Tuesday, July 13, 2010

பொன் மாலைப் பொழுது

பாடல் : பொன் மாலைப் பொழுது

படம் : நிழல்கள்
பாடியவர்கள் : எஸ்.பி.பி.
எழுதியவர் : வைரமுத்து
இசை : இசைஞானி

ஹே ஹோ ஹும்ம் லல்லல்லா!!

பொன் மாலைப் பொழுது!
இது ஒரு பொன் மாலைப் பொழுது!
வான மகள் நாணுகிறாள்! வேறு உடை பூணுகிறாள்!
இது ஒரு பொன் மாலைப் பொழுது!!

ம்ம்.. ஹே ஹா ஹோ ம்ம்.. ஹும் ஹும்..!!

1. ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்!
ராத்திரி வாசலில் கோலமிடும்!
வானம் இரவுக்குப் பாலமிடும்!
பாடும் பறவைகள் தாளமிடும்!
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ? – இது ஒரு

2. வானம் எனக்கொரு போதி மரம்!
நாளும் எனக்கது சேதி தரும்!
ஒருநாள் உலகம் நீதி பெறும்!
திருநாள் நிகழும் தேதி வரும்!
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்! – இது ஒரு

‘மடை திறந்து’, ‘பூங்கதவே தாள் திறவாய்’ போன்ற பல முத்தான பாடல்கள் ‘நிழல்கள்’ படத்தில் இடம்பெற்றுள்ளபோதும், ஆயிரம் முறைக் கேட்டாலும் அலுக்காத பாடல் ‘பொன்மாலைப் பொழுது’!! கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் தலைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை!! இந்தப் பாடல் வெளி வருவதற்கு முன்னும் பின்னும் தமிழ்த் திரைப்படப் பாடல்களில், ஒரு மாலைப் பொழுதை இவ்வளவு அழகுடன் யாரேனும் வர்ணித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

மாலைப் பொழுதில் இரை தேடிய பறவைகள் கூட்டுக்குள் வந்து அமர்ந்து ‘கீச் கீச்’ என கொஞ்சும் ஒலியுடன் பாடல் துவங்குகிறது. இப்பொழுது இருக்கும் technology-ஐ உபயோகித்தோ அல்லது Keyboard-ல் ஒரு Key-ஐ அழுத்தியோ, மழலையின் அழுகையில் இருந்து குமரியின் சிரிப்பொலி வரை செயற்கையாக உருவாக்க இயலும். ஆனால் 1980-ல் இசைஞானி எப்படி இந்தக் குருவிகளின் ஒலியை பாடலின் துவக்கத்தில் உருவாக்கி ஒலிக்க விட்டார் என்று புரியவில்லை. பாடலின் Guitar Prelude-ம் கூட இந்தக் குருவிகளின் கீச் கீச்சுக்கு பொருத்தமான பதில் சொல்வது போலத் துவங்கும். Prelude உடன் ஓடி வரும் Tabla Rhythm, Prelude-ன் முடிவில் ஒலிக்கும் Flute Bit-ன் அழகை மெருகேற்ற மெளனித்துப் பின்னர் ‘பொன் மாலைப் பொழுதில்’ மீண்டும் பாடலுடன் ஓடத்துவங்குகிறது. ‘இது ஒரு பொன் மாலைப் பொழுது! வான மகள் நாணுகிறாள்! வேறு உடை பூணுகிறாள்!’ இந்த இரு வரிகளில் உள்ள ‘லகர ளகர ழகர’ உச்சரிப்பை எஸ்.பி.பி. அவர்களைப் போல தெளிவாக வேறு யாரேனும் பாடகர்கள் பாட முடியுமா என்பது சந்தேகமே!

முதல் Interlude-ன் துவக்கத்தில் மீண்டும் Rhythm நின்று போய் இசைஞானியின் typical Violin Harmony!! அதன் பின்னர் Flute உடன் மாறி மாறி ஒலிப்பது Accordion-ஆ? தெரியவில்லை! இதே போல இரண்டாவது Interlude-ன் துவக்கத்திலும் முடிவிலும் Rhythm Section-க்கு இசைஞானி எந்த வேலையும் கொடுக்கவில்லை! துவக்கத்தில் இருந்தே ஒரு துள்ளலுடன் பயணிக்கும் பாடல், இரண்டாவது Interlude-ன் முடிவில் இசைஞானி உபயோகித்திருக்கும் Violin Bit-ல் சற்றே சோகமாக நிறம் மாறி பின்னர் suddenly “வானம் எனக்கொரு…” என்று மீண்டும் குதித்தோடத் துவங்குகிறது. பெரிய இசை மேதைகளே எதிர் பார்க்காத அல்லது கணிக்க முடியாத Sweet Surprises-ஐ பாடலின் அங்கங்கு ஒளித்து வைத்து ஒப்பனை செய்யும் இசைஞானியின் இசைப் புலமைக்கு இது ஒரு எடுத்துக் காட்டு! இந்த இரண்டாவது Interlude-ல் ஒலிக்கும், Keyboard, Flute, Guitar, ஏகப் பட்ட வயலின்கள் மற்றும் இன்ன பிற String Instruments, Bass Guitar, அதோடு Tabla Rhythm, இவற்றுடன் பறவைகளின் செல்லச் சிணுங்கல்கள் எல்லாம் எவ்வளவு தெளிவாகவும் துல்லியமாகவும் கேட்கிறது?!! இந்தப் பாடல் வெளிவந்த பொழுது இதன் Sound Mixing பீத்தோவனின் Symphony-ஐ விடச் சிறப்பாக இருக்கிறது என்று எழுத்தாளர் திரு சுஜாதா அவர்கள் வியந்து குறிப்பிட்டதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

பத்மஸ்ரீ எஸ்.பி.பி., கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் சின்னக்குயில் சித்ரா மூவரும் இணைந்து பங்குபெற்ற ‘மெட்டுப் போடு’ என்ற நிகழ்ச்சி ‘Zee தமிழ்’ தொலைக்காட்சியில் சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பானது. இயக்குனர் பாரதிராஜா அவர்கள் தன்னை இசைஞானியிடம் அறிமுகம் செய்து வைத்ததையும், இசைஞானி Tune சொல்லி, பாடல் எழுத ஒரு நாள் அவகாசம் தந்தும், தாம் அங்கேயே ‘பொன் மாலைப் பொழுதை’ இயற்றிய தருணத்தையும் நினைவுகூர்ந்தார் கவிப்பேரரசு! பின்னர் எஸ்.பி.பி. அவர்கள் இந்தப் பாடலைப் பாடி முடிக்கவும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள், “இந்தப் பொன் மாலைப் பொழுதுக்காக நான் எழுதிய சரணங்கள் மூன்று! இடம் இல்லாத காரணத்தால் அந்த மூன்றாவது சரணம் பாடலில், படத்தில் இடம் பெறவில்லை. அப்படிப் படத்தில் இடம் பெறாத சரணம், என் இதயத்திலும் இவர் (எஸ்.பி.பி) இதயத்திலும் இடம் பெற்றிருக்கிறது. என் அருமை எஸ்.பி.பி. அவர்களே! எனக்காக, இங்கு வந்திருக்கும் தங்கத் தமிழ் உள்ளங்களுக்காக, அந்த மூன்றாவது சரணத்தை இந்த மன்றத்துக்குக் காணிக்கையாக்க வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்ளுகிறேன்” என்று வேண்டுகோள் விடுக்க, பத்மஸ்ரீ. எஸ்.பி.பி. அவர்கள் அந்த மூன்றாவது சரணத்தைப் பாடினார்:

3. இரவும் பகலும் யோசிக்கிறேன்!
எனையே தினமும் பூசிக்கிறேன்!
சாலை மனிதரை வாசிக்கிறேன்!
தீயின் சிவப்பை நேசிக்கிறேன்!
பேதங்களே வேதங்களா? கூடாது! – இது ஒரு

சரணம் முடிந்தவுடன் கவிப்பேரரசு அவர்கள் “நான் மட்டும் புவியரசனாக இருந்திருந்தால் பாலுவின் எடைக்கு எடை தங்கம் கொடுத்திருப்பேன்! நான் பாவம் கவியரசன்! அதனால் ஒரு தங்கச் சங்கிலி மட்டும் போட வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்” என்று சொல்லி எஸ்.பி.பி. அவர்களுக்கு தங்கச் சங்கிலி ஒன்றை அணிவித்து மகிழ்ந்தார்.

பாடலின் ராகம் ‘கேதாரம்’! ‘சகல கலா நிதியே’ என்று ஒரு பழைய பாடல் இருக்கிறது. இது திரைப்படப் பாடலா அல்லது ஏதேனும் Carnatic கீர்த்தனையா என்று தெரியவில்லை. ஆனால் அந்தப் பாடலின் முதல் வரியைக் கேட்கும் பொழுதெல்லாம் எனக்கு ‘பொன் மாலைப் பொழுதின்’ முதல் வரி ஞாபகம் வரும். இரண்டும் ஒரே ராகமா அல்லது என்ன ஒற்றுமை? அதுவும் என் அறிவுக்கு எட்டாத விஷயம்! தெரிந்தவர்கள் விளக்கவும்!

அநேக நேரங்களில் அசிங்கமான அர்த்தம் நிறைந்த பாடல்களை குழந்தைகள் முணுமுணுக்கும் பொழுதும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆபாசக் குப்பைகளை அதன் அர்த்த விபரீதம் புரியாமல் அவர்கள் பாடும்பொழுதும், பேரிரைச்சலுடன் புரியாத இசைக்கு அவர்கள் ஆடுவதைப் பார்க்கும் பொழுதும் நம் பிள்ளைகளுக்கு என்ன விதமான Values-ஐ நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் எனக்கு எழுவதுண்டு! இன்றைய பரபரப்பான விஞ்ஞான உலகில் நம் குழந்தைகளுக்கு நாம் என்னென்னவோ வாங்கித் தருகிறோம். அவர்களுக்கு எதை எதையோ கற்றுத் தருகிறோம். அதனுடன் சேர்த்து ‘பொன் மாலைப் பொழுது’ போன்ற நல்ல பாடல்களை அவர்கள் கேட்கச் செய்வதும், நல்ல கவிதைகளை அவர்கள் படிக்கத் தூண்டுவதும் நம் கடமை!

No comments:

Post a Comment