Tuesday, June 5, 2012

எனக்கு எதுவோ உனக்கும் அதுவே


4 ஜூன் 2012. இசைஞானியின் இரண்டு புத்தகங்களை குமுதம் நிறுவனத்தார் வெளியிடுகின்றனர்.  கமல்ஹாசன் வருகிறார், லக்‌ஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவினர் இசைஞானியின் பாடல்களை இசைக்கின்றனர், இசைஞானியின் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன, என்று எந்த விஷயங்களும் என்னை சுவாரசியப்படுத்தவில்லை. நிகழ்ச்சிக்குச் சென்றால் இசைஞானியை தரிசிக்கலாம்.. அவர் பேசுவதைக் கேட்கலாம். அவ்வளவுதான்..! அடித்துப் பிடித்து டிக்கெட் பெற்று, அலுவலகத்தில் ஏதோ ஒரு காரணம் சொல்லித் தப்பித்து, நான்கரை மணிக்கெல்லாம் மியூஸிக் அகாடமியினுள் சென்று அமர்ந்தேன்.

புத்தக வெளியீட்டுக்குப் பின்னர், இறையன்பு ஐ.ஏ.எஸ்., குமுதம் குழும நிர்வாகிகள், நடிகர் கமல்ஹாசன், கவிஞர் மு. மேத்தா, கவிஞர் முத்துலிங்கம், நடிகர் பார்த்திபன் என்று பலரது வாழ்த்துரைக்குப் பிறகு ஏற்புரை’க்காக இசைஞானி மைக் பிடித்தார்.

“ஏற்புரை என்றால்.. இங்கே என்னவெல்லாம் நடக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வது.  சின்ன வயதில் வாத்தியார், ‘முட்டாளே..! அறிவுகெட்டவனே..!’ என்றார்.  அது பிடித்ததோ.. பிடிக்கவில்லையோ.. ஏற்றுக்கொண்டேன்.  வீட்டிலும் அண்ணன் மிகவும் திட்டுவார்கள்.. ‘கருவாயா..! மடையா..! அறிவிருக்கா உனக்கு..?’ என்று.  ஏற்றுக்கொண்டேன்.  இன்று இங்கும் நிறைய விஷயங்கள் நடந்தன.  எப்போதும் புகழ் மொழிகள் மனதுக்கு இதமாகத்தான் இருக்கும். 

ஒருமுறை தேவர்களுக்கும் ஒரு அரக்கனுக்கும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சண்டை பல வருடங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த அரக்கனை எப்படி வீழ்த்துவது என்று யாருக்கும் தெரியவில்லை.  அதனால் தேவர்கள் கிருஷ்ண பரமாத்மாவிடம் சென்று வழி கேட்கின்றனர். “அவனை புகழத் துவங்குங்கள்.  ஏனென்றால் ஒருவனைப் புகழப் புகழ அவனுக்குத் தான் பெரிய ஆள் என்ற நினைப்பு வந்துவிடும். அதுவே அவன் வீழ்ச்சிக்கு வித்திடும்” என்றார் கிருஷ்ணபரமாத்மா.  இதை ஏன் சொல்கிறேனென்றால், புகழ் என்பதைத் தாங்கிக் கொள்வது மிகவும் கஷ்டம்.  இந்தப் புகழ் என்பது ஒன்றுமில்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

இங்கே பேசிய கவிஞர் முத்துலிங்கம் சாதாரணமான ஆள் இல்லை.  ஓலைச்சுவடியில் எழுத்தாணி கொண்டு ‘அ.. ஆ…’ எழுதிப் படித்த தலைமுறையின் கடைசி ஆள் அவர்.  ஒரு பாடலில் எப்போதும் கருத்தைப் பளிச் என்று சொல்ல வேண்டும்.  அப்படி சிறப்பாக எழுதுவதில், இங்கே பேசிய கவிஞர் மு. மேத்தாவும் சரி, கவிஞர் முத்துலிங்கமும் சரி, இருவருமே வல்லவர்கள்.  பல சிறப்பான பாடல்களை இருவருமே எழுதியுள்ளனர்.

