Saturday, July 23, 2011

என்ன சத்தம் இந்த நேரம்


பாடல்          : ‘என்ன சத்தம் இந்த நேரம்
படம்           : புன்னகை மன்னன்
பாடியவர்       : எஸ்.பி.பி.
எழுதியவர்      : வாலி
இசை           : இசைஞானி

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா?
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா?
கிளிகள் முத்தம் தருதா? அதனால் சத்தம் வருதா?
அடடா..- என்ன சத்தம் ந்த நேரம்

1.        
கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே!
கண்களில் ஏந்த கண்ணீர் அது யாராலே?
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே!
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே!
மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு!
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு!
ஆரிரரோ! இவர் யார் எவரோ?
பதில் சொல்வார் யாரோ? – என்ன சத்தம்

2.         கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ!
தன் நிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ!
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ!
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ!
மங்கைவள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம்!
ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்!
யார் இவர்கள்? இரு பூங்குயில்கள்!
இளம் காதல் மான்கள் - என்ன சத்தம்

அண்ணே! அஞ்சி டீ’… கடைக்கார அண்ணனிடம் சொல்லிவிட்டு அரட்டையை ஆரம்பித்தோம். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு படிப்பதற்காக(!) நண்பனின் இல்லத்தில் கூடி, இரவு 12 மணிக்கு மேல் தூக்கம் கலைக்க டீ குடிக்க வருவது வழக்கம். இடம்: மதுரை பழங்காநத்தத்தில் உள்ள டீக்கடை! படிப்பது ஒரு மணி நேரம் என்றால் டீக்கடையில் ஒன்றரை மணி நேரம் செலவழிக்கத் தவறுவதில்லை..! ஊரே உறங்கிவிடும் பொழுதுகளில் கண்ணாடிக் குவளைகளில் டீயையும், கடையில் இருக்கும் 3 அடி உயர சிங்கப்பூர் ஸ்பீக்கர்களில் திரை இசைப்பாடல்களையும் நேரம் போவது தெரியாமல் ருசித்துக் கொண்டிருப்போம்.

எந்தப் பாடல் ஓடிக்கொண்டிருந்தாலும் எங்கள் குழுவைப் பார்த்தவுடன் பண்ணைப்புரத்துக்காரய்ங்க (இசைஞானி ரசிகர்கள்) வந்துட்டாய்ங்கய்யா! என்று சிரித்தபடி டீக்கடை ரவி அண்ணன் 1980-களின் முத்துக்களில் ஒன்றை எடுத்து Cassatte Player-ல் திணிப்பார்! பரீட்சைக்குப் படித்தோமோ இல்லையோ, ப்ரியாவையும், ஜானியையும், வரி விடாமல் ஒப்பித்தோம்.

அன்று இரண்டு பாடல்களுக்குப் பின் அமைதியாய் இருந்த ஊரைப் பார்த்து என்ன சத்தம் இந்த நேரம் என பாலு கேட்கத்துவங்கி இருந்தார். பல்லவியில் கிளிகள். என பாலு ஒரு Pause கொடுத்த நொடியில்.. Drums-ன் Cymbal ஒலி இடதுபுறம் இருந்த Speaker-ல் இருந்து வந்து செவியை வருட, முத்தம் தருதா. என அவர் மறுபடிக் கேட்டு நிறுத்திய விநாடியில் Cymbal ஒலி வலதுபுற Speaker-ல் இருந்து

அதற்கு முன்னர் என்ன சத்தம் பாடலை நான் நூற்றுக்கணக்கான முறை கேட்டிருந்தபோதும் அந்த நேரத்தில் தான் ஸ்பீக்கர் விட்டு ஸ்பீக்கர் பாயும் ஒரு Sound Effect பாடலில் இருப்பதை உணர்ந்தேன்.  படக்கென்று ஸ்பீக்கர்களை நோக்கி நான் பார்வையைத் திருப்ப, உடன் இருந்த நண்பன் அதுக்குப் பேர்தான் மாப்ள Streo Effect’ என்றான். Stereo என்ற பதத்தை அடிக்கடி நான் கேள்விப்பட்டிருந்தபோதிலும் என்ன சத்தம் பாடலின் பல்லவியில் கிளிகள் முத்தம் தருதா?என்ற வரியின் மூலம் செயல்முறைவிளக்கம் கேட்கப் பெற்றேன். இன்றும் Headphone-ல் இந்தப் பாடலைக் கேட்கும்போது பாடல் முழுமையும் Cymbal ஒலி, தலையைச் சுற்றிச் சுற்றி வந்து ஒரு செவிக்குள் புகுந்து மறு செவிக்குள் நுழையும் Streo Effect-ல் அமர்க்களப்படுத்தும்.

பாடலின் துவக்கத்தை கவனித்திருக்கிறீர்களா? பெரிய Orchestration எதுவுமில்லாமல் வெறும் D Minor Chord உடன் துவக்கியிருப்பார் இசைஞானி. கமலும் ரேகாவும் எப்படிக் காதலில் விழுந்தார்கள் என்ற முன்னுரையோ, எங்கெல்லாம் சென்று காதலித்தார்கள் என்று விரிவாக்கமோ இல்லாமல், நேரடியாக Climax-ஐப் பார்ப்பது போன்ற காட்சியமைப்பு என்பதால் இசைஞானி, Prelude எல்லாம் பெரிதாகப் போடாமல் ஒரு அழகிய D Minor திலகமிட்டு பாடலை அனுப்பி வைத்துவிட்டார் போலும்.

இந்தப் பாடலின் இரண்டாவது Interlude-இல் வரும் Guitar Piece-ஐ ஒரு காலத்தில் Rewind செய்து, Rewind செய்து பைத்தியம் போலத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருப்பேன். எப்படியாகிலும் Piano படித்து இந்த Interlude-, அதன் Bass Section உடன் சேர்த்து, இரண்டு கைகளையும் உபயோகித்து வாசித்துவிட வேண்டும் என்று மனதில் தீராத ஆசை இருந்தது. (மூன்று மாதம் Classes போனதோடு சரி! கடைசிவரை பியானோ படிக்கவே இல்லை என்பது வேறு விஷயம்).  வாசிக்க முடிந்ததோ இல்லையோ, இத்தனை வருடங்கள் கழித்து, அந்த இரண்டாவது Interlude-ஐ ஒரு சிறிய Software உதவியுடன், Score Sheet-ல் எழுத முடிந்தது.  Piano படித்தவர்கள் இசைத்து மகிழவும்.

கமலுக்காகவே கே.பி. உருவாக்கிய படம் புன்னகை மன்னன்.  இசைஞானிக்கு ஏ.ஆர். ரஹ்மான் கீபோர்ட் இசைத்த படம்.  பாடல்களில் Loops, Computer Music என்று Technology-ஐ, இசைஞானி அளவோடு அள்ளிக் கலந்து ஊட்டிய இசையமுது.  படம் வெளிவந்தபோது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.  அவ்வளவு அற்புதமாய்ப் பூக்கும் கமல்-ரேவதி காதல், பெரும் Tragedy-யில் முடிந்து போவதை என்னால் அன்று என்னால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை.  கல்லூரியில் படிக்கும்போது, என்ன சத்தம் படமாக்கப்பட்டஅதிரபள்ளி அருவிக்கு சுற்றுலா சென்றபோதுகூட, அருவியின் அழகை ரசிப்பதை விட கமல்-ரேவதி காதல் முடிந்து போன அருவி என்ற மயான உணர்வுதான் மனதை ஆட்கொண்டிருந்தது.

ஒரு இசைஞானி பாடலில் மனம் லயித்துப் போய் Guitar-ஐயோ அல்லது Keyboard-ஐயோ எடுத்து, Chords கண்டுபிடிக்கலாம் என்று உட்கார்ந்தால் பெரும்பாலும், ‘அடடா.. என்ன ஒரு Chord Application..!! இந்த இடத்தில் இவ்வளவு ரம்மியமாக ஒலிக்கிறதே!! இதையெல்லாம் கண்டுபிடித்து எழுதி வாசிக்க வேண்டுமென்றால் ஒழுங்காக Music படித்திருக்க வேண்டும்……….!!” என்று ஒரு சுகமான தோல்வி உணர்வே மனதில் மிஞ்சும். நீண்ட நாட்களுக்குப் பின் கொஞ்சம் முயன்றேன். தவறிருப்பின் பின்னூட்டத்தில் திருத்தவும்.

/Dm என்ன சத்தம் இந்த நேரம் உயி/Cm ரின் ஒலி/Dm யா?
/Dm என்ன சத்தம் இந்த நேரம் நதி/Cm யின் ஒலி/Dm யா?
/Eb
கிளிகள் முத்தம் /F தருதா?
/Eb அதனால் சத்தம் /F வருதா?
அட/ Eb டா.. /Gm

/Gm
கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது /Bb காயவில்லையே!
/Gm
கண்களில் ஏந்த கண்ணீர் அது /Bb யாராலே?
/Gm
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மண/Bb மாகவில்லையே!
/Gm
காதலன் மடியில் பூத்தாள் ஒரு /Bb பூப்போலே!
/F
மன்னவனே /Bbm உன் விழியால் /F7 பெண் விழியை /Gm மூடு!
/F
ஆதரவாய்ச் /Bbm சாய்ந்துவிட்டாள் /F7 ஆரிரரோ /Gm பாடு!
/Cm
ஆரிர /Gmரோ! இவர் /Cm யார் எவ /Gmரோ?
பதில் /Cm சொல் /Fவார் /Bbயா /Fரோ? – /Dm என்ன சத்தம்

சரணத்தில், ‘மன்னவனே உன் விழியால்’ வரியில் Bb வாசித்துப் பார்த்தபோதும் நன்றாகத்தான் ஒலிக்கிறது. இருப்பினும் அவ்வரியின் இரண்டாவது Barல் (‘உன் விழியால்’) வாசிக்கப்படும் 3 Bass Notesஇலும் (Bb, Db & Bb… சிந்தை மயக்கும் அழகு, இந்த இடத்தில் இந்த மூன்று Notesம்) Minor Chord வாசம் வருகிறது என்பதால் Bbm இசைத்தேன்.  தவறிருப்பின் திருத்திக் கொள்ளவும்.

இன்னும் 300 வருடங்கள் ஆனபின்னும் இசை ரசிகர்கள் உட்கார்ந்து கேட்டு வியந்து சிலாகிக்கப்போகும் பாடல் இது.  இப்படிப்பட்ட பாடல்கள் உருவாக்கப்பட்ட காலத்தில், உருவாக்கியவர் வாழும் காலத்தில், நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். யாருக்குக் கிடைக்கும் இந்தக் கொடுப்பினை!! இசைஞானியின் இந்தப் புனிதப் (இசை) பயணம் இன்னுமொரு சரித்திரம்.

5 comments: