Monday, June 7, 2010

சுந்தரி கண்ணால் ஒரு சேதி

பாடல் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி

படம் : தளபதி
பாடியவர்கள் : எஸ்.பி.பி, ஜானகி
எழுதியவர் : வாலி
இசை : இசைஞானி


சுந்தரி கண்ணால் ஒரு சேதி!
சொல்லடி எந்நாள் நல்ல தேதி?
என்னையே தந்தேன் உனக்காக!
ஜென்மமே கொண்டேன் அதற்காக!
நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே!


1. வாய் மொழிந்த வார்த்தை யாவும்
காற்றில் போனால் நியாயமா?
பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா?
வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்
தேன் நிலவு நான் வாழ ஏன் இந்த சோதனை?
வான் நிலவை நீ கேளு! கூறும் என் வேதனை!
எனைத்தான் அன்பே மறந்தாயோ?
மறப்பேன் என்றே நினைத்தாயோ? – என்னையே தந்தேன்


2. சோலையிலும் முட்கள் தோன்றும்
நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும் நானுன் மார்பில் தூங்கினால்
மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால்
கோடி சுகம் வாராதோ? நீ எனை தீண்டினால்
காயங்களும் மாறாதோ? நீ எதிர் தோன்றினால்
உடனே வந்தால் உயிர் வாழும்!
வருவேன் அந்நாள் வரக்கூடும் – சுந்தரி கண்ணால்


ஒரு போர்க்களக் காட்சியும், போருக்குச் சென்ற காதலனும் அவனைப் பிரிந்த காதலியும் பிரிவுத் துயரில் பாடும் ஒரு சூழல். பாடலின் துவக்கத்தில் ஒலிக்கும் மெல்லிய புல்லாங்குழலின் ஓசையில் இசைஞானி ஊற்றியிருக்கும் “உயிர்” எத்தனை Keyboard, Synthesizer, Sampler-களில் இசைத்தாலும் வராத ஒன்று. புல்லாங்குழலின் இசை முடியும் அந்தப் புள்ளியில், மெதுவாக வயலின்களும், கொஞ்சம் கொஞ்சமாக மற்றக் கம்பி வாத்தியங்களும் இணைவது, சிறிய நீரூற்றுக்கள் வழிந்து, இணைந்து, ஒன்றை ஒன்று தழுவி, மெல்லிய ஓடையாக உருவெடுக்கும் ஒரு உன்னத உணர்வு. பல்லவி துவங்குவதற்கு முன் 1st BGM-ன் (அல்லது Prelude-ன்) முடிவில் ஒலிக்கும் மெல்லிய மணியோசையும், அதனோடு சேர்ந்து ஒலிக்கும் மெல்லிய வயலின்களின் கொஞ்சலும், ஒரு உன்னதக் கலைஞன் தன் ஜீவனை ஊதி உருவாக்கிய பாடலை நம் இதயங்களில் நிரப்புவதற்கு ஒரு Precursor. “சுந்தரி கண்ணால் ஒரு சேதி”, இந்த வரி முடிந்ததும் ஒலிக்கும் Flute Bit (இந்த இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட Flutes ஒலிப்பதை நன்றாக உற்று கவனியுங்கள்), அடுத்த வரியான “சொல்லடி எந்நாள் நல்ல தேதி”-யை இணைக்கும் ஒரு பாலம். சரணங்களுக்கு முன் ஒலிக்கும் BGM-களும் Chorus Voices-ம், ஓடைகள் ஒன்றாய் இணைந்து காட்டாற்று வெள்ளமாய் உருவெடுக்கும் பிரவாகம்.


இந்தப் பாடலுக்கான இசை பதிவானது மும்பையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில். எஸ்.பி.பி அவர்கள் ஜெயா டிவியின் ‘அன்றும் இன்றும் என்றும்’ நிகழ்ச்சியில் இந்தப் பாடலைப் பாடிய பின், இந்தப் பாடல் பதிவின்போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் இப்படி நினைவுகூறுகிறார்:-


