Monday, August 2, 2010

சின்னக் கண்ணன் அழைக்கிறான்

பாடல் : சின்னக் கண்ணன் அழைக்கிறான்

படம் : கவிக்குயில்
பாடியவர்கள் : பால முரளி கிருஷ்ணா
எழுதியவர் :
இசை : இசைஞானி

சின்னக் கண்ணன் அழைக்கிறான் (2)
ராதையை பூங்கோதையை,
அவள் மனங்கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி,
சின்னக் கண்ணன் அழைக்கிறான் (2)
ராதையை பூங்கோதையை,
அவள் மனங்கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி,
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!

1. கண்கள் சொல்கின்ற கவிதை,
இளம் வயதில் எத்தனை கோடி? (2)
என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே!
புதுமை மலரும் இனிமை,
அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை! – சின்ன

2. நெஞ்சில் உள்ளாடும் ராகம்,
இதுதானா கண்மணி ராதா? (2)
உன் புன்னகை சொல்லாத அதிசயமா?
அழகில் இளமை ரதமே,
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்! - சின்ன

‘கண்ணன்-ராதை’ பாடல் என்பதால் பாடல் முழுவதும் புல்லாங்குழலின் மயக்கும் பிரவாகம்!! இசை மேதைகள், அறிஞர்கள், கர்னாடக இசை ஜாம்பவான்கள், விமர்சகர்கள் அனைவரும் வியந்து கொண்டாடும் பாடல் இது என்பதாலும், இந்தப் பாடலில் உள்ள நுணுக்கங்களை அலசுவது ஒரு பக்கம் இருக்கட்டும், விளங்கிக் கொள்வது என்பது கூட என் புத்திக்கு எட்டாத விஷயம் என்பதாலும், ஒரு மேதை Compose செய்த பாடலைப் பாடியிருப்பது இன்னொரு மாமேதை என்பதாலும், பாடலைப் பற்றிய செய்திகளை மட்டும் கீழே காண்க!!

தினத்தந்தியின் ‘வரலாற்றுச் சுவடுகள்’ தொடரில் இந்தப் பாடலைக் குறித்து இசைஞானி இப்படிக் கூறுகிறார்:-

“தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் ‘கவிக்குயில்’ என்று ஒரு படம் எடுத்தார். அதில் கதாநாயகி தன் மனதில் ஒரு ராகம் இருப்பதாகவும், அதைக் கதாநாயகனால் இசைத்துக் காட்ட முடியுமா என்றும் சவால் விடுவார்.

நாயகனோ அந்த இசையைப் புல்லாங்குழலில் வாசித்துப், பிறகு பாட்டாகவும் பாடிக் காட்டி நாயகி மனதில் இடம் பிடிப்பான். இதற்கு ஒரு Tune compose செய்தேன். அதைக் கேட்ட பஞ்சு சார், ‘இதை பாலமுரளி கிருஷ்ணா போன்ற பெரிய பாடகர்கள் பாடினால் நன்றாக இருக்கும்’, என்று சொன்னார். தொடர்ந்து பாலமுரளி கிருஷ்ணாவிடமும் பேசி நிச்சயித்து விட்டார்கள்.

‘பாலமுரளி கிருஷ்ணா பாடப்போகிறார்’ என்று கேட்டது முதலே எனக்கு பயம். காரணம், அவருக்கு தெரிந்த அளவுக்கு இசை எனக்குத் தெரியாது. “இசை மேதையாக ரசிகர்கள் கொண்டாடும் பாலமுரளி கிருஷ்ணா எனது இசையில் பாடப்போகிற விஷயம் தெரிய வந்ததுமே எனக்குக் கொஞ்சம் கவலையாகிவிட்டது. எல்லாம் நல்லபடியாக நடந்து முடிய வேண்டுமே?”

ரிகர்சலுக்கு வந்தார். பயத்தோடு பாடலைச் சொன்னேன். அவர் எழுதிக்கொண்டார்.

‘என்ன டியூன்’? என்றார்.

பாடிக் காட்டினேன்.

