்)பாடகர்களை சுகாசினி மேடைக்கு அழைக்க, மனோவும் சித்ராவும் துவக்கினர்.  Rhythm Section’ல் திரு சுந்தர் அதிரவிட்ட மேளத்திற்கு, ‘தேனி பெரியகுளம் தென்மதுர ஜில்லாவில் இருந்து வந்திருந்த மொத்த ஜனங்களும் ஆட்டம் போடாமல் அமைதியாக இருந்து ரசித்தது ஆச்சரியத்தைத் தந்தது.

அமுதே தமிழே (கோயில் புறா) – ‘ஸா .. ஸரீ.. ஸரிகாஎன்று இசைஞானி துவக்க, பாடகிகள் சேர்ந்துகொண்டனர்.  பல்லவியில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை ஸ்ரீவர்த்தினியைப் பாடச் செய்தார். பல்லவியின் முடிவில்தமிழே நாளும் நீ பாடுதிருத்தத்தில், ‘அந்தப் பொண்ணு அப்படியா பாடினாள்? எங்கே பாடு?” என்று மீண்டும் சேர்ந்துகொண்டார்.  பாடல் முடிந்தவுடன், Audio பக்கம் திரும்பியவர், ‘நான் பாடும்பொழுது ஒரு Boom Sound வந்துகொண்டே இருக்கிறதுஎன்றவர், ‘நான் சொன்னதற்காக அவர்கள் எவ்வளவு அமைதியாக இருந்து பாடல்களை ரசிக்கின்றனர்? இங்கேயிருக்கும் இசைக்கலைஞர்கள் அவர்களின் திறமை எல்லாம் காட்டி அவர்களிடம் பாராட்டுப் பெற வேண்டாமா?  இப்போ இதை நான் Point out பண்ணியதால் நீங்கள் எனக்கு இடைஞ்சல் செய்வதாக அவர்கள் நினைத்துவிடுவார்கள்.  Volume கம்மியாக வைத்தாலும் பரவாயில்லை.. அவர்கள் அமைதியாக இருந்து கேட்பார்கள்என்றார்.

காற்றில் வரும் கீதமே (ஒருநாள் ஒரு கனவு): சுகாசினி இசைஞானியிடம், ‘Sir..இந்தப் பாடலைப் பாடப் போகும் பாடகி மும்பையில் இருந்து வந்திருக்கிறார்.  நான் அவரிடம் உங்களை என்ன சொல்லி மேடையில் அறிமுகப்படுத்தவேண்டும் என்று கேட்டேன்.  அதற்கு அவர், எதுவுமே வேண்டாம்.  ராஜா Sir’க்கு என்னுடைய நன்றியை மட்டும் சொல்லுங்கள்.  நான் எத்தனையோ பாடல்கள் பாடியிருந்தாலும், ‘அழகிபடத்தில் பாடியபாட்டுச் சொல்லிபாடல்தான் எனக்குத் தேசிய விருது பெற்றுத் தந்ததுஎன்றார், என்று சொல்லவும்.. மேடைக்கு வந்தார் சாதனாசர்க்கம்.  ஹரிஹரன் தனது வழக்கமான ஆலாபனையுடன் துவக்கித் தர, ‘காற்றில் வரும் கீதமேதுவங்கியது.  திறந்தகதவு இங்கு மூடாது,. இங்கு சிறந்த இசை விருந்து குறையாது.. என்ற வரிகளில் இணைந்துகொண்ட இசைஞானி, “இது போல் இல்லம் எது சொல் தோழி?” என்று தன் இசைக்குழுவினரைக் காண்பித்துப் புன்னகைத்தார்.  பாடலின் முடிவில் வரும்பா.. .. ரீ.. கா..” ஸ்வரங்களில் தபலாக் கலைஞர்களின் வேகம் குறைந்து, தாளம் ஒரு சில இடங்களில் சிதற, பாடல் முடிந்ததும், “ஸ்வரம் பாடும்பொழுது இப்படி வாசித்தால் எப்படிப் பாடமுடியும்? ”நடைசரியாக வரவேண்டாமா? என்றுச் செல்லமாகக் கடிந்துகொண்டார்.  இரண்டாம் சரணம் முடிந்து பல்லவியின் பின்னணியில் வரும் Flute overlapping’ திரு. நெப்போலியன் வாசித்த விதம் செவிகளுக்குக் குளுமை. 

இது சங்கீதத் திருநாளோ (காதலுக்கு மரியாதை)ஹரிஹரனும் பவதாரணியும் இணைந்து பாடினர்.  பாடல் முடிந்ததும், இந்தப் பாடல்களைத் தேர்வு செய்தது கார்த்திக் ராஜா என்று சுகாசினி தெரிவிக்க, ‘கார்த்திக்தான் இந்த இசைநிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்குக் காரணம்; நம் மண்ணின் மக்களுக்கு இந்த இசையைக் கொண்டு வந்து சேர்க்கப் பெரும் முயற்சி எடுத்தது கார்த்திக்தான்என்று பாராட்டினார் இசைஞானி.

மாங்குயிலே பூங்குயிலே (கரகாட்டக்காரன்)மனோவும் சித்ராவும் இணைந்து பாடினர்.  மற்ற எந்த இசைநிகழ்ச்சிகளிலும் கேட்க இயலாத அற்புதமான பல விஷயங்களில் ஒன்று.. இசைப்பிதாவின் மெய்ச்சிலிர்க்கவைக்கும் Strings Section.  பாடலின் Prelude’ல் வரும் அந்த Grand Strings Orchestration அத்தனை சிறப்பாக ஒலிபெருக்கிகளில் வந்து சேரவில்லை.  பின்னால் அமர்ந்திருந்த எங்களுக்கு மட்டும்தானா அல்லது மொத்த மைதானத்திலும் அப்படி இருந்ததா என்று தெரியவில்லை.  தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்யும்போதுதான் கேட்கவேண்டும்.

முத்துமணிமால (சின்னக்கவுண்டர்)மனோவும் ஸ்ரீவர்த்தினியும் இணைந்து பாடினர். தபலாக் கலைஞர்களும் Flute நெப்போலியனும் சிறப்புச் செய்தனர்.

ஆயிரம் தாமரை (அலைகள் ஓய்வதில்லை) மிருதங்கத்தின் ஆர்ப்பாட்டத்துடன் பாடல் துவங்க நெடுநாட்கள் கழித்துத் திரு எஸ்.என். சுரேந்தர் குரலைக் கேட்கும் வாய்ப்புக் கிட்டியது.  அடிக்கடி ராகம் வந்து ஆளைக் குடிக்கும்வரிகளில் எஸ்.என். சுரேந்தர் சிலிர்க்க வைத்தார்.  பாடகி அனிதா உடன் இணைந்து பாடினார்.

சின்னத்தாயவள் (தளபதி) : ரயிலின் கூவலை திரு. நெப்போலியன் தன் குழலில் இருந்து கசியவிட, தில்ரூபாவில் இருந்த திருமதி. சரோஜாவின் விரல்களில் இருந்து சுந்தது மனதைப் பிழியும் அந்த Prelude..! ’ம்ம்ம்ம்என்று Humming’ சாதனா சர்க்கம் துவக்கவும், மைதானத்தில் அடித்த காற்றின் சதியில் Keyboard’ல் இருந்து வந்த ஓசையினால் பாடல் நிறுத்தப்பட, சில மணித்துளிகளுக்குப் பின் அந்த அற்புதமான Prelude’ கேட்கும் வாய்ப்பு மீண்டும் கிட்டியது. இசைஞானியின் பெற்றோருடைய புகைப்படங்களின் பின்னணியில் சாதனா பாடலை அழகாகப் பாடினார்.

நீ தூங்கும் நேரத்தில் (மனசெல்லாம்): ஹரிஹரன் தனது ஆலாபனையுடன் துவங்க, இசைஞானி மீண்டும் மேடைக்கு வந்தார்.

கீதம் சங்கீதம் (கொக்கரக்கோ): எஸ்.என். சுரேந்தரும் ஸ்ரீவர்த்தினியும் இணைந்து பாடினர்.  வாசமான முல்லையோ? வானவில்லின் பிள்ளையோ’?’ வரியின் முடிவில் இம்முறை தெளிவாக Strings கேட்டது.  Sound Engineer வாழ்க.  சரணத்தின் முடிவில் வரும்........’ ஆலாபனையில் தான் யாரென்பதைக் காண்பித்தார் எஸ்.என்.சுரேந்தர்.  

இதனைத் தொடர்ந்து இசைஞானியின் ரசிகர் மன்றம் அதிகாரபூர்வமாகத் துவக்கி வைக்கப்பட்டது.  பவதாரணி தலைமையில் இயங்கும் இந்த மன்றத்தின் வாயிலாக பல்வேறு நற்பணிகள் செய்யப்படவிருக்கின்றன என்றும், இசைஞானியின் 71வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 71,000 மரக்கன்றுகள் ரசிகர் மன்றத்தின் சார்பாக நடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சின்னமணி குயிலே / இஞ்சி இடுப்பழகி : மனோ, ‘ ப்ரியா ப்ரியாஎன்று துவக்க, ‘சின்னமணிக்குயிலேவின் தொடர்ச்சியாக வரும் Piece இசைக்கப்பட்டது. திகைத்துத் திரும்பியவர்.. ‘என் ப்ரியா ப்ரியாஎன்று தொடர, ‘ம்ம்க்கும் க்கும்..” என்று துவங்கிஇஞ்சி இடுப்பழகாவுக்குத் தாவினார் பாடகி Priyu. இஞ்சி இடுப்பு..?? ‘யாரு இவனா?’ என்று மனோவைக் காண்பித்து இசைஞானி சிரித்து, ‘எங்கே பாடு..?” என்று மனோவைச் சொல்லவும், ’இஞ்சி இடுப்பழகிஎன்று அவர் பாட மீண்டும் தெலுகில் .. ‘ஏமிரா? என்ன பாடுற? மேடையேறினால் எதுவும் பாடிடுவியா?” என்று சிரித்துக்கொண்டே கலாய்க்கத் துவங்கினார் இசைஞானி. 

பாடலின் சிறப்பு சந்தேகமில்லாமல் பாடகி Priyu Krishnan’தான்.  ஜானகி அம்மா போல் கண்டிப்பாகப் பாடிவிடமுடியாது என்பது தெரிந்த விஷயம்தான் என்றாலும், ஜானகியின் குரலை Imitate செய்ய முயலாமல் தனது குரலிலேயே பாடினார்.  இசைஞானி அருகில் இருக்கிறார் என்ற பதட்டமோ, அழுத்தமோ துளியும் இன்றி மிகவும் இயல்பாக இஞ்சி இடுப்பழகாவின் பல்லவியைப் பாடினார்.  பல்லவி முடியவும் மனோநில்லாத வைகையிலேஎன்றுசின்னமணிக்குயிலேவின் சரணத்தைப் பாட, அதனைத் தொடர்ந்து, ” தன்னந்தனித்திருக்க தத்தளிச்சு நான் இருக்கஎன்றுஇஞ்சி இடுப்பழகாவின்சரணத்தை Priyu பாட, சரணம் முடியவும், பெண்குரலில் மனோ, ‘இஞ்சி இடுப்பழகிபாட, ‘மறக்குமா மாமன் எண்ணம்?’ என்று கீழ் ஸ்தாயியில் ஆண்குரலில் Priyu பாட இசைஞானி முகமெல்லாம் புன்னகையுடன் ரசித்துக்கொண்டிருந்தார்.

பாடல் முடிந்ததும், ‘என்ன பாடின? எங்கே சின்ன மணிக்குயிலே பாடுஎன்று இசைஞானி மனோவைக் கேட்க.., ‘இஞ்சி இடுப்பழகியில் இருந்து வெளியே வரமுடியாமல் அந்த Tune’லேயேசின்னமணிக்குயிலேஎன்று இருமுறை பெண்குரலிலேயேத் துவக்கி.. நிறுத்தி.. சிரித்து.. ‘உன் வாய்ஸ்ல பாடுடாஎன்று இசைஞானியின் அதட்டலுக்குப் பின், தனது குரலிலேயே, ‘சின்னமணிக் குயிலேவின் பல்லவியை மீண்டும் துவக்கினார். ’சின்னமணிக்குயிலேவை மனோவும்இஞ்சி இடுப்பழகாவை Priyu’வும் மாற்றி மாற்றி Overlap செய்து பாடி முடித்தனர். 

செம்ம ஜாலி மூடில் மைக்கைக் கையிலெடுத்த இசைஞானி..

மனோ இங்கே வா..! ‘எங்கே..?? சின்னமணிக்குயிலே எப்படிப் பாடினாய்? அது நீ பாடிய பாட்டா?”

அது அண்ணன் பாடியது

அண்ணன்னா யாரு?’

எஸ்.பி.பி. அண்ணன்

அவர் பாடின பாட்டை நீ ஏன் பாடின? யாரைக் கேட்டுப் பாடின? மறுபடியும் அந்தப் பாட்டைப் பாடு.. எப்படி நீ பாடுறன்னு கேட்கணும்

பாடல் வரிகளைக் காகிதங்களைத் திருப்பித் தேடத் துவங்கிய மனோவிடம்..

என்ன தேடுற? பாட்டெல்லாம் இப்பத்தான் தேடணுமா? இவ்ளோ நேரம் பாடாம கலாட்டா பண்ணிட்டு இருந்த..?? பாடு.

மனோசின்னமாணீக் குயிலேஎன்று பல்லவியை மீண்டும் துவக்க,

அதென்ன ..?? சின்ன மாணீக் குயிலே?’ ‘சின்ன மணிக்குயிலேன்னு பாடு.. ! :-)))

மனோ, ம்ம்.. என்று மீண்டும் சுருதி பிடித்து, ‘சின்ன மணிக்குயிலேஎன்று கையை முன்னால் நீட்டி விரல்களால் காற்றில் கோலம் போட்டபடி சங்கதிகளைப் பாட..

அது ஏன் .. கையை இப்படி இப்படி பண்ற?’ என்று அவரை இசைஞானி Imitate செய்ய.. தமுக்கமே சிரிப்பில் குலுங்கியது.

சாமி சரணம்போய்ட்டு வா என்று இசைஞானி சொல்லவும், விட்டால் போதுமென்று நழுவினார் மனோ.

மேடையேறினார்கள் இயக்குநர்கள் மிஷ்கினும், பாலாவும்.  பாடப்போறியா? பேசப்போறியா?’ என்று கேட்ட இசைஞானியிடம் பாலா, ‘வந்தவுடனேயே.. இது பேசுற மேடையில்ல.. பாடுற மேடைன்னு சொல்லிட்டீங்க.. நான் பாடுறது பேசுறது ரெண்டுமே ஒரே மாதிரிதான் இருக்கும்.  ஆனாலும் உங்கள் அனுமதியுடன் பேசவேண்டும். ஒரு முக்கியமான வலைப் பதிவு செய்யவேண்டும். ‘தாரை தப்பட்டைஎன்று ஒரு படம் பன்ணிக்கொண்டிருக்கிறேன்.  அந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் இசைஞானி அவர்கள்தான்..  அதைவிட அற்புதமான விஷயம் .. இது அவருடைய ஆயிரமாவது படம்.  அதைவிட மதுரைக்காரர்களாகிய நமக்குப் பெருமையான விஷயம்.. அவரின் இந்த ஆயிரமாவது படத்தை ஒரு மதுரைக்காரன் இயக்கியிருக்கிறேன்.. மதுரைக்காரன் சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறான். நான் என்ன பாக்கியம் செய்தேனோ.  இளையராஜா Sirக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. மதுரை மக்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள். நன்றிஎன்று கூறி முடித்து இசைஞானியின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டார்.