“இந்தப் பாடல்களை எல்லாம் நாங்கள் மும்பையில் இருக்கும் ஒரு ஸ்டுடியோவில் ரெக்கார்ட் செய்தோம். திரு. ஆர்.டி.பர்மன் அவர்களுடைய இசைக்குழுவில் இருக்கும் கலைஞர்கள்தான் இந்தப் பாடலுக்கு வாத்தியம் இசைத்தார்கள்; இளையராஜா Notes கொடுத்த உடனே, 1st BGM வாசித்து முடிந்தவுடன் எல்லோரும், Instruments-ஐ கீழே வைத்து விட்டு, எழுந்து நின்று, they started clapping!! அது பெரிய விஷயம் இல்லை! அவர் இசைக்கு எங்கே இருந்தாலும் பாராட்டுக்கள் கிடைக்கும்! அந்த ரெக்கார்டிங் எல்லாம் முடிந்தவுடன் ஒரு Musician என்னிடம் வந்து “அந்த ஆளு பாம்பே வந்து Music பண்ண வேண்டாம்யா!” என்று சொன்னார். ஏன் என்று கேட்டதற்கு அவர் “நாங்கள்-லாம் இங்க ஏதோ Jingles மாதிரி வாசிச்சிகிட்டு போய்கிட்டு இருக்கோம். அந்த ஆளு compose பண்ணத எல்லாம் வாசிக்கிறது ரொம்பக் கஷ்டம்-யா! அந்த ஆள Madras-லயே இருக்க சொல்லு!” என்று சொன்னார். இளையராஜா Madras-ல இருந்து உலகத்தையே ஆளுகிறார். He is a Blessed Person”.

இசைஞானி அவர்கள் பி.பி.சி. வானொலியின் “பாட்டொன்று கேட்டேன்” நிகழ்ச்சியில், இந்தப் பாடலைக் குறித்து கூறும்பொழுது,

“சுந்தரி கண்ணால் ஒரு சேதி! சொல்லடி எந்நாள் நல்ல தேதி?” இது ஒரு கவிதையா? என்று கேட்டால் இல்லை. “சுந்தரி கண்ணால் ஒரு சேதி! சொல்லடி எந்நாள் நல்ல தேதி?” “நானுனை நீங்க மாட்டேன். நீங்கினால் தூங்க மாட்டேன்”, இதை நீங்கள் எப்படிச் சொன்னாலும், எத்தனை விதமாக சொன்னாலும், கேட்கிறவனை உங்கள் உணர்வுகளுக்குள் நீங்கள் கொண்டு வர முடியாது. ஆக, வெறும் வார்த்தைகள் உணர்த்தாத ஒரு விஷயத்தை ஒரு இசை உணர்த்த வேண்டும். இந்த வார்த்தைகளில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? வாலி அவர்கள் எழுதிய இந்தப் பாடலில் ‘மற்ற வார்த்தைகள் வேண்டாம்; இந்த வார்த்தைகள் போதும்’ என்று முடிவெடுத்தாரே; அது தான் இதில் சிறப்புடையது’. ‘எண்ணமோ ஓராயிரம் வந்தால், என்னடி நான் செய்வது அன்பே?’ என்று அவர் எழுதியிருக்கலாம். ஆனால் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி!’ என்று அந்த மெட்டுக்குப் பொருத்தமான வார்த்தைகளை அவர் எழுதியிருப்பதுதான் இதில் சிறப்பு. ஒரு கவிஞனுக்கு எந்த வார்த்தைகளை எழுதக் கூடாது என்று தெரிய வேண்டும். ஒரு சிற்பிக்கு எப்படி வேண்டாத கற்களை நீக்க வேண்டும் என்று தெரிந்திருக்கிறதோ, எந்தக் கல்லை நீக்கினால் இந்தச் சிலை தோன்றும் என்று தோன்றுகிறதோ, அப்படி ஒரு பாடல் ஆசிரியனுக்கும், கவிஞனுக்கும் ‘இந்த வார்த்தைகள் இந்த இசைக்குப் பொருத்தம் அல்ல’ என்பது தெரிந்திருக்க வேண்டும். அப்படித் தெரிந்தவர்கள் ரொம்பக் குறைவு’ என்று கூறுகிறார்.

இந்தப் பாடல் ‘கல்யாணி’ ராகத்தில் இயற்றப்பட்டுள்ளது என்று விஷயம் தெரிந்த ஒருவர் சொன்னபோது, ‘அடடா! Carnatic Music படித்து இருந்தால் இசைஞானியை இன்னும் ஆழமாக ரசித்திருக்கலாமே?’ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. என்ன ஒரு பாடல்? இந்தப் பாடலின் BGM-களில் இருக்கும் Orchestration… ஒரு நல்ல Music System ஒன்றில் தனியறையில் அமர்ந்து, ஒரு மாலைப் பொழுதில், மனதில் வேறு எந்த சஞ்சலமும், சிந்தனையும் இல்லாமல் கேட்டுப் பாருங்கள். உங்களுக்கு மயிர்க்கூச்செறியவில்லை யென்றால், உங்களுக்குள் இசை இல்லை என்று அர்த்தம்.

1 comment: