Tuesday, June 3, 2014

பாடும் நிலா - இசைஞானி நேர்க்காணல்



சில மாதங்களுக்கு முன்னர் நண்பர் திரு. சிவகுமார் அனுப்பி வைத்திருந்த ஒருசில பழைய Magazines Scan’களில் இருந்து சிக்கியது இந்தப் பொக்கிஷம்.  விகடன் என்று அந்த கோப்பிற்குப் பெயரிட்டிருந்தார்.  எந்த ஆண்டு வெளிவந்தது என்று தெரியவில்லை.  இன்று (04 ஜூன்) பாடும்நிலாவின் பிறந்தநாள் சிறப்புப்பதிவாய் …! வாசித்து மகிழுங்கள். :)

***************************************************************************************

புதுசாக ஒரு பூ மலர்ந்தது மாதிரி புன்னகைக்கிறார். நெகிழ்ந்து நிற்கிறபோது விழியோரங்களில் நீர் எட்டிப்பார்க்கிறது.  ஒரு குழந்தையைக் கொஞ்சுகிற மாதிரி ஆர்மோனியத்தோடு பேசுகிறார்.  சில கேள்விகளுக்கு அப்படியே மனசுவிட்டுச் சிரிக்கிறார்.  இப்போது நினைத்தாலும் வியப்பாகவே இருக்கிறது.  இளையராஜா இதுவரைக்கும் ஒரு பேட்டியில் இந்த அளவுக்கு மனம்விட்டுப் பேசியிருப்பாரா என்பது சந்தேகமே!

சப்த ஸ்வரங்கள்என்ற தொடர் சென்னைத் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிறன்றும் ஒளிபரப்பாகிறது.  எஸ்.பி.பி. – டைரக்டர் வஸந்த் இருவரும் இணைந்து தயாரிக்கும் இந்தத் தொடரை இயக்குவது வைஷ்ணவி எண்டர்பிரைசஸ் நிறுவனம்.

தொடரில் தமிழக இசையமைப்பாளர்களைத் தனித்தனியே சந்தித்து அவர்களது அனுபவங்களைப் பதிவு செய்கிறார்கள்.  விஸ்வநாதன்ராமமூர்த்தி முதல் சிற்பி வரைக்கும் அத்தனை பேரும் பங்குபெறுகிற தொடர் இது.

இப்போது .ஆர்.ரஹ்மான் பேட்டி ஒளிபரப்பாகிறது.  விரைவில் வரவிருப்பது இளையராஜாவின் பேட்டி.  அவரைப் பேட்டி கண்டிருப்பது எஸ்.பி.பி.!

ராஜாவின் மடைதிறந்த பேட்டியிலிருந்து முன்கூட்டி ருசிக்க இங்கே கொஞ்சம்..

எஸ்.பி.பி. கேட்கிறார்

ராஜா.. ஒவ்வொரு நாளும் என்ன கலர்ல டிரஸ் போடணும்கிறது வரைக்கும் கவனமா இருப்பே.  ஸ்டைலா கிராப் வெச்சுட்டுமடைதிறந்து லாலல்லால…’ன்னு பெல்பாட்டம் போட்டுப் பாடிட்டிருந்த நீ எப்படிடா ஆன்மீகத்துக்குள்ள மாறிப்போனே.. ரொம்பப் பர்ஸனல்னா சொல்ல வேணாம்…”

