Sunday, May 29, 2011

“நீங்க, நான், ராஜா Sir” - பகுதி 1 (23 மே முதல் 28 மே 2011 வரை)

ரேடியோ மிர்ச்சியின் “நீங்க, நான், ராஜா Sir” நிகழ்ச்சியின் சுவாரசியமான தொகுப்பு.

23 மே 2011

இசைஞானியின் 68வது பிறந்த நாளை முன்னிட்டு ரேடியோ மிர்ச்சி 98.3-ன் சிறப்பு நிகழ்ச்சி இனிதே துவங்கியது. இரவு 9 மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சியில் 11 மணி வரை இசைஞானியின் 80களின் ஹிட் பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக இசைக்கவிட்டுத் தாலாட்டியது ‘மிர்ச்சி’. தினமும் ஒரு பிரபலம் வந்து கலந்துகொள்ளவிருக்கும் நிகழ்ச்சியில் இன்று (23 மே 2011) ‘பாரதிராஜா’ கலந்து கொண்டு சிறப்பித்தார். இசைஞானியை தான் ‘வாடா போடா’ என்று உரிமையுடன் அழைப்பதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட பாரதிராஜா தனது பால்ய வயது நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார். மலேரியா இன்ஸ்பெக்டர் வேலைகிடைத்து வத்தலகுண்டில் “ட்ரெய்னிங்” முடித்து வீடு வீடாக கணக்கெடுக்க பாரதிராஜா செல்ல, பண்ணைப்புரத்துக்கும் செல்ல வேண்டி இருந்திருக்கிறது. அப்பொழுது இசைஞானியின் வீட்டினுள் இருந்து சகோதரர்கள் ஹார்மோனியம், தபேலாவுடன் பாடல்களை இசைத்து பாடும் சப்தம் கேட்டு, உடன் வந்த தன் நண்பனிடம் அவர்களைப் பற்றி பாரதிராஜா விசாரிக்க, அப்படியே இசைஞானியுடன் நட்பு மலர்ந்திருக்கிறது. அதன் பின்னர் பாரதிராஜா மலேரியா கணக்கெடுப்புச் செல்லும் இடங்களுக்கு இசைஞானியும் உடன் செல்ல, கதவுகளில் அவர்கள் குறியீடு இட்டபொழுது ஏற்பட்ட சுவாரசியமான நிகழ்ச்சிகள் சிலவற்றையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் ‘கோடைகாலக் காற்றே’, ‘ராதே என் ராதே’ போன்ற முத்துக்களைச் சிதறவிட்ட மிர்ச்சி, இரண்டுமணி நேரம், இசைஞானி ரசிகர்களை மயிலிறகால் வருடித் தூங்க வைக்காதக் குறையாகத் தாலாட்டி மகிழ்ந்தது! 
 
24 மே 2011

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே இசைஞானி ரசிகர்களுக்கு ‘இன்ப அதிர்ச்சியை’ தந்து மகிழ்வித்தது ‘மிர்ச்சி’. நிகழ்ச்சியைத் தொகுத்தளித்த செந்தில் கூறியது.. “நிகழ்ச்சியைக் குறித்து இசைஞானியிடம் பேசினோம். அவர் தனது பிறந்த நாள் எல்லோரும் நினைப்பது போல ஜூன் 2 இல்லை என்றும், ஜூன் 3-ம் தேதிதான் என்று ஒரு செய்தியைத் தெரிவித்தார். மேலும் நம் நிகழ்ச்சியில் தன் பிறந்த நாள் அன்று கலந்து கொண்டு நம்முடன் உரையாடச் சம்மதித்திருக்கிறார்”.

நிகழ்ச்சியில் இன்றும் தொடர்ந்து பாரதிராஜா அவர்கள் கலந்து கொண்டு பல சுவாரசியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். நடிகர் திலகம் திரு. சிவாஜி கணேசனுடன் “முதல் மரியாதை” படப்பிடிப்பின்போது ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி அவர், ‘அவன் (பாரதிராஜா) நடித்துக் காட்டுறதில 25% நடிச்சா போதும்’ என்று ராதாவிடம் சிவாஜி தன்னைப் பற்றிக் கூறியதைப் பெருமையுடன் நினைவு கூர்ந்தார்.

