Tuesday, May 1, 2012

How to Name it-2012


ஆறரை மணி நிகழ்ச்சிக்கு, நாலரை மணிக்கெல்லாம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் ஆஜர் ஆனேன். அடுத்த சில மணி நேரங்கள், முகம் பார்த்திரா முகநூல் நட்புகளுடன், சக பக்தர்களுடன், பரஸ்பர அறிமுகங்கள், கை குலுக்கல்கள் முடித்து சரியாய் 6:30க்கு அரங்கினுள் நுழைந்தோம்.

Bach மற்றும் தியாகராஜரின் உருவப்படங்கள் மேடையின் பின்னணியில்… இசைக்குழுவினர் தத்தமது வாத்தியங்களுடன் மேடையில் தயாராய் கொலுவுற்றிருக்க, மேடையில் இருந்து மூன்றாவது வரிசையில் இடம்.  சென்று அமர்ந்து நிமிர்ந்தால்.. வயலின் மேதை திரு. எல்.சுப்பிரமணியம் முதல் வரிசையில் வந்தமர்ந்தார்.  அடுத்த ஐந்தாவது நிமிடம் அரங்கின் இடது வாயிலில் பரபரப்பு.  அதுவரை Pin Drop Silence’ல் அமைதி காத்த அரங்கம் உள்ளே நுழைந்த வெள்ளுடை தேவனைக் கண்டதும் ஆர்ப்பரிக்கத் துவங்கியது.  ஆரவாரித்த கூட்டத்தை நோக்கி இருகரம் கூப்பி வாழ்த்திய இசைஞானி அமரச் சொல்லி சைகை செய்ய அரங்கம் அவசரமாய் அமர்ந்தது.

ராகதேவனின் சுவாசக் காற்று மிதந்து வந்து முகத்தில் வருடும் தூரத்தில் நான்.  மூன்றாவது முறையாகக் கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். நிஜம்தான்..!

அடுத்த நிமிடம் மேடையில் பவதாரிணி..

”On behalf of ‘Jeeva Foundation’ I welcome you all to the most awaited concert ‘How to name it-2012’.  First of all, Daddy.. thank you for letting me do this show.. (இசைஞானியின் முகத்தில் புன்னகை).  This is my gift to you.” என்ற இரு வரிகளுடன் ’ஜனனி ஜனனி’யுடன் துவக்கி அதன்பின்னர், நிகழ்ச்சியின் Host திரு. அனில் ஸ்ரீனிவாசன் அவர்களை மேடைக்கு அழைத்தார்.


மைக்கைப் பிடித்த அனில், அனைவருக்கும் வணக்கம் சொல்லி கேட்ட முதல் கேள்வி.. “இங்கு எத்தனை பேர் ராஜா பக்தர்கள்?” அந்தக் கேள்விக்கு பதிலாக அரங்கத்தில் நடந்ததென்ன என்று விவரிக்கத் தேவையில்லை. தொடர்ந்து அனில், ‘பக்தர்களிடம் அதிகம் பேசவேண்டியதில்லை.  நான் பேசுவதை விட (Piano’வைக் காட்டி) இது பேசினால் இன்னும் சிறப்பாக இருக்கும்’ என்று கூறி Piano’வில் அமர்ந்து ‘தென்பாண்டிச் சீமையிலே’ Prelude’ஐ துவக்கியதும் கூட்டத்தில் இருந்து விசில் பறந்தது. தொடர்ந்து அவர் Piano’வில் ‘மௌன ராகம்’ BGM’ஐ இசைக்க விசில்கள் வேகமெடுத்தன.

தனது முன்னுரையைத் தொடர்ந்தார் அனில். ‘ராஜா சார் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் “Genius” என்று சொல்லலாம்.  Genius என்ற வார்த்தையைச் சொல்வதற்கு சில attributes, சில Characters இருக்கின்றது.  அதாவது அவர்கள் ஒரு சிந்தனைத் தளத்தில் இருந்து மிக விரைவாக அடுத்த தளத்திற்குத் தாவும் திறமை பெற்றவர்கள்.  உதாரணத்திற்கு இசைஞானியின் பாடல்களில், Western Classical ரம்மியமாய் வந்து கொண்டிருக்கும்போதே, சொல்லாமல் கொள்ளாமல் ஒரு Carnatic Bit ஒன்று வரும்.  அதே போல Genius என்பவர்கள், மற்றவர்கள் செய்யாத விஷயங்களை அல்லது செய்யத் தயங்கிய விஷயங்களை அசாதாரணமாக செய்து முடிப்பார்கள்”. என்றார்.

தொடர்ந்து வயலினிஸ்ட் மற்றும் நிகழ்ச்சியின் Conductor திரு. பிரபாகர் அவர்களை மேடைக்கு அழைத்தார். இதைத் தொடர்ந்து வரிசையாய் How to Name it இசைக்கோர்வைகள் இசைக்கப்பட்டன. அவற்றுக்கு திரு. அனில் ஸ்ரீனிவாசன் அதிகம் பேசாமல் நறுக்கென்று கொடுத்த அறிமுக வரிகள் அற்புதம்.  நாம் எல்லோரும் How to Name it’ஐ பல நூறு முறை கேட்டிருப்போம் என்றபோதும் சிலருக்கு மட்டுமே Track name ஞாபகத்தில் இருக்கும். அதற்காய் இசைக்கப்பட்ட ஒலிக்கோர்வைகளின் Original’ஐ YouTube’ல் இருந்து Link செய்திருக்கிறேன்.