ராஜா சொல்கிறார்

உனக்குத் தெரிஞ்ச இளையராஜாதான் உலகத்துக்குத் தெரியிற இளையராஜா.  எனக்குச் சின்ன வயசுல கடவுள் நம்பிக்கை கிடையாது. காரணம் எங்க அண்ணன்!  மனிதர்கள்தான் இந்த உலகத்தை ஆட்டிப் படைக்கிறாங்க.  முதலாளிவர்க்கம்தொழிலாளி வர்க்கம்னு சொல்லுவோம்.  ஆனா சாமி கும்பிடலேன்னாலும் கோயில்களுக்குப் போறப் பழக்கம் இருந்தது.  மைசூருக்கு ஒரு லைட் மியூஸிக் புரோகிராம் போயிருந்தோம்.  நல்லபடியா முடிஞ்சது.  எல்லோரும் பிருந்தாவன் சுத்திப்பார்க்கக் கிளம்பினாங்க.  எனக்குத் திடீர்னு காய்ச்சல்.  என்னை ரூம்ல வெச்சுப் பூட்டிட்டுப் போய்ட்டாங்க.  ஒரு மணி நேரத்துல உடம்பே கொதிக்குது.  எழுந்திருக்க முடியலை.  உதவிக்கு யாருமில்லை.  சரி.. அவ்வளவுதான்.. இன்னிக்கி நம்ம வாழ்க்கை முடியப்போகுதுன்னு நெனைச்சுட்டேன்.  அம்மா.. என் மனைவி, கார்த்திக் எல்லோரையும் நெனைச்சுட்டேன்.  அப்போ மனசுக்குல்ல யோசனை.  மூகாம்பிகை கோயிலுக்குப் போகணும்னு இருந்துட்டுப் போகவே இல்லையே.. அதான் சோதிக்குதோ..”ன்னு நெனைச்சா அடுத்த அஞ்சாவது நிமிஷம்குற்றாலத்துல குளிச்சு வந்து நின்ன மாதிரி ஃப்ரெஷ்ஷாயிருச்சு.  காய்ச்சல் போயிருச்சு.  அப்புறம் மூகாம்பிகை கோயிலுக்கு எல்லோரும் போனோம்.  கோயில் பிரகாரத்துல நான் காலெடுத்து வைக்கிறேன்.  சட்டுன்னு ஏதோ மனசுக்குள்ளே தாக்குது.  என்ன இது.. ஏதோ ஒண்ணு உள்ளே தைக்குதேன்னு திகைப்பா இருந்தது.  அதுதான் என்னை மாத்துனது.  ஆன்மீகத்தில் நம்பிக்கை வந்தது.  நான் மூகாம்பிகைகிட்ட என்ன கேள்வி கேட்டாலும் எனக்குப் பதில் வரும்.  என் டிரஸ் மாறுச்சு.  வெஜிடேரியனானேன்.  நான் ரொம்ப மாறினேன்”.

அன்னக்கிளிக்காக .வி.எம். நுழைஞ்ச இளையராஜா.. சிம்பொனி பண்ண இளையராஜா.. ரெண்டு பேரைப் பற்றியும் சொல்லேன்..”

ஒரு குழந்தை பிறக்கிறப்போ அது தவழ்றது.. தடுமாறி நடக்கிறது எல்லாமே பெற்றோரை உற்சாகப்படுத்து.  அந்தக் குழந்தையைக் கைதட்டி உற்சாகப்படுத்துவாங்க.  அதே குழந்தை வளர்ந்து ஆளாகி நாற்பது வயசுல நடந்து வந்தா யாரும் கைதட்டறதில்லையே.  அன்னக்கிளி வர்றப்போ நான் குழந்தையாயிருந்தேன்.  இப்போ இது ஒரு வளர்ச்சி.  சிம்பொனிக்காக ஒரு மாசம் அந்த ஸ்கோர் தயார் பண்ணினேன்.  Mind’ உருவாகிற Sounds’ அப்படியே mental’ கேட்டு பேப்பரில் பண்ணனும்.  அது ஒரு மாதிரி அவஸ்தை.  நினைச்சதையெல்லாம் பேப்பர்ல கொண்டுவரமுடியாது.  ஒரு வழியாப் பண்ணிட்டுக் கிளம்பியாச்சு.  லண்டன்ல ராயல் ஃபில்ஹார்மோனிக் சொஸைட்டியில ரிக்கார்டிங்.  அவ்வளவு பேரும் தயாரா இருக்க.. அந்த மியூஸிக் கண்டக்டர் சைலன்ஸ்னு ஒரு குரல் கொடுத்ததும் அப்படியே அடிவயிறு கலங்கிடுச்சு.  கருவே கலைஞ்ச மாதிரி.. அப்புறம் ஃபுல் மியூசிக் வாசிக்கிறாங்க.  இது என் ஒலி.. இதுதானே நான் செய்தது.  நான் நினைத்த ஒலியெல்லாம் நெஞ்சை நிறைக்கிறதேன்னு பதறுது.  கையில வெச்சிருக்கிற நோட்ஸைப் படிக்க முடியலை.  நான் அழறேன்.  கார்த்திக் அழறான்.  கூட வந்திருக்கிற நரசிம்மன் அழறாரு.  அது அழுகை இல்லே.  அந்த உணர்வைச் சொல்ல முடியலே”.

எனக்குத் தெரியும் ராஜா.. நீ ஒரு சிச்சுவேஷனுக்கு நூறு டியூன்கூட ரெடி பண்ணுவே.  ஆனா, ‘நான் போடறதுதான் டியூன்ன்னு நீ கொஞ்சம் பிடிவாதமா சொல்றதாப் பேசறாங்களே..?”

நான் சொல்லியிருப்பேன்.  சில இடத்துல நான் அதைச் சொல்ல வேண்டியிருந்திருக்கும்.  அதைப் பெரிதுபடுத்தக்கூடாது.  உனக்குச் சொன்னது உனக்கு.  என் Sonக்குச் சொல்றது அவனுக்குத்த்தான்.  இந்த wavelength புரியாதங்கதான் அப்படிச் சொல்றாங்க.  அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லே..”

ராஜா.. உன்னோட டியூன்களை நிறைய காப்பியடிக்கிறாங்க.  டேய்.. உன் பாட்டைத்தான் பாம்பே போய் பாடிட்டு வர்றேன்னு அடிக்கடி சொல்வேன் தெரியுமா? அதைப் பற்றியெல்லாம் நீ என்னடா நினைக்கிறே?”

பெனாட்ஷாவோட தத்துவத்தை வேறு யாராவது Quote பண்ணினா பெர்னாட்ஷா வருத்தப்படுவாரா? இல்லே திருக்குறளை எடுத்து யாராவது பயன்படுத்தினா அது குறளுக்குக் கஷ்டமா?   அவங்க எனக்குக் குடுக்கிற மரியாதைன்னு எடுத்துக்க வேண்டியதுதான்.  ஒரு கிரியேஷன்.. மோனலிசா பெயிண்டிங்னா அதை வரைவது கஷ்டம்.  இன்னொரு பெயிண்டருக்குத்தான் தெரியும்.  ஃபோட்டோகாப்பி எடுத்து விக்கிறவனுக்கு அது புரியாது.  ஒரு கிளாஸிக்கை உண்மையா மதிக்கிறவன் அதைத் தொடக்கூடாது.  தொடமாட்டான்.  அதை மதிக்கக் கத்துக்கணும்”.

அப்புறம் ராஜா.. காலாபானி பார்த்தேன்.. பெருமையா இருந்தது.  அதுக்காக இருபது நாள் ரீ ரிக்கார்டிங் பண்ணியாமே?”

ஆமா.  படம் பார்த்தேன்.  எனக்குப் பிடிச்சது.  அந்த ஃபீலிங்க்ஸ்தானே நம்ம மியூஸிக்ல வரும்.  பொதுவா மூணு நாள்ல ஒரு படம் முடிச்சுடுவேன் நான்.  ஆனால் காலாபானிக்கு நான் இருபது நாள் எடுத்தேன்.  எழுநூறு படங்கள் பண்ணதுக்கப்புறம் இப்படி ஏதாவது ஒரு படம் நான் வேலை செஞ்சேன்னு எனக்குச் சொல்லிக்க நான் செஞ்சது அது.

கார்த்திக்ராஜா,  யுவன்சங்கர், பவதாரிணி.. மூணு பேருமே ஃப்லிம் மியூஸிக் வந்துட்டாங்க.. பிரில்லியண்ட்டாப் பண்றாங்க.  இது எப்படி? உன்னோட இன்ஃப்ளுயன்ஸா? இல்லே ரத்தத்துல வந்த விஷயமா?

ரெண்டாவதுதான்.  இறைவன் நமக்கான சூழ்நிலையையும் சந்தர்ப்பங்களையும் அமைச்சுத் தர்றான்னு எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு.  என்னோட அம்மாவோட ஆசைப்படி நான் வளரலை.  என் விருப்பப்படிதான் என்னை வளர்த்தாங்க.  என் பிள்ளைகளையும் நான் அப்படி வளர்க்கணும்னு ஆசைப்படறேன்.  என் பாதை அவர்களை நேர்வழிப்படுத்தியது.  அவர்கள் என்மேல் வைத்திருக்கிற மதிப்பும் மரியாதையும் அவர்களிடம் என்னை அன்பு செலுத்த வைத்தது.  விரும்பியபடி தங்கள் பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிற சுதந்திரம் அவர்களுக்கு உண்டு.  கார்த்திக் மாதிரி ஒரு பிள்ளை பொறக்கறது பெரிய விஷயம்.  அவ்வளவு நல்ல பையன்.  கார்த்திக் எல்லாத்தையும் விவரமா தெரிஞ்சுகிட்டு ஒரு விஷயத்தைத் தொடுவான்.  யுவன் அப்படியில்லேஎனக்குத் தெரியாதுன்னு சொல்லிகிட்டே கையை வைப்பான்.  ஆனா அது சரியா வரும்.  பவதாரிணி நிறையக் கத்துக்கவேண்டியிருக்கு.  கத்துக்கணும்னு சொல்லிட்டிருக்கேன்!”


 - ரா. கண்ணன்.

நன்றி : விகடன்

பகிர்வு நன்றி: திரு. சிவகுமார்.

3 comments:

  1. follow by email என்கிற விட்ஜெட் வலைப்பதிவில் இருந்தால் எல்லா பதிவுகளையும் தவறவிடாமல் படிக்க முடியும்..நன்றி

    ReplyDelete
  2. follow by email என்கிற விட்ஜெட் வலைப்பதிவில் இருந்தால் எல்லா பதிவுகளையும் தவறவிடாமல் படிக்க முடியும்..நன்றி

    ReplyDelete