Wednesday, August 22, 2012

"Be with Me - Maestro"


ஆகஸ்ட் 7..

அலுவலகக் கோப்புகளில் மூழ்கியிருந்தவனை ‘ஆஹா… ஆஹா.. ஆஹா..’ என்று ’காதலின் தீபம் ஒன்று’ பாடத்தயாரான எஸ்.பி.பி.யின் குரல் அழைத்தது.  அலைபேசியை எடுத்தால்.. ‘Devinth calling…’ .. திரை ஒளிர்ந்தது..!

‘அண்ணா..!’

‘சொல்லுங்க தம்பி..!’

‘பார்த்தீங்களா..??’

‘என்னது..?’

‘தலைவர் Concert’ணா.!

’எப்போ..?’

‘20ம் தேதி’ணா..!’

‘என்ன தம்பி சொல்றீங்க..? இன்னும் 2 வாரம்தான் இருக்குது. இவ்வளவு Short Notice’லேயா..? எங்கே..??

‘என் Wall’ல Share பண்ணியிருக்கேன். Indiastage’ல டிக்கெட் போட்டிருக்கான்.  பாருங்க..!’

‘சரி தம்பி..! சாயங்காலம் வீட்டுக்குப் போய் பார்க்கிறேன்’… இணையத் தொடர்பற்ற Section’ல் அமரவைத்த அதிகாரியை மனதிற்குள் திட்டியவாறு தொடர்பைத் துண்டித்தேன்.  அதற்கு மேல் வேலை செய்ய மனம் மறுத்தது.  என்ன Concert’ஆக இருக்கும்..? யாரிடம் கேட்கலாம்..? அண்ணன் ஒருவரின் ஞாபகம் வந்து, அவரை அவசரமாய் அழைத்தேன்..!

‘அண்ணே.. Officeலேயா இருக்கீங்க’?

‘ஆமா தம்பி..!’

‘Net இருக்குதா..?’

‘ம்ம்.. சொல்லு..!’

‘Indiastage Website போங்க.  20ம் தேதி தலைவர் Concert இருக்குதாம்.  என்ன ஏதுன்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்க’.

‘இரு..!’ என்றவர் ஒரு நிமிடம் கழித்து,

‘ஆமா தம்பி..!  Trade Centre’ல..! 20ம் தேதி..! டிக்கெட் 1000 ரூபாயிலிருந்து ஸ்டார்ட்டிங்..’ என அடுக்கத் துவங்கினார்.

‘தலைவர் பாட்டுகளை வேற எதுவும் Troop வாசிக்குதா..? இல்ல தலைவரே வர்றாரா?’ (நம் கவலை நமக்கு).

‘தம்பி.. Ilaiyaraaja Presents.. அப்டின்னு போட்டிருக்குது..! வருவார்னுதான் நெனைக்கேன்..!’

அழைப்பைத் துண்டித்து, அலுவலக நேரம் முடிந்து, அவசரமாய் இல்லம் விரைந்து, Indiastage தளத்தில் நுழைந்தால் ஒரே ஒரு புகைப்படம்.  தலைவரின்  நிழற்படத்துடன்.. ‘Be With Me .. Maestro … Its happening.. Ilaiyaraaja – Live in Concert .. Monday .. 20th August 2012.. Chennai Trade Centre’ என்றது விளம்பரம்.  வேறெந்தத் தகவலும் இல்லை.

தொடர்ந்து ஓரிரு நாட்களுக்குள், Facebook RajaFans Group, இன்ன பிற குழுக்களில்.. ”இது Concert’ஆ? சினிமாப்பாடல்களா..? NEP Audio Release Promo’வா..? Symphony’ஆ? Budapest Musicians வருகிறார்களா..? .. இல்லை.. அவருடன் இசைக்கும் கலைஞர்களுக்கே இதைப் பற்றித் தெரியவில்லை..! இது Concert இல்லை.. Conclave..! Seminar..! கருத்தரங்கம்..! கலந்துரையாடல்..!  Music demonstration..!” என்று ஏகப்பட்ட கேள்விகள் / அலசல்கள் துவங்கிவிட்டிருந்தன.

என்ன ஏது என்று தெரியாமல் போகலாமா வேண்டாமா என்று யோசித்தவனைப் பார்த்து மூன்று வார்த்தைகள் மீண்டும் சிநேகமாய்ச் சிரித்தன.

“BE WITH ME”

அவ்வளவுதான்…! தலைவர் கூப்பிட்டாச்சு.  போயிடலாம்..! Decided..!!

***********************************************************************************************

ஆகஸ்ட் 20..! முன்னிரவின் சிறுமழையைத் துடைத்தவாறு சோம்பல் முறிக்கத் துவங்கியிருந்தன அதிகாலைச் சென்னை வீதிகள்.  முதலிலேயே பேசிவைத்திருந்ததைப்போல நண்பர் திரு. ரவிசங்கரானந்தின் வாகனத்தில் நண்பர்கள் மொத்தமாய் நான்குபேர்..!!

”ஜி….!! கானாபிரபா ‘கண்ணுக்கொரு வண்ணக்கிளி’ போஸ்ட் பார்த்தீங்களா..?’ என்று கேட்டுக்கொண்டே Music Player’ஐ அவர் உசுப்ப.. ‘கானம்… தென்காற்றோடு..’ என்று ராகதேவன் பாடத் துவங்கினார்.  தலைவனின் தாலாட்டுக்குத் தலையாட்டிக்கொண்டே அவசரமாய் Trade Centre சென்றடைந்தோம். 

உள்ளே நுழைந்தால்…

மேடையில் ஒரு வெண்மெத்தை விரிப்பு…

சுற்றிலும் இசைஞானியின் இசையோவியங்களுக்கு உயிர்தரும் அவரின் ஆஸ்தான ஓவியர்கள் திரு பிரபாகர், திரு. நெப்போலியன், திரு. சதா, என்று வெகுசில இசைக்கலைஞர்கள் மட்டும்.. தத்தமது தூரிகைகளை Tune பண்ணிக்கொண்டு….!!  வழக்கமாய் இசைஞானியின் கொலுவை அலங்கரிக்கும் அந்த பிரம்மாண்ட String Section.. Brass… எல்லாம் மிஸ்ஸிங்…!!  மேடையின் அருகே கார்த்திக், யுவன், பவதா, பார்த்திபன், பாஸ்கி, மேலும் ஒரு சில தெரிந்த முகங்கள் .. பரபரப்பாய்…! 

இது என்னதான் நிகழ்ச்சி..?? குழப்பமுடிச்சுகள் மனதுக்குள் இன்னும் இறுகத்துவங்கின..! இருப்பினும் ராகதேவனின் வருகையை எதிர்நோக்கி, வாசலில் விழிதேக்கினேன்.

கொஞ்ச நேரம் கழித்து, இசைஞானியின் உற்ற நண்பனை பயபக்தியுடன் தூக்கிக்கொண்டு வந்து மேடையில் வைத்தார் ஒருவர்.

சற்று நேரம் கழித்து, மைக் பிடித்தார் பாஸ்கி..!

“அனைவருக்கும் வணக்கம்.  இது என்ன மாதிரியான Programme.?? இது Concert’ஆ..? அல்லது என்னது என்று உங்கள் எல்லோருக்கும் அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கும்.  உங்களைப்போலவே எனக்கும், இங்கே மேடையில் இருக்கும் யாருக்கும், இங்கு என்ன நடக்கப்போகிறது. இது என்ன நிகழ்ச்சி என்பது இந்த நிமிடம்வரை தெரியாது. அதைத் தெரிந்தது Maestro இளையராஜா Sir’க்கு மட்டும்தான்.  ‘நீ ஆரம்பி.. நான் வந்து பார்த்துக்கிறேன்…’ என்று சொல்லிவிட்டார்…’ என்று அவர் பேசிக்கொண்டேபோக அரங்கத்திற்கு வெளியே மேளம் கொட்டும் சத்தம் கேட்கத்துவங்கியது.  அவ்வளவுதான்.  அனைவரின் கண்களும் மேடையைவிட்டகன்று, வாசலை நோக்கின.

வழக்கம்போல Standing Ovation’க்கு நடுவே அரங்கத்தில் நுழைந்து, சரியாய் 9.50க்கு மேடையேறினார் இசைப்பிதா.  இசைஞானியின் குருநாதர் திரு. டி.வி.கோபாலகிருஷ்ணன் அவர்கள் குத்துவிளக்கேற்ற, அவர் பாதம் தொட்டு வணங்கிய இசைஞானி இருக்கையில் வந்து அமர்ந்தார்.

பின்னர் பவதாரணி, இறைவணக்கப் பாடலாய் ‘ஜனனி ஜனனி’யைப் பாடி முடிக்கவும் மைக் பிடித்த திரு. டி.வி. கோபாலகிருஷ்ணன், “இந்த ஜனனி ஜனனி பாடலைக் காலையில் ஒருமுறைக் கேட்டுவிட்டால் அன்று கோயிலுக்குப் போகவேண்டாம்; பூஜை செய்ய வேண்டாம்; அனைத்தும் இந்த ஒரு பாடலிலேயே பொதிந்திருக்கின்றன.  இசைஞானி இளையராஜா தன் இசையின் மூலம் உங்களுக்கெல்லாம் இன்பத்தை அள்ளித்தந்துகொண்டிருக்கும் ஒரு மாமேதை.  இசையே ஒரு அழகு.  அந்த அழகுக்கு அழகுசேர்த்தவர் இவர்தான்.  இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பதற்காக நான் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை மெச்சுகிறேன்” என்று கூறியமர, இருக்கையை விட்டு எழுந்து வந்து, விரிக்கப்பட்டிருந்த தன் பிரத்யேக வெண்மெத்தையில் வந்தமர்ந்தார் இசைப்பிதா.

         ‘இங்கே என்ன பண்ணப்போகிறேன் என்பது எனக்கே தெரியாது.  எதுவும் பண்ணிவிடமுடியாது .. இசையைத் தவிர ..!  நான் எது செய்தாலும் அது மியூஸிக்தான்..!  நான் உங்களைச் சந்திக்க விரும்பியதன் நோக்கம், நான் என் வாழ்வில் அனுபவித்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான்.  உங்களை மட்டுமல்ல.. நாடு முழுக்க இதே போல சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தப்போகிறேன்.  எனக்கு வருங்கால மாணவர்களை, இளைஞர்களைச் சந்திக்கவேண்டும்.

நான் இந்த நிகழ்ச்சியை எந்தப் பாடலுடன் துவங்கவேண்டும் என்று நினைத்து வந்தேனோ அந்தப் பாடலைப் பவதாரிணி பாடிவிட்டாள்.  இந்தப் பாடல் உருவானபோது என்ன நடந்தது என்பதைச் சொல்கிறேன்.

(இசைஞானி பேசத்துவங்கியதும் அரங்கத்தின் விளக்குகள் அணைக்கப்பட, இசைஞானி, ‘லைட்டை ஆன் பண்ணுங்க..! நான் அவங்களைப் பார்த்துப் பேசவந்திருக்கிறேன்..’ என்று கூற, பலத்த கரவொலிக்கிடையே மீண்டும் அரங்கம் வெளிச்சத்தில் நிரம்பியது).