1. DoAnything: இந்த இசைக் கோர்வையை ’வீடு’ என்கிற படத்தில் எல்லோரும் கேட்டிருப்பீர்கள். Iconic Flute Melody.  இந்த இசைக்கு இசைஞானி மிகவும், simple’ஆக, western classical style’ல் Orchestration செய்து அழகூட்டியிருப்பார்”. (இசைக்கப்பட்ட கோர்வையில் பண்டிட் Bhalesh’ன் Climax ஷெனாய் அழகிய முத்திரை).

2.  Chamber Welcomes Thiyagaraja: இந்த இசைப்பேழையை Bach மற்றும் தியாகராஜருக்கு dedicate செய்திருப்பார் இசைஞானி. இசைஞானியின் இசையில் பெரும்பாலும் நமக்குக் கேட்கக் கிடைப்பது Counterpoint.  அதாவது இரண்டு வெவ்வேறு இசை ஒரே நேரத்தில் ஒன்றாய் ஒலிப்பது. இந்தக் கோர்வையிலும் அதை நீங்கள் கேட்கலாம்.

3.  How to name it: இது ஒலிப்பேழையின் Title Track.  இதில் முக்கியமாய் இசைப்பது வீணை இசைக்கலைஞர் கலைமாமணி திரு. ராஜேஷ் வைத்யா. இவருடன் இசைக்கப் போவது அம்பி சுப்ரமணியம். (இந்த இடத்தில் மேடையேறிய சிறுவன் அம்பியின் இசை அட்டகாசம் நிகழ்ச்சி முடியும் வரை தொடர்ந்தது).  Track இசைத்து முடிந்ததும் அனில், ”இந்த Piece அமைந்திருப்பது ‘சிம்மேந்திர மத்யமம்’ என்ற ராகத்தில். இதை Simple’ஆக இப்படி விளக்கலாம் (Piano’வில் ‘ஆனந்த ராகம்’ பாடலை வாசித்துக் காண்பிக்கிறார்).  இந்த ராகத்தில் ஒரு Carnatic composition செய்வதே மிகவும் கஷ்டமான விஷயம். அதிலும் அதற்கு Western Classical Orchestration செய்து அழகூட்ட ராஜா சாரால் மட்டும்தான் முடியும். இதையும் 2 நாட்களில் compose செய்திருக்கிறார் என்பது மிக மிக ஆச்சர்யமான விஷயம் (இந்த இடத்தில், முன் வரிசையில் அமர்ந்திருந்த இசைஞானி அது அரை மணி நேரத்தில் compose செய்யப்பட்டது என்பதைச் சொல்ல விசில் சப்தம் காதைக் கிழித்தது).  அங்கே ஒருவர் ஒரு Board’ஐக் காண்பிக்கிறார் “God of Music” என்று. ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்” என்றார்.

4.  I met Bach in my House : இது அமைந்திருப்பது ‘கல்யாணி’ ராகத்தில். இது ராஜா சாரின் Favourite ராகம். அம்மா என்றழைக்காத போல நிறைய பாடல்கள் கல்யாணியில் தந்திருக்கிறார். இந்த Piece’ஐ கல்யாணி ராகத்தை Base’ஆக எடுத்துக்கொண்டு ஒரு பட்டுப்புடவை நெய்தால் எப்படி இருக்குமோ அப்படிச் செய்து கொடுத்திருக்கிறார் இசைஞானி.  அம்பியும் மற்றொரு சிறுவன் ஆதித்யாவும் சேர்ந்து Pieceஐ இசைத்து முடிக்க அனில், ‘Generation after Generation His Music is there still with the same Veneration.  This is the 3rd Generation playing Raja Sir’s Music. Ambi is 19 and Adithya is 15’ என்றார்.

5.  It is Fixed: “This Piece is a Violin Duet” என்று அனில் கூறிச்செல்ல அம்பியும், ஆதித்யாவும் இணைந்து இந்த Duet’ஐ சிறப்பாய் வாசித்தனர்.

6.  Mad Mod Mood Fugue: ”Western Classical’ல் Counterpoint போலவே ‘Fugue’ என்று ஒரு concept இருக்கிறது.  ஒரு குரல் துவக்கும். அதன் பின்னர் அடுத்த குரல் அதை imitate செய்து.. பின்னர் அடுத்த குரல்.. இப்படி imitate செய்து செய்து தொடர்ந்து வரும். இப்படியாக நிறைய Parts ஒன்றன் மேல் ஒன்றாக வரும்.  இந்த Piece’ல் எனக்கு 6 parts கேட்டது. அதற்கு அர்த்தம் அதில் 6 parts மட்டும்தான் என்பதல்லை. அதற்கு மேல் என்னால் எண்ண முடியவில்லை”. (Piece ஆரம்பிக்கும் Violin Bit’ற்கு ஆதித்யாவின் விரல்கள் தாவிய அழகு அபாரம்).

