Tuesday, August 17, 2010

இளமை என்னும் பூங்காற்று

பாடல் : இளமை என்னும் பூங்காற்று

படம் : பகலில் ஓர் இரவு
பாடியவர்கள் : எஸ்.பி.பி.
எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன்
இசை : இசைஞானி

இளமை எனும் பூங்காற்று, பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை, சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் (2)
ஒரே வீணை ஒரே ராகம்…

1. தன்னை மறந்து மண்ணில் விழுந்து,
இளமை மலரின் மீது,
கண்ணை இழந்த வண்டு,
தேக சுகத்தில் கவனம்,
காட்டு வழியில் பயணம்,
கங்கை நதிக்கு மண்ணில் அணையா? – இளமை

2. அங்கம் முழுதும் பொங்கும் இளமை,
இதம் பதமாய் தோன்ற,
அள்ளி அணைத்த கைகள்,
கேட்க நினைத்தாள் மறந்தாள்,
கேள்வி எழும் முன் விழுந்தாள்,
எந்த உடலோ எந்த உறவோ? - இளமை

3. மங்கை இனமும் மன்னன் இனமும்,
குலம் குணமும் என்ன?
தேகம் துடித்தால் கண்ணேது?
கூந்தல் கலைந்த கனியே,
கொஞ்சி சுவைத்த கிளியே,
இந்த நிலைதான் என்ன விதியோ? - இளமை

தனிமைச் சூழ்நிலையில், ஒரு இளம்பெண்ணும், வாலிபனும், உணர்ச்சி வசப்பட்டு, உருகும் (?) சூழலில் ஒலிக்கும் பாடல். Guitar, Violin, Flute ஆகியவற்றின் அற்புதக் கலவையில் இசைஞானி உருவாக்கிய அழகு Melody! இந்தப் பாடலின் Orchestration மற்றும் Chorus-க்காகவே, இதை இசைக்காத மெல்லிசைக் குழுக்களே இல்லை என்று சொல்லலாம்.

பல்லவியின் முதல் வரியில் ‘பூங்காற்றில்’ இணையும் Chorus சஞ்சாரம், பல்லவி முடியும் தருவாயில் ‘சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்’ என்று எஸ்.பி.பி. கீழிறங்கி வரும் பகுதியில், ‘ஆ..ஆ…ஆ..’ என்று மேலேறிப் போகும் உழற்சி, செவிகளுக்குப் போதை! முதல் Interlude-ன் பிற்பகுதியில் பாடலுடன் வரும் Drums ஒலி தேய்ந்த பின் உதிக்கும் மெல்லிய Tabla, இசைஞானியின் செப்படிவித்தை! இந்த இடத்தில் புல்லாங்குழலின் வினாக்களுக்கு Chorus குரல்கள் பதில் சொல்கின்றனவா அல்லது Vice-Versa-வா என்று பட்டிமன்றமே நடத்தலாம். இரண்டாவது Interlude-ல் Rhythm Section-க்கு இசைஞானி Short Leave கொடுத்து அனுப்பி வைத்து விட்டு, Guitarist-க்கு Overtime கொடுத்து வேலை வாங்கி இருக்கிறார். மூன்றாவது Interlude-ல் மாறும் Rhythm Pattern… ஒரே பாடலின் இடையிசையில் எவ்வளவு Variation, Variety?? சரணத்தில், ‘தேக சுகத்தில் கவனம்’, ‘காட்டு வழியில் பயணம்’ ஆகிய பதங்களின் பின்னணியில் இசைஞானி வரைந்திருக்கும் கோரஸ் குரலோவியம், கேட்கக் கேட்கத் திகட்டாத் தாலாட்டு! மொத்தத்தில் பாடலின் நளினத்தைக் கெடுக்காமல் Chorus எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இலக்கணம் இந்தப் பாடல்!

“மங்கை இனமும், மன்னன் இனமும், குலம் குணமும் என்ன?, தேகம் துடித்தால் கண்ணேது?” ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் இச்சித்து விட்டால் அவர்களின் மோகத்தை உலகில் எதுவும் தடை செய்து விட முடியாது என்ற செய்தியை கவியரசர் அழகாக வார்த்தைகளில் வடித்திருப்பார். இசைஞானி இந்தப் பாடலைப் போல வெகு அபூர்வமாக பாடல்களில் மூன்று சரணங்கள் அமைத்து அழகு செய்வார். மூன்று சரணங்கள் என்பதால், முதல் இரண்டு சரணங்கள் முடிந்து பல்லவி முழுவதுமாக பாடப்படாமல், ‘இளமை எனும் பூங்காற்று…. என்று முடிந்து விடுகிறது (இதுதான் துண்டு பல்லவி எனப்படுவதோ?). மூன்றாவது சரணம் முடிந்து பல்லவி முழுமையாகப் பாடப்படும்பொழுது மீண்டும் Chorus தேவதைகளின் குளிர்ச்சியான Lullaby-யுடன் பாடலின் நிறைவு, அற்புதம்!