இவங்க ரெண்டு பேரும் மதுரைக்காரங்க.. நான் எந்த ஊர்க்காரன் என்று தெரியவில்லைஎன்று துவக்கினார் மிஷ்கின்.. ‘”நான் இரண்டு படங்கள் இயக்கி முடித்தபின்னர், நந்தலாலாவில்தான் இசைஞானியிடம் போய், ‘அப்பான்னு நின்றேன். இந்த உலகத்திலேயே நான் யாருக்குமே பயந்ததில்லை.  இவரைத்தவிர.  இப்போ பாலாவுக்கு பயப்படுகிறேன்.  ஏனென்றால் இவர்கள் இரண்டு பேரிடமும் அவ்வளவு உண்மை.. அவ்வளவு நேர்மை.  நான் எத்தனை படங்கள் இயக்குவேன் என்று தெரியாது.  ஆனால் நான் இயக்கும் படங்களுக்கு இவர் இசையமைத்தால் மட்டுமே அது நல்ல படம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நிறைய பேட்டிகளில் அப்பாவைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறேன். எனக்கு அவரை அப்பா என்று சொல்வதற்கு உரிமை இருக்கிறது. நீங்கள் எல்லாம் முந்நூறு அடி தள்ளியிருந்து அவர்களைப் பார்க்கிறீர்கள்.  நாங்கள் தினமும் மூன்று இஞ்ச் தொலைவில் இருந்து அவரைத் தொட்டுக்கொண்டே இருக்கிறோம்.  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிரகாரத்தினுள் பூசாரி மட்டும் சென்று சாமியைத் தொடுவது போல், நானும் பாலாவும் தினமும் அவர் அருகில் இருந்து அவரைக் கும்பிட்டுக்கொண்டிருக்கிறோம்.  நீங்கள் உங்களுடைய குழந்தைகளுக்கு ஐந்து கோடி ரூபாய்.. பத்து கோடி ரூபாய் .. என்று Invest பண்ண அவசியமில்லை.  இவருடைய 100 பாடல்களை சி.டி. போட்டு அவர்களுக்குக் கொடுத்துச் செல்லுங்கள்.  அதுதான் நீங்கள் அவர்களுக்குச் செய்யும் உண்மையான Investment.  ஒரு எதிரி நாட்டுடன் போர் மூண்டு விட்டால் கூட இவரது பாடல் ஒன்றை இசைக்கவிட்டால் அவன் துப்பாக்கியைக் கீழே வைத்துவிட்டு அமைதியாக உட்கார்ந்துவிடுவான். Music Can Change People. ஒரு கடல் எவ்வளவு ஆழம் என்று எப்படி சொல்லிக்கொண்டே இருக்கலாமோ அதைப் போல இவரைப் பற்றியும் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.  எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை.  அப்படி ஒருவர் இருந்தால் அவரிடம் நான், ‘என் ஆயுளில் ஒரு ஐம்பது வருடத்தை எடுத்து அப்பாவுக்குக் கொடுத்துவிடுஎன்று சொல்லிவிடுவேன்.  நன்றி.” என்று முடித்தார்.

தொடர்ந்து இசைஞானி, “பாலா முதல் படம் பண்ணும்பொழுது அவரிடம், ‘டேய்.. ஹீரோக்களுக்கெல்லாம் படம் பண்ணாதே.  நீ டைரக்டராக நிற்க முடியாதுஎன்று கூறினேன்.  அதை இன்றுவரைக் கடைபிடித்து வருகிறார்.  நல்ல திரைப்படங்களைத் தருகிறார்என்று கூறவும் பாலா, ‘மதுரை மக்கள் சார்பாக நான் உங்களைக் கேட்கிறேன்.  எனக்கு இசையமைக்கும் படத்தில் ஒரு பாடலாவது உங்கள் குரலில் பாடித் தரவேண்டும்என்று வேண்டுகோள் வைத்தார்.

பாடல்கள் தொடர்ந்தன..

கானக்கருங்குயிலே (சேது) மீண்டும் Priyu Krishnan.  இசைஞானியின் கூடவே இருந்து அவரின் செல்லப்பிள்ளையாகிவிட்டாரோ என்று தோன்றுமளவிற்கு இம்முறையும் கொஞ்சமும் பதட்டமில்லை.  ஊரு சனம் மூக்குல வெரல வைக்கும்வரிகளில் சங்கதிகள் அபாரம்.  சேட்டை எல்லாம் செய்யிறது சின்னச் சின்னப் பருவம்உச்சஸ்தாயியில் பாடியபொழுது இவரின் உடல்மொழி அற்புதம்.  கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் கடினமான இப்பாடலை அநாயசமாகப் பாடி முடித்தார்.  இந்த Genre’ல் இவருக்குப் பாடல்கள் இன்னும் நிறைய அமைய வேண்டும்.   உடன் இணைந்து பாடகர் திரு. வாசு அவர்கள் பாடினார்.

மேடையேறினார் ப்ரகாஷ்ராஜ்.  ஹாய் செல்லம்.. என்று சிரித்தவர், “‘மதுரைக்கு வந்தவுடனேசெல்லம்னு சொல்லிடணும்.  மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.  உன் சமையலறையில்என்று ஒரு படம் இயக்கிக்கொண்டிருக்கிறேன். அதில் மதுரை மல்லிப்பூ இட்லியைப் பற்றி அற்புதமான ஒரு பாடல் போட்டிருக்கிறார்.  அவரை ஸ்டுடியோவில் நிறைய முறை பார்த்திருக்கிறேன்.  ஆனால் இப்படி ஒரு அழகான இரவில், இத்தனை ஆயிரம் மக்களுக்கு மத்தியில் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  இன்று அவருடைய Fans Club துவங்கப்பட்டது மிகவும் சந்தோஷமான விஷயம்.  இது ஒரு இனம்.  ராஜா சாரின் ரசிகர்கள் என்ற இனம்.  நான் கிட்டத்தட்ட 30 வருடங்களாக பல்வேறு மொழிகளில் நடித்து ஒரு நடிகனாகவே இருந்துவிட்டேன்.  இரு படங்களை இயக்கியிருக்கிறேன்.  ‘’மானசரோவர்’.. புண்ணியநதி என்று சொல்லுவார்களே.. ஐயாவிடம் செல்வது ஒரு புண்ணியநதிக்குச் செல்வதைப் போலத்தான். 

உன் சமையலறையில்தெலுகு ஆடியோ ரிலீஸ் விழாவில் ஒருவர்ப்ரகாஷ்ராஜ் உடன் வேலை பார்த்த அனுபவம் உங்களுக்கு எப்படி இருந்தது?” என்று இவரிடம் கேட்டார்.  நான் உடனே, கேள்வி கேட்டவரிடம், ‘அறிவிருக்கிறதா உனக்கு?  அவரிடம் இப்படிக் கேட்கலாமா? இவர் ஒரு புண்ணியநதி.  இவர் இருந்த இடத்திலேயேதான் இருப்பார்.  என்னைப் போல லட்சக்கணக்கான மக்கள் வந்து போய்க்கொண்டிருப்போம்.  அவரைக் கேட்காதே.  என்னைக்கேள். .. அவருடன் வேலை பார்த்த அனுபவத்தைஎன்றேன்.  என் படத்துக்கு இவர் இசையைக் கொடுத்ததை விட, எனக்குப் பொறுமையை, வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்ததுதான் அதிகம்.  அதற்கு அவருக்கு என் நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.  என் படத்தின் வேலை சம்பந்தமாக அவரது ஸ்டுடியோவிற்குச் சமீபத்தில் சென்றிருந்தேன்.  அங்கே பாலா படத்திற்குப் போட்ட ஒரு பாடலைக் கேட்டேன்.  அழுதுவிட்டேன்.  அப்படி ஒரு Purity .. அந்தப் பாடலில்.  கேட்டு முடித்ததும், அவர் கால்களில் அப்படியே விழுந்துவிட்டேன்.  இசைஞானியின் 1000மாவது படத்தை இயக்கும் தகுதி பாலாவிற்குத்தான் இருக்கிறது.  அப்படி ஒரு அற்புதமான படைப்பாளி.  இந்த மேடையில் எனக்கு வாய்ப்புத் தந்ததற்கு நன்றிஎன்று கூறி முடித்து யுவனை மேடைக்கு அழைத்தார்.

போட்டுவைத்தக் காதல் திட்டம் (சிங்காரவேலன்) : மேடையேறினார் யுவன்.  யுவனைப் பார்த்துச் சிரித்த இசைஞானி, ‘என்ன யுவன்? என்ன பாட்டுப் பாடப்போற? உன் காட்டுல மழை பெய்யுதுன்னா? என்றார். ‘உங்களோட பாட்டுதான்.. நம்ம பாட்டுதான்என்று யுவன் பதில் கூற Drums முழங்கத் துவங்கியது பாடலின் Prelude.  யுவன் சமீப காலங்களில் மேடைகளில் பாடியநினைவோ ஒரு பறவை’, ‘ராஜா கைய வச்சாபாடல்களைப் பெரிதாக என்னால் ரசிக்க முடிந்ததில்லை.  சொல்லப்போனால் இந்த உச்சஸ்தாயி பாடல் யுவனுக்கு எதற்கு என்றுகூடத் தோன்றியது.  என் நினைவைப் பொய்யாக்கினார் யுவன்.  நூலாடை சூடிக்கொள்ளும்.. கோலாரின் தங்கப்பாளம்உயரத்தில் கூடக் குரல் பிசிறவில்லை.  அற்புதம்..! பாடலின் முடிவில் கார்த்திக் ராஜாவும் உடன் இணைந்து பாடினார். 

போடா போடா புண்ணாக்கு (என் ராசாவின் மனசிலே): அனிதா பாட வந்தார். இடையில் வரும் ராஜ்கிரணின் உரையாடலுக்குத் தயாராய் பாடகர் செந்தில்தாஸ் மைக் பிடித்திருந்தார். ‘ ஏன்டா? படிக்கிறதெல்லாம் பாட்டாயிடுமாடா? பாவலர் வரதராசன் பாட்டக் கேட்டா காட்டுப் பயலுக்குக் கூட புத்தி வந்துடும்…. ..” என்றவர் தொடர்ந்து, ‘நம்ம இசைஞானி ஐயா பாட்டைக் கேட்டா கிராமத்து மக்களுக்குப் புடிக்கும்” என்று சொந்த வரிகளைப் போட்டுத் தொடர, இடைமறித்த இசைஞானி, ‘என்னது? கிராமத்து மக்களுக்குப் பிடிக்குமா? அப்போ மத்தவங்களுக்குப் பிடிக்காதா?” என்று கேட்க, பதறிய செந்தில்தாஸைப் பார்த்து, ‘பேச வந்ததைப் பேசு’ என்று சிரித்துக்கொண்டே கூறப் பாடல் தொடர்ந்தது.

தென்மதுரை வைகைநதி (தர்மத்தின் தலைவன்): மதுரையில் நடக்கும் நிகழ்ச்சியில் தென்மதுரை பாடல் இல்லாமலா? ஹரிசரணும் ஸ்ரீவர்த்தினியும் சிறப்பாய்ப் பாடினர்.