7.  You Cannot be free: “இது ஒரு Trio..! Trio என்றால் மூன்று என்று அர்த்தம். இந்த Piece’ல் ஒரு வயலின், இன்னொரு வயலின், மற்றும் Cello. இந்த மூன்றும் இணைந்து இசைப்பதை நீங்கள் கேட்கலாம்”

8.  And We had a Talk: ”This form of Music is called Partita. A Partita is normally written for a single instrument.  Johan Sebastian Bach Born in 1685 .. Died in 1750.  இவர் நிறைய Partita’s எழுதியிருக்கிறார். Unfortunately, அவருடைய நிறைய Partita’க்களை நாம் அலட்சியமாய் Car Reverse Alarm’க்கு மட்டுமே உபயோகிக்கிறோம். ”How to Name it”ன் ‘And we had a talk’ல், Partita’வைத் தொடர்ந்து Bourree அதன்பின் நிறைய set of pieces தொடர்ந்து வரும்” என்றார். Bach’ன் Partita No. 3’ஐ ஆதித்யா வாசிக்க, அதைத் தொடர்ந்து இசைக்கப்பட்ட And we had a talk’ல் வரும் ஆண் குரல்களை ஹரிசரணும், ஸ்ரீராம் பார்த்தசாரதியும் இணைந்து பாடினர்.

இதன் பின்னர் எஞ்சிய Tracks’களும் இசைக்கப்பட்டு முடிக்க, அனில், இசைஞானியைப் பார்த்து ‘பக்தர்கள் கூட்டமாக சேர்ந்து உங்களைச் சரணடைந்தோம்’ அவ்வளவுதான் சொல்ல முடியும்’ என்று சொல்லி மேடைக்கு அழைத்தார். இசைஞானியும், எல்.சுப்ரமணியமும் இணைந்து மேடையேறினர். இதன் பின்னர் முக்கியமான இசைக்கலைஞர்கள் அனைவரும் பொன்னாடைகள் போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

மைக் பிடித்த எல்.சுப்ரமணியம்,  “நாங்களும் ராஜாவும் ஒன்றாய் வளர்ந்தோம். அவர் இசைப் பயணத்தைத் துவக்கிய நிலையில் இருந்து பார்த்தால் இன்று அவர் சென்று நிற்கும் உயரம் மலைப்பை அளிக்கிறது. நாங்கள் என் தந்தையிடம் ஒன்றாக இசை கற்றுக்கொண்டோம்.  Raja has given us great wealth and treasure of Music.  இங்கு வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனக்கு மிக்க மகிழ்ச்சி” என்று சுருக்கமாய் முடித்துக்கொண்டார்.

எல்.எஸ். பேசி முடிக்க மைக் ராகதேவனின் கரங்களை வந்தடைந்தது.

’நான், எல்.சுப்ரமணியம், அவருடைய சகோதரர்கள், எல்.ஷங்கர் மற்றும் எல். வைத்தியநாதன் அவர்களுடன் ஒரு குழந்தையாகத்தான் அவர்கள் வீட்டில் வளர்ந்தேன். அதை மறக்காமல் அவர் குறிப்பிட்டார். இங்கே வாசித்த Duet நான் ஒரு வயலினுக்காக எழுதிய Piece. 1982ல் Hong Kong’ல் நடந்த அவருடைய கச்சேரிக்கு Paul Mauriat என்னை invite செய்திருந்தார். அதைப் பார்ப்பதற்காக மலேஷியாவிலிருந்து நான் சென்று கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் என்னிடம் Score Sheets இருந்தது.  முன்னதாக Pilot’இடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்கள். ”தரையிறங்க அரை மணி நேரம்தான் இருக்கிறது .. நீங்கள் வாருங்கள் ..” என்று விமானி தன் அறைக்கு என்னை அழைத்தார்.  அங்கேயிருந்து, விமானம் தரையிறங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன் எழுதிய Piece’தான் நீங்கள் இப்போது கேட்ட Duet.

Bach பாணியில் “24 Studies for Violin” என்று 24 Compositions எழுதலாம் என்று யோசித்திருந்தேன்..! அதே போல இரண்டு Pieces எழுதி முடித்துவிட்டேன். அந்த சமயத்தில் எல். சுப்ரமணியம் மைலாப்பூரில் இருந்தார்.  அவரிடம் சென்று, ”நீங்கள் இதை வாசிப்பதாக இருந்தால் நான் 24 Pieces எழுதி முடிக்கிறேன்” என்று கூறினேன். அவர் அந்த சமயத்தில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் தயங்கினார். சங்கராபரணம் மற்றும் ஷண்முகப் ப்ரியா ராகத்தில் அமைந்திருந்த அந்த இரண்டு Piece’ஐயும் அவரிடத்தில் காண்பித்தேன். ஆனால் அவருக்கு நேரமில்லாமல் போய்விட்டது.  இப்போது மேடையேறும்போது கூட ‘How to Name it போல நிறைய எழுதுங்கள்’ என்றார். அவர் வாசிப்பதாயிருந்தால் நான் கண்டிப்பாக எழுதுகிறேன்.

அம்பி சுப்ரமணியம் இன்று இங்கே பிரமாதமாக வாசித்தான். ஒருமுறை பெங்களூரில் இருந்த எல்.சுப்ரமணியன் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே அம்பி பயங்கரமாய் அழுதுகொண்டிருந்தான். காரணம் கேட்டேன். ‘அப்பா நான் அபஸ்வரத்தில் வாசிப்பதாகச் சொல்லி என்னைத் திட்டிக்கொண்டே இருக்கிறார்’ என்றான். அதற்கு நான் அவனிடம் ‘அபஸ்வரம் இல்லாமல் ம்யூஸிக்கே இல்லை என்று நீ அப்பாவிடம் சொல்ல வேண்டியதுதானே?’ என்று கேட்டேன். உடனே அழுகையை நிறுத்திவிட்டுச் சிரிக்கத் துவங்கிவிட்டான்.  அந்த அம்பிதான் உங்கள் முன் இன்று பிரமாதமாக வாசித்துப் பாராட்டுப் பெற்றவன்.  நான் மூன்று நாட்களில் ரெக்கார்ட் செய்த மொத்தத் தொகுப்பையும் மூன்றே வாரங்கள் பயிற்சி செய்து அற்புதமாக வாசித்துவிட்டான்.”