மேலும், ரீ-ரெக்கார்டிங்கிற்காக இசைஞானியிடம் ‘முதல் மரியாதை’ படத்தைக் காண்பித்தபொழுது இசைஞானிக்குப் படத்தைப் பற்றி பெரிதாக அபிப்ராயம் ஒன்றும் இல்லாதிருந்திருக்கிறது. ‘இருந்தாலும் அவன் (இசைஞானி) ரீ-ரெக்கார்டிங்கை சின்ஸியரா செஞ்சான்’ என்று குறிப்பிட்ட பாரதிராஜா, பின்னர் இசைஞானி கொஞ்சம் கொஞ்சமாக ரீ-ரெக்கார்டிங்கில் மனம் லயிக்க, ஆர்கெஸ்ட்ராவில் இருந்தவர்களும் மிகவும் Involvement-உடன் இசைக்கத் துவங்கியதையும் குறிப்பிட்டார். கடைசியில் படத்தின் மொத்த ரீரெக்கார்டிங்கும் முடிந்தவுடன் படத்தின் இறுதி வடிவத்தைக் கண்டு இசைஞானி மிகவும் திருப்தியுடனும் மகிழ்வுடனும் காணப்பட்டதாகத் தெரிவித்தார்.

படத்தின் ஒரு கதாபாத்திரம் இறந்து விடும் காட்சியை 60-வது ஷாட்களில் எடிட் பண்ணி இசைஞானியிடம் கொடுத்திருக்கிறார் பாரதிராஜா. “அந்த சீனுக்கு வெறும் Flute வச்சி ஒரு Piece பண்ணியிருப்பான். வேற எவனும் அப்படிப் பண்ண முடியாது” என்று குறிப்பிட்டார் இயக்குனர் இமயம்.

கவிஞர் வாலி அவர்கள் இசைஞானியைப் பற்றி சொன்ன ஒரு செய்தியையும் இயக்குனர் இமயம் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார். ஒரு படத்தின் ரெக்கார்டிங்கின்போது பாடல் பதிவைக் கேட்டுக் கொண்டிருந்த வாலி பாரதிராஜாவிடம், ‘இவன் (இசைஞானி) யானையைவே (எம்.எஸ்.வி) படுக்க வச்சிருவான் போல இருக்கே?’ என்று கூறியிருக்கிறார். இந்த நிகழ்வை பாரதிராஜா சொன்ன நொடியில் மிர்ச்சி ஸ்டுடியோவில் பலத்த கைதட்டல்!

நிகழ்ச்சியில் ஒலிபரப்பான பாடல்கள்:

அடி ஆத்தாடி, பூஜைக்கேத்த பூவிது, ராதா ராதா நீ எங்கே, பூப்பூக்கும் மாசம் தைமாசம், பட்டுக் கன்னம், அழகிய கண்ணே, சின்ன மணிக் குயிலே, பனி விழும் மலர்வனம், வெள்ளைப் புறா ஒன்று, செண்பகமே, நான் தேடும் செவ்வந்திப்பூவிது, மாலை சூடும் வேளை, நிலவு தூங்கும் நேரம், ஆகாய வெண்ணிலாவே!
 
25 மே 2011

“இசைஞானியிடம் பேசிவிட்டோம். ஜூன் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நம்முடன் இசைஞானி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கிறார்” என்ற இனிப்பான செய்தியுடன் தொகுப்பாளர் செந்தில் நிகழ்ச்சியைத் துவக்கினார். இன்றைய நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் இயக்குனர் திரு. பாலுமகேந்திரா.

‘இசைஞானியுடன் உங்கள் முதல் சந்திப்பு எப்பொழுது நடந்தது? அதைக் குறித்துச் சொல்லுங்கள்’? என்ற கேள்விக்கு பாலுமகேந்திரா ‘தெலுங்குத் திரைப்படங்களுக்கு நான் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இசையமைப்பாளர் ஜி.கே. வெங்கடேஷ் அவர்களிடம் கிட்டார் வாசிக்க ஒடிசலாக, குள்ளமாக ஒருவர் வருவார். அவர்தான் இளையராஜா. அப்போதுதான் அவருடன் எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் சினிமாவைக் குறித்து அவர் நிறைய பேசுவார். ஒளிப்பதிவைக் குறித்தும், படம் உருவாக்கப்படுவதைக் குறித்தும் நிறைய கேள்விகள் கேட்பார். அப்படி ஒரு தேடல் அவரிடம் இருந்தது’ என்று பதிலளித்தார்.