ஆறும் அது ஆழமில்ல (முதல் வசந்தம்): ’ஜனனி ஜனனி’யில் துவக்கியபின்னர் இசைஞானி பாடிய தனிப்பாடல்.  ராகதேவனின் குரலில் உள்ளம் ஆகாயத்தில் கோட்டை கட்டி அந்தரத்தில் தோட்டம் போட்டு மகிழ்ந்தது.  பாடல் முடிந்ததும் ”தவில் வாசிக்கும் சுந்தர் உங்க ஊருதான்.. எந்தத் தெரு?” என்று இசைஞானி கேட்க, ‘நன்மை தருவார் கோவில் தெரு” என்று அவர் பதிலளிக்கவும் சிரித்த இசைஞானி, ‘நன்மை தருவார் கோயில் தெருவில்’ இருந்த காரணத்தால் அவர் உனக்குத் தந்த நன்மை இங்கு வந்து நீ வாத்தியங்களை வாசிப்பது” என்றார்.

பாடலுக்கு Shenai வாசித்த Pandit Balesh’ஐப் பாராட்டிய இசைஞானி, தொடர்ந்து வரிசையாக புல்லாங்குழல் இசைத்த நெப்போலியன், கிட்டார் சதா, சித்தார் கணேஷ், தில்ரூபா சரோஜா.. ஜெய்ச்சா, தபலா ப்ரித்விராஜ், பேஸ்கிட்டார் பாபு, நாதஸ்வரம் நடராஜன், Sax ராஜா, Trumpet Maxewell, வயலின் பிரபாகர், செல்லோ சேகர் என்று தன் குழுவில் இருந்த ஒவ்வொரு கலைஞரையும், பாடகர்களையும், தனித்தனியாக அறிமுகம் செய்து வைத்தார். (நிறைய கலைஞர்களின் பெயர்கள் நினைவில் இல்லாத காரணத்தால் குறிப்பிட இயலவில்லை) தவில் வாசித்த சுந்தர் அவர்களை ‘நன்மை தருவார் கோயில் தெரு’ என்றும், தபலா கலைஞர் பிரசாத் அவர்களை, ‘’வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் சின்னப்பையனாக தபலா வாசித்துப் புகழ் பெற்றதால் இவர் ”பழம்…. .. பெறும்……. கலைஞர்..” பழம்பெரும் நகரமான மதுரையில் இன்று வாசிக்க வந்திருக்கிறார்” என்றும், பாடகி ப்ரியதர்ஷினியை.. ‘இது யாரு? ரௌடி..?” உன் பெயரென்ன? ப்ரியதர்ஷினியா? பெரியதர்ஷினியா?” என்றும் கிண்டலுடன் அறிமுகம் செய்துக் கலகலக்க வைத்தார்.

ஆனந்த ராகம் (பன்னீர் புஷ்பங்கள்) : உமாரமணன் மேடையேறியதுமே பாடல் என்னவென்று கணிக்க முடிந்தது.  பிரம்மாண்டமான அந்த strings Prelude’ஐக் கேட்க மொத்தக் கூட்டமும் செவிகளைத் தீட்டித் தயாராக,, துவங்கியது இசை. Prelude இசைக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போதே நிறுத்தச் சொல்லிய இசைஞானி, Audio’வில் இருந்தவர்களிடம்,, ‘இவ்வளவு Strings’ம் தெளிவாகக் கேட்கவில்லை.  ஒரே ஒரு வயலின் சப்தம் மட்டுமே கேட்கிறது.  Correct’ஆக Balance பண்ணிக் கொடுங்கள்’ என்று கூறி, ‘இவங்கள்லாம் எவ்ளோ அமைதியாக, ஒழுங்காக அமர்ந்திருக்கிறார்கள்.. இவர்களுக்கு நல்ல ஒலியைக் கொடுக்க வேண்டாமா?” என்று கூற சில விநாடிகளுக்குப் பின்னர் மீண்டும் துவங்கியது Prelude.  உமாரமணன்.. இவரைத் தவிர வேறு யாரும் இந்தப் பாடலைப் பாடிவிடமுடியுமா என்ன?  வழக்கம்போல், ஆடாமல் அசையாமல் நின்று ஒரு புருவத்தின் உயர்த்தல் கூட இல்லாமல் அவர் பாடியது கேட்பதற்கு மட்டுமல்ல.. பார்ப்பதற்கும் அத்தனை அழகு.

மேடையேறினார் சுகாசினி.  ‘ஒவ்வொருத்தருடைய சங்கீதமும் அவர்கள் வாசிக்கும் வாத்தியக்கருவிகளில் இருந்து வந்தது.. அவர்கள் எடுத்துக்கொண்ட பயிற்சியில் இருந்து வந்தது.  எங்களுக்கெல்லாம் தமிழ்நாட்டில் சங்கீதம் பண்ணைப்புரத்தில் இருந்து வந்தது.  அந்தப் பண்ணைப்புரத்திலிருந்து இரண்டாயிரம் பேர் இங்கு வந்திருக்கிறார்கள்.  அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” எனக் கேட்க, ‘”பண்ணைப்புரத்தில் இருந்து வந்திருக்கும் அத்தனை பேருக்கும் என் வணக்கம்.  உங்கள் அனைவரையும் வருக வருக வருக என்று வரவேற்கிறேன்.  பண்ணைப்புரத்தில் இருந்து உங்களுக்கு சங்கீதம் வந்தது என்று கூறினீர்கள்.  அந்தப் பண்ணைப்புரத்திற்கு எங்கிருந்து வந்தது சங்கீதம்?” என்று சிரித்தார்.,

‘நீங்கள் சிறுவயதில் பண்ணைப்புரத்தில் இருந்து அடிக்கடி மதுரைக்கு வந்திருப்பீர்கள். அந்த நினைவுகள் பற்றி..?