இதைச் சொல்லி முடித்த இசைஞானி மைக்கைக் கொடுத்துவிட்டு மேடையை விட்டு இறங்க முயல, முன் வரிசையில் அமர்ந்திருந்த கார்த்திக் ராஜா, மைக்கை வாங்கி, ‘இந்த Pieces பற்றி அப்பா சொல்லவேண்டும் என்று நான் ஆசைப்படுறேன்’ என்றார். (தலைவா நீ வாழ்க). 

பலத்த கரவொலிக்கிடையே மீண்டும் மைக் பிடித்த இசைஞானி, “பொதுவாக வெளிநாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பிறந்து ஒரு நான்கு வயதுக்குள்ளாக எல்லாம் தெரிந்து விடுகிறது. Melody என்றால் என்ன? Harmony என்றால் என்ன?’ என்று சகலமும் அந்தக் குழந்தை அறிந்துகொள்கிறது.  எனக்கு ‘C Major Chord’ என்ன என்று தெரிந்து கொள்ள இருபத்தேழு வருடங்கள் ஆயிற்று. 27 வயதில் நான் சென்னைக்கு வந்தேன்.  அச்சமயம் தன்ராஜ் மாஸ்டரின் அறையில் இசை பயிலும்போது எதைக் கேட்டாலும் அதை அப்படியே கேட்டபடி வாசித்துவிடுவேன்.  அப்படி வாசிக்கும்போது ‘இதுதாண்டா C Major’ என்று மாஸ்டர் என்னிடம் கூறினார். அதற்கு முன்னமே அதை நான் வாசித்திருந்தாலும், ‘இதுதான் C Major’ என்பது’ எனக்கு அப்போதுதான் தெரியும்.  நான் முதன்முதலில் Bach Music கேட்டது 1968ல்..!  ஜி.கே.வெங்கடேஷிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது நான்கைந்து மாதங்கள் கொஞ்சம் கொஞ்சமாக 90 ரூபாய் சேர்த்து வைத்து மூன்று LP Record வாங்கினேன்.  நான் வாங்கியதில் ஒன்று Bach’னுடையது.  முதல்முறையாக அதைக் கேட்கும்போது எனக்கு, ‘அட..! இது நம் இசையாயிற்றே” என்று தோன்றியது. எப்படி என்று நீங்கள் கேட்கலாம்.

இதைக்கூறியபின் இசைப்பிதா நேராக Piano’வில் சென்றமர்ந்து Demo கொடுத்த காட்சி Moment of the Night...! Bach’s Partita No. 3  Piece’ஐ Piano’வில் வாசித்த இசைஞானி, ‘இந்த Piece’ல் First few notes எனக்கு ‘ச நி ச ப க ப’ என்று கேட்டது. How to Name it compose செய்யும்போது, 1968ல் கேட்ட இதை Base’ஆக எடுத்துக்கொண்டு அதற்கு மேல் எழுதிய Counter Melody தானே தவிர வேறொன்றுமில்லை. இது எப்படி எங்கிருந்து வந்தது என்று கேட்டால் அது எனக்குத் தெரியாது. அது இப்படித்தான் வருகிறது என்று தெரிந்துவிட்டதென்றால் அன்றுடன் அது வருவது நின்று விடும். இசை என்பது Western Classical’உடன் முடிந்துவிடுகிறதா? அல்லது ஹிந்துஸ்தானியுடன் முடிந்துவிடுகிறதா? அல்லது Folk Music’உடன் முடிந்துவிடுகிறதா? பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த இசை மேதைகள் அந்த நேரத்தில் அவர்கள் புத்திக்கெட்டிய வகையில் பாடல்களை இயற்றினார்கள். அது நமக்கு Classical Music’ல் Reference ஆகிவிட்டது.  நீங்கள் ‘துளசிதல’ கேட்டீர்கள்.  அதை பிற்காலத்தில் நாம் இப்படி இசைப்போம் என்று எண்ணியா அவர் compose செய்தார்?  தியாகராஜரின் இசை வயதானவர்களுக்கானதுதானா? இல்லை..! அவர் இளைஞர்களுக்காகத்தான் கம்போஸ் செய்தார். அவர் இயற்றும்போது அவருக்கு 27 வயது இருந்திருக்கும்.
இப்போது இடைமறித்த பவதாரிணி, ‘அப்பா.. We want to know the name of the piece. Because CD’க்களில் தப்புத் தப்பாக இருக்கிறது’ என்று கேட்க, இசைஞானி, ‘Name’ல் தப்பு இருந்தால் பரவாயில்லம்மா.. Music’லதான் தப்பு இருக்கக் கூடாது’ [செம்ம கரவொலி.. தலைவர் படு பயங்கர ஜாலி மூட் :-) :-)] .  அந்த Piece ‘Mad Mod Mood Fugue’ என்று பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய இசைஞானி, ’கல்யாணி’ ராகம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று அனில் கூறினார். அப்படி எதுவும் இல்லை. அந்த நேரத்தில் அது வந்தது. வந்துவிட்டுப் போகட்டுமே என்று விட்டுவிட்டேன். அவ்வளவுதான். ‘கல்யாணி’ என்றதும் எனக்கு ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது. இது நானாக உருவாக்கிய கதை.    