ஸ்வரத்தை பாடலின் வரிகளின் மேல் எழுதிப் பாடினார். அதுதான் ‘சின்னக் கண்ணன்’ அழைக்கிறான் பாடல்.

பாடலைப் பாடியவர், ‘இதுதான் புதிது! சரணத்தில் உச்சஸ்தாயியில் இரண்டாவது வரிக்கு அமைத்திருக்கும் இசையில் ‘ஸகரிக மரினி’ என்று ஆரோகணபரமான பிரயோகத்தை, அவரோகணத்தில் அமைத்திருக்கிறீர்களே? அதை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். சாதாரணமாக கர்னாடக இசைக் கச்சேரிகளில் கூட வித்வான்கள் இந்த ராகத்தை நீண்ட நேரம் பாட மாட்டார்கள். அதை இவ்வளவு இனிமையான பாடலாக அமைத்து விட்டீர்களே!’ என்று மனம் விட்டுப் பாராட்டினார். என் இசைப் பயணத்தில் முக்கியமானதொரு ஊக்குவிப்பாக அமைந்து என்னை உற்சாகப் படுத்திய நிகழ்ச்சி இது!’ என்கிறார்.

சமீபத்தில் ஜெயா டி.வியின் ‘ராகமாலிகா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் திரு. ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் இசைஞானியைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, “எந்நூற்று சொச்சம் படங்கள்.. இனி மனித வரலாற்றில் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் யாராலும் முறியடிக்க முடியாத ஒரு சாதனை! என்னுடைய ‘கண்கள் இரண்டால்’ (படம்: சுப்ரமணியபுரம்) வெளியில பிரபலமாக ஆரம்பித்த பொழுது, எந்தப் பத்திரிக்கையை எடுத்தாலும், சங்கீதம் படித்தவர்கள் படிக்காதவர்கள், யாரைக் கேட்டாலும் ‘இது சின்னக் கண்ணன் அழைக்கிறான் தானே?’ என்று கேட்டார்கள். அதை ‘Imitation is the best form of Flattery’ அப்டின்னு கூட எடுத்துக்கலாம். அவர் (இசைஞானி) கொடுத்திருந்த ரீதிகெளளையை நான் இன்னொரு விதமாகக் கொடுத்ததில் எனக்கு சந்தோஷம் தான்! அவர் மூலமாக எனக்குக் கிடைத்த இந்த அங்கீகாரத்தை நான் அவருக்கே சமர்ப்பிக்கிறேன்” என்றார்.

‘Cheeni Kum’ ஹிந்தி திரைப்படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்னர், ‘Headlines Today’ தொலைக்காட்சியில் இசைஞானியைக் குறித்தும், அவர் அந்தப் படத்திற்கு இசையமைத்திருப்பது பற்றியும் ஒரு செய்தித் தொகுப்பு ஒன்றை ஒளிபரப்பினார்கள். அதில் ஒரு இசை விமர்சகர் (பெயர் மறந்து விட்டது) இவ்வாறு கூறியது நினைவில் உள்ளது. “உலகத்தில் எந்த இசையமைப்பாளருக்கும் இல்லாத ஒரு பெருமை இசைஞானி இளையராஜாவுக்கு உண்டு. 1980-களில் இசைஞானி இசையமைத்த படத்தை விளம்பரப்படுத்தும் பொழுது ‘ராகதேவன் இளையராஜா இன்னிசையில் ________ (படத்தின் பெயர்)’ என்று விளம்பரப்படுத்துவார்கள். ஒரு படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்குப் படத்தின் பெயரின் முன்னால், ஒரு இசையமைப்பாளரின் பெயரைப் போட்டு விளம்பரப்படுத்தப்பட்ட பெருமை உலகிலேயே இளையராஜாவுக்கு மட்டுமே உண்டு” என்று கூறினார். மேலும் அவர் கூறும்பொழுது, “Only a Maestro like Ilayaraja can compose a master piece like “சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்றார்.