மொழியை விட இசை உயர்ந்தது என்று சொல்லலாம்.  உதாரணத்திற்கு ‘கமல்ஹாசன்’ என்று இருக்கும் பெயரை நீங்கள் தலைகீழாக படிக்க முடியுமா? அல்லது அப்படித் தலைகீழாகத்தான் அவரை பெயர் சொல்லி அழைக்க முடியுமா?  ஆனால் ‘ச.. ரி.. க.. ம’ என்ற ஸ்வரத்தை ‘ம.. க.. ரி.. ச..’ என்று பாடலாம்.  இசையால் கடந்த காலத்துக்கும் போகலாம். எதிர்காலத்துக்கும் போகலாம். மேலேயும் போகலாம். கீழேயும் போகலாம். இந்தப் பக்கமும் போகலாம். அந்தப் பக்கமும் போகலாம்.

எந்தப் பக்கமும் போகலாம்.. என்று ஆகிவிட்டது இசை.  எதுவுமே செய்ய வேண்டாம்.  எல்லாம் ரெடியாக இருக்கிறது.  சமைத்துவைத்து ரெடியாக இருக்கிறது. அதை எடுத்து மேடையில் வைத்து சாப்பிடவேண்டியதுதான் என்று ஆகிவிட்டது இசை.  தாய் நமக்கு எப்படி உணவு கொடுத்தாளோ .. அப்படிக் கொடுத்த காலங்கள் முடிந்துவிட்டது.  ஒரு தாய் தரும் வெறும் தயிர் சாதத்தில் இல்லாத அன்பா ஃபாஸ்ட் ஃபுட்’டில் இருக்கிறது?  எவனுக்கோ செய்ததை நீ போய் சாப்பிடுகிறாய்.  அது உனக்காகப் பண்ணப்பட்டதில்லை.

நாம் எவ்வளவோ படிக்கிறோம்.  ஆனால் எது நம் மனதில் நிற்கிறது? அதுதான் உண்மையான விஷயம். ’இவர் பாமரனுக்கும் புரியும்வகையில் இசையமைத்தார்’ என்று ஏதோ பெரிய மலையை நான் முறித்துவிட்டது போலப் பேசுகின்றனர்.  ஆனால் இசை என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல.  Music is Simple.  We make it complicated.  போன மாதம் எனக்கு லண்டனில் ரெக்கார்டிங் இருந்தது.  ஒரு நாலுபேர் பாடுவதற்கு வந்திருந்தனர்.  அவர்கள் காலையிலேயே வந்துவிட்டனர்.  அவர்கள் மொத்தம் பாடவேண்டியிருந்த பகுதி ஒரு எட்டு Bar மட்டுமே.  அதைப் பாடுவதற்கு அவர்கள் காலையில் இருந்து பயிற்சி எடுத்து எடுத்து, கடைசியில் மைக் முன்னால் வந்து நின்றதும் நான் எழுதியிருந்ததைப் போல அவர்களால் பாட முடியாமல் போயிற்று.  அதன்பின்பு நான் அவர்களை அனுப்பச் சொல்லிவிட்டு அந்த நாலு குரல்களையும் நானே நான்கு Track’களில் பாடிமுடித்துவிட்டு ஐந்து நிமிடங்களில் வெளியே வந்துவிட்டேன்.  அங்கே எனக்கு 3 Assistants இருந்தனர்.  அவர்கள் மூவரும் Composers.  அவர்களுள் ஒரு பெண்மணி Broadway Music’ல் Compose செய்பவர்.  நான் பாடி முடித்து வெளியே வந்து பார்த்தால், அந்தப் பெண்மணி உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தாள்.  முகமெல்லாம் சிவந்திருந்தது.  “You made it very simple.  Music is that much simple.  They made it complicated.  They wasted the whole day just for 8 Bars’ என்று அழுதுகொண்டே கூறினாள். 

ஆக, இசை என்பது எளிமையாகத்தான் இருக்கிறது. எளிமையான விஷயத்தைப் புரிந்து கொள்வது என்ன கஷ்டம்?  ‘என் பாடல்களைக் கேளுங்கள்’ என்று நான் யாரிடமாவது போய்ச் சொல்ல முடியுமா? அல்லது யாருமேதான் அப்படிச் சொல்லிவிடமுடியுமா? ’என் பாடல்களைக் கேளுங்கள்’ என்று நான் எப்போதாவது உங்களிடம் Canvas பண்ணி சொல்லியிருக்கிறேனா?  வேண்டாம் என்றுதான் சொல்கிறேன் (சிரிப்பு). 

உங்களுக்குத் தெரியாத பல விஷயங்களை குமுதத்தில் ஒரு ‘தொடராக’ எழுதுவதாக நான் முடிவு செய்திருக்கிறேன்.  இங்கே எனக்கு என் அம்மாவின் படத்தைப் பரிசாகக் கொடுத்தார்கள்.  எந்தப் புகைப்படத்தைப் பார்த்து அதை வரைந்தார்கள் என்பது எனக்குத் தெரியும்.  அது நான் எடுத்த புகைப்படம்.  அதை வரைந்து எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். அது எந்த சூழ்நிலையில் எடுக்கப்பட்டப் புகைப்படம் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.  எனக்குச் சிறுவயதிலிருந்தே உடம்பு சரியில்லாமல் போவது என்பது கிடையாது.  ஆனால் மிகவும் பிஸியாக இருந்த ஒரு நேரத்தில் எனக்குத் தலைவலி வந்துவிட்டது.  முதல்முறையாக அந்தச் சின்னத் தலைவலிக்காக டாக்டர் வந்து வீட்டில் பார்த்துவிட்டுச் சென்றார்.  ’டாக்டர் வந்தார்’ என்றவுடன் அம்மா பதறிவிட்டார்கள். ‘ஏம்ப்பா.. உனக்குத் தலைவலியா?’ என்று கண்ணீர் விட ஆரம்பித்துவிட்டார்கள்.  ‘ஏம்மா? இந்தச் சின்ன விஷயத்துக்கு அழுகிறீர்கள். எனக்கு ஒன்றுமில்லை” என்று நான் அவர்களைச் சமாதானப்படுத்தி அமர வைத்து ஒரு புகைப்படம் எடுத்தேன். அந்தப் புகைப்படத்தைத்தான் வரைந்து இங்கே எனக்குக் கொடுத்திருக்கிறார்கள்.

அந்தத் தாய் எதற்காக என்னை ஈன்றார்கள் என்று எனக்குத் தெரியாது.  சின்ன வயதில் நிறைய ஆசைகள் இருக்கும்.  படிக்கவேண்டுமென்ற ஆசை இருக்கும்.  ஆனால் படித்து என்ன செய்யப்போகிறேன், என்ன உத்தியோகத்துக்குப் போகப்போகிறேன் என்று தெரியாது.  இசைகற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசை இருக்கும்.  ஆனால் எங்கே சென்று யாரிடம் கற்றுக்கொள்வது என்று தெரியாது.  நான் பிறந்த கிராமத்தில் இசையைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைத்தால் கூட அதைச் சொல்லிக்கொடுப்பதற்கு யாரும் இல்லை.  அதனால்தான் ‘தாகத்தை உண்டுபண்ணத் தண்ணீர் கொடுக்காதே’ என்று நான் சொல்வதுண்டு.  ஒருவேளை என் கிராமத்தில் இசை கற்றுக்கொடுப்பதற்கு யாரேனும் இருந்திருந்தால் நான் இசையமைப்பாளர் ஆகாமலேயே போயிருக்கலாம். இது நன்றாய் இருக்கிறதே.. அது நன்றாய் இருக்கிறதே.. என்று இசையைத் தேடிச் சென்று கேட்டுக் கேட்டுத் தாகத்துடன் வளர்ந்ததுதான் என்னை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

‘அம்மா.. நாங்கள் சென்னைக்குப் போகவேண்டும். எங்களுக்குப் பணம் கொடுங்கள்’ என்று அம்மாவிடம் கேட்டபோது, வீட்டில் இருந்த ரேடியோவை விற்று 400 ரூபாய் கொடுத்தார்கள்.  அந்த 400 ரூபாயில் ஒரு 50 ரூபாயை தனக்கென்று வைத்துக்கொண்டு மிச்சத்தை எங்களிடம் கொடுத்திருக்கலாம் அல்லவா அந்தத் தாய்.  ஆனால் அப்படிக் கொடுக்கவில்லை.  இதுதானே கல்வி.  இதை யார் கற்றுக்கொடுத்துவிடமுடியும்? எந்த யுனிவர்சிட்டியால் கற்றுத் தந்துவிடமுடியும்?  அந்தத் தாயின் வயிற்றில் பிறந்த எங்களுக்கும், அந்த 400 ரூபாயில் ஒரு 200 ரூபாயை எடுத்து அம்மாவிடம் செலவுக்குக் கொடுத்துவிட்டு வருவோம் என்று தோன்றவில்லை.  அந்தப் பண்பு வரவில்லை.  அம்மா.. என்பது அம்மாதான்.  ஒரு வருடம் கோமாவில் இருந்து என் தாய் மரித்துப் போனார்கள். அத்துடன் என் கண்ணீர் எல்லாம் போய்விட்டது.  இதை எல்லாம் நான் உங்களிடம் பகிர்ந்து கொள்வது எதற்கென்றால், பிறந்த நாள் என்று சொல்லி என்னை அழைத்துவிட்டார்கள். இந்த நாளில் என்னைப் பெற்றவளை நினைக்காமல் நான் எப்படி இருக்க முடியும்?

கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் நான் எழுதிய பாமரவெண்பா ஒன்றை அடிக்கடிக் குறிப்பிடுவார்..

‘வேதந் தெரிஞ்சிருந்தா வெம்பயனா ஓதுவேன்
ஓதும் தெரியவக ஓதியதத் தேடுவேன்
ஏதுந் தெரியலையே எப்படி நான் தேறுவேன்
போதும் பொலம்பும் பொழப்பும்’

வெண்பா என்பது புலவர்களுக்குப் புலி.  அதாவது புலி மாதிரி புலவர்களை அடித்துவிடுமாம் இந்த வெண்பா.  நானும் எழுதிப்பார்த்தேன். சரியாக வரவில்லை.  அப்படியே தூக்கிப் போட்டுவிட்டேன். பின் மீண்டும் இதில் என்னதான் இருக்கிறது என்று எண்ணி எழுதிப் பார்த்தேன். வந்துவிட்டது.  அதுதான் இந்தப் புத்தகமாக வெளிவருகிறது.  இந்த உலகம் கருத்துக்கள் சொல்பவர்களால் நிரம்பி வழிகிறது.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்கிறார்கள்.  எதை எடுத்துக்கொள்வது… எதைத் தள்ளுவது என்று தெரியவில்லை. இதெல்லாம் இல்லாமல் இறைவன் இசையைக் கொடுத்து ‘இங்கேயே கிட’ என்று என்னைப் பணித்துவிட்டான்.  அதற்கு நான் இறைவனுக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்?  இங்கே இறைவணக்கம் பாடிய குழந்தை மிகவும் அழகாகப் பாடினாள். இப்படிப்பட்ட இசை இருந்தால் இறைவன் அதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும். 

இசையைத் தவிர வேறு ஒன்றும் எனக்குத் தெரியாது.  நாம் பாடவேண்டாம்.  ஒரு இசையை மனதில் நினைத்தாலே எவ்வளவு இன்பம் பிறக்கிறது? ’தாலாட்ட வருவாளா’வாக இருக்கட்டும்.., ‘தென்றல் வந்து தீண்டும்போது’வாக இருக்கட்டும்.., ‘அம்மா என்றழைக்காத’வாக இருக்கட்டும்.. ‘ஜனனி ஜனனி’யாக இருக்கட்டும்..! பாடல்களை நினைத்தவுடனேயே உங்களுக்கு இன்பம் பிறக்கிறதா இல்லையா?  அந்தப் பாடல் உங்களுக்கு உள்ளே ஓடுகிறதா இல்லையா? அதுதான் தியானம். அதுதான் Meditation.

நீங்கள் கோவிலுக்குச் சென்று இறைவனைக் கும்பிட்டாலும், ஒரு நிமிஷம் உங்கள் மனது உங்களிடத்தில் நிற்கிறதா? நம் மனது நிற்பதில்லை.  ஆனால் நான்கு நிமிடம் ஒரு பாடலைக் கேட்டு உங்கள் மனது அப்படியே நிற்கிறது என்றால்.. அதை என்னவென்று சொல்வது?  இது எப்படி நடக்கிறது? நான் நடத்துகிறேனா?  ’நான்கு நிமிடங்கள் நீங்கள் வேறெதுவும் நினைக்காமல் பாடலைக் கவனியுங்கள்’ என்று நான் உங்களிடம் சொல்கிறேனா? அந்தப் பாடல் உங்களைப் பிடித்து இழுக்கிறது.  இசை என்பது அப்படிப்பட்ட சக்தி வாய்ந்தது.  அது சுத்தமாக இருந்தால் அந்த சக்தி இருக்கும்.  சுத்தமாக இல்லையென்றால் அந்த சக்தி இருக்காது.  எது சுத்தம்.. எது அசுத்தம் என்பது இசையில் கிடையாது. அபஸ்வரம் இல்லையென்றால் இசையே இல்லை.  ஆனால் அபஸ்வரம் எந்த இடத்தில் இருக்கவேண்டுமோ அந்த இடத்தில் இருக்கவேண்டும்.  தூரத்தில் இருக்கவேண்டும்.

ஒரு கோபக்காரர் நம் எதிரில் வந்தால், ‘இந்த ஆள் எதற்கு வந்தான்?’ என்று நமக்குக் கோபம் வருகிறது. அந்தக் கோபம் அவனிடமிருந்தா நமக்கு வருகிறது?  அந்தக் கோபம் அவன் நமக்குக் கொடுப்பதில்லை.  தீதும் நன்றும் பிறர் தர வாரா.  குமுதத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி எனக்காக நடக்கும் என்று நான் நினைக்கவில்லை.  குமுதம் – தமிழர்களின் இதயத் துடிப்பு’ என்று சொல்வார்கள். இசை என்பது உலகில் உள்ள சகல ஜீவராசிகளின் இதயத் துடிப்பு.  இதயம் என்பது ஒரு சீரான Tempo’வில் துடிக்க வேண்டும்.  ஒருவருக்கு வேகமாக, ஒருவருக்கு மெதுவாக.. ஏதாவது ஒரு தாளத்தில்தான் இதயம் துடிக்கிறது.  இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக நடத்துவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.  நான் எதிர்பார்த்ததற்கும் மேலாக மிகவும் அமைதியாக, மனதுக்கு நிறைவாக நடந்தது.  என் நன்றிகள்”

இசைஞானி தன் இருக்கையில் சென்று அமர, அதன் பின்னர் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.  பின்வரிசையில் அமர்ந்திருந்த  நாங்கள், இசைஞானியை அருகில் பார்க்கும் ஆவலில் மேடைக்கு அருகில் நகர்ந்து செல்ல.. நன்றியுரையை கவனித்துக்கொண்டிருந்த இசைவேந்தனின் முகம் திடீரென்று மேடையின் முன் நின்றிருந்தவர்கள் பக்கம் திரும்ப, ஒரு மூன்று விநாடிகளுக்கு என் விழிகளில் அந்த காந்த விழிகள் ஊடுருவ… பாதங்களின் கீழ் பூமி நழுவி… .. தண்டுவடம் சில்லிட்டு…. .. அட.. எல்லாம் பழைய உவமானங்கள்.. பின் எப்படிச் சொல்ல அந்த சில நொடிகளின் அற்புத உணர்வை? ஒரு பொன்மாலைப் பொழுதில், முகம் நிறைய புன்னகையுடன் ‘பெண் குழந்தை..!’ என்று சொல்லி என் கைகளில் வெண்மேகக் குவியல் ஒன்றை செவிலித்தாய் ஒருத்தி பொதிந்துவிட்டுப் போனபோது ஏற்பட்ட அதே உணர்வு.  பிறவிப்பயன்..!!

நிகழ்ச்சி முடிந்து இசைஞானியை அவரது வாகனம் வரை தொடர்ந்து சென்று வழியனுப்பித் திரும்பினால், மேடையில் இருந்த நாற்காலிகள், அலங்காரப் பொருட்களைப் பிரித்துக் கீழே இறக்கிக் கொண்டிருந்தார்கள்.  அரங்கமே ‘Happy Birthday To You’ பாட மேடையில் வைத்து இசைஞானி வெட்டிய ‘Birthday Cake’கை அப்படியே அள்ளிக்கொண்டு வந்துகொண்டிருந்தார் ஒரு ஊழியர்.  அவரிடம் சென்று ‘சார்.. அந்த Cake… கொஞ்சம் டப்பாவைத் திறங்களேன்..’ என்றேன்.  ’வேற்று கிரகத்து ஜீவராசி ஒன்று Music Academy’க்குள் புகுந்துவிட்டதோ’ என்று எண்ணினாரோ என்னவோ என்று தெரியவில்லை. என்னை மேலும் கீழும் ‘ஒருமாதிரி’ பார்த்தவர்… ‘சார்.. இது ஆல்ரெடி Cut பண்ண Cake சார்..! புதுசு கிடையாது’ என்றார்.  ’இசையின் இறைவன் சுவைத்த Cake அவ்வளவு சாதாரணமானதொன்றும் அல்ல’ என்று அவரிடம் எப்படி விளக்கிச் சொல்ல முடியும்?  மேலும் கொஞ்ச நேரம் கெஞ்சியதும், மூடியைத் திறந்தார்.  Cake’ஐ என் Camera’வுக்குள் அள்ளிக்கொண்டேன்.

’என்னதான் இருக்கிறது இவரிடம்?  அப்படி எதை அள்ளி எனக்குக் கொடுத்துவிட்டார் என்று இவர் முகத்தைக் காண இப்படி ஒவ்வொரு நிகழ்ச்சியாக ஓடுகிறேன்?’ என்று எண்ணிக்கொண்டே வெறிச்சோடிக்கிடந்த வீதியில் வாகனத்தை விரட்டுகிறேன்..! ’எனக்குத்தான் தலைவர்கள்.. என் ரசிகர்கள்.. அவர் விரும்பும்வரையில் விருந்து படைப்பேன்’..! காற்றில் எங்கோ மிதந்துகொண்டிருந்த பாடல் வந்து உதட்டில் தொற்றிக்கொள்கிறது.

புகைப்படங்கள் நன்றி: www.kalakkalcinema.com

25 comments:

  1. சூப்பர். எனக்கு இன்னும் அந்த தரிசன பாக்கியம் கிடைக்க வில்லை....

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் உங்களுக்கும் தரிசன பாக்கியம் கிடைக்க வாழ்த்துகிறேன்..! வருகைக்கு நன்றி சகோ! :-)

      Delete
  2. நான் நிகழ்ச்சியை காண முடியவில்லை என்ற குறை தீர்ந்தது... உங்கள் கட்டுரை மேடையை கண் முன்னே காண்பித்து விட்டது... மிகவும் நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி சகோ.! வருகைக்கு நன்றி! :-)

      Delete
  3. Nanba naanum Mr. Muthukumar avargal sonnathaey solgiren.

    நான் நிகழ்ச்சியை காண முடியவில்லை என்ற குறை தீர்ந்தது... உங்கள் கட்டுரை மேடையை கண் முன்னே காண்பித்து விட்டது... மிகவும் நன்றி...

    ReplyDelete
  4. அருமை நண்பரே, இசைஞானியைப்பற்றி மற்றவர்கள் பேசியதையும் ஒரு பதிவாக எழுதுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. கலைஞானி பேசியது ஏற்கெனவே யூட்யூபில் வெளியாகிவிட்டது. இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்களின் பேச்சு மிக எழுச்சியாக இருந்தது. அது எழுத்து வடிவில் உள்ளதை விட பார்ப்பதற்கு இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதால் பதியவில்லை சகோ..! இருப்பினும் நேரம் கிடைக்கும்போது செய்கிறேன்.! :-)

      Delete
  5. Wonderful. Thanks for the description. Loved your narration.

    ReplyDelete
  6. அழகான நிகழ்ச்சியை மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். ஏதாவது தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் என்று நினைக்கிறேன். ஏற்கனவே சென்னையில் நடந்த "How to name it" புரோகிராமும் பார்க்க முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ! விஜய் டி.வி.யில் விரைவில் ஒளிபரப்பாகிறது.! :-)

      Delete
  7. தல மிக அருமையான பதிவு...பல தளங்களில் இந்த பதிவு தான் ஒடுது...மிக்க நன்றி உங்களுக்கு ;-)

    \\ஓஹோ புரொடக்சன்ஸ்June 5, 2012 11:29 PM
    அருமை நண்பரே, இசைஞானியைப்பற்றி மற்றவர்கள் பேசியதையும் ஒரு பதிவாக எழுதுங்களேன்.\\

    அப்படியே இதையும் எழுதினால் நன்று.

    அனைவருக்கும் விழாவில் கலைஞானி பேசிய வீடியோ
    http://www.youtube.com/watch?v=i5qx2v5srgU

    அனைவரும் காணுங்கள் ;-))

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோபி..!

      /பல தளங்களில் இந்த பதிவு தான் ஒடுது.../

      இசைஞானிக்கே எல்லாப்புகழும்! :-)

      Delete
  8. @ Minmalar - இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் வரும் போல..அவர்கள் தான் மீடியா ஸ்பான்சர் ;-)

    ReplyDelete
  9. ஆண்ட்ரூ தொகுப்புனா சும்மாவா... கண்முன்னே கொண்டாந்தாறு பாருங்க...

    என்னால் வர இயலாது போன எனது பணியை சிறப்பாக செய்தமைக்கு நன்றிகள்... :)))

    ReplyDelete
    Replies
    1. வேலவன்.. எங்கெங்கு காணினும் .. சகல இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறீர்களே..! மகிழ்ச்சி..! :-)

      Delete
  10. antha Trash blogger adiyen thaan - Velavan :))

    ReplyDelete
  11. nalla oru nigazhchiyai ezhuthu vadivam aakkiyamaiku nandri..vaazthukkal

    ReplyDelete
  12. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.
    Please avoid word verification in Comments.

    ReplyDelete
  13. படித்து முடிக்கும் போது என்னையும் அறியாமல் அழ வைத்து விட்டீர்கள். நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. அற்புதமான தகவல்!! நன்றி

    ReplyDelete