“ஒருமுறை தனக்கு இசை ரொம்பத் தெரியும் என்று நாரதருக்கு மிகவும் கர்வமாகி விட்டது. வைகுண்டத்துக்கு நாரதர் ஒரு முறை சென்றபோது அங்கே கண்ட காட்சி. நாராயணன் கலைவாணியின் நினைவில் கண்களை மூடிய நிலையில் இருந்தார். கலைவாணிக்கும் நாராயணனின் நினைவு வந்து, அவளது சங்கல்பம் இல்லாமலேயே வீணையில் ஒரு நாதம் ஒலிக்கத் துவங்கிவிட்டிருந்தது.  நாராயணன் தன் கண்களை மூடிய நிலையில் அந்த இசையைக் கேட்டுக்கொண்டிருந்திருப்பதை நாரதர் பார்க்கிறார். நாரதர் நாராயணனிடம் ‘ப்ரபோ.. தாங்கள் ஏதோ நல்ல இசையை ரசித்துக்கொண்டிருக்கிறீர்களா? அல்லது பக்தர்கள் யாரேனும் பாடக்கேட்டு தாங்கள் ரசித்துக்கொண்டிருக்கிறீர்களா?’ என்று வினவுகிறார். அதற்கு நாராயணன், ‘யாராவது மனதுருகி என்னை நோக்கி ”நாராயணா! நாராயணா!” என்று பாடினாலே என் மனது அங்கே போய் விடும் என்பது உனக்குத் தெரியாதா நாரதா?’ என்று கேட்கிறார்.  உடனே “தன்னைத்தான் நாராயணன் குறிப்பிடுகிறார்” என்று நாரதர் நினைக்க, அவரது எண்ணத்தை அறிந்து கொண்ட நாராயணன், ‘இவனுக்குக் கர்வம் அதிகமாகி விட்டது; இவனுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்’ என்று நினைத்து, ‘யார் கண்டார்கள் நாரதா? உன்னை விட பிரமாதமாக பாடுபவர்கள் யாரேனும் உலகத்தில் இருக்கலாம் இல்லையா?’ என்று கேட்கிறார். உடனே நாரதர், ‘என்ன ப்ரபோ.. நீங்களே நாரதரின் இசையை விட சிறந்தது உலகில் கிடையாது என்று கூறியிருக்கிறீர்கள். அதற்கு மேல் வேறென்ன வேண்டும்?’ என்று கேட்க, பதிலுக்கு நாராயணன், ‘யாருக்குத் தெரியும் நாரதா? ஒரு வேளை பிரம்மன் உன்னைவிட சிறந்த இசைக்கலைஞனை படைத்திருக்கலாம் அல்லவா? நீயே பூலோகம் சென்று அறிந்து வா’ என்று கூறுகிறார்.

நாரதரும் உடனே பூலோகம் வந்தடைந்து ஒரு வனப்பகுதிக்குச் சென்று ஒரு பாறையின் மேல் அமர்ந்து வீணையை மீட்டத் துவங்குகிறார். அவர் வாசிக்க வாசிக்க அவருடைய வீணை கொஞ்சம் கொஞ்சமாக உருகி பாறையுடன் பாறையாக ஒட்டிக் கொள்கிறது.  நாரதருக்கோ ஒரே ஆச்சர்யம். அச்சமயத்தில் அனுமாரை அழைத்த கலைவாணி, ‘அனுமான்..! நாரதனுக்கு கர்வம் அதிகமாகிவிட்டது. நீ சென்று அவனுக்கு ஒரு பாடத்தைக் கற்பி!’ என்று கூறி அனுப்புகிறார். உடனே அனுமானும் நாரதனிடம் வந்து அவருக்கு வணக்கம் சொல்லிப் பாறையைத் தொடுகிறார். உடனே அதில் ஒட்டியிருந்த வீணையின் நரம்புகளில் இருந்து இனிய நாதம் கிளம்பத் துவங்குகிறது.  அந்த இனிய இசையில் உலகமே மயங்கி ஒரு லயத்துக்கு வருகிறது.  அப்படியே பாறையில் உருகி ஒட்டியிருந்த வீணையும் உருவம் பெற்று அனுமானின் கையில் வந்து சேர்கிறது. அனுமான் அதைத் தொடர்ந்து வாசிக்க, தூரத்தில் தலையெல்லாம் விரித்துப் போட்டு, முகமெல்லாம் ரத்தம் வழிய, குரூபியான ஒரு பெண் அலங்கோலமாக வந்து கொண்டிருக்கிறாள். அருகில் வந்து அந்தப் பெண் அனுமானின் இசையைக் கேட்கக் கேட்க மிக சௌந்தர்யமுள்ள அழகான ஆபரணங்கள் அணிந்த ஒரு தேவதையைப் போல் மாறிவிடுகிறாள்.  இதைக் கண்டு ஆச்சரியமடைந்த நாரதன், ‘பெண்ணே..! நீ யார்? இது எப்படி நடந்தது?” என்று கேட்க, அதற்கு அந்தப் பெண், ‘நான்தான் ராகம் கல்யாணி’ என்று பதிலளிக்கிறாள்.  விஷயம் என்னவென்றால் நாரதன் வாசித்ததைக் கேட்டுக் குரூபியாகிப் போன கல்யாணி, அனுமானின் இசையில் மீண்டும் சௌந்தர்யவதியாகிறாள்.