‘இந்த மதுரை மண்ணில் என் கால் படாத இடங்களே இல்லை.  இப்போது எழுந்திருக்கும் கட்டடங்களை வேண்டுமானால் நீங்கள் சொல்லலாம் .. என் கால் படாத இடங்கள் என்று.. அந்தக் காலத்தில் நான் நடந்து செல்லும்பொழுது அவையெல்லாம் பொட்டல் காடுகளாக இருந்தன.  மற்றபடி இந்த ஆர்மோனியத்தின் சத்தம் கேட்காத தெருக்களே மதுரையில் கிடையாது.  மதுரையில் மட்டுமல்ல.. தமிழ்நாட்டின் எந்த கிராமத்தின் பெயரை வேண்டுமானாலும் சொல்லுங்கள்.  அதிலெல்லாம் இவனுடைய (ஆர்மோனியம்) சப்தம் கண்டிப்பாகக் கேட்டிருக்கும்.  அந்த இசை.. ஒலிகள்.. இன்னமும் இங்கே உலவிக்கொண்டிருக்கிறது என்பது உண்மை.

தொடர்ந்து ரசிகர் ஒருவரின் வரிகளை சிலவற்றை வாசித்தார் சுகாசினி.

“இவர் ’அம்மா என்றழைக்காத’ என்று இசைத்ததும் நம்மூர் மீனாட்சியே திரும்பிப் பார்க்கிறாள்; ‘காற்றில் வரும் கீதமே’ என்றிசைத்தால், ஆற்றில் இறங்கும் அழகரும் அரும்பிப் பார்க்கிறார்; இவரது ஆயிரம் தாமரை மொட்டுக்களும் தல்லாகுளத்தில் மட்டுமல்ல எல்லா குளத்திலும் வாடாமல் நிற்கிறது; இவர் விரல் பட்டக் கோயில் மணியோசை இப்பொழுதும் திருப்பரங்குன்றத்தில் ஒலித்துக்கொண்டிருக்கிறது; அரசரடி.. இசைக்கே இவர் அரசரடி என்கிறார்கள் தேவதைகள்” என்று வாசித்து முடித்த சுகாசினி அடுத்தப் பாடலுக்கு வழிவிட்டு இறங்க நிகழ்ச்சி தொடர்ந்தது.

நேத்து ராத்திரி யம்மா (சகலகலா வல்லவன்) செந்தில்தாஸ் மற்றும் பாடகி அனிதா இணைந்து பாடினர்.

வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி (கிழக்கு வாசல்): ‘’தாங்கிடதத்தித் தரிகிடதத்தி’ ஜதியுடன் இசைஞானி துவக்க அதிர்ந்தது அரங்கம்.  பாடிமுடித்த இசைஞானி, ‘இதெல்லாம் எழுதி வைத்துக்கொண்டு பாடுகிற பாடலா? Pop Song பாடுகிறவர்கள் யாராவது Notes எழுதி வைத்துக்கொண்டு பாடுகிறார்களா? நம் ஊரில்தான் இதெல்லாம் நடக்கும். இன்று நானே அப்படிப் பாடவேண்டியதாகிவிட்டது.  என் பாடல் எனக்கே மறந்துவிட்டது. முதலில் வந்த ‘தாங்கிடதத்தி’ ஜதியை ஒரே மூச்சில் பாட வேண்டும்.  அப்படி என்னால் பாட முடியவில்லை.  இடையில் மூச்செடுத்தேன்… என்று தான் மூச்செடுத்த இடத்தை மறுபடி பாடிக் காண்பித்தார்.

தொடர்ந்து பண்ணைப்புரத்தில் இருந்து வந்திருந்த ஊர்த்தலைவர்கள் இசைஞானிக்கு மரியாதை செய்தனர். 

நிகழ்ச்சிக்கென்று பாடல்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.  எந்தப் பாடலை விடுவது என்று புரியவில்லை.” என்று கூறிய இசைஞானி, கார்த்திக்ராஜாதான் பாடல்களைத் தேர்வு செய்தார் என்றும் தெரிவித்தார்.

சொர்க்கமே என்றாலும்: சாதனாவுடன் சித்ரா மீண்டும் மேடையேறி இணைந்துகொண்டார். ‘ஏ தந்தன தந்தன தந்தா’வுடன் இசைஞானி துவக்க, இதற்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பாடிய  ‘சாஃப்ட்டுவேரில் இன்று யாரு நம்பர் ஒண்ணு? நம்ம ஊருக்காரனில்லையா?” வரிகளுடன் சரணங்கள் தொடர்ந்தன. 

பூவ எடுத்து ஒரு மால (அம்மன் கோவில் கிழக்காலே): செந்தில்தாஸ் மற்றும் சாதனா சர்க்கம் இணைந்து பாடினர்.

கவிஞர் சிநேகன் மேடையேறினார்.  ’ராஜராஜனின் போர்வாள்’ படத்திற்கு இசைஞானி, பொதுமக்கள் முன்னிலையில் மெட்டமைத்ததைக் குறிப்பிட்டவர் உலகத்தில் எந்த இசையமைப்பாளரும் செய்யமுடியாத விஷயம் அது என்றும், தெரிவித்தார். ‘என் வீட்டில் எல்லா அறைகளிலும் இசைஞானியின் புகைப்படம்தான் இருக்கும்.  ராஜா சார் யுவனுக்கும், கார்த்திக்ராஜாவுக்கும், பவதாரணிக்கும் எவ்வளவு சொத்து வைத்திருக்கிறார் என்று நமக்குத் தெரியாது.  ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இசை என்ற அழியாத சொத்தைக் கொடுத்துள்ளார்” என்று கூறி இறங்கினார்.

ராக்கம்மா கையத் தட்டு (தளபதி) : ஹரிசரண் மற்றும் ரம்யா என்.எஸ்.கே ஆகியோர் இணைந்து பாடினர்.  இந்தப் பாடல் பாடப்பட்டுக்கொண்டிருக்கும்போதே இசைஞானி மேடையிலிருந்து கிளம்பினார். 

தண்ணித் தொட்டி தேடி வந்த (சிந்து பைரவி) விஜய் ப்ரகாஷ் சர்வாங்கமும் அதிர பாடலைத் துவக்கினார்.  மணி பதினொன்றைத் தொட்டிருந்தது.  நிகழ்ச்சி முடிவுக்கு வருவதை உணர்ந்த ரசிகர்கள் மேடையின் முன்னால் குழுமத் துவங்கியிருந்தனர்.

மாமா உன் பொண்ணக் கொடு (ராஜாதி ராஜா) மனோ வழக்கமான தனது உற்சாகத்துடன் ஒரு சரணத்துடன் பாடலை முடிக்க, மேடையின் முன் நின்ற ரசிகர்கள் நிகழ்ச்சியை முடிக்க விடவில்லை.

தொடர்ந்து அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கார்த்திக்ராஜா, ஏப்ரல் மேயிலே, பூமாலையே, ஒரு ஜீவன் அழைத்தது ஆகிய பாடல்களின் பல்லவிகளை மட்டும் ஒன்றன்பின் ஒன்றாகப் பாட நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது.  நிகழ்ச்சி ஏப்ரல் 14 அன்று ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.

6 comments:

 1. This was not a great show..pathetic seating arrangements. We paid for 2500 tickets and no chairs were there we had to pick our own seats end of the day it was they who benefitted from our pockets

  ReplyDelete
 2. பாடல் தெரிவு அருமை, முக்கியமாக மதுரை மண்ணுக்கென தனிக் கவனம் செய்துள்ளது தெரிகிறது. இதை வாசித்ததும் எப்போ தொலைக்காட்சியில் பார்ப்போம் என்கிற ஆவல் மேலிடுகிறது

  ReplyDelete
  Replies
  1. 80களின் ஆக்ரமிப்பு இந்நிகழ்ச்சியில் சற்று தணிந்தே இருந்தது. ‘மதுரை மண்ணுக்கெனத் தனிக்கவனம்’.. நீங்கள் கூறியதும்தான் நானும் கவனிக்கிறேன். உண்மை. :-)

   வருகைக்கு நன்றி :-)

   Delete
 3. One of the most beautiful musician in the world! I breathe his music every second!
  -Sakya Mohan
  Washington, DC

  ReplyDelete
 4. இசைபோதிசத்துவன் எம் இளையராஜாவின் இசைபெருவெளி!

  -சாக்ய மோஹன்-

  கையில் அகப்படாத காற்றை
  கைப்பற்றும் உனது இசைப்பெட்டி

  காற்றிலும் அகப்படாத செவ்வோசைகளை
  இழைக்கும் உனது விரல் லாவகம்

  நரம்பிசை தோலிசை ஓசைகள் நிசப்திக்க
  உனது கந்தர்வக் குரல் மட்டுமே மேலெழும்
  எங்கள் காதுகளில் செந்தமிழல்ல உனது குரல் தான் தேன் வார்க்கும்!

  உனது குரலிசையோடு
  நரம்பிசை தோலிசை இழைக்க
  உனது இசைவெளிப் பரப்பு
  விசாலமாய் விரிந்துகொண்டே போகிறது
  இன்னொரு பிரபஞ்சத்தின் திசையறியா நீலப் பெருவெளியாய் !

  எமது இசை ராஜனே!
  உனது ஸ்வரங்களுக்குள் கால் அரை சப்தமாமே
  அந்த சப்தத்தின் வெளியாய் நீயே இசைக்கிறாய் !

  அந்த சப்தத்தின் ஊடே தான் உனது
  எல்லையற்ற பாட்டும் பயணிக்கிறது
  எங்களையும் ஏற்றிய உனது பூதப்பேரூந்தில் !

  உனது பறை இசையில் தான்
  இந்த இசை உலகம்
  பறைந்துகொண்டது பல ஸ்வரங்கள் ஆயிரங்கள்!

  சனாதன வெற்றுச் சங்கீதத்தை
  சர்வஜனத்திற்கும் மெருகூட்டிப் பங்கிட்ட உனது இசைக்கு
  எதிர்க்க வல்லது இந்த ஜாதிய மூர்க்க அன்றி
  வேறில்லை என்றறிவோம்!

  ஞான சூன்யர்களின் அடிமை வாசகம் அறியாத
  இசை இறை நீ!
  உனது இசைப்பெருவெளியின்
  முடிவிலா அழகில் மூழ்கி அலகிலா இன்புற
  பல கோடி ரசிகர்கள் இறைஞ்சுகிறோம்:

  உலகத் துயர் துடைக்கும் உனது இசையால்
  மனிதத்தின்னிகளுக்கு இசைக்காதே

  இசைபோதிசத்துவனே!

  ReplyDelete