இசைஞானியைத் தனது ‘ஆஸ்தான இசையமைப்பாளர்’ என்று குறிப்பிட்ட திரு. பாலுமகேந்திரா, தனது மூன்றாவது திரைப்படமான மூடுபனி, இசைஞானியின் 100வது படம் என்ற தகவலைத் தெரிவித்தார். இந்தத் திரைப்படத்திற்குப் பின்னர் பிறகு ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என எந்த மொழியில் பாலுமகேந்திரா படம் இயக்கினாலும் அதற்கு இசைஞானிதான் இசையமைத்தார் என்றும் தெரிவித்தார்.

மூடுபனி திரைப்படத்தின் பின்னணி இசைக் குறித்து பேசிய திரு. பாலுமகேந்திரா, “அந்தக் காலத்தில் நான் கண்ட திரைப்படங்கள் அனைத்திலும் படம் துவங்கியது முதல் முடிவு வரை ஏதாகிலும் ஒரு இசைக்கருவியின் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் எனது திரைக்கதைக்கு நிறைய இடங்களில் ‘மௌனம்’ தேவைப்பட்டது. அதைப் புரிந்துகொண்ட இசைஞானி ‘மூடுபனி’ திரைப்படத்தில் நிறைய காட்சிகளில் பின்னணி இசையில் மௌனம் சாதித்து காட்சிகளுக்கு அழகூட்டினார், என்றார். மேலும் தங்கள் இருவருக்குமான நட்பைப் பற்றி ‘That was a beautiful relation between two men in the same wavelength’ என்றார்.

‘வீடு’ திரைப்படத்திற்காக இசையமைப்பாளருக்குக் கொடுக்க பாலுமகேந்திராவிடம் பணம் இல்லாதிருந்திருக்கிறது. அதை இசைஞானியிடம் சொல்லவும் தயக்கமாக இருந்திருக்கிறது. “ஒரு கலைஞனிடம் சென்று, உனக்குக் கொடுக்க என்னிடம் பணம் இல்லை என்று எப்படிச் சொல்வது?’ என்று எனக்குக் கஷ்டமாக இருந்தது. இருப்பினும் இளையராஜாவிடம் நான் சொன்னேன்’. அவரும் “How to Name it?” என்ற இசைப் பேழைக்காக வைத்திருந்த இசைக் கோர்வைகளை அந்தப் படத்திற்கு பயன்படுத்தினார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்தப் படத்திற்காகவே இசையமைத்தது போல அந்த இசை அவ்வளவு கச்சிதமாகக் காட்சிகளுடன் பொருந்தியது” என்று பாலுமகேந்திரா தெரிவித்தார்.

பின்னர் நிகழ்ச்சித் தொகுப்பாளர் செந்தில், இசைஞானிக்குள் இருக்கும் இயக்குனரைப் பற்றிக் கேட்டார். அதற்குப் பதிலளித்த பாலுமகேந்திரா, ‘இளையராஜாவிற்கு Direction குறித்து இருக்கும் அறிவு இன்று இருக்கும் கைதேர்ந்த இயக்குனர்களுக்குக் கூட இருக்காது. படம் பார்ப்பவர்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று நாடி பிடித்துப் பார்க்கக் கூடிய Direction அறிவு இசைஞானிக்கு இருப்பதாகத் தெரிவித்தார். ‘ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா’ என்று ஒரு பாட்டு இருக்கு இல்லையா? அது அவருக்கு மிகவும் பொருத்தம்’ என்றார்.

வீடு திரைப்படத்திற்காக உண்மையிலேயே கட்டப்பட்ட வீடு, இன்று பாலுமகேந்திரா அவர்களின் இயக்குனர் பயிற்சிப் பள்ளியாக உருவெடுத்துள்ளதைக் குறிப்பிட்ட அவர், இசைஞானி அதைக் குத்துவிளக்கேற்றித் துவங்கிவைத்ததையும் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

‘அன்று நான் பார்த்த ராஜாவுக்கும் இன்று நான் பார்க்கும் ராஜாவுக்கும் தோற்றத்தில் மட்டும்தான் வித்தியாசமே தவிர பழகும் விதத்தில் ஒரு மாற்றமும் இல்லை. எனது இனிய நண்பர், எனது ஆஸ்தான இசையமைப்பாளர், இசைஞானி இளையராஜா அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் என்னை அழைத்து வாய்ப்பளித்ததற்கு நன்றி!’ என்று கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியின் நாளைய (26 மே 2011) விருந்தினர், திரு. பாலமுரளி கிருஷ்ணா அவர்கள்.