அதனால் ஒரு ராகம் அழகுபெறுவதோ, முரட்டுத் தோற்றம் பெறுவதோ, கர்ண கடுரமாக உருவெடுப்பதோ, பாடுபவர்களின் மனநிலையைப் பொறுத்தது.  பாடுபவர்களின் மனோபாவம்தான் ஒரு இசையில் வெளிப்படுமே தவிர, ராகம் ஒருபோதும் வெளிப்பட்டது இல்லை.  அப்படி ஒருமுறை அது வெளிப்பட்டுவிட்டால் அத்துடன் அது முடிந்துவிடும். அதற்குப் பின் என்ன கல்யாணியைப் பாடுவது? ‘முகாரி’ ராகமா அழுகிறது? பாடுகிறவன்தான் அழுகிறான் .. அல்லது கேட்பவன் அழுகிறான். நன்றி!” என்று கூறி முடிக்க அரங்கம் மீண்டுமொருமுறை அதிர்ந்தது.

கூட்டத்திலிருந்து திடீரென்று ஒரு குரல்.. “சாரை ஒரு பாட்டுப் பாடுச் சொல்லுங்க..!” [குரல் கொடுத்தப் புண்ணியவானுக்கு கோடி நன்றிகள் :-)]. அவரது எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தொடர்ந்து 30 விநாடிகளுக்கு அரங்கில் இசைஞானியைப் பாடச்சொல்லி விசில் சப்தமும், கூக்குரல்களும். “When the World fails.. His Music Speaks” என்ற Board’ஐ ரசிகர் ஒருவர் உயர்த்திப் பிடிக்க, ‘அம்மாவுக்காகப் பாடுங்க’ என்று பவதாரிணியும் கேட்க, மீண்டும் மைக் பிடித்தார் இசைஞானி..!  “சதா சதா.. உனை.. நினைந்து நினைந்து என்றும்” என்று ரமணரை நினைந்து இசைஞானி உருக ராஜேஷ் வைத்யா தனது வீணையில் சுருதி சேர்த்தார். ரசிகர்களின் வேண்டுகோளை நிறைவேற்றி முடித்த திருப்தியில் இசைதேவன் மேடையில் இருந்து கீழிறங்கினார்.

இதன் பின்னர் வரிசையாய் திரைப்பாடல்கள் பாடப்பட்டன.

1. ஓம் சிவோஹம் (நான் கடவுள்) – ஸ்ரீராம் பார்த்தசாரதி & ஹரிசரண்.:
2.  நின்னைச் சரணடைந்தேன் (பாரதி) – பவதாரிணி
3.  அகந்தையில் ஆடுவதா (உளியின் ஓசை) - ஸ்ரீராம் பார்த்தசாரதி.
4.  ராஜபார்வை Theme Music (அம்பி சுப்ரமணியம்)
5.  மேகம் கொட்டட்டும் (எனக்குள் ஒருவன்) - யுவன், கார்த்திக், ப்ரேம்ஜி & வெங்கட் பிரபு.
6.  வா வா பக்கம் வா (தங்க மகன்) – பாப் ஷாலினி & சத்யன்.
7.  அட மச்சமுள்ள (சின்ன வீடு) – சத்யன், ஷாலினி, ஹரிசரண் & விலாசினி
8.  ஹே உன்னைத்தானே (காதல் பரிசு) – ப்ரியா ரமேஷ் & ஹரிசரண்.

இதன் பின்னர் இசைக்கலைஞர்கள் அறிமுகம் செய்தலுடன் நிகழ்ச்சி நிறைவுக்கு வர, வெளியே சென்ற இசைஞானியை How to name it உருவானது எப்படி என்று கூறுங்கள்” என்று சொல்லி கார்த்திக் ராஜா மீண்டும் அழைத்து மேடையேற்றினார்.

‘எப்படி இது உருவானது என்று கேட்டால் எனக்குத் தெரியாது.  எதிர்காலத்தில் இசை எப்படி டெவலப் ஆகும் என்ற சிந்தனையில்தான் அது உருவானது.  அவ்வளவுதான்.  Western Classical’லும், கர்நாடக இசையிலும் எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன என்று மலைத்துத்தான் இதற்கு ‘How to Name it” என்று பெயர் வைத்தேன்.  இது எப்படி வந்தது என்று கேட்டால் நான் என்ன சொல்வது.  Music should Happen.  Bach ஒரு கச்சேரி கேட்பதற்கு 200 மைல் நடந்து சென்றிருக்கிறார். ஒரு இசைப்புத்தகத்தை அவர் அண்ணனுக்குத் (அவரும் ஒரு இசைக்கலைஞர்) தெரியாமல் ஒளிந்திருந்து படித்திருக்கிறார். அதே போல நான் ஒரு ஆர்மோனியத்தை வாசித்ததற்கு என் அண்ணனிடம் பிரம்படி வாங்கியிருக்கிறேன்’ என்றார். பின்னர் Paul Mauriat’வை சந்தித்ததையும், Western Classical Music எப்படியெல்லாம் தன்னைக் கவர்ந்தது என்று கூறி, Bach’ன் Partita’வை Piano’வில் வாசித்துக் காட்டினார்.

‘ராஜா சார்.. அடுத்த Concert எப்போ?’ என்ற ரசிகர்களின் குரலுக்கு சிரிப்பைப் பதிலாகத் தந்து முடித்தார்.