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, கல்லூரி ஆண்டு விழாவிற்கு இசைக்குழுவில் இந்தப் பாடலை இசைத்தோம் (Scale C Sharp Minor). நாங்கள் decipher செய்த அளவிற்குப், பாடலுக்கான Chords Progression-ஐக் கீழ்க்காண்க:-

/இளமை எனும் /C#m பூங்காற்று, /E பாடியது /F# ஓர் பாட்டு
/E ஒரு பொழுது /F# ஓர் ஆசை,
/E சுகம் சு/G#7 கம் அதி/ C#m லே ஒரே சுகம் !
ஒரே வீ/ G# ணை ஒரே ரா/ C# கம்…

1. / தன்னை மறந் /C#m து மண்ணில் விழுந்து,
இளமை மல/G# ரின் மீது,
/E கண்ணை இழந் /Bத / C#mவண்டு,
/தேக சுகத் /G#தில் கவனம்,
/ C#m காட்டு வழி/Aயில் பயணம்,
/A கங்கை நதிக்/F# mகு /F#மண்ணில் அணை/B யா? / C#m (Break)

‘வரலாற்றுச் சுவடுகள்’ தொடரில் இந்தப் பாடல் பிறந்த கதை குறித்து இசைஞானி இப்படிக் கூறுகிறார்:-

“இளமை என்னும் பூங்காற்று” பாடலுக்கான Composing பாம்குரோவ் ஹோட்டலில் நடந்தது. கவியரசர் கண்ணதாசன் அவர்கள் இந்தப் பாடலை எழுதினார்.

இங்கே ஒன்றைச் சொல்ல வேண்டும். கவியரசர் – எம்.எஸ்.வி. இணைந்து செய்த பாடல்கள் எல்லாம் மிகவும் நல்ல லட்சண அமைப்புடன் இருக்கும்.

முதல் அடி தொடங்க அதே சந்தத்தில் குறைந்தது நான்கு அடிகளாவது வரும். உதாரணமாக,

‘எட்டடுக்கு மாளிகையில்,
ஏற்றி வைத்த என் தலைவன்,
விட்டு விட்டுச் சென்றானடி,
வேறுபட்டு நின்றானடி’.

‘கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல,
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல’

[முதல் வரியின் ராகத்தில் இரண்டாவது வரியையும், இரண்டாம் வரியின் ராகத்தில் முதல் வரியையும் பாடிப் பாருங்கள். அட்சரம் பிசகாமல் அழகாகப் பொருந்தும்! இசைஞானி குறிப்பிட்ட ‘லட்சண அமைப்பு!!]. இப்படி எந்தப் பாடலை எடுத்தாலும் ஒரு ஒத்த அழகுடன் இருக்கும். இதை நான் மாற்ற எண்ணினேன். ஒரு அடி போல் இன்னொரு அடி வராமல் போனாலும், அழகு கெடாமல் இருக்க வேண்டும் என்றும், ‘இங்கே தான் நிறுத்த வேண்டும், இங்கே நீட்ட வேண்டும்’ என்ற வரைமுறைகளைத் தாண்ட வேண்டும்’ என்றும் என்னுடைய மெட்டுக்களை அமைத்தேன். அதிலும் ஒரு அழகு இழையோடும் விதமாக கவியரசர் எழுதிவிட்டார்.

“இளமை எனும் பூங்காற்று, பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை, சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்”

இசையோடு இந்த வரிகள் கொஞ்சிக் குழையும் என்பது அவருக்குத் தெரிந்தே இருந்தது” என்று குறிப்பிடுகிறார்.

நல்ல ஒரு Audio System அல்லது FM-ல் கேட்க வேண்டிய பாடல். தொலைக்காட்சியில் தப்பித்தவறி இந்தப் பாடல் ஒளிபரப்படும்பொழுது வீட்டில் குழந்தைகள் இருந்தால் Channel மாற்றிவிடுவது உத்தமம்!

பாடலின் ராகம் ‘கர்ணரஞ்சனி’-யாம் [S R2 G2 M1 G2 D2 S / S N2 D2 P M1 G2 R2 S]. இது கர்னாடக இசை தெரிந்தவர்களுக்கு! தவறாயிருப்பின் மன்னிக்க!

காதலர்கள் கட்டிக் கொண்டால், கொஞ்சினால், சந்தித்தால், பிரிந்தால், ஊடல் கொண்டால், கூடினால், மெளனித்தால், மரித்தால், … எந்த மாதிரி Situation கொடுத்தாலும், இசைஞானியின் ஆர்மோனியத்தில் இருந்து வற்றா நதி போல், ராகங்கள் வந்து விழுந்து கொண்டே இருக்கின்றன. அது சரி! அவரின் உள்ளிருந்து வரும் இசையென்னும் ‘கங்கை நதிக்கு, மண்ணில் அணையா?’

4 comments:

  1. மிக அழகான பொருள் செறிந்த பதிவு

    ReplyDelete
  2. கண்ணதாசன் மட்டுமே எழுத முடியும் வரிகள். 1000 தகர முத்துக்கள் வந்தாலும் இவர் வீட்டு மிதியடியாக கூட இருக்க முடியாது .. கவிஞர் தமிழனின் பெருமை

    ReplyDelete