இசைஞானியின் ‘அன்றும் இன்றும் என்றும்’ Concert-ல் இந்தப் பாடலைப் பாடகர் கார்த்திக்கும், யுவன் ஷங்கர் ராஜாவும் பாடி முடிக்க, இசைஞானி யுவனைப் பார்த்து ‘யுவன் என்ன இந்த மாதிரி பாடிட்ட? உன்னுடைய பாட்டு மாதிரி பாட வேண்டியது தானே?’ என்று சொல்லி மூச்சைப் பிடித்துக் கொண்டு, அடிவயிற்றில் இருந்து, தலையை ஆட்டிக் கொண்டே ‘ச்சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்று பாடிக்காட்டியது, தற்கால இசையைப் பார்த்த அவரின் கேலிப் (?) புன்முறுவல்! இந்தக் காட்சியைப் பார்க்க http://www.youtube.com/watch?v=oQ1hhq4aS18 தளம் சென்று 1:45-ல் கவனிக்க!!

ரீதிகெளளையைத் தேடி வலையுலா வந்தபொழுது \SG2R2G2M1N2D2M1N2N2S
\ SN2D2M1G2M1PM1G2R2S என்று தகவலுடன், “Tough to dilute ராகம்” ரீதிகெளளை, என்ற பொடி சங்கதியும் தெரிந்தது! இதே ராகத்தில் அமைந்த இசைஞானியின் மற்றொரு பாடல் ‘தலையைக் குனியும் தாமரையே’ (படம்: ஒரு ஓடை நதியாகிறது). எவ்வளவு tough ஆன ராகமாக இருந்தாலும், இசைஞானியின் ஆர்மோனியத்தில் நுழைந்து வெளிவந்தால், ‘அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்’ என்ற வரிகளுக்கேற்ப கேட்பவர்களை மயக்கி, புலன்களைப் பரவசப்படுத்தத்தானே செய்யும்?

5 comments:

 1. அடப் பாவமே .. இந்தப் பதிவை அப்படியே காப்பி & பேஸ்ட் அங்கே .. எப்படி மனசு வருது இந்த மாதிரி ஜென்மங்களுக்கு! நீங்கள் போட்டது 2010-ல். பேஸ்ட் 2012-ல். நல்ல ஜென்மங்கள்தான் .. படித்த படிப்பெல்லாம் எதற்கு?

  இந்தப் பின்னூட்டத்தை அப்பதிவிலும் (http://kolipaiyan.blogspot.com/2012/01/blog-post_25.html) போடுகிறேன். அனுமதிக்கின்றாரா என்று பார்க்கவேண்டும்!

  ReplyDelete
 2. அடப் பாவமே .. இந்தப் பதிவை அப்படியே காப்பி & பேஸ்ட் அங்கே .. எப்படி மனசு வருது இந்த மாதிரி ஜென்மங்களுக்கு! நீங்கள் போட்டது 2010-ல். பேஸ்ட் 2012-ல். நல்ல ஜென்மங்கள்தான் .. படித்த படிப்பெல்லாம் எதற்கு?

  இந்தப் பின்னூட்டத்தை அப்பதிவிலும் (http://kolipaiyan.blogspot.com/2012/01/blog-post_25.html) போடுகிறேன். அனுமதிக்கின்றாரா என்று பார்க்கவேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. @தருமி //அடப் பாவமே .. இந்தப் பதிவை அப்படியே காப்பி & பேஸ்ட் அங்கே .. எப்படி மனசு வருது இந்த மாதிரி ஜென்மங்களுக்கு! நீங்கள் போட்டது 2010-ல். பேஸ்ட் 2012-ல். நல்ல ஜென்மங்கள்தான் .. படித்த படிப்பெல்லாம் எதற்கு? இந்தப் பின்னூட்டத்தை அப்பதிவிலும் (http://kolipaiyan.blogspot.com/2012/01/blog-post_25.html) போடுகிறேன். அனுமதிக்கின்றாரா என்று பார்க்கவேண்டும்!//

   உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ஐயா..! :-)

   Delete
 3. sorry i wanna watch that video kindly allow me do it or tell me how to do that

  ReplyDelete
 4. The song was written by Panju Arunachalam, not Kannadasan.

  ReplyDelete