 • நிகழ்ச்சியில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் திரு. பிரபாகர் அவர்கள் Conduct செய்த அழகு.  கைகள் மட்டும் அசைத்து அல்லது Baton கொண்டு conduct செய்பவர்களை நிறைய பார்த்திருக்கிறேன்.  ஆனால் கைகளை வீசிக், கால்கள் உதறி, முக்கியமான இடத்தில் கைதட்டிய ரசிகர்களை சடாரென்று திரும்பி முறைத்து அமைதிப்படுத்தி, Tempo சிறிதே drag ஆனாலும் அருகே சென்று கைகளில் தாளமிட்டு tempo’வை சரிசெய்து, சர்வாங்கமும் அதிர திரு. பிரபாகர் conduct செய்த அழகினைக் காணக் கண்ணிரண்டு போதவில்லை.

 • அம்பி சுப்ரமணியம்: இந்தப் 19 வயதுப் பாலகனுக்கு திருஷ்டி சுற்றிப் போடவேண்டும்.  வயலினில் கண்களுக்குப் புலப்படாத நுண்ணிய இடங்களையும் இவன் விரல்கள் அனாயசமாக தொட்டுத் தாவிச் சென்றது அற்புதம்.  நிகழ்ச்சியின் பிற்பகுதியில் ‘இவர் திரு. எல்.சுப்ரமணியம் அவர்களின் புதல்வன்’ என்று அனில் அறிமுகம் செய்யும்போதுதான் தோன்றியது, ‘பு.பி.பூ’ ஆகுமா? இசையுலகில் மிகச் சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது இந்தச் சிறுவனுக்கு. இவரும் மற்றொரு சிறுவன் ஆதித்யாவும் இசைஞானியின் பொற்கரங்களால் பொன்னாடை போர்த்தப்படும் பாக்கியம் பெற்றனர்.

 • ·  செம்ம ஜாலி மூடில் தலைவர். இப்படி அவரைப் பார்த்து எவ்வளவு நாளாயிற்று. இரண்டு முறை மேடையேறி இறங்கினார். நிகழ்ச்சி முடிந்து வெளியே சென்றுவிட்டவரை கார்த்திக்ராஜா சென்று மீண்டும் அழைத்து வந்து மேடையேற்ற மீண்டும் பேசினார். ரசிகர்கள் பாடச் சொன்னதும் பாடினார். பேசிக்கொண்டிருக்கும்போதே இசை நுணுக்கங்களை விளக்க, Piano’விற்கு நடந்து சென்று வாசித்துக் காட்டினார்.  ’தியாகராஜர் பாடல்கள் இயற்றியது இளைஞர்களுக்கு. என்ன யுவன்.. புரியுதா?’ என்று குஷி மூடில் நக்கலடித்தார். ‘Bach படத்தையும், தியாகராஜர் படத்தையும் போட்டுக்கொண்டு ‘ஏ.. உன்னைத்தானே’ அப்டின்னு பாடலாமா’ என்று புன்முறுவலுடன் பவதாரிணியைச் செல்லமாய்க் கண்டித்தார்.  குழந்தையாய் மாறிக் குதூகலித்தார். மிக அருகிலிருந்து பார்க்கக் கிடைத்தது கண்கொள்ளாக்காட்சி..!

இரவு பத்தேமுக்கால் வரை இருந்து நண்பர்களை வழியனுப்பிப் பின்னர், பார்க்கிங் வந்து பைக்கை உசுப்பிக் கிளம்பினேன்.  சில்லென்ற காற்று முகத்தை வருட வாகனம் வீதியில் விரையத் துவங்கியது.  இசைத்தாயின் இன்னிசையமுது, மனதில் படிந்திருந்த கோபம், பொறாமை, காமம், குரோதம் இன்னபிற அழுக்குகளையும் அண்ணா நூலகத்தின் அரங்கினுள் வழித்து எடுத்துப் போட்டு விட்டிருந்ததினால் உடலில் 50 கிலோ குறைந்த ஓருணர்வு. How to Name it? ‘எப்படிப் பெயரிட’ இந்த உணர்வை?

45 comments:

 1. அருமையான பதிவு
  நிகழ்ச்சிக்கு நேரில் சென்று வந்ததை போலவே இருந்தது படிக்கும் போது
  நன்றி

  ReplyDelete
 2. Replies
  1. நன்றி கானா பிரபா அண்ணே..! உங்கள் ஒற்றைச் சொல் பின்னூட்டமே வ.வா.பி.ரி. பட்டம் பெற்றது போன்ற உணர்வைத் தருகிறது. :-)

   Delete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உணர்வை உண்டாக்கியது ,உமது பதிவு ! நன்றி

  ReplyDelete
 5. இதை எழுதிய விரல்களை தொட்டு வணங்குகிறேன்.

  ReplyDelete
 6. Thala Karthik pathi Thalaivar sonnatha post pannama vituteengale thala :(

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.. ஆமா மறந்தே போயிட்டேன்..! கார்த்திக் பிறந்ததில் இருந்தே Bach Music கேட்டு வளர்ந்தவன். எனக்கு 27 வயதில்தான் அதைக் கேட்கும் பாக்கியம் கிட்டியது. ‘கார்த்திக் ரொம்ப பிரமாதமா கம்போஸ் பண்ணுவான். என் மகன் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. In fact அவனுடைய Western compositions'ஐ பார்த்து நானே வியந்திருக்கிறேன். என்னால் கூட அப்படி கம்போஸ் செய்ய முடியாது.

   - நிகழ்ச்சியின் நிறைவில் இசைஞானி கூறியது. :-)

   Delete
  2. ஆகா நன்றி

   Delete
 7. Replies
  1. வருகைக்கு நன்றி சகோ! :-)

   Delete
  2. Cherivaana padhivu. Mikka nandri.
   "Don't compare" endra, migavum arpudhamaana isaikovai innigazhchiyil vaasikkappadavillayaa?

   Mudhalil veLiyaana 'How To Name It' oli naadaakkaLil ivvisai idampeRavillai. Sila maadhangaLukkuppin vandha veliyeedugaLil mattum idam petradhu. Pinnar, Thiruppu Munai endra padaththin olinaadaavilum idam petradhu. (unfortunately as a mere 'filler'!

   Delete
  3. @Neel Shankar - "Dont Compare" - Flute & Keys'தானே? இசைக்கப்பட்டது என்று நினைக்கிறேன். சரியாய் நினைவில்லை. வருகைக்கு நன்றி! :-)

   Delete
 8. தல நேரில் பார்க்க முடியாத குறை தீர்ந்துவிட்டது.......மனமார்ந்த நன்றிகள் ;)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கோபி. உங்கள் ‘என்றென்றும் ஆசீர்வதிக்கப்பட்டவன்’ பதிவும் ஒரு விதத்தில் இன்ஸ்பிரேஷன் எனலாம்..! :-)

   Delete
 9. மற்றுமொரு அழகிய புனைந்துரைக்கு நன்றி இ.ப.

  ReplyDelete
 10. மிக்க நன்றி இளைய சகோதரா. அருமையான நடையில் நிகழ்ச்சி பற்றி அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள். சொல்ல வார்த்தைகள் இல்லை. வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சந்திரமோகன் அண்ணே! :-)

   Delete
 11. பார்த்து அனுபவித்ததை அப்படியே எழுத்தில் எடுத்து வருவதும்..எழுத்தில் படிப்பதால் பார்த்த அனுபவத்தை கொடுப்பதும் ஒரு கலைதான்..
  நிகழ்ச்சியை கண் முன்னே திரையிட்டதற்கு நன்றி..

  ReplyDelete
  Replies
  1. சொன்னால் நம்ப மாட்டீர்கள். உங்கள் பின்னூட்டத்தை 20 முறைக்கு மேல் மீண்டும் மீண்டும் வாசித்துவிட்டேன். நான் ஒரு Professional பதிவர் இல்லையென்பது எனக்கு தெரிந்தே இருந்தாலும், இது போன்ற ஊக்குவிப்புகள் மிக்க மகிழ்ச்சியை அளிக்கின்றன. நன்றி சகோ! :-)

   Delete
 12. அற்புதம் நண்பா.. மிக்க மகிழ்ச்சி
  இதை இதை தான் எதிர்பார்த்தேன்..

  ReplyDelete
 13. நண்பா, வா வா பக்கம் வா பாடல் இடம்பெற்ற படம் தங்கமகன்.

  ReplyDelete
  Replies
  1. பிழையைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நண்பா! திருத்தம் செய்தாயிற்று! :-)

   Delete
 14. அருமையான பதிவு.. அரங்கத்தில் அமர்ந்து நிகழ்ச்சியை ரசித்தது போன்ற உணர்வு..நன்றி நண்பரே.!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பா. கருத்திட்டமைக்கு நன்றி! :-)

   Delete
 15. This comment has been removed by the author.

  ReplyDelete
 16. ஐயஹோ... நான் அங்கு இல்லாமல் போய் விட்டேனே... தருமி திருவிளையாடலில் புலம்பியது போலப் புலம்ப வேணும் போல இருக்கே.. இதை பார்த்திருந்தால் பிற‌ந்த பலனை அடைந்திருக்கலாமே........ம்ம்ம்ம்ம்ம்...ர்ர்ர்ர்...

  ReplyDelete
 17. அருமையான பதிவு.. இரண்டாவது முறை கச்சேரி பார்த்தது போல் இருந்தது.
  மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி! நன்றி! :-)

   Delete
 18. அருமையான பதிவு.. இரண்டாவது முறை கச்சேரி பார்த்தது போல் இருந்தது.
  மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி! வருகைக்கு நன்றி! :-)

   Delete
 19. மிக நேர்த்தியான பதிவு, நிகழ்ச்சியை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியமைக்கு மிக்க நன்றி. அவசர வேலை காரணமாக ஊருக்கு செல்ல நேரிட்டு ஒரு மிக மிக அருமையான நிகழ்ச்சியை தவறவிட்டுவிட்டேன்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி சகோ! :-)

   Delete
 20. "Don't Compare" muzhukka muzhukka violin dominant piece, not flute and keys... Jog raga (close to Carnatic raga Naattai). It's an amazing fusion of carnatic and western jazz.
  Perhaps there was a track name mix up?
  You may Listen to the Dont Compare track here...
  http://csr-htni.blogspot.com/

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது சரிதான். Track name mixup பற்றி மேடையில் வைத்து பவதாரிணியே இசைஞானியிடம் கேட்டார். Name'ல் தவறிருந்தால் பரவாயில்லை. Music'ல்தான் தவறிருக்கக் கூடாது’ என்று இசைஞானி பதிலளித்தார்.

   தகவலுக்கு நன்றி! :-)

   Delete
 21. மிக்க நன்றி. அருமையான நிகழ்ச்சியை தவறவிட்டுவிட்டேன்.

  ReplyDelete
 22. Thanks a lot raja sir..expecting more live concerts from you

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக! வருகைக்கு நன்றி! :-)

   Delete