நிகழ்ச்சியில் ஒலிபரப்பான பாடல்கள்:

ஆத்தாடி அம்மாடி, மானின் இரு கண்கள் கொண்ட, பேசக் கூடாது, இளைய நிலா, ஒரு ஜீவன் அழைத்தது, நினைத்தது யாரோ, ராத்திரியில் பூத்திருக்கும், ராஜா மகள், ராஜ ராஜ சோழன் நான், பாப்பப்பா தித்திக்குதே இந்த முத்தம், ஓஹோ மேகம் வந்ததோ மற்றும் ராசாத்தி ஒன்ன.
 
26 மே 2011

‘ரோஜாவைத் தாலாட்டும் தென்றலுடன்’ துவங்கிய நிகழ்ச்சியின் இன்றைய விருந்தினர் இசைஞானியின் பெருமதிப்பைப் பெற்ற இசைமேதை திரு. பாலமுரளிகிருஷ்ணா அவர்கள். இசைஞானி இசையில் தான் பாடிய ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ பாடலைக் குறித்து பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இந்தப் பாடலைப் பற்றி அவர் கூறியது. ‘சாஸ்திரிய சங்கீதத்தில் ஒரு சில ராகங்களை அதிகமாக யாரும் உபயோகிக்க மாட்டார்கள். அப்படி ஒரு ராகம் ‘ரீதிகௌளை’. அந்த ராகத்தில் வேலை செய்வது என்பது ஒரு பெரிய விஷயம். நிறைந்த சங்கீத ஞானம் இருப்பவர்கள் மட்டுமே அதைச் செய்ய முடியும். ராஜா என்னிடம் வந்து இதை நீங்கள் பாட வேண்டும் என்று கூறினார். பாடிக் காட்டினார். மிகச் சிறப்பாக இருந்தது. பொதுவாக ஒரு திரைஇசைப் பாடலைக் கேட்கும்போது ‘அடடே! இது இந்த ராகம்’ என்பது போன்ற சிந்தனை வரவே கூடாது. அப்படி கதையுடன், காட்சியுடன் ஒரு குழைவுடன் அமைக்கப்பட்டிருப்பதுதான் சிறந்த திரைஇசை. அப்படி ஒரு லட்சணத்துடன் ராஜா இசையமைத்த ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ பாடலில் அதற்கு மேல் எதுவும் செய்து விடமுடியாது. அப்படி ஒரு அபாரமான முறையில் ராஜா அந்தப் பாடலை அமைத்திருந்தார்’ என்று கூறிய திரு. பாலமுரளிகிருஷ்ணா, ‘ராஜா நம் நாட்டுக்குக் கிடைத்த ஒரு வைரம்’ என்று சிலாகித்தார்.

அதன் பின்னர் இசைக்குப் பல வடிவங்கள் உண்டா என்ற கேள்விக்கு, ‘கர்நாடிக் மியூஸிக், டிராமா மியூஸிக், சினிமா மியூஸிக், ஹிந்துஸ்தானி மியூஸிக்னு சொல்றதே தப்பு. இதெல்லாம் இப்போ நாம கொடுத்த பெயர்கள். ‘சங்கீதம் என்பது சங்கீதம் தான்’ என்றார்.

நிகழ்ச்சியைத் தொகுத்தளித்த செந்தில் ‘பெரும்பாலும் இசையமைப்பாளர்கள் ஆன்மிகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டிருக்கிறார்களே? நீங்களும் இசைஞானியும் கூட ஆன்மிகத்தில் அதீத ஆர்வம் காட்டுவதன் காரணம் என்ன?’ என்று கேட்க, ‘சங்கீதம் என்பது சரஸ்வதி. சங்கீதம் தெரியாத கடவுள் இல்லை. ஸ்ருதி-லய ஞானம் இருக்கிறவர்கள் எல்லோரும் கடவுள். எனவே எனக்கு இளையராஜா கடவுள். அவருக்கு நான் கடவுள்’; கடவுள் இல்லாமல் சங்கீதம் இல்லை’, என்று பதிலளித்தார்.

நிகழ்ச்சியின் இடையே துக்கடா செய்திகளாக, ‘தனது அண்ணன் பாவலரின் ஆர்மோனியப் பெட்டியில் அவருக்கே தெரியாமல் இசைஞானி வாசித்துப் பழகியதையும், சிறுவயதில் தனக்குக் கிடைத்த ‘மாண்டலின்’ இசைக்கருவியை யாருடைய உதவியும் இல்லாமல் தானே இசைஞானி வாசித்துப் பழகியதையும், இசைஞானிக்கு முழுமையான ஒரு கர்நாடக இசைக் கச்சேரியை செய்யும் அளவிற்கு இசைஞானம் இருப்பதாக திரு. பாலமுரளிகிருஷ்ணா கூறியதையும், நிகழ்ச்சியில் குறிப்பிட்டார், தொகுப்பாளர் செந்தில்.

நிகழ்ச்சியில் கடந்த இரு நாட்களை விடவும் அதிகமான பாடல்களை ஒலிபரப்பி இசைஞானி ரசிகர்களை மகிழ்வித்தது மிர்ச்சி. ஒலிபரப்பான பாடல்கள்: ரோஜாவைத் தாலாட்டும் தென்றல், காலங்காலமாக வாழும், ஆனந்த ராகம் கேட்கும் காலம், மெல்ல மெல்ல என்னைத் தொட்டு, பாராமல் பார்த்த நெஞ்சம், பாடும் வானம்பாடி நான், நினைவோ ஒரு பறவை, வெள்ளி கொலுசுமணி, கேளடி கண்மணி, உன் பார்வையில், ஏதேதோ எண்ணம், நிலாவே வா, தூங்காத விழிகள் ரெண்டு, தேவன் தந்த வீணை, ராசாத்தி மனசுல, தோகை இளமயில், ‘தேவன் கோவில் தீபமொன்று’ மற்றும் ‘புதுமாப்பிள்ளைக்கு’.

நிகழ்ச்சியின் நிறைவாக திரு. பாலமுரளிகிருஷ்ணா, “இசைஞானி இன்னும் 50 பிறந்த நாட்களைக் கொண்டாட வேண்டும். அனைத்திலும் நான் வந்து வாழ்த்த வேண்டும்” என்று கூறி முடித்தார். நிகழ்ச்சியின் நாளைய சிறப்பு விருந்தினர் பாடகர் திரு. மனோ அவர்கள் என்ற செய்தியுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
 
27 மே 2011

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பாடகர் திரு. மனோ அவர்கள் கலந்து கொண்டார். இசைஞானியை தான் தெலுங்கு திரைப்படங்களுக்கு Track பாடிக்கொண்டிருந்தபோது முதன்முதலில் பார்த்ததாகத் தெரிவித்த திரு. மனோ, ‘ராஜா சார் கார் கண்ணாடி கொஞ்சம் கீழ இறங்காதா? அவர் முகத்த பார்க்க மாட்டோமா?’னு நாங்கள்லாம் ஏங்குவோம். சில சமயம் பார்க்க முடியும். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக பழக்கம் ஏற்பட்டு ஒரு தெலுங்குப் பாடலுக்கு என்னை ட்ராக் பாட வைத்தார்.

“அவர் இசையமைத்த தெலுங்குப் பாடல்தான் என் முதல் பாடல். அப்போதான் என் ஒரிஜினல் பெயரான நாகூர் பாபு என்ற பெயரை மாற்றினார். ‘உன் பேர கொஞ்சம் சின்னதா மாத்தலாமா? ஒரு பெயர் சொல்லு’ என்றவரிடம், ‘சார்! நீங்களே சொல்லுங்க சார்’ என்றேன். அடுத்த நாள் என்னைக் கூப்பிட்டு ‘மனோஜ், மனோகர், இந்த மாதிரியான பெயர்கள் உனக்கு ஓ.கே.வா? என்று கேட்டார். நான் ‘சார் நீங்க சொன்னா சரிதான் சார்’னு சொல்லிட்டேன். உடனே ‘உன் பெயர் ‘மனோ’ என்று சொல்லிவிட்டார். அதன் பின்னர் பல பாடல்கள் அவருடைய இசையில் நான் பாடி, மனோ-சித்ரா என்ற சொற்கள் இணைந்து உலகெலாம் சென்றடைந்தது” என்று குறிப்பிட்டார்.

இசைஞானியின் இசையில் திரு. மனோ அவர்கள், ‘தேன்மொழி’ பாடல் (இது தமிழில் மனோவின் முதல் பாடல்) பதிவின்போது நடந்த சம்பவங்களையும் பகிர்ந்து கொண்டார். ‘நான் தெலுங்குப் பாடல்கள் பாடிப் பழக்கப்பட்டவன் என்பதால் எனக்கு பாடல் பதிவின்போது ‘ழ’ உச்சரிப்பு சரியாக வரவில்லை. அதுதான் என் முதல் பாடல் வேறு. வேறு இசையமைப்பாளராக இருந்திருந்தால் உடனே, ‘வேறு யாரையாவது வைத்துப் பாட வைக்கலாமே?’ என்று யோசித்திருப்பார்கள். ஆனால் ராஜா சார் எனக்கு ‘ழ’ எப்படி உச்சரிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததோடு, தமிழில் ஒவ்வொரு வார்த்தையையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்று ஒருமுறை ஆர்கெஸ்ட்ராவுடன் சேர்ந்து பாடி பொறுமையாகச் சொல்லிக் கொடுத்தார்’. வார்த்தைகள் உச்சரிப்பு ஒரு பாடலில் எவ்வளவு முக்கியம் என்பதை அப்போது நான் கற்றுக் கொண்டேன்’, என்று கூறினார்.

கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கும் மேலாக இசைஞானியிடம் தான், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடப் பாடல்களை பாடி வருவதாகத் தெரிவித்தார் மனோ. ‘ராஜா சார் இதுவரைக்கும் யார் பாடியும் ரெக்கார்டிங் முடிந்தவுடன் ‘நல்லா இருக்கு’னு சொன்னதில்ல. அதற்கு எனக்குத் தெரிந்த காரணம், ஒரு க்ரியேட்டருக்கு எப்பொழுதுமே தான் படைத்ததில் திருப்தி வந்து விடக்கூடாது. இதை இன்னும் பெட்டரா பண்ணியிருக்கலாமே? இதை வேறுமாதிரி பண்ணி இருக்கலாமே?’ என்று தோன்றிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு க்ரியேட்டர் தன்னுடைய படைப்பில் satisfy ஆகிவிட்டால் அவருடைய Creativity கம்மி ஆயிடும். அதுதான் ராஜா சார் எப்பவும் ‘நல்லா இருக்கு’னு சொன்னதில்ல. அவர் ரெக்கார்டிங் முடிஞ்சவுடனே மௌனமாக இருந்தாலே, ரெக்கார்டிங் சமயத்தில் நாம திட்டு வாங்காமல் இருந்தாலே ‘அப்பாடா! நாம இந்தப் பாட்ட ஒழுங்கா பாடிட்டோம்’னு எங்களுக்குத் தோணும்’. If he is silent, நமக்கு ஒரு 70% மார்க் என்று அர்த்தம்’ என்றார்.

இசைஞானியிடம் திட்டு வாங்கிய அனுபவமுண்டா என்ற கேள்விக்கு, ‘ராஜா சார் முகத்தில Expression–ஏ தெரியாது. சில சமயம் ரெக்கார்டிங் முடிந்த பிறகு, ‘அது ஏன் அந்த இடத்தில அந்த சங்கதிய போட்ட? நான் கேட்டேனா?’ என்று கேட்பார்; அவ்வளவுதான்’ என்றார்.

நாளையும் பாடகர் மனோ அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கிறார் என்ற தகவலுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

நிகழ்ச்சியில் ஒலிபரப்பான பாடல்கள்:

வா வா வஞ்சி இள மானே, மந்திரப் புன்னகையோ, வானுயர்ந்த சோலையிலே, தாலாட்டும் பூங்காற்று, பூவ எடுத்து ஒரு, வானிலே தேனிலா, வனிதா மணி, பூவான ஏட்டத் தொட்டு, செந்தாழம் பூவில், ஏதோ மோகம், கல்யாணத் தேன் நிலா.
 
28 மே 2011

இன்றும் நிகழ்ச்சியில் பாடகர் மனோ கலந்து கொண்டு இசைஞானியுடனான தனது இனிய நாட்களை அசைபோட்டார்.

உங்களுக்கு நடிப்பு வாய்ப்பு வந்ததைக் குறித்து கூறுங்களேன்?

“ராஜா சார் தயாரிப்பில வெளிவந்த படம் சிங்காரவேலன். அப்போ கம்போஸிங் சமயத்தில கமல் சார் வருவாரு. ரொம்ப நல்லா பழகுவார். நானும் ராஜா சார் கூட இருந்தேன். அப்போ படத்தின் இயக்குனர் திரு. ஆர்.வி. உதயகுமார் ‘இந்தப் படத்தில நடிக்கிறீங்களா மனோ?’னு கேட்டார். ராஜா சார் அவர்கிட்ட ‘ஏம்ப்பா அவன கெடுக்குறீங்க?’னு கேட்டார். அதற்கு ஆர்.வி. உதயகுமார், ‘இல்லண்ணே! இந்தப் படத்தில கமல் கூடவே வர்றா மாதிரி 4-5 நண்பர்கள் கேரக்டர் இருக்குது. மனோ நல்ல ஜாலியான ஆளு. அவருக்கு ஒரு ரோல் கொடுக்கலாம்னு தான்’ என்று சொன்னார். ராஜா சாரும் ஒருவழியா ஒப்புக் கொண்டார். படத்தின் படப்பிடிப்பு 45 நாள் நடைபெற்றது. அவ்வளவு நாளும் ராஜா சார் எனக்காக ரெக்கார்டிங் டைமிங் எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக் கொடுத்தார். அதுதான் என்னுடைய முதல் நடிப்பு அனுபவம்.

அதன் பிறகு நீங்க தொடர்ந்து ஏன் நடிக்கல?

அப்போ எல்லாம் நான் ராஜா சார் கூடவே இருப்பேன். ‘சிங்காரவேலன்’ படத்திற்குப் பின்னர் எனக்கு 3-4 படங்கள் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தது. நானும் சந்தோஷமா ராஜா சார்கிட்ட போய் ‘அண்ணே! நீங்க வாய்ப்பு கொடுத்த நேரம் எனக்கு 3-4 படங்கள் நடிக்க வாய்ப்பு கெடச்சிருக்கு’என்று சந்தோஷமா சொன்னேன். ஆனால் ராஜா சாருக்கு ரொம்ப சந்தோஷம் இல்ல. ‘எதுக்காக நீ ரெண்டு கப்பல்ல கால வைக்கிற? இப்போ ஒழுங்கா பாடிகிட்டு இருக்க இல்ல? பின்ன ஏன் அனாவசியமா ட்ராக் மாத்துற? நடிக்கப் போறதுன்னா பாடுறத நிறுத்திடு’ என்று சொன்னார். ஒரு நேரத்தில ரெண்டு வேல செய்யக்கூடாது அப்டின்றத ரொம்ப நாசூக்கா சொன்னார். இப்போ 15 – 20 வருஷம் கழிச்சி யோசிச்சி பார்த்தா சரியான சமயத்தில ராஜா சார் என்ன Guide பண்ணி இருக்கார் என்று தோன்றுது. இப்போ நான் தெலுங்கு, கன்னடா, பெங்காலி என்று ஏதோ ஒரு மொழியில பாடிகிட்டு இருக்கேன். எனக்கு Programmes நிறைய வருது. என் Family–ல எல்லாரும் Happy-யா இருக்காங்க. சரியான நேரத்தில என்ன கரெக்டா Guide பண்ண ராஜா சாருக்குதான் நான் எப்பவும் நன்றிக் கடன் பட்டிருக்கேன்’ என்றார்.

‘இசைஞானியோட பாடல்களைப் பாடும் எந்த பாடகரும் ரொம்ப அனுபவித்து, உணர்வுபூர்வமா பாடுகிறீர்களே. இது எப்படிச் சாத்தியமாகிறது?

‘ராஜா சாரோட கம்போஸிஷன்ஸ் அந்த மாதிரி. அந்த பாடலின் மெட்டைக் கேட்டவுடனேயே பாடுகிறவர்கள் அதை ஃபீல் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. (‘நீலவான ஓடையில்’ பாடிக்காண்பிக்கிறார்). அவரோட கம்போஸிஷன் அந்த மாதிரி நம்மை உணர்ந்து இன்னும் Improvise பண்ணி பாடவைத்துவிடும்’.

‘இசைஞானியிடம் நீங்கள் பார்த்து பிரம்மிக்கும் விஷயம் என்ன’?

Living Legend என்கிற வார்த்தைக்கு ஒரு எடுத்துக்காட்டா இன்று வாழ்ந்துகொண்டிருப்பவர் ராஜா சார்தான். காலை எழுந்தவுடன் ரெக்கார்டிங் இருக்கிறதோ இல்லையோ, ஸ்டுடியோவ கூட்டி சுத்தம் பண்ணுறவங்க வர்றாங்களோ இல்லையோ, ராஜா சார் ஸ்டுடியோவில இருப்பார். அந்த Dedication, செய்யும் தொழிலில் அவர் வைத்திருக்கிற பக்தி, அர்ப்பணிப்பு ஆகியவை நான் வியந்து பார்க்கிற விஷயம்.

‘பொதுவாக புதிய ஆட்கள் யாரையும் சந்திக்க விரும்ப மாட்டார். அதிகம் யாருடனும் பழக மாட்டார்’ என்கிற கருத்து இசைஞானியைப் பற்றி இருக்கிறது. இது எந்த அளவுக்கு உண்மை?

‘அவருடைய ஒரு நாள் ப்ரோக்ராம் அந்த மாதிரி. காலை எழுந்தது முதல், கம்போஸிங், ரெக்கார்டிங் என்று ரொம்ப டைட்டா இருக்கும். அவர் மக்களை சந்தித்து பேசிப் பழக ஆரம்பித்துவிட்டால் அவர் செய்யும் வேலைக்கு அவரால் Justice பண்ண முடியாது. அவர் தன்னுடைய ரசிகர்களோடு எப்பொழுதும் தன் இசையின் மூலமே பேசி வந்திருக்கிறார்’.

‘இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் இசைஞானிக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்’?

‘ராஜா சார் இன்னும் நிறைய ஸ்டேஜ் ப்ரோக்ராம் பண்ணனும். அவர் அதை ஒரு World Tour மாதிரி Plan பண்ணி செய்யணும். இதை நான் அவரிடமே நிறைய முறை சொல்லியிருக்கிறேன். ‘பார்க்கலாம்டா’ என்றுதான் பதில் வரும்.’

இசைஞானியுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வந்து கலந்து கொண்டதற்கு நன்றி. அவருக்காக நீங்கள் ஒரு வாழ்த்துப் பாடல் பாடவேண்டும் என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் செந்தில் கேட்க, “நீ பௌர்ணமி என்றும் எங்கள் நெஞ்சிலே வாழுவீர்; ….. நலம் வாழ எந்நாளும் எங்கள் வாழ்த்துகள்’ என்று இரண்டு வரி மனோ பாடிமுடிக்க கைதட்டலுடன் நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது.

இசைஞானியிடம் ரசிகர்கள் கேட்க விரும்பும் கேள்விகளை ரசிகர்கள் கீழ்க்கண்ட Format–ல் type செய்து 58888 என்ற எண்ணுக்கு SMS அனுப்பும்படி தொகுப்பாளர் செந்தில் கேட்டுக் கொண்டார்.

SENTHIL SPACE ‘QUESTION’ ‘YOUR NAME’ ‘YOUR AREA’

நேரம் இருந்தால் கண்டிப்பாக கேள்விகள் இசைஞானியிடம் கேட்கப்படும் என்றும் கூறினார். 1,2,3 ஆகிய தேதிகளில் இசைஞானியின் கலந்துரையாடலின் சிறிய பகுதிகளும் நிகழ்ச்சியில் ஒலிபரப்பபட்டன.

நிகழ்ச்சியில் ஒலிபரப்பான பாடல்கள்:

நூறு வருஷம், வானெங்கும் தங்க விண்மீன்கள், வா வெண்ணிலா, பூந்தளிர் ஆட, ஒரு கிளி உருகுது, குழலூதும் கண்ணனுக்கு, துள்ளி துள்ளி நீ பாடம்மா, வான்மேகம், ஒரு பூங்காவனம், இந்த மான், தேனே தென்பாண்டி மீனே, மீனம்மா, சின்னக்குயில் பாடும் பாட்டு, காலை நேரப் பூங்குயில், ஆசையக் காத்தில தூதுவிட்டு மற்றும் ராமனின் மோகனம் ஆகியவை.