         டைரக்டர் கே. ஷங்கர் என்னிடம் ”தாய்மூகாம்பிகை” படத்திற்கென ஒரு சிச்சுவேஷன் சொல்லியிருந்தார்.  அந்த சமயங்களில் இரவு இரண்டு மணிவரை எனக்கு கம்போஸிங் இருக்கும்.  மீண்டும் காலையில் ரெக்கார்டிங் இருக்கும்.  இவர்களுக்கு கம்போஸிங்கிற்காக எனக்கு நேரம் ஒதுக்க இயலாமல் இருந்தது.  அந்த சமயத்தில் நான் ‘நார்த் உஸ்மான் ரோட்டில்’ ஒரு வாடகை வீட்டில் இருந்தேன். 

அடுத்த நாள் பூஜை..!  பாட்டு இன்னும் தயாராகவில்லையே என்று டைரக்டர் பதறத் துவங்கிவிட்டிருந்தார்.  நான் அவரிடம் ‘பதறத் தேவையில்லை.  இரவு வீட்டிற்கு வாருங்கள்.. அங்கேயே கம்போஸிங் வைத்துக்கொள்ளலாம்’ என்று கூறினேன்.  

‘ஆதிசங்கரர் மூகாம்பிகையை பிரதிஷ்டை செய்கிறார்.  அவர் தியானத்தில் சர்வ சக்திகளும் ஐக்கியமாக அவருக்குக் காட்சியளிப்பதைப் போன்ற’ காட்சி என்று எனக்கு முதலிலேயே சிச்சுவேஷனைச் சொல்லியிருந்தனர்.  இரவு அனைவரும் வந்துவிட்டனர்.  நான் குளித்துவிட்டு, பூஜை அறையைக் கடந்தபோது ஆதிசங்கரரின் படம் என் கண்களில் பட்டது.  நான் நின்று, ”குருவே..! நீங்க என் பாட்டுல வர்றீங்க..” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.  என் பக்தி அவ்வளவுதான்.

உள்ளே சென்றால் வாலி சார், டைரக்டர், தபலா கன்னையா அண்ணன், என அனைவரும் வந்தமர்ந்திருந்தனர்.  மீண்டும் சிச்சுவேஷனைச் சொன்னார்கள்.  வாலி சாரும் கேட்டுக்கொண்டார்.  கேட்டவுடன் கம்போஸிங் துவக்கினேன்.  முழுவதும் முடித்துவிட்டேன்.  டைரக்டருக்கும் பிடித்துவிட்டது.  வாலி பாடலை எழுதத் துவங்கிவிட்டிருந்தார். பல்லவி எழுதி முடித்தார்.  அனைவரும் காபி சாப்பிடக் கலைந்தனர்.  நானும் எழுந்தேன்.  வெளியே வந்து யோசித்தால், ”ஆதிசங்கரர் யார்..? எல்லாவற்றையும் துறந்தவர் அல்லவா? அந்தத் துறவறம் இந்தப் பாடலில் தெரிகிறதா? எல்லாவற்றையும் விட்டுவிட்டுப்போன அந்த Detachment தெரிகிறதா? Tune சரியாக இருக்கிறது.  ஒரு ராகத்தில் சிறப்பாய் இருக்கிறது.  ஆனால் இந்தப் பாடல் ஆதி சங்கரர் பாடுவது போலவே இல்லையே..? ஒரு சங்கீத வித்வான் பாடுவதுபோலல்லவா இருக்கிறது. திருப்தியாக இல்லையே..!” என்று எனக்குத் தோன்றியது. 

நான் மறுபடியும் சென்று, ‘சார்.. ஓ.கே. பண்ணிட்டீங்க.  ஆனால் நான் வேறொன்று செய்து தருகிறேன்’ என்றேன்.  அதற்குள் பாடகர் யேசுதாஸை பாடலைப் பாடவைப்பதற்காக யோசித்துக்கொண்டிருந்தனர்.  மறுபடியும் உட்கார்ந்தோம்.  உட்கார்ந்து துவக்கினால்… ’தரரா.. தரரா… (ஜனனி ஜனனி பாடலின் மெட்டைப் பாடிக்காட்டுகிறார்) என்று முடித்தேன்.  வாலி சார், ‘ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ; ஜகத்தாரணி நீ பரிபூரணி நீ” என்று எழுதினார். 

பாடலை முழுவதும் பாடி முடித்தால், கதாசிரியர், அஸிஸ்டண்ட் டைரக்டர்ஸ் அனைவரின் கண்களும் கலங்கியிருந்தன.  ‘பாடல் ரொம்பப் பிரமாதமாக வந்திருக்கிறது சார்..!’ என்றார்கள். அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.

கம்போஸிங் முடிந்து .. அனைவரும் கலைந்து சென்றனர்.  நான் எழுந்தேன்.  ‘குருவே.. என் Tune’ல் நீங்கள் வந்தீர்கள் என்று எப்படி நான் அறிந்துகொள்வது.?’ என்று மனதுக்குள் நினைத்தேன்.  அப்போது அங்கு ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியின் காற்றில் மிதந்துவந்த காகிதம் ஒன்று என் கையில் அமர்ந்தது.  அதை விரித்தால், ‘பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்..’ என்று இருந்தது.  பாடத்துவங்கினேன்.

‘பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்..
பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்..’

(’ஜனனி ஜனனி’யின் மெட்டில் பாடுகிறார்..)

’ஜனனி ஜனனி’ பாடல்.. ‘பஜகோவிந்தம்’ Meter'ல் அமைந்திருந்தது.  ‘அடடே.. குருவே...!! இப்படித்தான் என் பாடலில் வந்தீர்களா..?’ என்று எனக்குச் சொல்லமுடியாத சந்தோஷம்.

அடுத்த நாள் ரெக்கார்டிங்.  யேசுதாஸ் ஊரில் இல்லை. டைரக்டர், ’யேசுதாஸ் பாடினால்தான் நன்றாக இருக்கும்’ என்று கூறினார்.  நான் டைரக்டரிடம், ‘நான் பாடுகிறேன்.  ரெக்கார்டிங் செய்துவிடுவோம்.  அதன்பின்னர் யேசுதாஸ் வந்தவுடன் அவரைப் பாடவைத்து மிக்ஸ் செய்துகொள்ளலாம்’ என்று கூறினேன்.  அந்த இடத்தில் வேறு வழியில்லாததால் நானே பாடிவிட்டேன். 

தொடர்ந்து ’பிச்சைப் பாத்திரம்’ பாடலை ‘இந்த உடல் எப்படி வந்தது? அம்மையும் அப்பனும் தந்ததா? இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா? என்று பாடினார் இசைஞானி.

கலந்துரையாடல் தொடர்ந்தது..

பாஸ்கி: கடந்த 35 வருடங்களாக புதுவருடம் என்றாலே ‘Hai Everybody.. wish you a happy new year..’ என்ற பாடல்தான் கேட்கிறது.  ஒவ்வொருமுறை கேட்கும்போதும் ‘Happy New Ear’ என்று சொல்லலாம் என்பதுபோல காதே புதிதாகிறது.  இந்தப் பாடலுக்கு Replacement நீங்களே கொடுத்தால்தான் உண்டு.  Replacement உண்டா.? அல்லது இதே பாடல்தான் தொடருமா.?

         ”அது அந்த நேரத்தில் வந்தது.  அதற்குப் பின்னர் அது போல வேண்டும் என்று யாரும் கேட்டு வரவில்லை. அப்படி யாரும் வந்தால் புதிய பாடல் வரும்..!” (சிரிப்பு..).

பாஸ்கி: உங்கள் பாடல்களின் Originality உங்களுக்கே தெரியும்.  உங்கள் பாடலின் சாயலில் வேறு ஒருவர் பாடலைப் போட்டால் அதற்கு உங்களது Immediate reaction பெருமையா? அல்லது கோபமா?

         நீங்கள் மேடையில் பேசுகிறீர்கள். பெர்னாட்ஷாவைக் Quote செய்கிறீர்கள்.  அதை பெர்னாட்ஷா கேட்டால் கோபப்படுவாரா? ஜெயகாந்தன் ‘புதிய வார்ப்புகள்’ என்று தனது கதை ஒன்றுக்குத் தலைப்பிட்டிருந்தார்.  பாரதிராஜா அதே தலைப்பை ஒரு படத்திற்கு வைத்தார்.  அப்போது ஜெயகாந்தனிடம் வந்து ஒருவர் ’அதெப்படி உங்கள் தலைப்பை அவர் வைக்கலாம்?  இதை நீங்கள் தட்டிக் கேட்கவேண்டும்…!’ என்று கூற பதிலுக்கு ஜெயகாந்தன், ‘இல்லாதவன் எடுத்துக்கொள்ளுகிறான்’ என்று சொல்லி விட்டுவிட்டார்.

ஜெயகாந்தன் எனக்கு குரு ஸ்தானத்தில் இருப்பவர்.  எங்களுக்கு அவர் ஒரு ஹீரோ.  சென்னை வந்தபுதிதில் நான், பாரதிராஜா, மற்றும் பாஸ்கர் மூவரும் அவரை சென்று பார்த்து, ‘உங்களை நம்பித்தான் வந்திருக்கிறோம்’ என்று பேச்சுவாக்கில் சொல்லிவிட்டோம்.  உடனே கடும்கோபமடைந்த அவர், ‘என் அனுமதியில்லாமல் என்னை நம்பி நீங்கள் எப்படி வரலாம்? நீங்கள் உங்களை நம்பியல்லவா வந்திருக்கவேண்டும்?’ என்றார்.  வந்தசுவடே தெரியாமல் நாங்கள் மூவரும் வெளியே வந்து பயங்கரமாய் சிரித்தோம். ‘என்ன இவர்.? ஒரு பேச்சுக்காக கூட ‘சரி பார்க்கலாம்’ என்று சொல்லவில்லையே?’ என்று மூவரும் பேசிக்கொண்டோம்.  பின்னர் யோசித்துப் பார்த்தால் அவர் கூறியது சரி .. அவர் ‘ஜெயகாந்தன்’… நமக்கு அறிவுரைதானே சொல்லியிருக்கிறார் என்று எனக்குத் தோன்றியது. 

பாஸ்கி: உங்களிடம் இயக்குனர்கள் வந்து, ‘இன்று மாலைக்குள் ஒரு ட்யூன் வேண்டும்’ என்று கேட்பது Pressure’ஆ இல்லையா?

         ”எதுவுமே Pressure கிடையாது.  இசை என்பது Pressure’ஆ? இன்று ஆறு பாட்டு ரெக்கார்ட் பண்ணித் தாருங்கள் என்று கேட்டால் ஆறு பாடல்கள் செய்து தருவேன்”.

இதன்பின்னர் இசைஞானி பாடியது ‘நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் தெரியுமா’ பாடலின் Tune’ல் ‘நான் பொறந்த கதை இங்கே சொன்னால் பொருத்தம் ஆகுமா?’ என்ற பாடல்.

பாஸ்கி: ’வளையோசை கலகலகலவென’ பாடலை எப்படி யோசித்து இசைத்தீர்கள்? அந்தப் பாடல் ஒரு Flash’ல் வந்ததா? எப்படி வந்தது?

