Tuesday, July 30, 2013

பேசும் படம் 1992 ஜூலை - R.D.Bhaskar Interview


இசைஞானி இளையராஜா.. இனியும் இவர் திறமை பற்றி வரிந்து வரிந்து எழுத வேண்டியதில்லை.  அது நிரூபிக்கப்பட்ட நிஜம்!

இளையராஜா – இசைக்கோர் இலக்கணம்..!

பண்ணைப்புரம் என்ற சிற்றூரில் இருந்து இவர் சென்னை வந்திறங்கியபோது தனக்குப் பெருமை சேர்க்க ஒருவன் வந்துவிட்டான் என்று நிச்சயம் கலைவாணி அகமகிழ்ந்திருப்பாள்.

மேடையில் கொள்கைப் பாடல்களையும், வயல் வரப்பில் நாட்டுப்புறப் பாடல்களையும் மட்டுமே பாடிவந்த ராசய்யா, இளையராஜா என்ற பெயரில் ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் அரங்கேறினார்.  அன்று முதல் தொடர்ந்து வெற்றிகளைத் தன் வசமாக்கிக்கொண்டார்.  எப்படி இவரால் தொடர்ந்து வெற்றி கொடுக்க முடிகிறதென்று இந்தியத் திரையுலகமே இன்று வியக்கிறது.

கதாநாயகனுக்கு கட்-அவுட் வைத்துக்கொண்டிருந்த தமிழ்த் திரையுலகம் இன்று இசைஞானிக்கு கட்-அவுட் வைக்கத் துவங்கியுள்ளது.  இதிலிருந்தே தெரிந்துவிட்டதே இன்றைய திரையுலகில் கதாநாயகன் இவர்தானென்று.  இந்த இசைக்கடலின் இளம் வயது நிகழ்ச்சிகளை வாசகர்களுக்குத் தெரியப்படுத்த அவரின் இளம் வயதை அறிந்தவர்களை தேடிப்போனோம்.  முதல் கட்டமாக அவர் பிறந்து வளர்ந்த பண்ணைப்புரம் நோக்கிப் பயணமானோம்.

துரை மாவட்டம் தேனியில் இருந்து மூன்று மைல்கல் தொலைவில் அமைந்திருந்தது பண்ணைப்புரம்.  நாம் பேருந்துவிட்டு இறங்கியதுமே நமக்கு ஏமாற்றம்.  அன்று பசுமை நிறைந்திருந்த பண்ணைப்புரம் இன்று வறண்டுபோய்க் காட்சியளித்தது.  ஒரு வழியாக நம் மனதைத் தேற்றிக்கொண்டு ஊருக்குள் நுழைந்தோம்.  எதிர்பட்ட கிராம மக்களிடம் நாம் வந்த காரணத்தைக் கூறியதும் அவர்கள் உபசரித்த பாங்கு நம்மை வியப்பில் ஆழ்த்தியது.  ஊர் மக்கள் நம்மை அழைத்துக்கொண்டு போய் வயதான ஒரு பெரியவர்முன் அமரச்செய்து சுற்றிலும் நின்றுகொண்டு நாம் கேட்கப்போகும் கேள்விகளையும் பெரியவர் சொல்லப்போகும் பதிலையும் கேட்க ஆவலாய் இருந்தார்கள்.  மெல்ல நம் கேள்விகளைத் துவக்கினோம்.

’ஐயா, இளையராஜா இங்கே இருந்தபோது நடந்த நிகழ்ச்சிகளைக் கூற முடியுமா?’

’தம்பி’.. அவரோடக் குடும்பமே பாட்டுப் பாடுற குடும்பம்.  அவரோட அம்மா, அப்பா எல்லோருமே பாடுவாங்க.  அவரோட அண்ணன் பாவலர் வரதராஜன் நல்ல கவிஞர்.  பாடவும் செய்வார்.  பாவலர் மேடைல பாடும்போது ராசய்யா (இளையராஜா) ஆர்மோனியப்பெட்டி வாசிப்பார்.  இவங்க மேடையிலே கச்சேரி பண்றாங்கனு தெரிஞ்சாலே பக்கத்து கிராமத்திலேருந்தெல்லாம் ஜனங்க வருவாங்க.

ராசய்யா (இளையராஜா) சின்ன வயசுல தன்சோட்டு பசங்களோட இதோ நாம இருக்கிற இதேத் தெருவுல ஓடியாடி விளையாடிகிட்டு இருப்பாரு.  மத்த நேரங்கள்ல ஆர்மோனியப் பெட்டிய தோள்ல போட்டுகிட்டு வயல் வரப்புல நாட்டுப்புறப்பாட்ட பாடுவாரு.  இதக் கேட்கவே அவரு பின்னால ஒரு கூட்டமே சுற்றும்.

கொஞ்ச வருஷம் கழிச்சு ராசய்யா, பாஸ்கர், அமரன் எல்லாரும் பட்டணம் போனாங்க.  அப்புறம் சினிமாவுல பாடறாங்கன்னு சொன்னாங்க.  ரேடியோ பெட்டியில எல்லாம் இவங்க பாட்டு கேட்டோம்.  சந்தோஷமா இருந்தது.  இப்ப அவரோட வளர்ச்சியைப் பார்க்கும்போது இந்த ஊருக்கே பெருமையா இருக்கு” என்று பெரியவர் முடித்ததும் நாம் நம்மைச் சுற்றி நின்றவர்களைப் பார்த்தோம்.  அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.  பிறகு அவர்களின் வேண்டுகோளை ஏற்று மதிய உணவை உண்டு விடைபெற்று சென்னை வந்து இளையராஜாவின் அண்ணன் பாஸ்கர் அவர்களைச் சந்தித்து நம் கேள்விகளைத் துவக்கினோம்.

’இளையராஜா அவர்களுக்கு சிறு வயது முதலே இசை ஆர்வம் இருந்ததா? எப்படி இந்த ஆர்வம் ஏற்பட்டது?’

சிறுவயதில் இருந்தே அவருக்கு இசை ஆர்வம் இருந்தது.  எப்படி ஏற்பட்டது என்றால் அன்று எங்கள் கிராமம் மிகவும் செழிப்பாக இருந்தது.  அதிகாலை ஆறு மணியானால் குயில் ஓசையும், தென்றல் காற்றில் குளுமையும் நிறைந்திருக்கும்.  அந்த வேளையில் நான், இளையராஜா, அமரன் எல்லோரும் உறங்கியும் உறங்காமலும் படுத்திருப்போம்.

அந்த நேரத்தில் எங்கள் அண்ணன் பாவலர் அவர்களுக்கு சங்கீதப் பயிற்சி நடக்கும்.  அப்போது கேட்கும் சா ரி க ம பா த நி சா என்ற ஓசையில்தான் நாங்கள் கண் விழிப்போம்.  இதுவே தொடர்ந்து வந்ததால் எங்களையே அறியாமல் சங்கீதம் மீது ஈடுபாடு கொண்டோம்.

பிறகு இளையராஜா ‘ஆர்மோனியமும்’ நான் ‘தபேலாவும்’ அமரன் கிட்டாரும் கற்றுக்கொண்டோம். பிறகு எங்கள் அண்ணன் கச்சேரி செய்யத்துவங்கியதும் நாங்கள் மேடையில் இசைக்கருவிகளை வாசிக்கத் துவங்கினோம்.  இப்படித்தான் நாங்கள் முதன்முதலில் இசை ஆர்வத்தால் அரங்கேறியது.

’இன்று படங்களில் பாடும் இளையராஜா அன்று மேடையில் பாடுவாரா?’

பாடுவார்.. எப்படி என்றால் சிறுவயதில் நம் குரல் மென்மையாக இருக்கும் அல்லவா.. அப்போது பெண் குரலில் பாடுவார்.  கேட்க நன்றாக இருக்கும்.  நாட்கள் போகப்போக அவர் குரல் மாறியது.  இதைக்கண்டு இளையராஜா பயந்துவிட்டார்… ’இனி நம்மைப் பாட அண்ணன் அழைக்கமாட்டாரே’ என்று.  ஆனால் இன்று இவரின் குரலுக்கும் ரசிகர்கள் உண்டு.  இன்னும் சொல்லணும்னா நாங்க படிக்கிற காலத்தில் ஸ்கூலில் கடவுள் வாழ்த்து பாடுவோம்.  இளையராஜாவும் பாடுவார்.  இதுதான் மற்றவர் கேட்க அவர் பாடிய முதல் பாடல்.

’நீங்கள் எதற்காக சென்னை வந்தீர்கள்?’

நாங்கள் மேடையில் கட்சிக்காகப் பாடிக்கொண்டிருந்தோம்.  ’எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்கின்ற கொள்கையை முன்வைத்துப் பாடி வந்தோம்.  ஆனால் அரசியல்வாதிகள் பலர் இதை சுயநலத்துக்காகப் பயன்படுத்தத் துவங்கினர்.  இது பிடிக்காமல் பிழைப்பைத் தேடி சென்னை வந்தோம்.

’சென்னை வந்து இறங்கியதும் நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்ல முடியுமா?’

ஜெயகாந்தன் அவர்களும் எங்கள் அண்ணன் பாவலரும் நண்பர்கள்.  அதனால் பாவலர் ஜெயகாந்தனுக்கு ஒரு கடிதம் எழுதிக்கொடுத்திருந்தார்.  அதை எடுத்துக்கொண்டு ஜெயகாந்தன் வீட்டிற்குச் சென்றோம்.  கடிதத்தை அவரிடம் கொடுத்ததும், எங்களை அமரவைத்து சாப்பிடச் சொன்னார்.  இட்லி மூவருக்கும் பரிமாறப்பட்டது.  உடனே நான் ஜெயகாந்தனிடம் உங்களை நம்பித்தான் வந்துள்ளோம் என்று சொன்னேன்.

உடனே அவர் எங்கள் மூவரையும் ஒருமுறை பார்த்துவிட்டுத் திட்டத் துவங்கினார்.  எப்படி நீங்கள் என்னை நம்பி சென்னை வந்ததாகக் கூறலாம்?  அப்படி நீங்கள் என்னை நம்பி வருவதாக இருந்தால் முதலிலேயே ஒரு கடிதம் போட்டு கேட்டுவிட்டு வந்திருக்கவேண்டும்.  அப்படி நீங்கள் வரவில்லையே? இப்போது நீங்கள் வந்தது முட்டாள்தனமானது என்று அவர் திட்டத் திட்ட எங்கள் மூவருக்கும் சாப்பிடவே வெறுத்துப்போனது.  முகமும் சுண்டிப்போனது.  இதைப் பார்த்த ஜெயகாந்தன் மெல்ல என் மீது கைபோட்டு, “தம்பி நான் திட்டியது நீங்கள் இங்கு வந்ததற்காக அல்ல.. என்னையே நம்பி வந்தீர்கள் என்று சொன்னதற்காக.  நீங்கள் உங்கள் திறமையை நம்புங்கள். வெற்றி நிச்சயம்’ என்றார். இதுதான் நாங்கள் சென்னை வந்ததும் நடந்த முதல் சம்பவம்.

’பிறகு என்ன செய்தீர்கள்?’

பிறகு அப்போதைய இசை யூனியன் தலைவர் எம்.பி.ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது.  அவரிடம் சினிமாவில் வாசிக்க வாய்ப்பு கேட்டோம்.  அதற்கு அவர் உங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்டார்.  எனக்கு தபேலா வாசிக்கவும், இளையராஜாவுக்கு ஆர்மோனியம் வாசிக்கவும், அமரனுக்கு கிட்டார் வாசிக்கவும் தெரியும் என்றோம்.

அதற்கு அவர் எப்படி வாசிப்பீர்கள் என்றார்.  வாசித்ததைக் கேட்டால் அப்படியே வாசிப்போம் என்றோம்.  உடனே அவர் சிரித்துக்கொண்டே சினிமாவில் வாசிக்க வேண்டுமென்றால் நோட்ஸ் தெரிந்திருக்கவேண்டும்.  அப்போதுதான் சினிமாவில் வாசிக்கமுடியும்.  மேலும் உங்களுக்கு வாசிக்கத் தெரிந்த கருவிகள் எல்லாம் இங்கு பலபேர் வாசிக்கிறார்கள்.  அதனால் புதிய இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறி மாஸ்டர் தன்ராஜ் அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார்கள்.  அப்போது எங்களிடம் இருந்த ஆம்ப்ளிஃபையரை அடமானம் வைத்து இளையராஜாவைச் சேர்த்துவிட்டோம்.  அங்கு இளையராஜா வெஸ்டர்ன் க்ளாசிக்கல் போன்ற இசைகளைப் பயின்றார்.

நாங்கள் சம்பாதிக்கத் துவங்கியதும் முன்பு அடமானம் வைத்த ஆம்ப்ளிஃபையரை மீட்க அடகு கடைக்குப் போனோம்.  அங்கு அடகு கடையே காணோம்.  தேடித்தேடிப் பார்த்தோம்.  கண்டுபிடிக்க முடியவில்லை.  இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறோம்.

பிறகு எப்போது சினிமாவில் இளையராஜா வாசிக்கத்துவங்கினார்?

இளையராஜா மாஸ்டர் தன்ராஜ் அவர்களிடம் இசை பயின்று கொண்டிருக்கும்போது இசையமைப்பாளர் ஜி.கே. வெங்கடேஷ் அவர்கள் மாஸ்டர் தன்ராஜிடம் தனக்கு ஒரு நல்ல உதவியாளன் ஒருவன் வேண்டும் என்று கேட்க மாஸ்டர் இளையராஜாவைச் சேர்த்துவிட்டார்.  அன்று முதல் இளையராஜா கம்போசிங் செல்லத் துவங்கினார்.

நீங்கள் தனியாக இசையமைக்க செய்த முயற்சியையும், கிடைத்த வாய்ப்பையும் கூறுங்களேன்?

நான்தான் காலையில் எழுந்ததும் வாய்ப்பு கேட்க பல கம்பெனிகளுக்குப் போவேன்.  அப்போது ராஜா (இளையராஜாவின் உண்மைப் பெயரான ராசய்யா என்பதை மாற்றி ராஜா என்று வைத்திருந்தோம்) சொல்வார்.. “வாய்ப்பு கேட்டு நீ போகாதே.. சந்தர்ப்பம் நம்மைத் தேடி வந்தால் நாம் இசையமைப்போம்” என்று.  ஆனால் நான் கேட்காமல் பல கம்பெனிகள் படி ஏறுவேன்.  எங்குமே ஏமாற்றம்தான்.  கடைகளில் யாராவது தேங்காய் பழம் வாங்கிப்போனால் அவர்கள் ஏதோ புது படத்திற்கு பூஜை போடுவதாக நினைத்து அவர்களைப் பின்தொடர்வேன்…  அவர்களிடம் வாய்ப்பு கேட்கலாம் என்ற காரணத்தில்தான்.  அவர்களைப் பின்தொடர்ந்தால் முடிவில் கோவிலுக்கோ அல்லது திருமண வீட்டிற்கோ செல்வார்கள்.  வெறுத்துப்போய் திரும்புவேன்.  மீண்டும் யாராவது பூஜை பொருள் வாங்கிப் போனால் என்னை அறியாமலேயே என் கால்கள் அவர்களைத் தொடரும்.

தனியாக இசையமைக்க கிடைத்த சந்தர்ப்பம் என்று சொன்னால் பல சந்தர்ப்பங்கள் கிடைத்துக் கை நழுவிப்போனதுண்டு.  நாங்கள் இசையமைக்க முதல் பட சந்தர்ப்பம் கிடைத்ததைப் பற்றி வேண்டுமானால் சொல்கிறேன்.

அப்போது நான் இளையராஜா, அமரன், செல்வராஜ் (கதை வசனகர்த்தா) பாரதிராஜா, அனைவரும் ஒன்றாக மைலாப்பூரில் தங்கியிருந்தோம்.  ஒருநாள் இளையராஜா கம்போசிங் சென்றுவிட நானும் அமரும் ரூமில் இருந்தோம்.  செல்வராஜும், பாரதிராஜாவும் கூட வெளியே போயிருந்தார்கள். திடீரென்று வெளியே போயிருந்த செல்வராஜ் வந்து எங்களைத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் அழைத்துவரச் சொன்னார் என்று கூறினார்.

உடனே செல்வராஜுடன் நானும் அமரும் கிளம்பினோம்.  வெளியில் வந்துதான் எங்கள் பாக்கெட்டைப் பார்த்தோம்.  மூவரின் பாக்கெட்டும் காலி.  வேறு வழியில்லாமல் நடக்கத் துவங்கினோம்.  மைலாப்பூரிலிருந்து பாம்குரோவ் ஓட்டலுக்கு நடந்தே வந்து பஞ்சு அருணாசலத்தைப் பார்த்தோம்.  அவர் எங்களைப் பார்த்ததும் ராஜாவை கேட்டு, வரவில்லை என்றதும் போய் அழைத்து வரச்சொன்னார்.  வாகினி ஸ்டிடியோவில் கம்போசிங் நடந்துகொண்டு இருந்ததால் இளையராஜா அங்கு இருந்தார்.  மீண்டும் நாங்கள் நடந்தே வாகினி ஸ்டுடியோ சென்றோம்.  அங்கிருந்த இளையராஜாவைப் பார்த்து செய்தியைச் சொன்னோம்.  இளையராஜா நம்பிக்கை இல்லாமல் எங்களுடன் புறப்பட்டார்.  அப்போது வாகினி ஸ்டுடியோவில் இருந்து பாம்குரோவ் வர டாக்ஸி வாடகை எழுபது பைசாதான்.  இளையராஜாவிடம் பணம் இருந்ததால் டாக்ஸியிலேயே பாம்குரோவ் போய்ச் சேர்ந்தோம்.

பஞ்சு அருணாசலம் அவர்கள் எங்களை அமரச் செய்து பாடிக்காட்டும்படி சொன்னார்.  அப்போது எங்களிடம் எந்த இசைக்கருவிகளும் இல்லை.  அதனால் நான் அங்கிருந்த டேபிளில் தாளம் போட இளையராஜா ‘அன்னக்கிளி உன்னத்தேடுது’ என்று பாடினார்.  இதைக் கேட்ட மாத்திரமே அவருக்குப் பிடித்துவிட அப்பொழுதே எங்களை ஒப்பந்தம் செய்தார். பிறகு எங்களிடம் எந்தப் பெயரில் இசையமைக்கப் போகிறீர்கள் என்றூ கேட்டதும், நான் ‘பாவலர் பிரதர்ஸ்’ என்று கூறினேன்.  அதற்கு அவர் இந்தப் பெயர் பழைய ஸ்டைலாக இருக்கிறது என்று கூறிவிட்டு என் பெயரைக் கேட்டார்.  நான் பாஸ்கர் என்றதும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.  கங்கை அமரன் பெயரையும் ஒதுக்கிவிட்டு இளையராஜா பெயரைக் கேட்டார்.  ராஜா என்று கூறியதும் சற்று சிந்தித்துவிட்டு இளையராஜா என்று வைத்துக்கொள்ளுங்களேன் என்று கூறினார்.  உடனே நாங்கள் சரி என்று சொல்லிவிட்டோம்.  அப்படித்தான் ராஜா, இளையராஜா ஆனார்.

முதல் படம் வெளிவந்ததும் நடந்த நிகழ்ச்சிகள் சொல்ல முடியுமா?

முதல் படம் வெளிவந்து வெற்றி பெற்று ‘அன்னக்கிளி’ பாடல்கள் பட்டி தொட்டிகளிலெல்லாம் ஒலிக்கத் துவங்கிய நேரம்.  ஒருநாள் மதியம் தி.நகரில் உள்ள ஒரு தயாரிப்பாளரின் அலுவலகம் சென்றேன்.  தண்ணீர் தாகம் உயிர் போனது.  அங்கிருந்த ஆபீஸ்பாயிடம் தண்ணீர் கேட்டேன்.  அதற்கு அவன் தெருவில் போகும் எல்லோருக்கும் தண்ணீர் தரமுடியுமா என்று கேட்டுவிட்டு தண்ணீர் தராமலேயே போய்விட்டான்.  மனதைத் தேற்றிக்கொண்டு தயாரிப்பாளரைப் போய் பார்த்தேன்.  என்னைப் பார்த்ததும் அவர் ‘என்ன?’ என்றூ கேட்டார்.   உடனே நான் இசையமைக்க சந்தர்ப்பம் கேட்டு வந்தேன் என்றதும் அவர் இப்பொழுது எல்லாம் ஒன்றும் கிடையாது… ஏற்கெனவே நாங்கள் ‘அன்னக்கிளி’ படத்திற்கு இசையமைத்த இளையராஜாவைப் போடுவதாக முடிவு செய்துவிட்டோம்’ என்றார்.  உடனே நான் மெல்ல இளையராஜாவின் அண்ணன்தான் நான் என்று கூறியதும் அவரால் நம்பமுடியவில்லை.  பிறகென்ன… ராஜ உபசாரம்தான்.  எனக்குத் தண்ணீர் தரமறுத்தவனே எனக்கு டீ வாங்கிவர ஓடினான்” என்று பாஸ்கர் கூறி முடித்ததும் அவருக்கு நன்றி கூறி இளையராஜாவின் இளம் வயது நண்பரான ஆர். செல்வராஜ் அவர்களைத் தேடிப்போனோம்.  அங்கு அவர் சொன்ன செய்திகள் மேலும் நம்மை வியப்பில் ஆழ்த்தியது…. அவை…?

சந்திப்பு – நந்து

நன்றி : பேசும்படம், ஜூலை 1992

பகிர்வு நன்றி : திரு. பாலசுப்ரமணியன்