         ”அது ‘How to Name it’ Album’க்காக Hariprasad Chaurasia வாசிப்பதற்காக நான் எழுதிய tune.  அந்த சமயம் ரெக்கார்டிங் வந்த கமல்ஹாசன், ‘புதுசா என்ன போட்டிருக்கீங்க?’ என்று கேட்டார். நான் அவரிடம், ‘ஒரு புது ட்யூன் போட்டேன்.. Hariprasad Chaurasia’வுக்காக.. ஆனால் அதை ரெக்கார்ட் செய்யாமல் விட்டுவிட்டேன்’ என்று கூறினேன். ‘என்ன ட்யூன்?’ என்றார்.  நான் வாசித்துக்காட்டினேன். ‘ரொம்ப நல்லாயிருக்கே.. இதை நம்ம படத்துல போட்டுடுவோம். இதை அப்படியே பாட்டாக்கிவிடுங்கள்’ என்று கூறி வாங்கிக்கொண்டார்.”

மேடையேறி மைக் பிடித்தார் கார்த்திக் ராஜா.

கார்த்திக்: ’Spirituality சரி.. இந்த Love..? அது எப்படி உங்கள் பாடல்களில் அந்த Feel வருகிறது’?

         ”சப்தஸ்வரங்களை நான் நேசிக்கவில்லையென்றால் அவை என்னை நேசிக்குமா? ஒவ்வொரு ஸ்வரமும் என்னுடைய ஸ்வரம்தான்.  எனக்குச் சொந்தமானதுதான்.  எனக்குச் சொந்தமானது என்றால் அது உங்களுக்குச் சொந்தமானது.  ஒருமுறை ஒரு பாடல் நான் போட்டுட்டேன்னா அது என்னுடையது அல்ல. ‘சார்.. அந்தப் பாட்டு நல்லாயிருக்குது’ என்று யாராவது சொன்னால், ‘சரி.. சரி’ என்று சொல்லிவிட்டு கடந்துபோய்விடுவேன்”.

கார்த்திக்: ”சரி Love ஓ.கே..! யாராவது டைரக்டர் வந்து ’கோபம் வருவதுபோல ஒரு பாட்டு போட்டு தாருங்கள்’ என்று கேட்டால் ..??”

         ”மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்” பாடலை ‘தரரா.. தரரா..’ போட்டுப் பாடிய இசைஞானி, ‘கோபம் வரவில்லையா?’ என்று சிரித்தபடி… ‘ம்யூஸிக்கிற்கும் கோபத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? என்று புன்னகைத்தார்.

இதன்பின்னர் ”மருதநாயகம்” படத்திற்கென இசைஞானியின் இசையில் உருவான ட்ரைலர் திரையில் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மேடையேறினர் கவிஞர்கள் பழநிபாரதி, நா.முத்துக்குமார் மற்றும் இயக்குனர் கவுதம்மேனன்.  கவிஞர்கள் வாழ்த்திப்பேசியதைத் தொடர்ந்து மைக் பிடித்தார் கவுதம்மேனன்.

”நானும் ஒரு ரசிகனாகத்தான் இங்கே வந்திருக்கிறேன். இது ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்திற்கான ஒரு Publicity கிடையாது.  அந்தப் படத்திற்கு என தனியாக Publicity தேவையில்லை.  ஏனென்றால் அதில் ராஜா சார் இசை இருக்கிறது.  எனக்குள் இசையை Define செய்தது அவருடைய இசைதான்.  அதைச் சொல்லித்தான் அவரை நான் முதன்முதலில் சந்தித்தேன்.  ஒவ்வொரு படத்திற்கும் அவரிடம் போகலாமா என்று யோசிப்பேன்.  பின்னர் வேண்டாமென்று பயந்து விட்டுவிடுவேன்.  இந்தப் படத்திற்காக Script எழுதும்போது நிறைய விஷயங்கள் எனக்கு ராஜா சாரை நினைவுபடுத்தின.  ஒன்று, நாயகியின் பெயர் நித்யா.  ஹீரோ மேடையேறி, ‘நினைவெல்லாம் நித்யா’ படத்திலிருந்து ஒரு பாடலைப்பாடுகிறார்’ போன்ற விஷயங்கள் already Script’ல் இருந்தது.  இம்முறை சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவரிடம் சென்று கேட்டேன்.  அன்றிலிருந்து எங்கள் இருவருக்கும் இடையில் ஒரு அழகான Relationship உதித்துவிட்டது. 

‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்திலிருந்து இதுவரை இரண்டு பாடல்கள் கேட்டிருப்பீர்கள்.  படத்தில் ஒரு Situation...  ஹீரோ வெகுநாட்களாக நாயகியை சந்திக்கவில்லை.  அவள் எங்கிருக்கிறாள் என்றும் தெரியவில்லை.  கடைசியில், ‘மணப்பாடு’ என்ற இடத்தில் அவள் இருக்கிறாள் என்று தெரிந்துகொண்டு, அவளைத் தேடிப் போகிறான் ஹீரோ.  அந்த situation’க்கு, எனக்கு ஒரு Travel song போல ஒன்றைப் போட்டுத் தாருங்கள்’ என்று ராஜா சாரிடம் கேட்டேன்.  முதலில் ஒரு பல்லவி மட்டும்தான் அவரிடம் கேட்டேன்.  ஆனால் அவர் பல்லவியைப் போட்டுக்கொடுத்து, அதை நான் கேட்டபின்பு இது ஒரு முழுப்பாடலாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.  பின்னர் அதை அப்படியே முழுப்பாடலாக மாற்றினோம்.  It is one of the best songs that I’ve heard in my life’ அப்டின்னு சொல்லலாம்.  அதை .. சார்.. நீங்க இப்போ எங்களுக்காக பாடிக்காட்டுங்கள்’ என்று கேட்க, ’தத்தரத்த தாரத் தாரத் தத்தரத்த தாரத் தார..’ என்று Humming’ஐத் துவக்க, “காற்றைக்கொஞ்சம் நிற்கச் சொன்னேன்; பூப்பறித்து கோர்க்கச் சொன்னேன்; ஓடி வந்து உன்னை சந்திக்க” பாடலின் பல்லவியின் பிற்பகுதியில் கவுதம்மேனனும் இணைந்து பாடினார்.

’என்னோடு வாவா’ மற்றும் ‘சாய்ந்து சாய்ந்து’ பாடல்களைவிடவும் ‘காற்றைக்கொஞ்சம்’ பாடல் செவிகளுக்கும் உள்ளத்திற்கும் இன்னும் இதமாக இருந்தது உண்மை.  It is one of the best songs that I’ve heard in my life’ என்று கவுதம் கூறியதில் வியப்பொன்றுமில்லை.

பாஸ்கி: உங்களுக்கு இதுவரையில் மிகவும் Challenging’ஆக இருந்து இசையமைத்த பாடல் எது?

         எனக்கு ஒவ்வொரு பாடலும் Challenge’தான்.  ஏனென்றால் டைரக்டர் எதிர்பார்த்து வருவதை விட சிறப்பாகக் கொடுக்கவேண்டும்.  அது எனக்குப் பிடிக்கவேண்டும்.  உங்களுக்குப் பிடிக்கவேண்டும்.  நீங்கள் கேட்டதினால் எனக்கு இந்த Spot’ல் ஒரு விஷயம் தோன்றியது.  ஆரோகணத்தில் பாடல் போடலாம். அவ்ரோகணத்திலும் போடலாம்.  ஆனால் எந்த Connection’ம் இல்லாமல் Static’ஆக இருக்கும் நான்கு Notes’ஐ வைத்தும் ஒரு பாடல் போடலாம் (தனித்தனி Keys’ஆக ஆர்மோனியத்தில் இசைத்து விளக்கினார் இசைப்பிதா).

கௌதம்மேனன்: சார்.. பாலுமகேந்திரா சார் இங்கே இருக்கிறார் என்பதற்காக நான் சொல்லவில்லை.  மூடுபனி படத்தின் ‘என் இனிய பொன் நிலாவே’ பாடல் எனக்கு ஒரு பெரிய Inspiration…

         ”மூடுபனி படத்திற்கென பாலுமகேந்திரா சார் ஊட்டியில் ஷூட் பண்ணிக்கொண்டிருந்தார்.  அவர் சொன்ன Situation’க்கு நான் முதலில் போட்ட Tune ‘இளைய நிலா பொழிகிறதே’ tune’தான். அதை அவர் Select செய்யவில்லை.  ‘ராஜா.. இன்னொண்ணு பார்த்துடலாமே?’ என்றார்.  அதன்பின்னர்தான் ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலின் tune உருப்பெற்றது.  இந்தப் பாடலில் முக்கியமான விஷயம்.. பாடலின் தாளம் ‘என் இனிய பொன் நிலாவே’.. 1..2..3.. 1.2..3.. என்று மூன்று மூன்றாகப் போகும்.  சரணத்திலும் ‘பன்னீரைத் தூவும் மழை..’ என்று தாலாட்டுப் போல Waltz’ல் மூன்று மூன்றாகப் போய்க்கொண்டிருக்கும்.  ஆனால் உள்ளே சந்தங்கள் ‘இரண்டு இரண்டாக’ பின்னப்பட்டிருக்கும்.  அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன இந்தப் பாடலில்.

பாஸ்கி: ‘அம்மா என்றழைக்காத’ பாடல் உருவானது… …?

         பி.வாசு. என்னிடம், அம்மாவுக்கு ரஜினி சேவை செய்கிறார். அதற்கு ‘ஜனனி ஜனனி’ போல ஒரு பாடல் வேண்டும் என்று கேட்டார்.  ஒரு பாட்டு மாதிரி இன்னொன்று வேண்டும் என்று கேட்டாலே எனக்குப் பிடிக்காது.  ஆனால் கேட்கும்போது கொடுக்காமல் போனால் அது சரியில்லை என்பதால் ’ஜனனி ஜனனி’ சாயலிலேயே ‘அம்மா என்றழைக்காத’ பாடலை உருவாக்கிக்கொடுத்தேன்.

மேடையேறினார் நடிகர் விவேக்.

விவேக்: நான் இளையராஜாவின் ரசிகன் அல்லன்..! இளையராஜாவின் வெறியன்.  இசையைப் பற்றி எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  எனக்கு இசையாய்த் தெரிந்தது ராஜா சார் மட்டும்தான்.  என் குழந்தைக்குப் பெயர் வைத்ததே அண்ணன் அவர்கள்தான்.  அவரின் இசை தமிழர்களின் ரத்த ஓட்டத்தில் கலந்திருக்கிறது.  அண்ணனிடம் நான் ஒன்றே ஒன்றுதான் கேட்கவேண்டும்.  850 படங்களுக்கு மேல்… 4000 – 5000 பாடல்களுக்கு மேல்… இதற்குப் பின்னர் ‘திருவாசகம்’ செய்தீர்கள்.  பத்து படங்களுக்குப் பின்னரே Repetition வந்துகொண்டிருக்கும் இக்காலத்தில், இத்தனை பாடல்களை புனைந்தபின்னரும், அவை எதிலும் உபயோகிக்காத விஷயங்களை திருவாசகத்தின் ஆறு பாடல்களிலும் எப்படி செய்தீர்கள்?  எப்படிச் சாத்தியம் ஆயிற்று?’

(Audience பக்கம் திரும்பி…) அது வந்து.. அண்ணனுக்கு Marketing technology தெரியல.  அது தெரிந்திருந்தால் அவர் என்றைக்கோ எங்கோ போயிருப்பார்.  அவர் ஒரு சித்தர் போல வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.  இசை அவருக்குள் ஒரு Natural’ஆன விஷயமாக இருக்கிறது.  அதை ஒரு Business’ஆக செய்ய அவருக்குத் தெரியவில்லை”.

         நீ என்னிடம் கேள்விகேட்க வேண்டும் என்று சொல்லிவிட்டு வேறு என்னென்னவோ பேசிக்கொண்டிருக்கிறாய்..! (சிரிப்பு..)

விவேக்: ”இல்லண்ணே.. இத்தனை பாடல்களிலும் சில பாடல்கள் என்னை என்னவோ செய்கின்றன.  எனக்கு சில பாடல்கள் எந்த நேரம் கேட்டாலும் அப்படியே உயிரை எடுக்கின்றன.  அதில், ‘சிறுபொன்மணி அசையும்’, ‘ஏதோ மோகம்’.. போன்ற பாடல்கள்….”

         ”அதற்குக் காரணம்.. மறைபொருள் அது. இந்த ‘ஏதோ மோகம்’ பாடல் உனக்கு எதனால் பிடித்ததென்றால், அதில் ஸட்ஜமமே காட்டியிருக்கமாட்டேன்.

(ஆர்மோனியத்தில் சுருதி பிடித்து தாரா.. தாரா.. துவக்குகிறார் இசைஞானி)

”ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேற்று வரை நெனக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன.. வனக்கிளியே”.. அங்கேதான் ஸட்ஜமமே வருகிறது.  இது யாருக்கும் தெரியாது.

’லதாங்கி’ என்னும் ராகத்தில் லதாங்கியே தெரியாமல் ‘யார் தூரிகை தந்த ஓவியம்?’ (பாடுகிறார்) பாடல் போட்டிருக்கிறேன்.

விவேக்: அண்ணே.. அதே போல ‘சங்கத்தில் பாடாத கவிதை’ பாடலும்…. ..

         அந்தப் பாடலும் அப்படியே நடந்ததுதான்…! ஆர்மோனியத்தில் கை வைத்ததில் இருந்து நிற்கவே இல்லை. At a stretch’ல் அப்படியே பாடிவிட்டேன்.  அதேபோல திருவாசகத்திலும், ”பூவார் சென்னிமன்னன்” பாடலை முதல்முறையாக வாசித்தேன்.  வாசிக்கும்போதே அதை உரைநடை போலல்லாமல் ‘tune’ஆகத்தான் வாசித்தேன்.

நன்றி சொல்லி விவேக் கீழிறங்க.. அடுத்ததாய் இயக்குனர் திரு. பார்த்திபனை மேடைக்கு அழைத்தார் பாஸ்கி.  கீழே நின்றபடியே மைக்கை வாங்கினார் பார்த்திபன். 

மேடையின் கீழே நின்றபடியே, “என்றுமே மேடையாக, இசைமேடையாக மட்டுமல்லாமல், எங்கள் இதயமேடையாக என்றென்றும் வீற்றிருக்கும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு, ஒரு தரைடிக்கெட்டின் வணக்கம்’ என்று துவங்கினார். தொடர்ந்து, ‘சார்.. நான் ஒரு சிச்சுவேஷன் சொல்றேன். அதாவது, இந்த Show பண்ணுவதற்காக நீங்கள் நேராக உள்ளே வந்து உங்கள் ஆர்மோனியப் பெட்டியுடன் அமர்ந்துவிட்டீர்கள்.  நீங்கள் வெகு நாட்களாக வாசித்துக்கொண்டிருந்த பழைய Guitar உங்கள் பின்னால் இருக்கிறது.  அந்த guitar’க்கு, நீங்கள் அதை வாசிக்கவேண்டும் என்று நிறைய ஆசை.  நீங்களோ ஆர்மோனியப் பெட்டியில் அமர்ந்துவிட்டீர்கள்.  Guitar’ன் நரம்புகள் ஒவ்வொன்றும் உங்கள் விரல்களின் தீண்டல்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன.  Guitar’ல் இருந்து ஒரு சோககீதம் வருகிறது.  இந்த Show முடிந்து நீங்கள் போகும்போது அந்த Guitar’ஐத் திரும்பிப் பார்க்கிறீர்கள்.  அதன் ஆர்வத்தைத் தீர்ப்பதுபோல நேரே சென்று அதை எடுத்து வாசிக்க ஆரம்பிக்கிறீர்கள். அப்போ அந்த Tune’ என்னவாக வரும்? முதலில் அதன் சோகம் எப்படி வரும்?  உங்கள் விரல் பட்ட சந்தோஷம் எப்படி வரும்?  இதை Guitar வைத்து நீங்களே Play பண்ணிக் காண்பித்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

    “ஒரு நாளைக்கு மணிக்கணக்கில் ப்ராக்டிஸ் பண்ணிக்கொண்டிருந்த நாட்கள் எல்லாம் போய்விட்டது. இசையமைக்கத் துவங்கியபின்னரும் திரு. டி.வி.ஜி. அவர்களிடம் இசை கற்றுக்கொண்டேன். அதிகாலை நான்கு மணிக்கு எனக்காகத் தயாராய் இருப்பார். அதன்பின்னர் ஸ்டுடியோ வந்து ரெக்கார்டிங் முடித்து மறுபடியும் இரவு பத்து மணிக்குச் செல்வேன். எனக்காகக் காத்திருப்பார். இரவு 12 மணி வரை சொல்லித் தருவார். இது ‘இளையராஜா’ என்ற ஒரு இசையமைப்பாளர் உலகத்திற்கு தெரியவந்ததற்குப் பின் நடந்த விஷயங்கள். இந்தப் பயிற்சி பல வருடங்கள் தொடர்ந்தது. அப்போதும் என்னுடைய Guitar Practice நிற்கவே இல்லை.

இங்கே இருக்கும் கிட்டாரிஸ்ட் சதா’வும் நானும் தன்ராஜ் மாஸ்டரிடம் ஒன்றாக கிட்டார் கற்றுக்கொண்டோம். அந்த சமயத்தில் கிட்டார் பாடல்களை கிட்டாரிலேயே நான் கம்போஸ் செய்வது வழக்கம். இப்போது கிட்டார் வாசித்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன.

கவுதம் மேனன் என்னிடம் வந்து ‘சார்.. ‘சாய்ந்து சாய்ந்து’ பாடலுக்கு நீங்கள் கிட்டார் வாசித்து அதை நான் ரெக்கார்ட் பண்ணப் போகிறேன்” என்றார். ‘ஐயோ.. கிட்டார் டச்’சிலேயே இல்லையே..? நான் எப்படி வாசிப்பேன்?’ என்று சொல்லி, எடுத்து வாசித்துப் பார்க்கிறேன். வரவில்லை..!”

இசைப்பிதா தயங்குவதைக்கண்ட.. பார்த்திபன் தொடர்ந்து அவரை அன்புடன் வற்புறுத்த, சதா மாஸ்டரின் கையில் இருந்த கிட்டார், பலத்த கரவொலிக்கிடையே இசைஞானியின் கரங்களில் வந்தமர்ந்தது. (தலைவருக்கு பயங்கர வெட்கம்..!! வீட்டுக்கு வந்த விருந்தினர் முன் ‘ரைம்ஸ்’ சொல்லச்சொன்னதும் வெட்கப்பட்டுத் தாயின் தோள்களில் முகம் புதைத்து நாணும் குழந்தையைப் போல கண்களை மூடி, வெட்கத்துடன் தலைகுனிந்து கிட்டாரில் முகம் புதைத்து, சிரித்தது கண்கொள்ளாக்காட்சி). பின்னர், Hum பண்ணிக்கொண்டே சட்டென்று ஒரு ட்யூனை கிட்டாரின் ஒரு சில நரம்புகளை Chords arpeggio’வாக மீட்டிக்கொண்டே இசைஞானி கம்போஸ் செய்யத் துவங்க, மெதுவாய் பக்கவாத்தியங்கள் சேர்ந்துகொள்ள, அழகியதொரு tune உருப்பெற்றது. தலைவர் guitar வாசிப்பதை நேரில் பார்க்கும் பாக்கியம் பெற்ற வெகுசில மானிடருள் அடியேனும் ஒருவனான பெருமை இனி என்றும் எனக்கிருக்கும்.

இதனைத் தொடர்ந்து ரசிகர்களின் கேள்விகளைக் கேட்க பார்த்திபன் மேடையேறினார்.

பார்த்திபன்: இணையதளத்தின் மூலமாக ரசிகர்கள் கேட்ட சில கேள்விகள் இருக்கின்றன. அவற்றுக்குப் போகுமுன்னர் என் இன்னொரு கேள்வி. நீங்கள் இப்போது இளையராஜா இல்லை. இளையராஜாவின் ரசிகர். நீங்கள் இளையராஜாவிடம் கேட்பதென்றால் என்ன கேள்வி கேட்பீர்கள்?

இசைஞானிக்கு மறுபடியும் வெட்கம்..:

    (சிரித்துக்கொண்டே).. வந்தக் கேள்வியைக் கேளுய்யா..

(சபையில் பலத்த சிரிப்பு)

பார்த்திபன்: இசையமைப்பாளர் சலீல் சௌத்ரியிடம் நீங்கள் கிட்டார் வாசித்திருக்கிறீர்கள். அவர் ஒருமுறை, ‘இளையராஜா பிற்காலத்தில் மிகப்பெரிய இசையமைப்பாளர் ஆவார்’ என்று அப்போதே கணித்துக் கூறினாராம். அவருடன் நீங்கள் இணைந்து பணியாற்றிய அந்த அனுபவத்தைப் பற்றி ராஜுமோகன் என்பவர் கேட்டிருக்கிறார்.

    சலீல்சௌத்ரி எனக்கு மிகவும் பிடித்த இசைமைப்பாளர்களுள் ஒருவர். அவர் ‘ஆனந்த்’ என்ற இந்திப் படத்தில் ஒரு பாடல் போட்டிருந்தார். அது எனக்கு மிகவும் பிடித்த பாடல். பாலுமகேந்திரா சாரின் படத்திற்கென ஒருமுறை பாம்க்ரோவ் ஹோட்டலில் கம்போஸிங்கில் இருந்தோம். நான் தினமும் கிட்டார் எடுத்துக்கொண்டு கம்போஸிங்கிற்குச் செல்வேன். ‘NaaJeeyaa..” என்ற அந்தப் பாடலின் Tuneஐ “அழியாத கோலங்கள்” என்ற படத்திற்கென பாலுமகேந்திரா ஓ.கே. செய்துவிட்டிருந்தார் (‘நான்என்னும் பொழுது’). அப்போது நாங்கள் Musicians எல்லோரும் அமர்ந்து “பிரமாதமாக ட்யூன் போட்டிருக்கிறார்’ என்று பேசிக்கொண்டிருந்தபோது, எங்களுடன் இருந்த ஒரு இசைக்கலைஞர், ‘இந்தப் பாடலை போடுவதற்கு மூன்று மாதங்கள் ஆயினவா?’ என்று விளையாட்டாகக் கேட்டார். அதற்கு நான் அவர் போட்டுக்கொடுத்த எத்தனையோ பாடல்களுள், இந்தப் பாடல்தான் வேண்டும் என்று தேர்ந்தெடுக்கத்தான் மூன்று மாதங்கள் ஆயின’ என்று கூறினேன். அது இச்சமயத்தில் என் நினைவுக்கு வருகிறது.

அவர் எப்போது சென்னை வந்தாலும் என்னுடைய ரெக்கார்டிங்கைப் பார்க்க வருவார். ப்ரியா படத்தின் ரெக்கார்டிங்கின்போதும் வந்தார். அவர் வந்து என்னிடம் கற்றுக்கொள்வதற்கு எதுவும் இல்லை. அவர் வந்ததே அவர் எனக்கு செய்த ஆசீர்வாதமாகத்தான் நான் பார்க்கிறேன். அவர் என் மேல் வைத்திருந்த அன்பிற்காகவும், சக Composer என்றவகையில் அவர் என்மீது காட்டிய மரியாதைக்காகவும், அவருக்கு என்றும் நன்றியுடையவனாக இருக்கிறேன்.

பார்த்திபன்: உங்கள் முந்தைய படங்களின் பின்னணி இசையை (background score) மட்டுமே வைத்து ஒரு Concert’ஐ நீங்கள் செய்யமுடியுமா?

    “கண்டிப்பாகக் கொடுக்கலாம்.”

இதன்பின்னர் ஒரு சிறிய இடைவேளை அறிவிக்கப்பட்டு, பதினைந்து நிமிடங்கள் கழித்து, ‘ஏதோ மோகம்’ பாடலை, பாப் ஷாலினியும், ஹரிசரணும் இணைந்து பாடிமுடிக்க, இசைஞானி மிண்டும் தனது ஆசனத்தில் வந்தமர்ந்தார்.

    இளையதளம்” என்ற Websiteன் துவக்கவிழாதான் இது. இதை ஆரம்பிப்பதற்குக் காரணம், உலகம் முழுவதும் பல ரசிகர்கள் என் பெயரில் இணையதளங்களைத் துவக்கி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதில் நல்ல விஷயங்கள் இருக்கின்றன. எனக்கு Uncomfortable ஆக இருக்கும் சில விஷயங்களும் இருக்கின்றன. என் ரசிகர்களுக்கு என்னைப் பற்றிய, நான் என்ன நினைக்கிறேன் என்பதைப் பற்றிய தகவல்கள் போய்ச் சேரவேண்டும் என்ற காரணத்தினால்தான் இந்தத் தளம் துவக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் திறமைமிக்கவர்களை இந்த இணையதளம் அறிமுகப்படுத்தும்”.

இதன்பின்னர் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்திற்கென லண்டனில் இசைஞானி இசைகோர்க்கும் காணொளி ஒன்று திரையிடப்பட்டது.

    “நீங்கள் இப்போது பார்த்த வீடியோவில் இசைத்த இசைக்கலைஞர் ஹங்கேரியைச் சேர்ந்தவர். இந்த உலகில் நல்ல Guitar Players என்று இருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். Attila அவர்களுள் ஒருவர். தமிழ்நாட்டில் நான் பிறந்ததுபோல அவர் ஹங்கேரியில் பிறந்ததினால், உலக அளவில் பெயரெடுக்கமுடியாமல் இருப்பவர்”.

பார்த்திபன்: எம்.எஸ்.வி. அவர்களின் பாடலில் உங்களுக்குப் பிடித்த பாடலாக ‘மலரேகுறிஞ்சி மலரே’ பாடலை ஒருமுறைக் குறிப்பிட்டிருந்தீர்கள். அதே போல எம்.எஸ்.வி. அவர்களும் உங்களின் பாடல்களில் அவருக்கு மிகவும் பிடித்த பாடலாக ‘இவன்’ படத்தில் வரும் ‘அப்படிப் பாக்கிறதென்ன என் மாமா?’ என்ற பாடலைக் குறிப்பிட்டிருந்தார். இதைக்குறித்து எனக்கு மிகவும் பெருமை. இப்படி ஒரு பாடல் நமக்குப் பிடிப்பதற்குக் காரணம் அந்த இசையா? அல்லது அந்தப் பாடலின் வரிகளா?

    “இது ரொம்ப பிரச்சினையான கேள்வி. எம்.எஸ்.வி. அண்ணாவின் காலத்தில் நல்ல கவிஞர் அவருக்குக் கிடைத்தார். அவர் பாடல்களில் வாழ்வின் உயர்ந்த கருத்துகளை, கவிஞர் மிக எளிய வார்த்தைகளில் சாதாரணமாகச் சொல்லியிருப்பார். அதனால் பாடலின் அழுத்தம் சிறப்பாக இருந்தது. ஆனால் ஒரு பாடல் ஹிட் ஆவதற்கு இதுதான் காரணம் என்று உறுதியாகச் சொல்லமுடியாது. ஒரு நல்ல ட்யூன் என்பது வார்த்தையே இல்லாவிட்டாலும் உங்களுக்குப் பிடிக்கவேண்டும்.

இரண்டு பாடல்களை நான் உதாரணமாகச் சொல்லுகிறேன்.

“தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன்; ஒரு தூதுமில்லை; ஒரு தோற்றம் இல்லை; கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை” என்ற வரிகளை நீங்கள் எப்படி உணர்ச்சிமயத்துடன் கூறினாலும் அதின் உண்மையான உணர்வு புரியாது. ஆனால் அண்ணா போட்ட ட்யூனில், (‘நெஞ்சம் மறப்பதில்லை’ பாடலை பாடிக்காட்டுகிறார்) அது வெளிப்பட்டது. நல்ல ட்யூன் இல்லையென்றால் அந்த உணர்வு சரியாக வந்திருக்காது.

“அ.ஆ.. இ.ஈ.. உ.ஊ..எ.ஏ...” (ஏதோ மோகம்; ஏதோ தாகம்” பாடலை ‘அ..ஆ..’ போட்டுப் பாடிக்காண்பிக்கிறார்). இது நன்றாக இருக்கிறதா இல்லையா? இப்படி ‘அ.ஆ... என்று போட்டு பாடினாலும் ஒரு ட்யூன் நன்றாக இருக்கவேண்டும். எதைப் போட்டுப் பாடினாலும் நன்றாக இருக்கவேண்டும். யார் பாடினாலும் நன்றாக இருக்கவேண்டும்”.

தொடர்ந்து யுவன்ஷங்கர்ராஜா மேடையேறினார்.

யுவன்: இந்த தலைமுறைக்குப் பின்னர் நல்ல இசைக்கலைஞர்கள் இல்லை. இன்னும் பத்து வருடங்கள் கழித்து Strings Section என்ற ஒன்றே இல்லாமல் போய்விடுமோ என்பதுபோல இப்போது வருபவர்கள் எல்லோரும் கீபோர்டு வைத்துத்தான் பாடல்கள் போடுகிறார்கள். வரும்காலத்தில் Live Instruments வேண்டுமென்றால் நாம் abroad போய்தான் record செய்யவேண்டும் என்கிற ஒரு சூழல் வரும். இதை எப்படி சரிசெய்வது?

    “இது சிந்திக்கவேண்டிய விஷயம். இதில் நான் Personalஆக ஏதேனும் செய்யவேண்டுமென்றால், நான் ஒரு இசைக்கல்லூரியோ, பல்கலைக்கழகமோ துவக்கலாம். அப்படி ஒரு எண்ணமும் எனக்கு இருக்கிறது. நாம் அங்கே போய் ரெக்கார்ட் செய்வதுபோல அவர்கள் இங்கே வந்து ரெக்கார்ட் செய்துவிட்டுப் போகும் காலம் வரவேண்டும். உலகத்திலேயே மிகவும் அதிகம் திறமை கொண்ட, Energy, Purity, Focus கொண்ட நாடு இந்த நாடு. ஆனால் பெரும்பாலான நேரங்களில் இந்த Focus தவறிவிடுகிறது. எனவேதான் என்னிடமிருக்கும் இசைக்கலைஞர்களை, ‘சிறப்பாக இசைப்பதில் இவர்கள்தான் கடைசித் தலைமுறை’ என்ற எண்ணத்துடன் நான் கடுமையாக வேலைவாங்குகிறேன். இங்கே வயலின் வாசிக்கும் பிரபாகர், என்னுடைய நாடகங்களுக்கு ஐம்பது பைசாவுக்கு வயலின் வாசித்திருக்கிறார். பிரபாகர்...! இங்கே வா.. ! இன்று இருக்கும் இசைக்கலைஞர்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியாத விஷயங்களை நீ சொல்லு..!

சிரித்துக்கொண்டே.. வயலினிஸ்ட் திரு. பிரபாகர் எழுந்து வந்து மைக் பிடித்தார். இசைஞானிக்கும் அவருக்கும் இடையே உரையாடல் தொடர்கிறது.

    ‘பிரபாகர்.. நீ சொல்லு.. இந்தியாவில் மிகச் சிறந்த வயலின் இசைக்கலைஞர்கள் என்று எத்தனை பேர் இருப்பார்கள்’?

‘நல்ல கலைஞர்கள் ஒரு 600 பேர் இருப்பார்கள் என்று சொல்லலாம்’

    “சரி.. இந்த 600 பேரில் மிகச்சிறப்பாய் வாசிப்பவர்கள் என்று எத்தனைபேரைச் சொல்லலாம்”?

‘ஒரு 20 முதல் 25 வரை இருப்பார்கள்”

    ‘இந்த 25 பேரில் நான் கொடுக்கும் Notations’ஐ வாசிக்கக் கூடிய கலைஞர்கள் எத்தனைபேர் இருப்பார்கள்?”

‘வெளியிடங்களில் வாசிப்பது என்பது வேறு. ஆனால் சார்’கிட்ட வாசிப்பது என்பது முற்றிலும் வேறு விஷயம். ஒரு சின்னத் தவறு இருந்தாலும் கண்டுபிடித்துவிடுவார்.” (சிரிக்கிறார்).

    “இந்த ஒரு சில இசைக்கலைஞர்களைத் தவிர மிகச் சிறப்பாய் வாசிப்பதற்கு அடுத்த தலைமுறையில் ஆளில்லை. இதை எப்படி சரி செய்வது? இசை என்பது ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயப் பாடமாக்கப்படவேண்டும். அப்போதுதான், ‘இசை படித்தால் வேலைகிடைக்கும்’ என்ற நம்பிக்கையிலாவது ஒருவன் Instrumentஐக் கையில் எடுப்பான். இசையில் மட்டும்தான் பாலிடிக்ஸ் கிடையாது. இசையில் மட்டும்தான் ஜாதி மதம் கிடையாது.”

பிரபாகர்: நான் யாரையும் குறைசொல்லவில்லை. ஆனால் இப்போது இருப்பவர்களில், இசைக்கலைஞர்களை வேலைவாங்குவதற்கு இவரை விட்டால் வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இந்த Generationல் எல்லோரும் Keyboard, Guitar, Drums என்றுதான் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். வயலின் கற்க விரும்புபவர்கள் மிகவும் குறைவு.

    “ஆர்மோனியம் என்று ஒரு கருவி இருக்கிறது. இதில் யார் கைவைத்தாலும் சப்தம் வரும்..! இதேபோலத்தான் Keyboard’லும் கைவைத்து ஏதோ செய்துவிட்டுப் போய்விடலாம். ஆனால் வயலின் என்ற ஒரு கருவியை சரியாகப் பிடிப்பதற்கே, அந்த Bow movement சரியாய் வருவதற்கே ஆறு மாதங்கள் ஆகும். நான் வயலின் teach பண்ணியிருக்கிறேன். விரலின் Position கொஞ்சம் தவறினாலும் அபஸ்வரம் வந்துவிடும். அவ்வளவு கஷ்டமான வாத்தியம். இப்படி ஒரு வாத்தியத்தை யார் கையில் எடுப்பார்கள்? இதை எடுத்தால் உடனே பணம் வருமா? இசை படிப்பவர்களுக்கு உடனே பணம் வேண்டும் என்கிற ஆசை இருக்கக்கூடாது.”

யுவன்: இசையில் நீங்கள் நிறைய சாதித்துவிட்டீர்கள். இன்னும் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று உங்களுக்கு ஆசை இருக்கிறது?

    “இந்தப் பிறவியே தேவையில்லாதது என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். கவுதம்மேனன் என்னிடம் வந்து, “சார்.. இது ஒரு teenage love story. இதை நீங்கள்தான் செய்யவேண்டும்” என்று சொன்னார். நான் ஒரு படத்தை ஒப்புக்கொள்வதற்கும், ஒப்புக்கொள்ளாததற்கும் காரணமே இருக்காது. அந்த நொடியில் எனக்கு என்ன தோன்றுகிறதோ அதுதான். கவுதம் மேனன் என்னிடம் கேட்டபோதும் யோசித்தேன்.. “teenage love story என்று சொல்கிறாரே? ஏன் நம்மிடம் வந்தார்?” என்று நினைத்தேன். பிறகு, நாம் பண்ணினால் என்ன என்று தோன்றியது. ’OK கவுதம்’ என்றேன். Composing’ன்போதும், அவரிடம் இது பாட்டு.. இது இப்படித்தான் வரப்போகிறது என்று எதுவுமே சொல்லவில்லை. Composing முடிந்தபின்னர் அவர் என்னிடம் ‘சார்.. இதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் ரெக்கார்ட் செய்யலாம்’ என்றார். ‘அவ்வளவு பட்ஜெட் இருக்கிறதா?’ என்று கேட்டேன். ‘பரவாயில்ல சார்.. எங்கு செய்யவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுகிறதோ அங்கு செய்யலாம்’ என்றார். எட்டு பாடல்களையும் ரெக்கார்ட் செய்தபிறகுதான், என்னால் அந்தமாதிரி செய்யவரும் என்பது எனக்கே தெரியவந்தது. அதுபோல .. நிறைய செய்யவேண்டும் என்று எனக்கு ஆசை இருக்கிறது. எதுவும் நம் கையில் இல்லை. திருவாசகம் செய்யவேண்டும் என்று நினைத்தது ஒரு நிமிட Thought தான். ஆனால் அதை முழுவடிவமாக்க மொத்தம் நான்கு வருடங்கள் பிடித்தது. திருவள்ளுவர் தெரிந்த குறட்பாக்களையா எழுதினார்? இப்படி எழுத வரும் என்பது எழுதும்போதுதானே அவருக்குத் தெரிந்திருக்கும்? எழுதும்போது அவருக்கே தெரியாததுதானே அது. எனவே.. செய்யவேண்டும் என்றால் எவ்வளவோ செய்யலாம். ஆனால் அதற்குரிய சூழல் அமையவேண்டும். கவுதம்மேனன் போல யாராவது அந்த தாகத்துடன் வந்தால் கண்டிப்பாய் புதிதாக நிறைய செய்யலாம்.

யுவன்: என்னுடைய ஆசை, கனவு என்று சொல்லவேண்டுமென்றால், உங்களை வைத்து ஒரு ஆல்பம் செய்யவேண்டும். அதில் நீங்கள் என்னவெல்லாம் புதிதாக செய்யவேண்டுமென்று நினைத்திருக்கிறீர்களோ அதை செய்யலாம்.

    “(யுவனைப் பார்த்து சிரிக்கிறார்)... எனக்கு என்ன ஆசையென்றால், நீ வீட்டில் Pianoவில் F Sharp Majorல் ஒரு Piece வாசித்தாய் அல்லவா? அதற்கு ஒரு Symphony எழுதவேண்டும்.

யுவன்: நீங்கள் கடவுளைப் பார்த்தால் என்ன கேள்வி கேட்பீர்கள்?

    “கடவுளை நான் எப்போது பார்க்கவில்லை? அவரிடம் எனக்குக் கேட்பதற்கு ஒன்றுமில்லை. அவர் எனக்கு கஷ்டத்தைக் கொடுத்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான். நமக்குள் இல்லாத கடவுள் வெளியே எங்கே இருக்கிறான்? நம் மனதுதான் கடவுள். அது காணக்கூடிய பொருளா? நமக்கு அறிவு இருக்கிறது என்று நமக்குத் தெரியும். அந்த அறிவைக் கண்ணால் காண இயலுமா? அப்படிப்பட்ட அறிவையே காண முடியாதபோது, கடவுளைக் காணவேண்டுமென்பது கமல்ஹாசன் கேட்டதுபோல இருக்கிறது (சபையில் பலத்த கரவொலி.. சிரிப்பு). ‘இவர்தான் கடவுள் என்று சொல்லுங்கள். நான் ஒப்புக்கொள்கிறேன் .. Worship செய்கிறேன்’ அப்டின்னு கமல் கூறினார். அப்படி கண்ணால் பார்த்து நம்பும் விஷயமா கடவுள்? எனக்கு என்னென்ன தேவையோ அவை அனைத்தையும் கடவுள் கொடுத்திருக்கிறார். உன்னைக் கொடுத்திருக்கிறார், கார்த்திக், பவதா, ஜெயேஷ்வர், யதீஷ்வர்... இத்தனை அன்புள்ளம் கொண்ட ரசிகர்கள்.. இவ்வளவையும் கொடுத்திருக்கிறார். இதற்கு மேல் அவரிடம் என்ன கேட்பது?

யுவன்: சரி.. இது ஒரு Game. 1970கள் என்றதும் உங்கள் மனதில் தோன்றும் முதல் விஷயம் என்ன?

    “... ... .. (யோசிக்கிறார்).. 1968ல் நான் இங்கே வந்தேன். ஜி.கே.வெங்கடேஷிடம் அஸிஸ்டென்டாக வேலை செய்ததுதான் ஞாபகத்துக்கு வருகிறது.

யுவன்: சரி... கார்த்திக்ராஜா?

    “... ... .. கார்த்திக்ராஜா, என் அண்ணன் பாவலர் என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்றால், ஜெயகாந்தனும் அண்ணனும் மிகவும் நெருக்கமானவர்கள். ஒருமுறை அண்ணனுடைய நினைவு நாளை ஏ.வி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடத்திக்கொண்டிருந்தோம். அங்கே ஜெயகாந்தன் பேசுவதற்கு வருகிறார். அதற்குமுன் கார்த்திக் ஜெயகாந்தனைப் பார்த்ததே கிடையாது. ஆனால் அங்கே அவருடன் மிகவும் நெருக்கமாக இருந்தான். அதேபோல அண்ணனுடன் பழகியவர்கள் அனைவருடனும் கார்த்திக் உடனே நெருக்கமாகிவிடுவான். அதனால் அண்ணன்தான் எனக்கு மகனாகப் பிறந்திருக்கிறார் என்று எனக்கு எப்போதும் தோன்றுவதுண்டு. அவனுடைய எண்ணங்களும் எப்போதும் அண்ணனைப் போலவே இருக்கும்.

தொடர்ந்து பார்வையாளர்களிடமிருந்து வந்த கேள்விகளை பார்த்திபன் இசைஞானியிடம் கேட்கத் துவங்கினார்.

“உங்களை அதிகமாக inspire செய்த இசையமைப்பாளர் யார்?”

    “ஒருவரா.. இரண்டுபேரா? எம்.எஸ்.வி. அண்ணா, மதன்மோகன், ரோஷன்.. என்று நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். எம்.எஸ்.வி. அண்ணாவின் இசைதான் நான் கேட்டு வளர்ந்தது. ஏனென்றால் அந்த சமயம் Ceylon ரேடியோவில் அவரது பாடல்கள்தான் வரும்.

“உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது பாடல் கம்போஸ் செய்திருக்கிறீர்கள். அதைப் பற்றிக்கூற முடியுமா?”

    “அது பாடல் அல்ல... background score. ஒரு மலையாளப் படத்திற்கென 25 நாட்கள் தொடர்ந்து அப்படி வேலை செய்திருக்கிறேன்.”

“How to name it? Nothing but wind..! அடுத்து என்ன..?”

    “நிறைய இருக்கிறது. சந்தர்ப்பம் அமையும்போது பார்க்கலாம்..! (புன்னகை)”

“நீங்கள் உங்கள் சிறுவயதில் முதல்முதலில் ட்யூன் போட்டது எந்தப் பாடலுக்கு? அதை எங்காவது பயன்படுத்தியிருக்கிறீர்களா?”

    “முதன்முதலில் போட்ட ட்யூனை எங்கும் பயன்படுத்தியதில்லை. தம்பி பாட்டெழுதுவான். அதற்கு நான் ட்யூன் போட்டுப் பழகுவதுண்டு. சிறுவயதில் பாரதியார் பாடல்களுக்கு ட்யூன் போட முயற்சித்தேன். வரவில்லை. பின்னர் அதை விட்டுவிட்டேன். பாரதிராஜா நாடகங்களுக்கு நிறைய ட்யூன்கள் போட்டிருந்தேன். பின்னர் அவற்றைப் பெரும்பாலும் திரைப்பாடல்களில் உபயோகப்படுத்திவிட்டேன்.

‘நீங்கள் பயன்படுத்தாத இசைக்கருவிகள், இசைவடிவம் ஏதேனும் உள்ளனவா?”

    “நான் பயன்படுத்தி உங்களுக்குத் தெரியாத இசைக்கருவி ஒன்று இருக்கிறது. அதை உபயோகிக்காமல் இசையமைக்கவே முடியாது. அந்த உண்மையான, அற்புதமான இசைக்கருவி உங்கள் எல்லோரிடத்திலும் இருக்கிறது. அதுதான் உங்கள் மனம்”

பாஸ்கி: ரீரெக்கார்டிங் என்ற விஷயத்தைப் பற்றி யாருமே கேட்கவில்லை.  ‘பா’ படத்தின் ரீரெக்கார்டிங் மிகச் சிறப்பாய் இருக்கும்.  அதைப் பற்றிச் சொல்லுங்கள்.

    ’பா’ படத்தில் பின்னணி இசை மிகச்சிறப்பாக வந்தது.  பால்கியும் கவுதம்மேனன் மாதிரிதான்.  இருவருமே இசையில் நல்ல taste உடையவர்கள்.  பால்கி என்னிடம் வந்து படத்தைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.  எப்படி ம்யூஸிக் வேண்டும் பால்கி? என்று கேட்டதற்கு, நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். என் மேல் எவ்வளவு நம்பிக்கை இருந்திருந்தால் 20 நிமிடத்துக்கு வசனமே இல்லாமல் Climax Scene அமைத்திருப்பார்..?  வெகு சில வசனங்களே அந்த Climaxல் வரும். பின்னணி இசை கோர்த்து முடித்ததும் வந்தார். அவருடன் சேர்ந்து அவர் மனைவியும் வந்திருந்தார்.  காட்சியை இசையுடன் பார்த்தவுடன் அவர் மனைவியின் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.  ‘பா’ என்றவுடன் அந்த Reaction’தான் எனக்கு ஞாபகத்தில் வரும்.

பாஸ்கி: Rerecording’ன் போது எந்த இடத்தில் இசை தேவையில்லை என்பதை எப்படி முடிவு செய்கிறீர்கள்?

    அதுவும் அந்த நேரத்தில் தோன்றுவதுதான்.  இந்த இடத்தில் அவன் பேசிக்கொண்டிருக்கிறானே.. நாம் வேறு எதற்கு இசையை நிரப்பவேண்டும் என்று விட்டுவிடுகிறேன் (சிரிப்பு..).  உண்மையைச் சொன்னால், Silenceதான் Music. 

பாஸ்கி: அதேபோல Instruments எப்படி தேர்வு செய்கிறீர்கள்? உதாரணத்திற்கு ‘நித்தம் நித்தம் நெல்லுச் சோறு’ பாடலுக்கு மிகக் குறைந்த Instruments மட்டுமே உபயோகித்திருப்பீர்கள்..??

    அந்தப் பாடலுக்கு அதற்கு மேல் தேவையில்லை.  அவ்வளவுதான்.  ஒரு பாடலில் வாத்தியத்தின் தேவை இருக்கவேண்டும் இல்லையா? ‘காட்டுவழி போற பொண்ணே’ பாடலுக்குக் கூட மிகக் குறைவான Instruments’ஐயே பயன்படுத்தியிருந்தேன்.

பாஸ்கி: உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது ‘காதலின் தீபம் ஒன்று’ பாடலை எஸ்.பி.பி. அவர்களுக்கு விசிலடித்து காண்பித்துப் பாடவைத்தீர்கள் என்று ஒரு செய்தியைப் படித்தோம்.  அது ..??

    அந்த சமயம் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.  பஞ்சு அண்ணன் வீட்டிற்கு வந்தார்.  ’இந்த நிலைமையில் உன்னிடம் கேட்பதற்கே கஷ்டமாக இருக்கிறது.  ஒரு Love Song வேண்டும்.. என்ன செய்வது?’ என்றார்.  அந்த சமயத்தில் என்னைப் பாடக்கூடாது என்று Doctor சொல்லியிருந்தார்.  “சரிண்ணே .. இந்த Tune’க்கு பாடல் எழுதிவிடுங்கள்’ என்று சொல்லி விசிலடித்து அதை record செய்து எஸ்.பி.பி.க்கு அனுப்பிவைத்தேன்.  (முழுப் பல்லவியையும் விசிலடித்துக் காண்பித்து இசைவேந்தன் பிரமிப்பூட்டி முடிக்க ஏகப்பட்ட ‘Once more..’ குரல்கள்).  காலையில் சுந்தரராஜனை வீட்டுக்கு வரச்சொல்லி அங்கேயே Notes எழுதிக்கொடுத்து அனுப்பினேன்.  அப்படி Record செய்ததுதான் ‘காதலின் தீபம் ஒன்று’ பாடல்.

இதன்பின்னர் ’பா’ படத்தில் இருந்து ஒரு காட்சி பின்னணி இசை இல்லாமலும் அதன்பின்னர் அதே காட்சி பின்னணி இசையுடனும் திரையில் காண்பிக்கப்பட்டது.  பின்னர், பார்த்திபன் முதலில் கேட்ட Situation’க்கு இடையில் கிடைத்த Break’ல் இசைஞானி தான் Guitar’ல் வாசித்த Tune’க்கு மெலிதாய் Orchestration செய்து முடித்திருக்க, ‘ராஜா.. ராஜா.. இசையின் ராஜா’ பாடல் அரங்கேறியது.  அதே Tune’ன் மேலாக இன்னொரு Tune’ஐ அமர்த்த முடியுமா என்று பார்த்திபன் மறுபடியும் கேட்க, On the spot’ல் சதா மாஸ்டருக்கு Guitar’ல் Arpeggio Bit ஒன்றை Instruct செய்து, அதனுடன் இசைஞானி தன் குரலிலேயே ஒரு Counterpoint melody ஒன்றைப் பாடிக் காண்பித்தார்.  கேட்டவர்களுக்கு உண்மையில் அது ஒரு ‘ராஜவிருந்து’.  தொடர்ந்து விவேக், ‘நான் தேடும் செவ்வந்திப்பூவிது’ Opening humming’ஐ பாடச்சொல்லிக் கேட்க, விருந்து தொடர்ந்தது. சிறந்த கேள்விகளைக் கேட்டவர்களுக்கு இசைஞானி கையினால் பரிசு வழங்கும் வைபவத்துடன் நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது.

நிறைவாய்ப் பேசிய இசைஞானி, “உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று நினைத்து வந்த நிறைய விஷயங்களை நேரமின்மை காரணமாக பகிர்ந்துகொள்ள முடியவில்லை.  உங்களை சந்திக்கும் வாய்ப்பை எனக்குக் கொடுத்த இறைவனுக்கு நன்றி.  நீங்கள் என் மேல் வைத்திருக்கும் பாசத்துக்கும் அன்பிற்கும் நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.  என்னுடைய கடமை இசையாக உங்களுக்காய் என்றும் வெளிவரும்’ என்று கூறி முடித்ததும்தான் நான்கு மணி நேரங்கள் கடந்துபோய் விட்டிருந்தது தெரிந்தது.

பொதுவாக நிகழ்ச்சி முடிந்தவுடன் கிளம்பிவிடும் இசைஞானி, ரசிகர் கூட்டத்துடன் கை குலுக்கி, சூழ்ந்து நின்ற நூற்றுக்கணக்கான அலைபேசி கேமிராக்களுக்குப் புன்னகைத்து, பாதம் தொட்டவர்களை ஆசீர்வதித்துக் கிளம்பினார்.

நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கையேட்டின் ஒரு பக்கத்தில் “No book can ever bring alive the experience of listening to music” என்று ஒரு வாசகம் இருந்தது.  இத்தனை தட்டச்சு செய்து முடித்தும் எனக்குத் திருப்தியில்லை.. காரணம் மேற்கூறிய அதே வாக்கியம்தான்.

“No Write-up can ever bring alive the Joy of being with the Maestro”

 புகைப்படங்கள் நன்றி: திரு. வேலவன் கிருஷ்ணன்.

77 comments:

  1. Thanks a Lot for the complete Coverage, Ungal Karangalukkum ungal anbirukum thalai vanangugiren.

    ReplyDelete
  2. நேரில் பார்த்தது போல் ஒரு நிறைவு... உங்கள் எழுத்து மிகவும் அருமை...மிக்க நன்றி...

    ReplyDelete
  3. நன்றி. ஜனனி பாடல். கண்கள் பனிக்கின்றன.

    ReplyDelete
  4. ஒரே நாளின் 4 மணி நேரத்தில் இவ்வளவு விடயங்களா. கண்களை அங்கே இங்கே அசைய விடாமால் ஒரே மூச்சில் படிக்கும் போது நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது கொஞ்சம் இல்லை நிறைய பொறாமையாக இருந்தது. நல்ல இசை கேட்ட திருப்தி!

    ReplyDelete
    Replies
    1. இசைஞானி அடித்த ஜோக்குகளை வைத்தே ஒரு தனிப்பதிவிடலாம். பதிவின் நீளம் கருதி நிறைய எழுதவில்லை. வருகைக்கு நன்றி. :-)

      Delete
  5. உன்னில் என்னை காண்கிறேன் என்பது போல் நண்பனே உன் எழுத்தில் நாங்கள் இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்தது போல் எழுதி விட்டாய். இசைஞானியின் பக்தர்களுக்கு நீ செய்த இந்த இசை சேவை என்றும் தொடரும் என்று பெருமை அடைகிறேன். இது காசு கொடுத்து சேர்த்த கூட்டம் அல்ல தானாக சேர்ந்த கூட்டம், அதுவும் பார்வையாளன் காசு கொடுத்து கூட்டம் என்பதை திரையில் பேசுபவர்களுக்கு ஒரு உண்மையான எடுத்துகாட்டு. நேரில் பார்த்ததை காட்டிலும் பாடித்ததில் தான் மிகவும் சந்தோசம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா ..! இசைஞானிக்கே எல்லாப்புகழும்..! :-)

      Delete
  6. இளையராஜாவின் ரசிகன் என்பதால் இதை சொல்லவில்லை. ஒரு நிகழ்ச்சியை அதன் ரசம் குறையாமல் தொடர் ஓட்டத்துடன் எழுதுவது ஒரு மலை தாண்டுவது போல்.ரொம்ப அழகாக தாண்டி இருக்கீங்க நண்பரே , இந்த நிகழ்வை படித்தவர்கள் தனியார்/இணையத்தில் நேரடியாக காணும் போது சரியாக உங்களின் எழுத்து நினைவிற்கு வந்தால் அதுவே பெரும் வெற்றி தான். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் தங்கள் கனிவான வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி சகோதரர். இசைஞானிக்கே எல்லாப்புகழும். :-)

      Delete
  7. சிப்பிக்குள் முத்து (ச்வாதிமுத்யம்)பின்னணி இசை நடைபெற்ற வேளையில் கே.விஸ்வநாத் அவர்களை ராகதேவன் கலாய்த்து விட்டதை எழுத உட்டீங்களே ஜி :)

    ReplyDelete
    Replies
    1. ரவிஜி.. தலைவர் அந்தக் கதையை தெலுகில் செப்பிஸ்தாரு..! நாக்கு தெலுகு தெரியலேது... !! தட் இஸ் ஒய்.. .. ஹி.. ஹி..!! :-)

      Delete
  8. இவ்வளவு விசயங்களை நினைவில் வைத்து எழுதுவது மிகவும் கடினம்.நன்றி நண்பர் andrew
    நீங்கள் எவ்வளவு பரவசமாக நிகழ்ச்சியை பார்திருப்பீர்கள் என்பது தெளிவாகிறது.
    தியாகராஜன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி தியாகராஜன்'ஜி..! உண்மையில் நான்கு மணி நேரங்கள் கடந்து போனதே தெரியவில்லை. நீங்கள் சொன்னது போல பரவச நிலையிலேயேதான் இருந்தோம். :-)

      Delete
  9. என்னை போல் கடல் கடந்து கிடந்து , இம்முறை தலைவரை நேரில் தரிசிக்கும் கொடுப்பினை அற்ற நெஞ்சங்களுக்கு உங்களின் பதிவு.. பரவசத்தையும் ஆறுதலையும் நெகிழ்சியையும் ஒருசேர அள்ளி தருகிறது ! வாழ்க நீவீர் ! வாழ்க நமது இசைத்தேவன் !!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரர்..!! இசைஞானிக்கே எல்லாப்புகழும். வாழ்க நம் ராகதேவன். :-)

      Delete
  10. நிகழ்ச்சியை நேரில் பார்த்த மாதிரி இருந்தது இந்த எழுத்துகள்.

    மகிழ்ச்சி :)

    ReplyDelete
  11. வாய்ப்புக் கிட்ட வேண்டும். கிட்டினாலும் வாய்பாடு தெளிய வேண்டும். தெளிவுள்ள உங்களுக்குக் கிட்டி இருக்கிறது. இது கொடுப்பினை!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி..! நன்றிகள் பல! :-)

      Delete
  12. நன்றி. பெங்களூர் அரங்கேற்றத்திற்காக வெய்டிங் :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி! பெங்களூர் அரங்கேற்றத்தில் பங்கேற்க இயலாத நிலைமையில் இருக்கின்றேன்..! சென்று .. கண்டு.. கண்டிப்பாய்ப் பதிவிடுங்கள். :-)

      Delete
  13. Program nearil paartha thirupthi............
    Welldone Brother.....
    no words to express ..........
    'coz i'm in Africa, but
    Isai Gnani yai nearil paarkatha kurai 1 mattume....
    full programme yum Live ah koduthatharku Nanrihal pala.......
    thodarattum ungal Isai pani.........

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி..! இசைஞானிக்கே எல்லாப்புகழும்! :-)

      Delete
  14. அருமையான பதிவு தோழா,முதல் வார்த்தையிலிருந்து கடைசிவரை பரவசத்தோடே படித்தேன். உங்களை நேரில் சந்திக்கவேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாய் சந்திப்போம் அண்ணே..!

      # அமெரிக்கன் கல்லூரியில் உங்களுக்கு நான் மிக மிக மிக மிக ஜூனியர்..! பிடிச்சு வச்சு Ragging எதுவும் பண்ணிட மாட்டீங்களே?? :-))

      'ராஜபைத்தியம்’ பதிவிற்குப் பின் தலைவரைப் பற்றி நீங்கள் அதிகம் எழுதாததற்காக, நேரில் காண நேர்ந்தால் கண்டிப்பாய் உங்களிடம் கோபிப்பேன்..! வருகைக்கு நன்றி அண்ணே! :-)

      Delete
  15. நிகழ்ச்சிக்கு வர இயலவில்லை, பணத்தட்டுப்பாடு காரணமாக. இருப்பினும் அந்தக் குறையை உங்களின் பதிவு போக்கிவிட்டது. கோடானுக்கோடி நன்றிகள்!! மிக மிக அருமையான பதிவு தோழரே!!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி! :-)

      Delete
  16. Thanks for such a detailed account... for unfortunate ppl like me, this post really helped us go through the feeling of being there on the show... hats off to your patient writing !!

    ReplyDelete
  17. ஆஹா...நிகழ்வை நேரில் பார்த்தது போன்ற ஒரு உணர்வு. அருமையான எழுத்து நடை. "காதலின் தீபம்" பற்றியது என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது (முழுப் பாடலையும் விசிலில் முயற்சித்தேன்..முடியவில்லை.) கடல் கடந்து வாழும் எங்களின் ஏக்கம் நவம்பர் 3,2012ல் தீர்ந்துவிடும். ராகதேவன் கான்செர்ட் இங்கு இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி..! வருகைக்கு நன்றி சகோ..! நவம்பர் 3ம் தேதி Canada Concert'க்கு வரமுடியாத என் போன்ற அபாக்யர்களுக்காக கண்டிப்பாய் சென்று, கண்டு, களித்து, பதிவிடுங்கள். உங்கள் பதிவினை நிச்சயம் எதிர்நோக்குகின்றோம்.

      Delete
  18. நாங்க எல்லாம் போலைன்னா என்ன அதான் நீங்க இருக்கீங்களே...போக முடியாத எல்லா பக்தர்களுக்கும் இந்த பதிவு தான் தெய்வத்தோட முழு இசை தொகுப்பு ;))

    ReplyDelete
  19. தல தயவு செய்து word versification எடுத்துடுங்களே...ரொம்ப படுத்துது ;-(

    ReplyDelete
    Replies
    1. ஹி.. ஹி... கோபி.. உங்க ஃபேஸ்புக் உள்டப்பிக்கு ஒரு ஓலை அனுப்பியிருக்கிறேன்..! படிங்க..! :-)

      Delete
  20. அய்யா நான் Face book உங்களின் பக்கத்தில் இருந்தும் உங்களின் Bloggil இருந்தும் சில Articles எடுத்து என்னுடைய http://www.facebook.com/MaestroIlaiyaraja facebook பக்கத்தில் பதிவு செய்துள்ளேன் மன்னிக்கவும்
    இளையராஜாவின் பக்தர்களில் நாம் ஒருவன் தவறை மன்னிக்கவும்..,

    ReplyDelete
    Replies
    1. இசைஞானிக்கே எல்லாபுகழும்..! வருகைக்கு நன்றி..! :-)

      Delete
  21. நன்றி.நிகழ்ச்சிக்குப் போன திருப்தியைக் கொடுத்தது!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி சகோ ..! வருகைக்கு நன்றி..! :-)

      Delete
  22. "ABSOLUTELY UNEXPECTED AND UNFORGETTABLE EXPERIENCE", i got and feel from here as a beautiful live show!!!!


    With your persmission... i want to say something to all of you.

    We should have to teach all kinds of music instruments, most importantly "VIALINE" to our children to protect our earlier "GOLDEN MUSIC CULTURE" in future, by remembering our Maestro's words.


    Thanks to Mr. IshaiGnani Bakthan.

    PRIYAMUDAN,
    S R MADHAVAN.

    ReplyDelete
  23. raajaa irukum varaithan indha ulagil isai endra ondru irukum.

    ReplyDelete
  24. raajaavin isai kete rn idhayam thodikkum.

    ReplyDelete
  25. Raaghadevan rules the Music world. It's really very
    interesting and touching to read the entire programme.
    Raja kaiya vachaa adhu wronga poonathille.
    Thank you for posting the entire programme
    on the net.

    Ravinarayanan
    Chennai

    ReplyDelete
  26. Great blog..... could imagine how much you would have enjoyed being there for 4 hours.... Thanks for taking all efforts in making us feel as if we were there...

    ReplyDelete
    Replies
    1. Yes JV..! Those 4+ hours were really heavenly and we were seated just near to God watching him do the creation. :-)

      Delete
  27. Wonderful IB. Always very thankful for your write ups. For those who haven't attended the fucntions, your write ups give a feeling of attending the function itself.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சிவா..! இசைஞானிக்கே எல்லாப்புகழும்! :-)

      Delete
  28. அருமையான நிகழ்ச்சியை அழகாக பகிர்ந்ததற்கு நன்றி!
    நிகழ்ச்சியை நேரில் பார்த்த சந்தோஷத்தை தந்தது உங்கள் பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பதிவினைத் தங்கள் பக்கத்தில் பகிர்ந்தமைக்கும் நன்றி மின்மலர்! :-)

      Delete
  29. ராஜாவின் இசைப்பிரவாகத்தை உங்கள் பதிவு ஆட்கொண்ட உணர்வை கான்கின்றேன் ! பகிர்வுக்கு நன்றி இசையின் மொழி ராஜா!

    ReplyDelete

  30. நல்ல பதிவு...

    ரசனை என்பதினை, பக்தி கடவுள் என முன்னிறுத்தப்படுவதை ஏற்க மறுக்கிறேன்

    கைம்பொண்ணுக்கு கண்ணாடி எதற்கு...

    ReplyDelete
    Replies
    1. //கைம்பொண்ணுக்கா? // அல்லது கை புண்ணுக்கா?

      Delete
    2. ஹா ஹா..! இது பூஜை செய்யும் பக்தி அல்ல. அன்பு/மரியாதை என்பதன் மிகுதி எனக்கொள்ளவும். வருகைக்கு நன்றி இல்யாஸ் சகோதரர்.! :-)

      Delete
  31. //No Write-up can ever bring alive the Joy of being with the Maestro//
    கரும்பு இல்லாத ஊருக்கு இலுப்பை பூவையாவது தந்தீர்களே என்று சந்தோசப் படுகிறேன்.ஆக-22ல் வந்த பதிவை செப்-01 தேதி படிக்க நேர்ந்தது நிகழ்ச்சியை காண முடியாத வருத்தத்தை விட அதிகம் வருத்தம் தருகிறது.காரணம் நிகழ்ச்சியை பற்றி அறிந்திருந்தால் கூட காண முடியாத நிலை.ஆனால் தினமும் குறைந்தது மூன்று மணி நேரமாவது இணையத்தில் மேயும் எனக்கு தங்கள் பதிவு கண்ணில் சிக்கியிருக்கவில்லை என்றால் வருத்தமாக தானே இருக்கும்.எப்படியோ தங்கள் பதிவை பற்றி குறிப்பிட்டிருந்த http://minmalar.blogspot.com/2012/09/blog-post.html வலைபதிவிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி! :-)

      Delete
  32. Even though we are thousands of miles away from chennai,Still we listen and cherish with RAJA's music.Thankyou for giving us such a wonderful write up.
    Raj
    Sydney

    ReplyDelete
  33. நல்லா எழுதி இருக்கீங்க ..
    நன்றிகள் பல.
    அப்புறம் ஒரு வேண்டுகோள் ., ராஜாவோட பாடல்கள பத்தி நீங்க இன்னும் எழுதணும்.
    கடைசியா என்ன சத்தம் இந்த நேரம் எழுதுனீங்க ... அதுக்கு அப்புறம் பெரிய கேப்.
    தயவு செய்து தொடருங்கள் ..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ! அது, தமிழ்நாட்டை விட்டு ஒரு பத்துவருடகாலம் தள்ளியிருந்தேன். அதினால் இசைஞானியைப் பற்றிப் பேசக்கூட ஆளில்லாமல், அவர் பாடல்களைப் பற்றி என் மனதில் தோன்றியதை எழுதி ஆறுதலடைந்துகொண்டிருந்தேன். இப்போதும் வேலைப்பளு காரணமாக எழுத முயற்சி செய்யவில்லை. சமயம் வாய்க்கும்போது கண்டிப்பாய் எழுதுகிறேன். :-)

      Delete
  34. idhai ippadiye english translation thandal innum isaiyulagathukku paynagum.......rajavin isai ulagalavil kondu serpatharkku pathaiyaga maara vendum......

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி! வருகைக்கு நன்றி! :-)

      Delete
  35. உண்மையில் இதை படிக்கும்பொழுது என் கண்கள் ஈரமாகின்றன. மகிழ்ச்சி

    ReplyDelete
  36. இந்த அவதார புருஷரின் அனுபவங்களை எவ்வளவு கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க எவ்வளவு ஆவலாக இருக்கிறது.
    எல்லாம் அவரின் ஆத்மார்த்தமான உழைப்பின் கிடைத்த வெற்றியை பகிர்வதென்றால் எவ்வளவு ஆனந்தம்.

    ReplyDelete
  37. இந்த அவதார புருஷரின் அனுபவங்களை எவ்வளவு கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க எவ்வளவு ஆவலாக இருக்கிறது.
    எல்லாம் அவரின் ஆத்மார்த்தமான உழைப்பின் கிடைத்த வெற்றியை பகிர்வதென்றால் எவ்வளவு ஆனந்தம்.

    ReplyDelete